Wednesday, 27 March 2013

உருட்டுக் கட்டை... காந்தி... காங்கிரஸ்.....



மாணவர்கள் போராட்டம் தமிழ் நாட்டை தணலாக கொதிக்க வைத்திருக்கிறது.. பொறுப்பு இல்லாதவர்கள் என பொல்லாங்கு பேசியவர்களுக்கு இந்த நெருப்பு மலர்கள்.. செறுப்பு சாமரம் வீசியிருக்கின்றன.



காங்கிரஸ்காரர்களுக்கு பஞ்சு மெத்தை நஞ்சு மெத்தை ஆகி உறக்கத்தை உறிஞ்சி விட்டது. தமிழர்களின் இரத்ததை ஸ்ட்ரா போட்டு குடித்த ராஜபக்சேவின் ராத்தூக்கம் ராத்துக்கமாகி விட்டது.

திவ்யா என்ற அனல் பூ... கனல் வீசி கக்கிய கருத்துக்கள்.. ஆகா... என்ன ஆக்ரோசம்... என்ன ஆவேசம்... என்ன இறுமாப்பு... எத்தனை பொறுப்பு...

போராட்டம் எங்கள் குடும்பச்சொத்து என்று உதட்டிலேயே உடுக்கடித்து தமிழ் நாட்டை கூறு போட்ட திமுக.. திடுக்கிட்டு நிற்கிறது..



குண்டு வீச்சில் சிதறிய இரண்டு லட்சம் உயிர்களுக்கு ஆறுதல் மட்டுமே சொல்லி அஞ்சலி பாடிய கலைஞர் கருணா நிதி.. அடி வயிறு கலங்கிய கருணா நிதியாக அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

இந்த இக்கட்டான நேரத்தில்தான் அகிம்சை தான் எங்கள் தாரக மந்திரமென அகிலமெல்லாம் ஒலிபரப்பிய காந்தி கண்ட காங்கிரஸ்காரர்கள் உருட்டுக் கட்டை மன்னர்களாக உருவெடுத்து மனிதாபிமானப் போர் தொடுத்த மாணவர்களின் மண்டையை பிளந்திருக்கிறார்கள்.



அடடா... பாட்ஷா படத்தில் ரஜினிகாந்துக்கு பின்னால் வேக நடை போட்டு வரும் வில்லன் களைப் போல அவர்கள் வந்த கோலம் இருக்கிறதே... காணக் கண் கோடி  வேண்டும்.

சும்மா.. வெள்ளை சட்டை... வேட்டி.. பேண்டு என அவர்கள் வித விதமான கெட்டப்புகளில் வந்து பிறவி தாதாக்களை பின்னுக்கு தள்ளி  விட்டார்கள்..

சாண்டோ சின்னப்ப தேவரிடம் கம்புச்சண்டை கற்றவர்கள் மாதிரி மாணவர்களை அவர்கள் புரட்டி எடுத்த காட்சி இருக்கிறதே... சினிமா தோற்றுவிட்டது போங்கள்...

மாணவர்கள் திருப்பி போட்டிருந்தால் அந்த தொந்தி தாதாக்கள்.. சந்து கிழிந்திருக்கும். ஆனால்.. மரணத்தைக் கூட மலர்ப்படுக்கையாக கருதும் மாணவர்கள்... காங்கிரஸ் கட்டெறும்புகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

சொந்த ரத்தம் நக்கும் அந்த காங்கிரஸ் ஓநாய்களுக்கு தெரியவில்லை... எரிமலையை இதயத்தில் சுமக்கும் மாணவர் சமுதாயத்தின் விழி அவர்களின் பக்கம் திரும்பினால் இங்கிருக்கும் தலைவர்கள் அன்னைக்கு அடி வருட டெல்லியில் முகாம் போட வேண்டி இருக்கும் என்பது.

இந்த நேரத்தில் இன்னொரு அசிங்கத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். சென்னையில் கிரிக்கெட் போட்டி நடக்க போகிறதாம்.. அதற்காக பல நடை பிணங்கள் டிக்கெட் வாங்க ஐந்தாறு மணி நேரம் காத்து நிற்கிறதாம்.

பெத்த ஆத்தா செத்துக் கிடந்தாக்கூட அதை பத்தி கவலைப்படாமல் பிரியாணி தின்னுற மானங்கெட்ட ஜென்மங்க மாதிரி டிக்கட் வாங்கிய பெருமையை டிவியில பல்லக் காட்டி சொல்லும்போது அடி வயிறு பத்தி எரியுதுங்க....

அட.. கிரிக்கெட் பைத்தியம் பிடித்த கிறுக்கு சிகாமணிகளா.... தொப்புள் கொடி உறவுக்கு நீ உயிரையும் கொடுக்க வேண்டாம்... ஒரு மயிரையும் கொடுக்க வேண்டாம்... கிரிக்கெட்டை பாக்க மாட்டோமுனு ஒரு தடவை ஒதுக்கித்தான் தொலையுங்களேன்..