Wednesday, 6 January 2010

எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி

நேற்று ஒரு பெண்ணும் ஆணும் என்னிடம் திருமணப் பொருத்தம் பார்க்க வந்தாங்க. பொண்ணுக்கு பூச நட்சத்திரம். ஆணுக்கு அசுவினி நட்சத்திரம்.

பத்துக்கு ஆறு பொருத்தம் சரியாக இருக்கிறது என்பதால் திருமணம் முடிக்கலாம் என்று சொன்னேன்.
யோனிப் பொருத்தம் மத்திபமாக இருக்கிறது. வசியப் பொருத்தம் இல்லை. ஆகவே சில விஷயங்களில் அனுசரித்துப் போக வேண்டும் என சொன்னேன். அந்த ஆடவரிடம் சில ஆலோசனைகளையும் கூறினேன்.

அப்போது இடைமறித்த அந்தப் பெண், " இவர் மாப்பிள்ளை இல்லை. அவர் வேறு ஆள்" என்றார்.

எனக்கு சங்கடமாக போய்விட்டது.

" நீங்கள் பேசிக் கொண்ட விதம்... நடந்து கொண்ட முறை... ஆகியவற்றை வைத்து தப்பாக நினைத்து விட்டேன்" என சொன்னேன்.

" எதற்காக வருத்தப்படுகிறீர்கள். இவர் என் காதலர்..ஐந்து வருடமாக பழக்கம். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அதனால் இவரைத் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் இதுவரை கணவன் மனைவியாகதான் வாழ்ந்து வருகிறோம். இவர்தான் வேறு ஒரு ஆளைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்துகிறார்" என பதட்டப்படாமல் கூறினார்.

"இல்லை அம்மா, யோனிப் பொருத்தம் குறைவாக இருப்பதாலும் சில கிரகங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாலும் தாம்பத்திய வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரலாம் என்பதற்காத்தான் சொன்னேன்" என குறிப்பிட்டேன்.

" அதைப் பற்றி கவலை இல்லை... எனக்கு எப்போது வேண்டுமோ அப்போது சந்தோசம் கொடுக்கத்தான் இவர் இருக்கிறாரே" என அதிரடியாக ஒரு பதிலைச் சொன்னார். நான் ஆடிப் போய் விட்டேன்.

"அப்படியானால் திருமணத்துக்கு பின்னரும் உங்கள் உறவு தொடருமா" என கேட்டேன்.

"அப்கோர்ஸ்... இவரை மறக்க முடியுமா?" என ஒரு குண்டைத் தூக்கி போட்டாள்.

"சரி அம்மா... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்... ஒரு காலத்தில் இப்படி நடந்து கொண்டால் அது பெரிய பாவம் என கருதப்பட்டது. ஆனால்,  நாசமாய்ப் போன நாகரீக வளர்ச்சி இதெல்லாம் சகஜமப்பா என நடக்கச் சொல்கிறது. போய் வாருங்கள்" என அனுப்பி வைத்தேன்.

இப்படியும் சிலர் இருக்கிறார்களே என ஆச்சரியப்பட்டேன்.

 ஆனால், வாடகைக்கு மனைவி என்ற உண்மைச் சம்பவத்தை ஜூனியர் விகடனில் படித்தேன்.

அதில் நிருபருக்கும் ஒரு குடும்பப் பெண்ணுக்கும் நடக்கும் உரையாடலை அப்படியே வெளியிட்டு இருந்தார்கள்.

இப்படியும் இருக்கிறார்களே என்னிடம் பொருத்தம் பார்க்க வந்த ஜோடியைப் பார்த்து ஆச்சரியப்பட்ட என்னை இப்படி ஏராளமான பேர் இருக்கிறார்கள் என சாட்டையால் அடித்தது போல் சொன்னது அந்த உண்மைச் சம்பவம்.

ஒரு பாப கிரகமும் ஒரு சுப கிரகமும் இணைந்து களத்திர ஸ்தானத்தில் இருந்தால் (தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதால் கிரகங்களின் பெயரைக் குறிப்பிடவில்லை) கட்டிய கணவனே காசுக்காக தன்னுடைய மனைவியை மாற்றானுடன் அனுப்பி வைப்பான் என புலிப்பாணி கூறுகிறார்.

ஆனால் அது இந்த அளவுக்கு இருக்குமா என்பதை எண்ணிப் பார்க்க மனம் கூசுகிறது. தயவு செய்து நீங்களும் அதைப் படித்துப் பாருங்கள். உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணருவீர்கள்.

Tuesday, 5 January 2010

பொறுத்து இருங்கள்... புரிந்து கொள்வார்கள்...
அன்பு நண்பரே...
உங்கள் ஜாதக பலன் முழுவதையும் முகப்புத்தகம் (face book) ஏற்றுக் கொள்ளாது என்பதால் நவக்கிரக நாட்டியத்தில் விளக்கி இருக்கிறேன். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.  சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.

உங்களுடைய லக்கனம் மிதுனம். ராசி ரிஷபம். நட்சத்திரம் மிருகசீரிடம் 2-ஆம் பாதம். நீங்கள் பிறந்த நேரம் இரவு 11 மணியாக இருக்க வேண்டும். மிருகசீரிடம் இரண்டாம் பாதம் அடிப்படையில் கணித்துப் பார்த்தபோது அந்த நேரம்தான் வருகிறது.

பொதுவாகப் பார்த்தால் உங்கள் ஜாதகம் சிறப்பாகவே இருக்கிறது. உங்களுக்கு அமலா யோகம், வசுமதி யோகம், நீசபங்க யோகம் போன்ற யோக அமைப்புகள் இருக்கின்றன.

அதோடு சதாசஞ்சார யோக அமைப்பும் இருக்கிறது. இது நாடோடி வாழ்க்கையை ஏற்படுத்தக் கூடியது. நீங்கள் எதிலும் நேர்மையைக் கடைப்பிடிப்பவராக இருப்பீர்கள். சங்கீதம் நாட்டியம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

மகரம் 8-ஆம் வீடாக இருப்பது வெளிநாட்டு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தாயாருக்கு உரிய ஸ்தானத்தில் ராகு இருப்பது தாயார் சம்பந்தப்பட்ட உறவை பாதிப்படையச் செய்திருக்கிறது. தந்தையாருக்கு உரிய ஸ்தானம் சனி வீடாக இருப்பதும் சனி சூரியன் வீட்டில் அமர்ந்திருப்பதும் சூரியன் பாதகமான இடத்தில் நீசபங்கம் பெறுவதும் பெற்றோர்களுக்கும் உங்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.

மேலும் மிருகசீரிடம் 2-ஆம் பாதத்துக்கு அதிபதி புதன். உங்களுக்கு புத்தி கூர்மை. இரக்க மனப்பான்மை போன்றவற்றை புதன் கொடுப்பார். அதே நேரத்தில் முன்கோபம் அதிகமாக வரும். அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னர் ராகு தசை நடந்தது. இந்தக் காலகட்டத்தில் குடும்ப உறவு சீர்குலைந்து போயிருக்கும். இப்போது குரு மகா தசை நடக்கிறது.2012- 5-ஆம் மாதம் வரை பாதகமான நிலைதான்.

அதன்பிறகு வருகின்ற சூரிய புத்தியில் அதாவது 2013- 3-ஆவது மாதத்திற்கு பிறகு பெரிய மாற்றத்தை காண்பீர்கள். அதன் பின்னர் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

போன ஜென்ம கர்மா பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்களின் அன்பு கிடைப்பது அரிது. அந்த நிலை தான் உங்களுக்கும். உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடு தேவை. வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் எச்சரிக்கையாக இருங்கள்.

உங்களால் இயன்ற அளவு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள். வரும் காலத்தில் நல்லதே நடக்கும்.