Monday, 16 September 2013

மனைவியின் காள சர்ப்ப தோஷம் கணவனை முடமாக்கும்

சில நாட்களுக்கு முன்னர் சிரம்பான் மாறனைப் பற்றி எழுதி இருந்தேன். அவர் என்னை சந்தித்த செய்தியை அவர் மனைவியிடம் கூறியிருக்கிறார்.

அவர் மனைவி என்னோடு தொலைபேசியில் உரையாடி ஜாதக விவரங்களை வினவினார். என் கருத்தில் கணிப்பில் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதனால் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் வீட்டிற்கு வரமுடியுமா என்றும் கேட்டார். எத்தனையோ ஜோதிட விற்பன்னர்களை சந்தித்தவர்கள்... நம்மை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்களே என்ற மகிழ்ச்சி ஒருபுறம்...மாறன் குடும்பத்திற்கு நம்மால் ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது நட்புக்கு நன்றியாக அமையுமே என்ற நப்பாசை ஒரு புறம்... ஆகவே அடுத்த வாரத்தில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தேன்.

அதோடு உங்கள் ஜாதகத்தில் கண்டிப்பாக காளசர்ப்ப தோஷ அமைப்பு இருக்க வேண்டும் என குறிப்பிட்டேன். அவர் ஆச்சரியப்பட்டார்.

ஏற்கனவே ஜாதகம் பார்த்த இடத்தில் இது குறித்து குறிப்பிட்டதாகவும் திருக்காளகஸ்தி திருத்தளத்திற்கு சென்று வரும்படி அந்த ஜோதிடர் அறிவுறுத்தியதாகவும் சொன்னார்.

மேலும் நான் சொன்ன சில விஷயங்கள் என்பால் அவருக்கு பெருத்த ஈர்ப்பை ஏற்ப்டுத்தியது என நம்புகிறேன்.

அவர் பிறந்த நேரத்தையும் தேதியையும் சொன்னார்.கணித்துப் பார்த்ததில் நான் எண்ணியபடியே கடுமையான காலசர்ப்பதோஷ அமைப்பு.

திருமணப் பொருத்தத்தில் வசியமும் இல்லை... ரஜ்ஜும் இல்லை. ஆனால், குடும்ப வண்டி குடை சாயாமல் தட்டுத்தடுமாறி ஓடிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு நாட்களில் இவர்களுக்கு விவாகரத்து நடந்திருக்க வேண்டும். அது நடக்க வில்லை.

அல்லது பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்து குடும்பம் நசிந்து போயிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

இன்னொரு வகையில் உயிர்ப்பாதிப்புகளை ஏற்படுத்தி குடும்பத்தைக் குலைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

இதற்கு பதிலாக முதுகுத்தண்டில் பாதிப்பை ஏற்படுத்தி அடுத்த அடி எடுத்து வைக்கவே பெரும் அவஸ்தைப்படும் நிலைக்கு ஆளாக்கி விட்டது காளசர்ப்பதோஷம்.

ஏற்கனவே பார்த்த ஜோதிடர் சொன்ன பரிகாரத்தை அலட்சியப்படுத்தாமல் செய்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்காது.

காலுக்கு வந்த ஆபத்து கட்டை விரலோடு போயிருக்கும். காலம் கடந்தால் என்ன கனிவோடு வேண்டினால் கடவுளின் அருள் கண்டிப்பாக கிட்டும்.

நண்பர் மாறனின் நோய்ப்பாதிப்பு அகலும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும்.


Sunday, 15 September 2013

அவசரக் கல்யாணம்... அதிர்ச்சி தந்த மரணம்...!

இரண்டு ஆண்டுகளூக்கு முன்னர் நான் தமிழகம் சென்றிருந்த சமயம். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்னைப்பார்க்க வந்திருந்தார்.

அவர் மகளுக்கு 18 வயது. திருமணம் செய்யலாமா என என்னிடம் கேட்டார். ஜாதகத்தைப் பார்த்தேன். திருமண வகையில் பிரச்சினை. செவ்வாயும் சுக்கிரனும் பாதகமான இடத்தில் இணைவு.

பெண் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். கிராமம் என்பதால் கட்டுப்பாடுகள் அதிகம். ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடக்கூடாது என அந்த தகப்பனாருக்கு தவிப்பு.

இரண்டு எட்டில் சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் வேறு கடுமையாக இருந்தது. ஏற்கனவே ஜாதகம் பார்த்த இடத்தில் சீக்கிரமாக திருமணத்தை நடத்தினால் நல்லது என கூறியதாக அவர் சொன்னார்.அந்த ஜாதகர் சொன்னதிலும் ஆழ்ந்த கருத்து இருந்தது. அந்தப் பெண் தடம் மாறிச் செல்வதற்கு ஜாதக ரீதியாக வாய்ப்பு அதிகம் இருந்தததால் அவர் அப்படிச் சொல்லி இருக்கிறார்.

எனக்கும் அவரின் அவசரத்தில் உடன்பாடு இருந்தது. ஆனால் ஒரு விஷயத்தை அவரிடம் அழுத்தமாக சொன்னேன்.

உறவுக்கார மாப்பிள்ளையோ அன்னியமோ.. அது பிரச்சினை இல்லை. ஆனால் இருவருக்கும் உள்ள ஜாதகப் பொருத்தத்தைக் கவனமாக பார்க்க வேண்டும். 

தசவிதப் பொருத்தம் மட்டுமல்லாமல் ஏணைய சில முக்கிய பொருத்தங்களையும் கவனமாக பார்க்க வேண்டும் என கூறினேன்.

அதன் பின்னர் மலேசியா வந்து விட்டேன். அவர்கள் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நிச்சயித்து விட்டார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் காலகட்டத்தில் தமிழகம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டத்தால் நானும் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

அடுத்த வாரத்தில் மலேசியா திரும்பி விட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்னால் அதிகாலைப் பொழுது என் கைத்தொலைபேசி என்னை எழுப்பியது.

எடுத்துப் பேசிய போது அதிர்ச்சி தரும் தகவல் என் இதயத்தை கசக்கியது. நள்ளிரவு நேரத்தில் அந்தப் பையன் நெஞ்சு வலிக்கிறது என சொல்லி இருக்கிறார்... அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

மருத்துவமனைக்கு செல்லக் கூட அவகாசம் அளிக்காமல் காலன் அவர் உயிரைக் கவர்ந்து சென்றுவிட்டான்.

சரியாக ஜாதகம் கணிக்காமல் திருமணம் செய்தால் அந்தப்பெண் கணவனைப் பிரிந்து வந்து விடுவார் என்பது என் கணிப்பு.

ஆனால், ஒரேயடியாக கணவனைத் தொலைத்து விட்டு தாய் வீடு வருவாள் என கனவிலும் நினைக்கவில்லை.

மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என அந்தப் பெண்ணின் பெற்றோர் என்ன பாடுபடுவார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

அதைவிட பலமடங்கு என் மனம் வேதனைப்படுகிறது. என்ன செய்வது இறைவன் திருவுள்ளம் அப்படி இருந்தால் மானிட ஜென்மத்தால் மாற்ற முடியுமா என்ன?

Wednesday, 11 September 2013

ஆண்டவன்.... அலட்சியம்... ஆபத்து...!

   என் மனதுக்கு பிடித்த நண்பர்களுள் மகத்தானவர். சிரம்பானைச் சேர்ந்தவர். சிறந்த வழக்கறிஞர். பொருளாதாரத்தில் வலுவானவர்.
   
   இவருக்கு முதுகுத்தண்டில் பிரச்சினை. முழங்கால் மூட்டு தேய்வு. முன்பு ஓய்வும் அசதியும் இவர் பக்கத்தில் வரவே பயப்படும்.

   ஆனால், இப்போது உட்கார்ந்து எழுவதற்கே சிரமப்படும் அளவுக்கு காலம்  இவர் கால்களுக்கு வியாதி என்ற விலங்கைப் பூட்டி விட்டது.   இவர் பேச்சில் எப்போதும் கலகலப்பு கைகோர்த்து நிற்கும். இன்று அதில் விரக்தியின் வெளிப்பாடு அதிகம் இருப்பது வேதனை.

   இவருடைய ஜாதகத்தைக் கணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மகர லக்கனம். கடக ராசி. பூச நட்சத்திரம் மூன்றாம் பாதம்.

    லக்கனாதிபதி லக்கனத்தில்.  ராசியாதிபதி சொந்த வீட்டில். சிறுவயதில் கஷ்டமும் கவலையும் இவரின் விளையாட்டுத் தோழர்கள். 

    இன்று அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரத்திற்கு இவர் சொந்தக்காரர். ஆனால், உண்பது ஒரு கை பிடியளவுதான்.

    ஏன் இந்த அவஸ்தை இவருக்கு.... சரீரகாரகன் சந்திரனும் எலும்புக்கு அதிபதியான சனியும் சமசப்தம பார்வைப் பரிமாற்றம். ஏழரைச் சனி காலத்தில் இவரை முடமாக்க சனிபகவான் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

   அதற்கான அறிகுறிகளையும் இவருக்கு அனுப்பி வைத்தார். இவரின் மன பலம் ... பணபலம்... அதை அலட்சியப்படுத்தி விட்டது.

   தெய்வபலமும் சேர்ந்து கொண்டதால் தெம்பும் அதிகம் இருந்தது. விளைவு வியாதியை ஓட ஓட விரட்டிய இவரை வியாதி விரட்டிக் கொண்டிருக்கிறது.

   கோச்சாரத்தில் குரு பகவான் பலவீனமாக இருக்கிறார். நான்காம் வீட்டில் இருக்கும் சனியும் குடும்ப உறவில் குழப்பத்தை உண்டு பண்ணி திருப்தி இல்லாத நிலைக்கு தள்ளி விட்டார்.

    மேலும் இவருக்கு மறுபிறவி இல்லை என்பதால் ஜென்மாந்திர பலாபலன்களையும் இந்தப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதி.   நள மகராஜாவுக்கு விமோசனம் அளித்த திருநள்ளாறு திருத்தளத்துக்கு சென்று திருக்குளத்தில் நீராடி சனிபகவானை வழிபட்டு வருமாறு அறிவுறுத்தி இருக்கிறேன்.

   அதன் பின்னர் வீட்டில் ரோக நிவர்த்தி யாகம் ஒன்றையும் செய்யச் சொல்லி ஆலோசனை கூறியிருக்கிறேன்.

   இவை இரண்டையும் ஆத்ம சுத்தியோடு செய்து சனிபகவான் அனுகிரகத்தை அடைந்து விட்டால் அறுவைச்சிகிச்சை தேவைப்படாது.

   அறுவைச்சிகிச்சை தவிர்க்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டால் கூட கவலைப்பட வேண்டாம். சிகிச்சைக்கு பின்னர் ஓடியாடி விளையாட முடியாவிட்டாலும் வலி இல்லாமல் இயல்பாக வலம் வர இயலும் என்பது திண்ணம்.

   இவர் பார்த்த ஜோதிடரின் அறிவுறையையும் மருத்துவரின் ஆலோசனையையும் அலட்சியப்படுத்தால் ஏழரைச் சனி காலத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் பாதிப்பு பாதி அளவு குறைந்திருக்கும். சிலவேளைகளில் பாதிப்பில் இருந்து தப்பி இருக்கலாம்.

   என்ன செய்வது... மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று.. இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று..