Wednesday, 25 November 2015

ரஜ்ஜு தட்டினால் வாழ்க்கை நாசமா....?

" உனக்கு என்ன குறை வச்சேன். எதுக்கு ஏட்டிக்கு போட்டியா பேசுறே. புருசன்கிற மரியாதை வேண்டாம் ஒரு மனுசனாக்கூட மதிக்க மாட்டேன்கிறியே"

" சும்மா... நிறுத்துக்கங்க... எப்ப நான் உங்கள மதிக்கலே. வீட்டுல இருக்கிற நாய் பூனையைக் கூட கொஞ்சுறீங்க. என்னைக் கண்டா மட்டும் காண்டா மிருகத்தைப் பார்க்கிற மாதிரி நினைக்கிறீங்க.

" பாத்தியா.. நான் ஒரு வார்த்தை சொன்னா... உன்னோடு வாயில இருந்து ஓட்டை வாளில தண்ணி கொட்டுற மாதிரி ஓராயிரம் வார்த்தைங்க வந்து விழுது."

" மத்தவங்க பேசுனா..பல்லை இளிச்சுக்கிட்டு கேக்கிறீங்க. நான் பேசுனா மட்டும் வேப்பங்காயைக் கடிச்ச மாதிரி துடிக்கிறீங்க.

"  வாயைத் துறந்தா நிறுத்த மாட்டியே.. ஒன்னோட மல்லுக்கட்டியே என் மண்டை முடி கொட்டிப் போச்சு."

" சும்மா.. கதை விடாதீங்க. என்னை பொண்ணு பாக்கிறப்பவே மண்டையில் பாதி முடி இல்லை. போனாப் போகுதுன்னு கட்டுனதுக்கு எம்மேல பொல்லாப்ப இல்லே அள்ளி வீசுறீங்க."

என்னை பார்க்க வந்த தம்பதிகள் என் அலுவலகத்தில் மோதிக் கொண்ட சுவாரஸ்யமான நிகழ்ச்சி இது.

அவர்கள் பேசும் போது நான் குறிக்கிடவில்லை. அந்த தம்பதிகளின் மகளும் மருமகனும் வேறு உடன் இருந்தார்கள். இவர்களின் சண்டை அவர்களுக்கு பழக்கமாகி விட்டது. இது நம்ம குடும்பம் சீரியல் நாடகம் பார்ப்பது போல் ரொம்ப சீரியசாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

கிட்டட்தட்ட கல்யாணம் ஆன நாளில் இருந்தே எலியும் பூனையுமாக வலியும் வாதமுமாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்கள்.

இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லை. ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவர்களுக்கு ஜாதக நிலவரங்களை விளக்கி கூறினேன்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் என் முன்னால் மனசு விட்டு பேசிக் கொண்டார்கள்.

அதற்கு அடுத்த படியாக மகள் மருமகனுடைய ஜாதகபலன்களைச் சொன்னேன். நான் சொல்லச் சொல்ல அந்த இளம் பெண் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்.

திருமணமாகி ஓராண்டு வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதன் பிறகு தொட்டதற்கெல்லாம் குற்றம் குறை. அடிதடியும் அழுகையும் வாழ்க்கையின் ஓர் அங்கமாகி விட்டது.

சின்ன வயது. சீக்கிரம் உணர்ச்சி வயப்பட்டு நெருப்பாக வார்த்தைகளைக் கொட்டும் பொறுப்பில்லா இளம் பருவம்.

அந்தப் பையனுக்கு சில விஷயங்களை சூசகமாக விளக்கிக் கூறினேன். அவரும் புரிந்து கொண்டார்.

எல்லாம் தெரியும் என பகிரங்கமாக பற்ற வைக்கும் பாங்கு என்னிடம் இல்லை. அது அவருக்கு என் மீது அலாதியான நம்பிக்கை வைக்கத் தூண்டியது.

அவரும் இல்லற நிலவரங்களை இலை மறை காயாக எடுத்துக் கூறினார். வேண்டிய அறிவுரைகளை வழங்கினேன்.

இனிமேல் எங்களுக்குள் சண்டை வராது. அப்படி வந்தால் அடுத்த நிமிடமே உங்களை நினைத்து எங்களைச் சாந்தப்படுத்திக் கொள்வோம் என சத்தியம் செய்தார்.

மாமியாருக்கும் மாமனாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. இப்படி ஒரு வார்த்தை மருமகன் வாயில் இருந்து வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும்.

முதலில் நம்பிக்கை இல்லாமல் உங்களைப் பார்க்க மாடி ஏறினோம். கடவுளைக் கண்ட திருப்தியோடு திரும்புகிறோம் என அந்த அம்மையார் கண்ணீர் மல்க கூறியது என் நெஞ்சில் நிற்கிறது.

எல்லாம் எம்பெருமான் திருமுருகனின் திருவுள்ளம்.

Friday, 13 November 2015

ஜோதிடம் பொய்யா.. விடை தெரிந்தோர் விளக்குங்கள்

விதியை மதியால் வெல்ல முடியுமா... இது விடை காண முடியாத வில்லங்கமான கேள்வி.

மலேசியாவில் நான் பத்திரிகை முழு நேர பணியில் இருந்தபோது தமிழ்நாட்டில் இருந்து வந்த பல பிரபலமான ஜோதிடர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அவர்கள் முன்னால்  வைக்கும் முதல் கேள்வி இதுதான். ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய நாள் குறித்து கொடுத்தவர் வசிஷ்ட மகரிஷி.

ஆனால், பட்டாபிஷேகம் நடக்கவில்லை. மாறாக காட்டுக்கு போனார். இது எதனால் நடந்தது. மகரிஷியின் வாக்கு பொய்த்தது ஏன்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி. சுமார் 2 லட்சம் உயிர்களை சுருட்டிக் கொண்டு போனது. இவர்கள் அத்தனை பேருக்கும் அவமிருத்த யோகம் இருந்ததா..?

இப்படி சிக்கலான கேள்விகளைக் கேட்டு விடை தேடி அழைந்த காலம் அது.

 புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் ஆஸ்தான ஜோதிடராக இருந்த வித்வான் லெட்சுமணன் ஐயா அவர்கள் இதற்கு பொருத்தமான விளக்கத்தைத் தந்தார்.

பொருள் புரியாமல் மனனம் செய்த திருக்குறள் வரிகளைப் போல அவர் சொன்ன விளக்கம், விளங்காமலேயே மூளைக்குள் முடங்கியது.

காலையில் புல்லை மேய்ந்த மாடு மாலையில் மீண்டும் அசைபோட்டு உணவாக்கிக் கொள்வதைப் போல பின்னாளில் அதன் பொருள் புரிந்தது.

வாழ்க்கையின் வெற்றி பொருளாதாரம் என்பது ஒரு சாரரின் கருத்து. இல்லை நிம்மதி என்பது இன்னொரு சாரரின் கருத்து.

பணம் இல்லாமல் வாழ முடியுமா... பணம் இருந்தால் மட்டும் வாழ முடியுமா... இப்படிப்பட்ட வினாக்களை என் மீது வீசியவர்கள் ஏராளம்.

பணம் சம்பாதித்திவன் எல்லாம் புத்திசாலி இல்லை. பற்றாக்குறையோடு வாழ்பவன் எல்லாம் முட்டாள் இல்லை. இப்படி சொல்லலாமா...

உலகத்தில் பணக்காரர்களாக இருக்கிற அறிவாளிகள் ஏராளம். முட்டாளாக முனைமழுங்கித் திரிகிற ஏழைகளும் ஏராளம்.

அறிவு என்பது என்ன... வெற்றிகரமாக தொழில் நடத்தி கோடி கோடியாக சம்பாதிப்பவன் இல்லற வாழ்க்கையில் சில்லறைத்தனமாக இருக்கிறான்.

பொருளாதாரத்தில் வெற்றி பெற்ற அவன் ஏன் குடும்ப வாழ்க்கையில் குதர்க்கமாக நடந்து கொள்கிறான்.

திறமை என்பது என்ன.... ஒரு போட்டியில் 200 ரன் அடித்த கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் இன்னொரு போட்டியில் இரண்டு ரன்னைக் கூட எட்ட முடியாமல் மட்டையைத் தூக்கிக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்.

அதே மட்டை... அதே.. பந்து... அதே கைகள்... திறமை மட்டுமே வெற்றி என்றால் இங்கும் அவர் 200 ரன்னைத் தொட்டிருக்க வேண்டும் அல்லவா...

பக்தி மட்டும் வெற்றி என்றால்... பழனிக்கும் ஐயப்பன் கோவிலுக்கும் படை எடுக்கின்ற அத்தனை பேரும் பணக்காரர்களாகவும் வெற்றியாளர்களாகவும் திகழ வேண்டும் அல்லவா...

அதே வேளையில் இரவு பகலாக உழைத்து கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு, அல்லல்பட்டு, அவதிப்பட்டு உழைத்து சம்பாதித்த பலர் திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் கோடி கோடியாக கொட்டுகிறார்களே ஏன்...

அவர்கள் எல்லாம் முட்டாள்களா.. மூடர்களா...

படிக்கவே லாயக்கில்லை என்று குருகுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் கண்ணதாசன்.

கல்வியைக் கசடறக் கற்று கவிதையால் வறுமையை வெல்ல வேண்டும் என்று வெறிபிடித்து எழுதுகோல் ஏந்தியர் வைரமுத்து..

படிக்காமல் கவிதை வார்த்து படித்தவர்களை பாமர மக்களை ஈர்த்தவர் கண்ணதாசன்... படித்து கவிதை யாத்து வைரவரிகளை தந்தவர் வைரமுத்து. இவர்கள் இருவருமே வெற்றியாளர்கள்.

ஆனால், எழுதுகோல் எடுத்த இருசாரருமே இவர்களைப் போல ஆகி விட முடியுமா...

சிவகங்கையில் பிரபலமான வழக்கறிஞர்.. என் மீது மாறா அன்பு கொண்டவர். என் குடும்பத்தில் மூத்த சகோதரர் போன்றவர். போன்றவர் என்ன மூத்த சகோதரர்தான்.

மதுரையில் சென்னை சில்க்ஸ் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. என் பிள்ளைகள் இருவரும் கட்டிட பொறியாளர்கள்.

ஒரு மதிய வேளையில் நானும் பிள்ளைகளும் பக்கத்தில் உள்ள சபரி உணவகத்திற்கு சாப்பிடச் சென்றோம்.

அப்போது மெதுவாக எங்களைக் கடந்து சென்ற ஹோண்டா சிட்டி கார் சில அடி தூரத்தில் நின்றது. பின் கதவைத் திறந்து வெள்ளை உடையில் வெளியே வந்தார். ஒரு நபர்.

அவர்தான் என் வழக்கறிஞ சகோதரர். " இங்க என்னடா.. பண்ணுகிறாய்.. எப்போது மலேசியாவில் இருந்து வந்தாய்.. ஏன் வீட்டுக்கு வரவில்லை" என்று கேட்டார்.

பிள்ளைகளை அறிமுகப்படுத்தினேன். அவரின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார்கள். அப்படிப்பட்ட வழக்கறிஞர் சில சிக்கலான வழக்குகளில் வாதத்திறமையால் குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கித் தந்திருக்கிறார்.

நீதி வென்றதா... அல்லது நீங்கள் வென்றீர்களா... என்று அப்போதே நான் அவரைப் பார்த்து கேட்டிருக்கிறேன்.

இது தொழில் தர்மம். நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்று உதடு வலிக்காமல் சொல்லி விடுவார்.

இதைப் போல இன்னும் ஏராளமான உதாரணங்களை எடுத்து வைக்க என்னால் இயலும்.

சூப்பர் டெலஸ்கோப் என்ற நுண் தொலைநோக்காடி இல்லாமலேயே 'யுனிவர்ஸ்' என்று சொல்லக்கூடிய பிரபஞ்சத்தையும் 'கேலக்ஸி' என்று சொல்லக்கூடிய நட்சத்திரக் கூட்டத்தையும் 'மில்க்கி வே' என்று சொல்லக் கூடிய பால்வெளி மண்டலத்தையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே பாகுபடுத்திப் பார்த்து சொன்னவர்கள் நம் முன்னோர்கள்.

நிலவளி, ஜலவளி, அண்டவளி, ஆகாசவளி, பரவளி, பராபரவளி, சதாசிவவளி, சச்சிதானந்தவளி என்று எட்டு வளி மண்டலத்தை ஆய்ந்து உலகுக்கு உணர்த்தி முதன்மையாக நின்றவர்கள் நம் முன்னோர்கள்.

வெளிநாட்டுக்கார விஞ்ஞானிகளை எல்லாம் இன்றும் வியக்க வைக்கும் விந்தைகள் இவை.

நம்மை விட ஆயிரம் மடங்கு அறிவாளிகள் என்று சொல்லப்படுபவர்கள் இஸ்ரேலியர்கள்.

அவர்கள் 1969 ஆம் ஆண்டுகளில் மேஷம் முதல் மீனம் வரையான ராசிச் சக்கர படங்களை அப்படியே அதிகாரத்துவ தபால்தலையாக வெளியிட்டிருக்கிறார்கள். இணையத்திற்கு சென்றால் இந்த உண்மையைக் காணலாம்.

விஞ்ஞானம் ஒரு கலை.. விவசாயம் ஒரு கலை.. ஓவியமும் காவியமும் கலைதான். இல்லறமும் துறவறமும் கலைதான். ஜோதிடமும் மருத்துவமும் கலைதான். இவர்களில் யார் வெற்றியாளர்கள்.

ஜோதிடக் கலையின் சூட்சுமங்கள் தெரிந்த விற்பன்னர்கள் ஏராளமாக வாழும் நாடு இது. அவர்கள் நடுவே ஊர்ந்து செல்லும் பிள்ளைப் பூச்சி போன்றவன் நான்.

அவர்கள் எல்லாம் ஜாதக சாகரம் என்ற ஆழியில் மூழ்கி முத்தெடுத்தவர்கள். அலைக்குழந்தை தலைசுமந்து கரைமணலில் வீசிச் செல்லும் கிளிஞ்சல்களைப் பொறுக்கி ஆனந்தம் அடைபவன் நான்.

'யார் அறிவாளி.. யார் வெற்றியாளர்... யார் ஏமாளி.. யார் முட்டாள்... யார் விதியை மதியால் வென்றவர்... யார் மதியால் வாழ்ந்து விதியால் வீழ்ந்தவர்...

என் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள் இவை. தெரிந்தவர்கள் விளக்கினால் நான் தெளிவடைவேன்.

வாதம் மட்டும் வாழ்க்கை அல்ல.. பிடிவாதம் மட்டும் வாழ்க்கை அல்ல.. விதண்டாவாதம் மட்டும் வாழ்க்கை அல்ல. வாழ்க்கை என்றால் என்ன.. வெற்றி என்றால் என்ன என்று நேற்று என்னைச் சந்தித்த ஒருவர் கேட்டார்.

"நாம் அறிவாளிகள் என்று நிரூபிப்பதைவிட மற்றவர்களை முட்டாள்கள் என்று மட்டம் தட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறவர்கள் நாம்" என்று சொல்வேந்தர் சுகி. சிவம் அடிக்கடி கூறுவார்.

அறிந்தவர்கள் சொன்னால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். உண்மையானவர்கள் உதவுங்களேன்.

Thursday, 12 November 2015

முறிந்த உறவு...பிரிந்த குடும்பம்..இணைந்தது இன்று...!

ஒரு சிக்கலான பிரச்சினை என்னிடன்  சென்ற ஆண்டு வந்தது. நான் மலேசியாவில் இருந்து இந்தியா திரும்பிய இரண்டு நாட்களில் இந்த பிரச்சினை குறித்து பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அழகான மனைவி... அள்ளி எடுத்து உச்சி முகர வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கும் எழில் கொஞ்சும் மூன்று குழந்தைகள்.


கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு. மாமனார் இல்லை. மாமியார் மட்டும்தான். மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒத்துப் போகவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம். அடிதடி என்று அமர்க்களப்பட்டது. பஞ்சாயத்து களை கட்டியது. குடு

மற்றவர்கள் ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் ஜாதக அமைப்புத்தான் இதற்கு பிரதான காரணம் என்பதை நான் உணர்ந்தேன்.

ஒரு கட்டத்தில் மனைவி பிள்ளைகளோடு தாய் வீடு போய்ச் சேர்ந்தாள். பலர் சமரச முயற்சியில் ஈடுபட்டு மூக்குடைந்து போனார்கள்.

இந்த நிலையில் பெண் வீட்டிற்கு நெருக்கமான வழக்கறிஞர் வேறு  வழியை மறித்துக் கொண்டு நின்றார். என்ன முயன்றும் அவர் மனதை மாற்ற இயலவில்லை.

அந்தக் குடும்பத்துக்கு வேண்டிய சிலர் மீண்டும் என்னிடம் வந்தார்கள். குறிப்பிட்ட காலம் கடக்கட்டும். எல்லா காரியங்களும் நல்ல விதமாக முடியும் என்று சொன்னேன்.

அவர்கள் இருமனதாக சென்றார்கள். என் கருத்தில் உடன்பாடில்லை என்பதை அவர்களின் முகக் குறிப்பு காட்டியது.

கோழி ஒரு கூட்டிலே... சேவல் ஒரு கூட்டிலே.. என்று அவர்களின் வாழ்க்கை ஆளுக்கொரு திசையில் சென்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இரு குடும்பத்துக்கும் பொதுவாக உள்ள சிலர் மீண்டும் என்னிடம் வந்தார்கள். கண்டிப்பாக ஏதாவது செய்து குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.

"சில பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வேண்டும். சில பிரச்சினைகளைப் பேசாமல் தீர்க்க வேண்டும். இது இரண்டாவது வகை" என்று அவர்களை அனுப்பி வைத்தேன்.

எனக்கு இதில் அக்கறை இல்லையோ என்ற வகையில் விடைபெற்றுச் சென்றார்கள்.

தீபாவளி அன்று இரவு 7 மணி இருக்கும். நானும் சிலரும் ஒரு மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அந்த பையன் வீட்டிற்கு முன்னர் ஒரு கார் வந்து நின்றது.

முதலில் அவர் இறங்கினார். பின்னர் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் காரில் இருந்து வெளிப்பட்டனர். எல்லோருக்கும் ஆச்சரியம்.

எனக்கு இதில் வியப்பில்லை. காலம் கனிந்தது, காரியம் நடந்தது. மூன்று பிள்ளைகளும் ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டபோது இதை விட என்ன இன்பம் இருக்கப் போகிறது இந்த பூலோகத்தில் என்று இறுமாந்து போனேன்.

எத்தனை நாளைக்கு இவர்கள் ஒன்றாக குப்பை கொட்டப்  போகிறார்கள் என்ற முணுமுணுப்பும் காதில் வந்து விழுந்தது. உறவுகளின் உறக்கம் தொலைவது மற்றவர்கள் மகிழ்ச்சியைப் பார்த்துத்தானே.

வரமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த பெண் இன்று வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டாள். இதை இறைவன் நிச்சயமாக நிரந்தரமாக்குவான்.

சில ஜாதக தோஷங்களுக்கு நாம் பரிகாரம் செய்து நிவர்த்தி பெறலாம். சில தோஷங்களுக்கு காலமே பரிகாரம் செய்து விடும்.

அனுபவம் மிக்க ஜோதிட விற்பன்னர்களுக்கு இந்த நுணுக்கம் தெரியும்.


Saturday, 7 November 2015

மகனால் மகிழ்ச்சி... மனைவியால் அதிர்ச்சி....!

மலேசியாவில் வேலை பார்த்தவர். திருமணம் ஆன இரண்டு மாதங்களில் மலேசியாவுக்குத் திரும்பி விட்டார். அடுத்த ஆறு மாதத்தில் மீண்டும் ஊருக்கு வந்தார்.

இப்படியே நாலைந்து தடவை விமானத்தில் இங்கும் அங்கும் பறந்தார். ஆண்டுகள் நான்கு ஓடி விட்டன.ஆனால், அவருடைய மனைவி கருக் கொள்ளவில்லை.


இந்த ஏக்கம், ஊராரின் கேலிப் பேச்சு, உறவினர்களின் உச்சுக் கொட்டு இவையனைத்தும் இவரை திக்குமுக்காட வைத்தது.

மலேசியாவை காலி பண்ணிவிட்டு வந்து விட்டார். அடுத்த மாதமே அவர் மனைவி கர்ப்பமாகி விட்டார். ஒரு பக்கம் சந்தோசம். இன்னொரு பக்கம் கவலை.

வேலை இல்லாததால் கொண்டு வந்த பணம் மருத்துவமனைக்கும் மருந்துக்குமாகக் கரைந்து விட்டது. குடும்ப வாழ்க்கையிலும் குத்து வெட்டு. இப்போது அவரின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணி.

நொந்து போய் என்னிடம் வந்தார். ஜாதகத்தைப் பார்த்து விவரம் சொன்னேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஜோதிடம் பார்த்தோம். எல்லாரும் நல்லா இருக்குன்னுதான் சொன்னார்கள் என்றார்.

இப்போது போய் கேட்டுப் பாருங்கள் எல்லாரும் ஏறுக்குமாறாகச் சொல்வார்கள் என்று கூறினேன். அதை அவர் ஒப்புக் கொண்டார். இது நடந்தது ஒரு மாதத்திற்கு முன்னால்.

பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்தார். மனைவிக்கு இதுதான் மாதம். 27 ஆம் தேதிக்கு முன்னால் மூன்று நாட்களைத் தேர்வு செய்யும்படி மருத்துவர் கூறிவிட்டார். நல்ல நாள் பார்த்து சொல்ல முடியுமா எனக் கேட்டார்.

மேலும் என்ன பிள்ளை பிறக்கும். ஆண் பிள்ளை வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதையும் பார்த்துச் சொல்லுங்கள் ஐயா என்றார்.

எனக்கு இதில் உடன்பாடில்லை. இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும். எப்போது வலி எடுக்கிறதோ அப்போது அறுவைச் சிகிச்சை செய்யலாம். ஆண்பிள்ளையா பெண் பிள்ளையா என்பது முக்கியமல்ல. குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும். அதுதான் முக்கியம் என்று சொன்னேன்.

அவர் விடவில்லை. நான் குறித்துக் கொடுக்கிறேன். ஆனால், அதற்கு முன்பாகவே குழந்தை பிறந்து விடும் பரவாயில்லையா என்று கேட்டேன்.

இருந்தாலும் அவர் பிடிவாதம் மாறவில்லை. அவர் விருப்பப்படி மூன்று நாட்களை தேர்வு செய்து கொடுத்தேன்.

நேற்று இரவு 7 மணி அளவில் அவர் எனக்கு போன் செய்தார். மனைவிக்கு வலி வந்து விட்டதாகவும் உடனே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அச்சப்படத் தேவையில்லை. குழந்தை நல்லபடியாக பிறக்கும். மேலும் நீங்கள் கேட்டது கிடைக்கும். இது உறுதி என்று அவரிடம் சொன்னேன்.

இருப்பினும் என் வார்த்தையில் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்பது குரலில் தெரிந்த பயம் எனக்கு உணர்த்தியது.

இரவு சரியா 9 மணிக்கு என் கைத் தொலைபேசி கதறியது. எடுத்தேன். அந்த அன்பர்தான். ஐயா குழந்தை நல்லபடியாக பிறந்து விட்டது என்று சொன்னார்.

என்ன பிள்ளை என்று நான் கேட்கவில்லை. நீங்கள் சொன்னபடி ஆண்பிள்ளை ஐயா.. இரண்டு ஜோதிடர்கள் பெண்தான் பிறக்கும் என்றார்கள்.

காசு இல்லாத கவலையோடு அந்தக் கவலையும் என்னைப் பிடித்து ஆட்டியது. இப்போது இந்த ஒரு ஆசையையாவது இறைவன் நிறைவேற்றி வைத்தானே என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சியோடு சொன்னார்..

முந்தைய நிகழ்வும் இந்த சம்பவமும் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் நடந்தவை.

"சாமி... உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. வாழ்நாள் முழுவதும் இதை மறக்க மாட்டோம்" என ஆண்பிள்ளை பாக்கியத்தை அடைந்த இருவரும் சொன்னது இன்னும் என் காது மடல்களில் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.

எல்லாம் எம்பெருமான் விநாயகப் பெருமான், இளவல் முருகப் பெருமான் ஆகியோரின் அருட் கடாட்சம். பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க இந்த இருவரையும் பிரார்த்திக்கிறேன்.

Friday, 6 November 2015

பிள்ளை பிறக்கும் நேரம்... நிர்ணயிப்பது யார்..?

மனிதன் ஆசைப்படுவது இயற்கை. அதை நிறைவேற்றுவது இறைவன். வயிற்றில் கருவான குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பது தாய் தந்தையரின் தணியாத விருப்பம்.

இதை நிறைவேற்றுவது யார். ஜோதிடரா... மருத்துவரா.. இந்தக் கேள்விக்கு விடை தேடி காலத்தைக் கணித்து கையைக் கடித்துக் கொண்ட ஜோதிடர்கள் ஏராளம்.


இடைநிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் இரு வாரங்களுக்கு முன்னர் எனக்கு போன் செய்தார். அறிமுகம் கிடையாது.
தொலைக்காட்சி அலுவலகத்துக்கு அழைத்து என் எண்ணை வாங்கி என்னிடம் பேசினார்.

"சார்... நான் நிறைமாத கர்ப்பிணி. எனக்கு வயது 40. என்னோட பணி செய்யும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியை... குறிப்பிட்ட நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என்று சொல்கிறார்.

அதன்படி ஒரு நாளை அறுவைச் சிகிச்சைக்கு தேர்வு செய்திருக்கிறேன். குறிப்பிட்ட நட்சத்திரம் எவ்வளவு நேரத்திற்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா" என்று கேட்டார்.

நான் சிரித்தேன். "அம்மா.. இப்போது உங்களுக்கு தேவை மருத்துவரின் ஆலோசனையும் சேவையும். ஜோதிடர்களின் கருத்து அல்ல. கண்டிப்பாக உங்களுக்கு நல்ல விதமாக குழந்தை பிறக்கும் நம்புங்கள்" என்று சொன்னேன்.

" ஐயா... என்னுடைய 12 வயது மகன் சாலை விபத்தில் துள்ளத் துடிக்க இறந்து விட்டான். இப்போது 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண்டவன் அனுக்கிரகத்தால் கர்ப்பமாகி இருக்கிறேன். அதனால்தான் பயமாக இருக்கிறது" என்று சொன்னார்.

"அவரோடு சுமார் அரை மணி நேரம் பேசினேன். நாம் கணக்குப் போடலாம். இறைவன்  தான் விடை எழுத வேண்டும்.

இருப்பினும் தாங்கள் முடிவு செய்த நேரத்தில் அறுவைச் சிகிச்சையை வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக இறந்தவன் மீண்டும் பிறப்பான். உங்களுக்காக நான் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன்" என்று கூறினேன்.

நேற்று அந்தப் பெண்மணி எனக்குப் போன் செய்தார். "ஐயா... நீங்கள் சொன்னது போலவே நடந்து விட்டது. நாங்கள் நிர்ணயித்த தேதிக்கு முதல் நாளே வலி வந்து விட்டது.

அவசரமாக காரில் என்னை மருத்துவமனைக்கு என் கணவர் அழைத்துச் சென்றார். மகப்பேறு மருத்துவர்கூட அப்போது இல்லை.

இருந்தாலும் எனக்கு மயக்க மருந்து கொடுக்காமல் மரமரப்பு ஊசி போட்டு குழந்தையை எடுத்து விட்டார்கள். தாங்கள் சொல்லியபடி ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறான். நான் தான் பலவீனமாக இருக்கிறேன். என் தாய் வீட்டிற்கு வந்து விட்டேன். சற்று தேறியவுடன்தான் தங்களை அழைக்கிறேன்.

உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நான் பயந்த காலத்தில் தொலைபேசி வாயிலாக ஊக்கப்படுத்தி என் அச்சத்தைப் போக்கி உறுதுணையாக இருந்த உங்களை எந்தக் காலத்திலும் மறக்க மாட்டேன்" என்று நா தழுதழுக்க கூறினார்.

கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த அந்தச் சகோதரியும் குழந்தையும் என்றென்றும் ஆரோக்கியத்துடனும் சிறப்பாகவும் வாழ இறைவனைப் பிராத்திக்கிறேன்.

மேலும் என்னைச் சந்தித்து 'பிள்ளை பிறக்கும் நேரம்' குறித்து கேட்ட ஒரு சகோதரருக்கு நேர்ந்த அனுபவத்தை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.
Tuesday, 3 November 2015

"சாமி வணக்கம்... அப்பா போய்ட்டு வர்றேன்" என் விழிகளை ஈரமாக்கிய இளம் பெண்...!

தோற்றதைப் பார்த்து ஒருவரின் ஏற்றத்தை எடை போடக் கூடாது என்ற தத்துவப் பழமொழி ஒன்று உண்டு.

அதற்கு சரியான விளக்கத்தை இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்த ஓர் இளம் பெண்ணைப் பார்த்து உணர்ந்தேன்.

தாய் தந்தையருடன் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஓர் இளம் பெண் என்னைப் பார்க்க வந்தார். அவருடன் தந்தையும்  தாயும் வந்தனர். கையில் மூன்று வயதுக் குழந்தை.

முதலில் மகனுடைய ஜாதகத்தைக் கொடுத்து பலன் கேட்டார்கள். பார்த்துச் சொன்னேன். அதன் பின்னர் மகளின் ஜாதகத்தையும் மருமகனின் ஜாதகத்தையும் கொடுத்தார்கள்.

இரண்டையும் கணித்தேன். அந்தப் பெண் இருக்கும் தோற்றம், கையில் வைத்திருக்கும் குழந்தை ஆகியவை என் கணிப்பில் முரண்பாடுகளைத் தந்தது.

தசவிதப் பொருத்தங்களில் முக்கிய பொருத்தங்கள் இல்லை. அதைவிட ஜென்ம ஜாதகத்தில் இருக்கும் கிரகங்கள் தாறுமாறாக தறிகெட்டு நின்றன.

இவர்கள் இருவரும் நிறைவான வாழ்க்கை வாழ இயலாது. அப்படி வாழ்ந்தால் அது இறைவனின் திருவருளால்தான் இயலும்.

கிரகங்கள் நிற்கும் சூழலைப் பார்த்து இப்படி அவர்களிடன் விளக்கினேன்.

"ஐயா உங்கள் மகள் மிகவும் அதிர்ஷ்டசாலி, கொடுத்து வைத்தவள். இந்த ஜாதக அமைப்புப்படி கணவனோடு சேர்ந்து வாழ்வது கடினம்.

பிரிந்து இருக்க வேண்டும் என்பது விதி. மேலும் குழந்தைப் பாக்கியம் கிடைப்பது குதிரைக் கொம்பு.

ஆண்டவன் கருணையால் அனைத்தும் வாய்த்திருப்பதாக நினைக்கிறேன். ஆகவே, இந்தச் ஜாதகத்தைப் பார்க்க வேண்டாம். எல்லாம் ஈசன் செயல்" என்று கூறி ஜாதகத்தை மூடி மேஜையில் வைத்தேன்.

இப்படிச் சொன்னவுடன் அந்த இளம் பெண்ணுடைய தாயாரின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிய ஆரம்பித்தது.

" சாமி இவளுக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷமாச்சு. இன்னும் குழந்தை பிறக்கவில்லை. கல்யாணத்துக்கு முந்தி மருத்துவ சோதனை செஞ்சோம்.

அப்ப ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு. கல்யாணம் செஞ்சு வச்சோம். மூனு வருஷம் ஓடிருச்சு. டாக்டரைப் பாத்தோம். கர்ப்பப் பைக்கு போற நரம்பில கோளாறு இருக்குன்னு சொல்றாரு.

எல்லா வைத்தியமும் பாத்துட்டோம். வைத்தியமுங்கிற பேருல எம் பொண்ணு படுற அவஸ்தையைப் பார்க்க சகிக்கலை. நீங்கதான் ஒரு நல்ல வழி சொல்லணும்"

அந்த அம்மா இப்படி அழுது கொண்டே கேட்டது என் நெஞ்சை பிசைந்தது.

அந்த இளம்பெண் படித்தவர். தெளிவான பேச்சு, தேர்ந்த சிந்தனை, பிரச்சினைகளை உள்வாங்கிக் கொண்டு பக்குவமாக வாழும் பாங்கு. இவை என்னை வியக்க வைத்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசினேன். பல்வேறு எடுத்துக் காட்டுகளைச் சொன்னேன்.

இரண்டு கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்யச் சொல்லி இருக்கிறேன்.மருத்துவரை மாற்றி வேறு சிறப்பு மருத்துவரை அணுக ஆலோசனை தந்திருக்கிறேன்.

அந்த இளம்பெண்ணின் கையில் இருந்த குழந்தை அவருடைய தங்கை மகளாம். அவர் துபாயில் இருக்கிறாராம். அந்தக் குழந்தையும் அகத்துக் கவலையை முகத்தில் காட்டாத அழுத்தமும்தான் என் ஆரம்ப தடுமாற்றத்திற்கு காரணம்.

என்னை முதலில் பார்க்கும் போது "சாமி வணக்கம்" என்று கை கூப்பி வணங்கிய அந்த இளம் பெண், என்னிடம் இருந்து விடைபெற்றுச் செல்லும்போது "அப்பா, போய்ட்டு வர்றேன்" என்று சொன்னது என் விழிகளை ஈரமாக்கியது.

கண்டிப்பாக இந்தப் பெண்ணின் ஏக்கத்துக்கு வடிகால் கிடைக்கும். அதற்கு ஆண்டவன் நிச்சயம் அருள் செய்வார்.

Monday, 12 October 2015

தெய்வத்தாயின் தரிசனம்... தேடிச் சேர்த்த புண்ணியம்...!

உடலைப் படைத்தது இறைவன். அதற்கு உயிரைக் கொடுத்தது இறைவன். வினை செய்யும் விதியைக் அளித்தது இறைவன். அதில் இருந்து விலகும் மதியைத் தந்தது இறைவன்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதியான ஆண்டவன் உறையும் ஆலயங்களுக்குச் செல்லும்போது மனம் சாந்தி அடைகிறது.

வாட்டும் துன்பங்களுக்கு வடிகால் கிடைக்கிறது. துரத்தும் துயரங்களுக்கு துயரம் உண்டாகிறது.

இது ஒரு புறமிருக்க, சில வேளைகளில் மனிதர்களே தெய்வங்களாக காட்சி தரும் அதிசய அனுபவங்களை அடைகிறோம்.

அப்படிப்பட்ட மகத்தான அனுபவம் இரு தினங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம்.

அருமைச் சகோதரன் மகேந்திரனுக்கு அணுக்கமான நண்பர் கண்ணன். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்.

அவரும் அவர் துணைவியாரும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் ஒரு ஹோமம் செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள்.

தம்பி மகேந்திரன் என்னை அணுகினார். குறிப்பிட்ட நாளில் கணபதி ஹோமம் செய்ய வேறு ஒருவர் முன்பதிவு செய்து விட்டார்.

ஒரு நாளில் ஒரு நபர் மட்டுமே ஹோகம் செய்ய இயலும் என்ற வகையில் நிர்வாகம் வரையறை செய்துள்ளது.

அதனால் அபிஷேக ஆராதனை செய்து விநாயகப்பெருமானை வழிபட ஆவன செய்தோம். ஏனெனில் அக்.11 அவரின் பிறந்த நாள்.

கண்ணன் தம்பதியரும் கட்டுமானத் தொழிலில் கோலோச்சும் லெட்சுமணன் தம்பதியரும் குறிப்பிட்ட நாளில் சென்னையில் காரைக்குடி வந்து விட்டார்கள்.

பிள்ளையார்பட்டியில் மிக நேர்த்தியாக அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கற்பக விநாயகரை பூரண அலங்காரத்தோடு தரிசித்து புளகாங்கிதம் அடைந்தோம்.

பின்னர் பட்டமங்கலம் தட்சணாமூர்த்தியைத் தரிசித்தோம். திருக்கோஷ்டியூர் சென்று பள்ளிகொண்ட பெருமாளை வணங்கினோம்.

அன்புத்தம்பி நாகராஜன் (ARC உணவக உரிமையாளர்) அனுப்பி வைத்த மதிய உணவை ரசித்து ருசித்தோம்.

அதற்கு பின்னர்தான் நான் மேலே குறிப்பிட்ட அற்புத அனுபவம் கிடைத்தது.

நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த திரு அண்ணாமலை அவர்களின் துணைவியாரின் இல்லத்தை பார்க்க சென்றோம். திரு அண்ணாமலை கண்ணன், லெட்சுமணன், மகேந்திரன் ஆகியோருக்கு நெருக்கமான நணபர்.

காரைக்குடி மத்திய பகுதியில் மிகப் பெரிய வீடு. நாங்கள் வரும் செய்தி ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டு விட்டது.

நாங்கள் வாசலில் நின்று அழைப்பு மணியை அழுத்திய சில விநாடிகளில் பல கோடி மதிப்புள்ள பிரமாண்டமான ராஜநிலைக்கதவு திறந்தது.

பார்த்தவுடன் பாதம் பணிந்து வணங்க வைக்கும் அருட்கடாட்சத்தோடு வெள்ளை உடையில் 80 வயது மதிக்கத்தக்க அம்மையார் அன்பும் அருளும் இழையோட எங்களை வரவேற்றார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரிய வீடு. அன்று பதிக்கப்பட்ட தரைக்கற்கள் இன்றும் அழுக்குப்படாமல் இருக்கின்றன.

சிபிஐ புலனாய்வுத்துறை களத்தில் இறங்கினால் கூட ஒரு ஒரு தூசி தும்பைக் கண்டுபிடிக்க முடியாது. அத்தனை சுத்தம்.

அந்தத் தாயைப் பார்த்து சுறுசுறுப்பே வெட்கப்பட வேண்டும். சுமார் மூன்று நிமிடத்தில் எங்களுக்கு காபி தாயரித்து உபசரித்த பாங்கை இந்தக் கால இளைய சமுதாயம் ஏணி வைத்தாலும் எட்டிப் பிடிக்க முடியாது.

வசதியான குடும்பம், வளமான வாழ்க்கை. இறையருள் நந்தவனமாக விளங்கிய இந்த இல்லத்திலும் விதி விஷ நாக்கை நீட்டி சோகச் சொக்கட்டான் விளையாடியது கொடுமையிலும் கொடுமை.

மடை திறந்த வெள்ளம் போல தடையில்லாமல் இவர் பேசியபோது அந்தச் சோகத்தின் வேதனை நெல்லோடு கலந்த கல்லாக... சொல்லோடு சேர்ந்து வந்தது.

தவமிருந்து பெற்ற பிரிய மகனை 14 வயதில் பறிகொடுத்திருக்கிறார். அந்தச் சோகத்தில் ஆழ்ந்து போன கணவரை அடுத்த நான்கு ஆண்டுகளில் இழந்திருக்கிறார்.

சோகமும் துயரமும் சூறாவளியாக இவரைச் சுழற்றி அடித்தாலும் இறை பக்தி தந்த தன்னம்பிக்கை இவரைத் தளர விடவில்லை.

வீட்டு நிர்வாகத்தையும் மில் நிர்வாகத்தையும் கையில் எடுத்துக் கொண்டு பாரம்பரியத்திற்கு பங்கம் வராமல் இரண்டு பெண்களைக் கரை சேர்த்தார்.

இன்றும் தானே சமைத்துச் சாப்பிடுகிறார். இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக வசிக்கிறோமே என்ற உணர்வு இவருக்கு சிறிதளவேனும் இல்லை.

இதோ எங்கள் அய்யா (கணவர்) அன்புக்குரிய ராமு (மகன்) மாமனார் மாமியார், தாயார் தகப்பனார் எல்லோரும் என்னுடன் இருக்கிறார்கள். நான் எதற்கு அஞ்ச வேண்டும் என்று கேட்கிறார்.

பக்கத்தில் பல்லி கத்தினாலே பயத்தில் பத்தடி தள்ளிப் பாயும் இன்றைய மனிதர்கள் மத்தியில் இவர் ஒரு கலங்கரை விளக்கம்.

அனைவரும் அந்த அருட் தாயின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம்.

"இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் என்னை வந்து பார்த்து விட்டுப் போங்கப்பா" என்று அப்பழுக்கில்லாத உள்ள சுத்தியோடு சொன்ன வாசகம் எந்நாளும் எங்கள் இதயத்தை விட்டு இறங்காது.

Friday, 9 October 2015

விதியை மதியால் வென்ற பெண்...!

நான் பெரிய ஜோதிடன், சாஸ்திர வித்தைகளின் சாகரம் என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்களைக் கூட கிறுகிறுக்க வைக்கும் ஜாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

நேற்று ஒரு தம்பதியர் என்னை சந்தித்தார்கள். கணவனுக்கு 46 வயது. மனைவிக்கு 32 வயது.

பெண் நல்ல அழகு. கணவர் கருப்பு. அதே நேரத்தில் தோற்றப் பொலிவும் குறைவு.

அவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள். கடைசிப் பிள்ளை ஆணாகத்தான் பிறக்கும் என்று... பார்த்த ஜோதிடர்கள் எல்லாம் சொன்னார்களாம்.

ஆணாகப் பிறக்கவில்லை என்றால் ஜாதகம் பார்ப்பதையே விட்டு விடுவதாக ஒரு ஜோதிடர் அடித்துக் கூறினாராம்.

ஆனால், பிறந்தது பெண். அதனால் இவருக்கு ஜோதிடர்கள் மீது அடக்க முடியாத கோபம்.

இந்த நிலையில் என்னைப் பற்றி கேள்விப்பட்டு அலுவலகத்திற்கு வந்தார்.

முதலில் இறுக்கமாக இருந்தவர் என் பேச்சைப் பார்த்து மனதில் உள்ளதை மளமளவென்று கொட்டி விட்டார்.

அனைத்து ஜாதகங்களையும் ஆய்வு செய்தேன். பிள்ளைகள் மூவருமே குட்டிச் சுக்கிரனில் பிறந்தவர்கள். காளசர்ப்பதோஷ அமைப்பு உடையவர்கள்.

புத்திரஸ்தானம் கெட்டுப் போய் பொல்லாத கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கும்போது இவருக்கு பிள்ளைகள் பிறந்ததே பெரும் பாக்கியம்.

இதனால் இவர் சம்பாதித்த செல்வம், பிள்ளைகள் பிறந்தவுடன் டாட்டா காட்டி விட்டு போய் விட்டது.

மேலும் இருவர் ஜாதகங்களும் சிக்கலான அமைப்பில் இருந்தன. அனைத்து தோஷங்களும் அரவணைத்து நின்றன.

மனமொத்து வாழ்வதற்கான மார்க்கம் அதில் சிறிதளவேனும் இல்லை.

" அம்மா, உன் முகத்தில் விசனத்திற்கான அறிகுறி கொஞ்சம் கூட இல்லை. ராட்ஷஸ குணத்தில் பிறந்தவள். அமைதியின் அடுத்த பிறவியாக இருக்கிறாய். எப்படிச் சாத்தியமானது" என்று கேட்டேன்.

அப்போது எனக்குக் குருவாக அவள் மாறினாள். அவள் எளிமையாக சொன்ன காரணங்கள் என் மனதில் வலிமையாக இறங்கின.

" சாமி... திருமணம் ஆகி மூன்று வருடங்கள் போராட்டம்தான். இளமையாக இருந்த என்னை கட்டி அணைத்து மகிழ்வதை விட எட்டி உதைத்து இன்பம் காண்வதில் அவருக்கு அலாதிப் பிரியம்.

அடுப்பில் வைத்த விறகு எரிந்துதானே ஆக வேண்டும். நான் அவரை மாற்ற முயற்சி செய்யவில்லை. என்னை மாற்றிக் கொண்டேன். பாலைவன வாழ்க்கை சோலைவனமாக மாறியது.

முதலில் அவருக்கு என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொண்டேன். பின்னர் என்ன பிடிக்கும் என்பதைப் அறிந்து கொண்டேன்.

பிறகு அவரிடம் இருக்கும் நிறை குறைகளைப் புரிந்து கொண்டேன். இதனால் அவரை முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

இப்போது பணம் இல்லை எங்களிடம். ஆனால், பக்குவமான மனம் இருக்கிறது" என்றார்.

விதியை மதியால் வெல்ல முடியும் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா... என்ன...

என்ன தொழில் செய்யலாம் என்று கேட்டார்கள். துணி வியாபாரம், இரும்பு சம்பந்தமான தொழில் சிறப்பாக இருக்கும் என கூறினேன்.

துணிக்கடை வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். அதையே நீங்கள் கூறியது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

இழந்ததை நினைத்து கவலைப்படவில்லை. வருவதை எதிர்கொள்ள தயாராகி விட்டோம் எனக் கூறினர் அந்தத் தன்னம்பிக்கைத் தம்பதிகள்.

என்னிடம் பேசிக் கொண்டிருந்த மூன்று மணி நேரமும் அவர்கள் எனக்கு ஆசானாகத் திகழ்ந்தார்கள். நான் மாணவனாக மாறி என்னை நானே புதுப்பித்துக் கொண்டேன்.


Thursday, 8 October 2015

ரச்சுத் தட்டியது.... வாழ்க்கை கெட்டது....!

முகத்தைப் பார்த்து அகத்தை அறிந்து கொள்ளலாம் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

ஆனால், அழகான முகத்துக்குப் பின்னால் ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பின்னால் இதயத்தில் இழையோடும் சோகத்தை அறிந்து கொள்வது அவ்வளவு சுலபமில்லை.

அண்மைய காலங்களில் அனுபவத்தின் மூலமாக அடியேன் அறிந்து கொள்ளும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்தான்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்து ஜோதிட ஆலோசனை பெற தாயும் மகளும் வந்தார்கள்.

மகள் இளங்களைப் பட்டம் பெற்று ஆசிரியர் பயிற்சி முடித்து இருக்கிறார். இவருக்கு இரண்டு தம்பிகள். ஒருவர் மெக்கானிக் இஞ்சினியர் படிப்பு. இன்னொருவர் பள்ளி இறுதி வகுப்பு.

பெண்ணின் கணவர் துபாயில் வேலை பார்க்கிறார். அந்தப் பெண்ணின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது பொருளாதாரப் பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அனைவரின் ஜாதகத்தையும் கணித்தேன். எதார்த்தமாக கணவன் மனைவிக்கு பொருத்தம் எவ்வாறு உள்ளது என்பதைப் பார்த்தேன்.

அதிர்ச்சி அலை என் இதயத்தில் மோதிச் சிதறியது. கணவனுக்கும் மனைவிக்கும் ரச்சுப் பொருத்தம் இல்லை.

அதை வெளிக்காட்டி நான் மிகப் பெரிய ஜோதிடன் என அலப்பறை பண்ண விரும்பவில்லை.

என் பேச்சு அவர்களுக்கு மிகத் திருப்தியாக இருந்தது என்பதை அவர்கள் அடுத்தடுத்து அடுக்கிய கேள்விகளால் உணர முடிந்தது.

இறுதியாக அந்தப் பெண் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். "சாமி என் ஜாதகத்தில் முக்கியமான அம்சம் இருக்கிறது அதைச் சொல்ல முடியுமா" என்று.

"ஜோதிடம் என்பது வழிகாட்டி.. ஜோதிடனிடம் ஆலோசனை கேட்கலாம். சோதனை நடத்தக் கூடாது. அது விபரீத விளைவுக்கு வித்திட்டு விடும்" என்று அறிவுறுத்தினேன்.

" அம்மா... ஆண்டவன் அருளால் உன் குடும்ப வண்டி குடை சாயாமல் இவ்வளவு நாட்கள் ஓடி விட்டன.

அதற்காக இறைவனுக்கு நீ ஒவ்வொரு நாளும் நன்றி சொல்ல வேண்டும். உன் பிள்ளைகள் இறைவனின் அருட்கொடை.

அதுதான் சுமங்கலியாக உன்னை பூவையும் பொட்டையும் சுமக்க வைத்திருக்கிறது. இருப்பினும் வாழ்ந்தும் நீ வாழா வெட்டி" என்று சொன்னேன்.

அடுத்த வினாடி ஒரு விம்மல் வெடித்துச் சிதறியது. கண்கள் அருவியாகின. ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஐந்தாறு நிமிடங்கள் ஆகி விட்டன.

அணைக்குள் அடங்கி இருக்கும்வரைதான் தண்ணீர். உடைத்துக் கொண்டு வெளியேறினால் வெள்ளம்.

அந்த நிலையில் இருந்தார் அந்தப் பெண். தாய் அழுவதைப் பார்த்து மகளும் அழுதார்.

இந்த நிலைக்கு என்ன காரணம். இருவருக்கும் மிக முக்கிய பொருத்தமான ரஜ்ஜு இல்லை. இப்படி ஒரு நிலை இருந்தால் எந்த ஜோதிடரும் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்.

"தாலியைக் கழட்டி விட்டு உண்டியலில் போடும்படி ஒருத்தர் சொன்னார். அப்படிச் செய்யலாமா சாமி" என்று கேட்டார்.

தலையில் விழுந்த இடி எல்லாவற்றையும் தாங்கி ஆகி விட்டது. தொடர்ச்சியான துன்பமே துணையாகி விட்டது. இனித் தேவையில்லை. பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் சொல்லி அனுப்பினேன்.

சில பரிகாரங்களை செய்யச் சொல்லி இருக்கிறேன். குறை இருக்கிறது என்று தெரிந்தும் 'கொண்டு நோக்கி' வாழ்ந்த அந்த அம்மையாரின் பொறுமையும் திற்மையும் பாராட்டுக்குரியவை.

நேற்று என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, " உங்களைச் சந்தித்து விட்டு வந்த இரண்டு நாட்களில் என் மனம் மிகவும் லேசாக இருக்கிறது.

தொலைந்து போன தூக்கம் மீண்டு வந்திருக்கிறது. என் வாழ்க்கைப் பிரச்சினைக்கு உங்கள் மூலமாக ஒரு வடிகால் அமைந்திருக்கிறது" எனச் சொன்னார்.

எல்லாம் என்னுள் இருந்து என்னை இயக்கும் முருகப் பெருமான், அவருடைய அண்ணன் விநாயகப் பெருமானின் அருள்.

Wednesday, 30 September 2015

நாக்கில் சனி... நரகமாகும் வாழ்க்கை...!

நான் அலுவலகத்தில் அமர்ந்து கணினியை திறக்கின்ற போது அலைபேசி என்னை அழைத்தது.

" ஐயா நான் உயிர் வாழ்வதிலேயே அர்த்தம் இல்லை. எனக்கு வாழப் பிடிக்கவில்லை. நீங்கள்தான் எனக்கு வழி சொல்ல வேண்டும்."

ஒரு பெண் வெடித்துக் கிளம்பும் விம்மலை அடக்க முடியாமல் என்னிடம் பேசினார்.

" வாழ வழி கேட்டால் என்னால் ஆயிரம் வாய்ப்புகளைக் கூற முடியும். சாக வழி கேட்பது எந்த வகையில் நியாயம" என்று அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தினேன்.

" நீ பாட்டுக்கு ஏதாவது ஏடாகூடமாகச் செய்து விடாதே.. கடைசி நேரத்தில் என்னிடம்தான் பேசினாய் என்று தெரிந்து போலீஸ் என்னை புரட்டி எடுத்து விடும்" என நகைச்சுவையாகச் சொன்னேன்.

கவ்விப் பிடித்த சோகத்திலும் அந்தப் பெண் மெல்லச் சிரிப்பது எனக்குக் கேட்டது.

" சார் உங்களை நேரில் சந்திக்க வேண்டும். எத்தனை மணிக்கு வரட்டும் எனக் கேட்டார்.

அன்று காலை இரண்டு பேருக்கு ஒப்புதல் அளித்து இருந்ததால் 12 மணிக்கு வரச்சொன்னேன்.

கணவரின் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார். என்னை பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு சின்ன சலனம்.

ஜோதிடர் என்றதும் வயதான தோற்றத்தில் பட்டை அடித்து அதற்குரிய அடையாளங்களோடு இருப்பேன் என நினைத்திருப்பார் போலும்.

அவரின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு நான் பேசியதும் அவரின் இறுக்கம் குறைந்து விட்டது.

" நான் என்ன பேசினாலும் தவறாகப் போய் விடுகிறது. எதைத் தொட்டாலும் பிரச்சினை வெடிக்கிறது. வீட்டில் மட்டுமல்ல, நண்பர்கள் உறவுகள் மத்தியிலும் இதே நிலைதான்.

நான் நியாயத்தைத் தான் பேசுகிறேன். ஆனால், அதுவே எனக்கு வினையாகி விடுகிறது. வீட்டில் வெட்டுக் குத்து நடக்காத குறைதான்" என்று சொன்னார்.

ஜாதகங்களை ஆய்வு செய்தேன். ஜென்மம், மகாதசை, கோச்சாரம் என எல்லா வகையிலும் சற்று ஆழமாகப் பார்த்தேன்.

அவர் ஜாதகத்தில் கிரகங்கள் எந்த எந்தக் கட்டத்தில் இருந்தன என நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஏனென்றால் சிலர் அதைவைத்து தங்கள் ஜாதகத்தை ஒப்பீடு செய்கிறார்கள்.

அது தவறு. மருத்துவர் செய்வதைப்  பார்த்து அதேபோல் நாமும்  செய்தால் பாதிப்பு நமக்குத் தான். மேலும் சில தவறான அபிப்பிராயங்கள் மற்றவர் மீது ஏற்பட இந்த சிறுபிள்ளைத்தனம் வழி வகுத்து விடும்.

குடும்ப உறவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சில கிரகங்கள் கெட்டுக் கிடந்தன. ஏழரைச் சனியின் இறுக்கமான பிடியில் வேறு இருக்கிறார்.

நியாயத்தை மட்டும் வைத்து வாழ்க்கை வண்டியை ஓட்டி விட முடியாது. எதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இனிப்பு உடலுக்கு மிகவும் நல்லது. அதன் ஆக்க சக்திதான் நமக்கு ஊக்க சக்தியாக மாறி ஊட்டம் அளிக்கிறது.

ஆனால், சர்க்கரை வியாதி வந்து விட்டால் அதே சர்க்கரை நமக்கு எதிரியாகி விடுகிறது. இந்த உண்மை தெரிந்து அதை நாம் ஒதுக்காவிட்டால் அதுவே நமக்கு எமனாகி விடுகிறது.

ஆகவே, இன்னும் ஓராண்டு காலத்திற்கு அமைதியாக இருங்கள். சனிக்கிழமைதோறும் மௌன விரதம் அனுஷ்டியுங்கள்.

நவக்கிரக வழிபாடு செய்து வாருங்கள். மனதை அடக்கப் பழகிக் கொள்ளுங்கள். நியாயம் பேசுகிறோம் என்று சொல்லி வீட்டை நரகமாக்கி விடாதீர்கள் என கூறினேன்.

புராண இதிகாசங்களில் இருந்து பல எடுத்துக் காட்டுகளை அவருக்கு விளக்கினேன். என்னைச் சந்தித்த பலர் இறக்கி வைத்த அனுபவங்களை அவருக்கு உணர்த்தினேன்.

சிதைந்து போன மனதோடு வந்தவர் தெளிந்த முகத்தோடு திரும்பினார். என்ன அவருக்கு எதார்த்த உண்மைகளை உணர்த்த நான் எடுத்துக் கொண்ட நேரம் இரண்டு மணிக்கும் மேலாக நீண்டு விட்டது.Tuesday, 29 September 2015

பெற்ற தாயை தூக்கி எறிந்த பிள்ளைகள்

ஓர் அம்மையார் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று உங்களைப் பார்க்க முடியுமா என்றார்.

அவருடைய குரலில் அழுகையும் அவசரமும் தெரிந்தது. என் அலுவலகத்துக்கு வரச் சொன்னேன்.

மகளைக் கூட்டிக் கொண்டு மதிய நேரத்தில் வந்தார். அவருடைய இரண்டு மகன்களின் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும் என்றார்.

பார்த்தேன். அவருக்கு ஏற்பட்ட சிக்கல் என்ன என்பது தெரிந்து விட்டது.

இரண்டு ஆண்கள், ஒரு பெண், எல்லாருக்கும் திருமணம் ஆகி விட்டது.

அதன் பின்னர்தான் பிரச்சினை. ஆண்பிள்ளைகள் இருவரும் அம்மாவை ஒதுக்கி விட்டு மனைவி வீட்டில் மஞ்சம் கொண்டு விட்டார்கள்.

இந்த அம்மா குருட்டுத்தனமான தெய்வ பக்தி உடையவர். தான் அம்மனின் அவதாரம் என்ற நம்பிக்கை அவர் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

மஞ்சள் ஆடையில்தான் காட்சி தருவார். சற்று அதிகமாகப் பேசக்கூடியவர்.

இவருக்கு துறவு ஜாதகம். எப்படியோ திருமணம் ஆகி மூன்று பிள்ளைகளுக்கு தாயாகி விட்டார்.

பளிங்குத் தரையில் சிதறிய பாதரசத்தைப் போல எதிலும் ஒட்டாத இல்வாழ்க்கை.

பெற்றோர் எல்லாம் பெற்றவர் இல்லை. பிள்ளைகள் எல்லாம் பிள்ளைகள் அல்லர். உங்கள் மூலமாக பிள்ளைகளை உலகுக்கு ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கிறான் என்று சொன்னேன்.

எங்கு இருந்தாலும் உங்கள் பிள்ளைகள் சந்தோசமாக வாழ்ந்தால் சரி தானே. அதைத் தானே ஒரு தாயின் மனது விரும்பும் என்று எடுத்துச் சொன்னேன்.

மனம் ஆறவில்லை. மருகி மருகி கேள்வி கேட்டார். கோகுலத்து கண்ணன் கதையை அவருக்கு உணர்த்தினேன்.

இனிமேல் பிள்ளைகள் இவரிடம் வர வாய்ப்பு இல்லை. ஆனால், மருமகள்கள்தான் மகன்களை பிரித்து விட்டார்கள் என்ற ஆத்திரம் இவரை அவஸ்தைப்படுத்துகிறது.

இவரின் மகள் ஜாதகமும் இல்லற வாழ்க்கைக்கு இசைவாக இல்லை. அதிலும் பிரச்சினை.

இதையெல்லாம் தாண்டி இவர் குடும்பத்திற்கு ஏதோ ஒரு சாபக்கேடு இருக்கிறது.

அதன் தாக்கம் இந்த அம்மையாரை இந்தப் பிறவியில் நிம்மதி இல்லாமல் ஆக்கி விட்டது.

வரும் குருப் பெயர்ச்சி வரை பொறுமையாக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறேன்.

இதற்கிடையில் அந்த இளம் பெண் என்னிடம் தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று சொன்னார்.

அவர் என்னிடம் அவரின் மனக்குறையை இறக்கி வைக்கத் துடிக்கிறார் என்று அவரின் கண்கள் சொல்லியது.

ஆசிரியையாக பணி செய்கிறார். விடுமுறை நாளில் வரச் சொல்லி இருக்கிறேன்.

அவருக்கு உள்ள பிரச்சினை என்ன என்பதை என் உள் மனது தெளிவாக உணர்த்தி விட்டது.

இருப்பினும் அவர் வாயால் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.

Sunday, 27 September 2015

பெண்டாட்டியா... பிசாசா....?

" உன்னைய பஞ்சாயத்துல நிக்க வச்சு நாறக் கேள்வி கேட்கலைன்னா நான் மனுசி இல்லை."

" ஏம்மா இப்படி பேசுறே.. உனக்கு நான் என்ன குறை வச்சேன். நீ என்னை புருசனா நினைக்க வேண்டாம். ஒரு மனுசா நினைச்சு மரியாதை கொடுக்கக் கூடாதா"

" பொட்டப் பயலுக்கு என்னடா மரியாதை. உன் ஆத்தா பேச்சக் கேட்டுக்கிட்டு அழிச்சாட்டியமா பண்ணுற"

" உங்க அம்மாவ நீ நினைக்கிற மாதிரி தானே... நான் எங்க அம்மாவ நினைக்கிறேன். அது தப்பா...?

" பெத்துப் போட்டா தொத்திக்கிட்டே திரியணுமா.. அந்தக் கெழத்துக்கு கொஞ்சம் கூட இங்கிதம் தெரியலை. அம்மாவாம் அம்மா..  நொம்மா"

" இங்க பாரு என்னைய என்ன வேணுமின்னாலும் பேசு.. ஆனா, எங்க அம்மாவை இழுக்காதே. அப்புறம் என்ன நடக்குமுன்னு தெரியாது"

" என்னடா செய்வே.. அடிப்பியா.. மிதிப்பியா... பண்ணிப்பாரு உன் கன்னம் பழுத்துப் போகும்"

" போடி உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு பதிலா.. ஒரு காட்டெருமையைக் கட்டி இருக்கலாம்."

" இப்ப என்ன கேடு வந்துச்சு... காட்டெருமையக் கட்டிக்க.. இல்லைன்னா ஒரு கழுதைய வேணுமின்னாலும் கட்டிக்க..நானா வேண்டாமிங்கிறேன்."

" சீச்சீ... பொம்பளையா இருந்தா உன் கூட பேசலாம். ஒரு பிசாசோடு பேச முடியுமா" என்று கத்திக் கொண்டு வெளியேறிய ராமநாதன் ஆத்திரத்தை எல்லாம் மோட்டார் சைக்கிளில் காட்டினான்.

அவனுக்கு பயந்த ஹீரோ கோண்டா அடுத்த தெருவில் இருந்த டாஸ்மாக் கடையை நோக்கி பாய்ந்து சென்றது.

ராமநாதன் திருமணம் செய்திருப்பது மாமன் மகள் மேகலாவை. வேறு ஒரு பையனுக்கு நிச்சயம் பண்ணி கல்யாண நாளன்று ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் நின்று விட்டது.

அண்ணன் குடும்பம் அசிங்கப்பட்டு நிற்கிற்தே... என ஆதங்கப்பட்ட ராமநாதனின் தாயார் மகனுக்கு மணம் முடித்து வைத்தார்.

மேகலாவின் குடும்பம் வசதி வாய்ப்புக் குறைவானது. மேகலாவுக்கும் தகப்பனார் இல்லை, ராமநாதனுக்கும் அப்பா கிடையாது.

திருமணம் ஆகி இரண்டு வாரங்களில் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. என்ன சொன்னாலும் ஏட்டிக்கு போட்டிதான்.

அத்தை அவளுக்கு சொத்தை. புருசனை புடுங்கி எடுப்பது இருட்டுக் கடை அல்வா சாப்பிடுவது மாதிரி மேகலாவுக்கு.

சண்டை சச்சரவோடு ஓராண்டு ஓடி விட்டது. தாம்பத்திய வாழ்க்கை இல்லை. பிரச்சினையைச் சமாளிக்க முடியாத ராமநாதன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு தொலைபேசியில் அழைத்தார். நேரில் வரச் சொன்னேன். இருவரின் ஜாதகத்தோடு வந்தார்.

பார்த்தேன். எந்தப் பொருத்தமும் இல்லை. நல்லதைச் செய்யக் கூடிய கிரகங்கள் அத்தனையும் கெட்டுக் கிடக்கின்றன.

சுமார் இரண்டு மணி நேரம் பேசி அவர் மனதைத் தேற்றினேன். பல்வேறு என் அனுபவங்களை எடுத்துக் காட்டாகக் கூறினேன்.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின்னர் அவர் வாழ்க்கையில் வசந்த காலம் தொடங்கும் எனத் தெரிவித்தேன்.

மணமான இருவரைப் பிரிப்பது மிகப் பெரிய பாவம். ஆனால், சேர்ந்தே வாழ முடியாது என்று இருக்கும்போது ஒன்றாக வாழ்ந்து வீட்டை நரகமாக்குவது எந்த வகையில் நியாயம்.

என்னால்தான் என் மகன் வாழ்க்கை பாழாகி விட்டது என்று ராமநாதனின் தாயார் நொந்து நொந்து வெந்து சாகிறார்.

அனைவருக்கும் நிம்மதி வேண்டும் என்றால் அவரவர் பாதையில் செல்வதுதான் சிறப்பு.

அதை நடத்திக் காட்டும் வல்லமை ஆண்டவனுக்கு மட்டும்தானே உண்டு.


 

Monday, 21 September 2015

"பிள்ளைக்கு தடுப்பூசி போடணும், எப்ப போகலாம்"
"நாளைக்கு காலையில போவோம்"
"கண்டிப்பாக நாளைக்கு கூட்டிக்கிட்டு போவீங்களா"
"நாளைக்கு அவசியம் போகலாம்"
"உங்க தம்பி காரை எடுத்துக்கிட்டு போயிடுவாரு. அப்புறம் எப்படி போக முடியும்"
"அதைப்பத்தி உனக்கு என்ன கவலை. கூட்டிக்கிட்டு போக வேண்டியது என் பொறுப்பு"
"கார் இல்லாம் எப்படி போக முடியும்"
"கார் இல்லைன்னா என்ன, பஸ்ஸில போகலாம்"
"பஸ்ஸில போன நம்ம கவுரவம் என்ன ஆகிறது"
"ஏன், உங்க லட்சணத்துக்கு பஸ்ஸில போக முடியாதோ, கார் கேட்குதோ"
"நாளைக்கு மட்டும் கூட்டி போகலைன்னு வச்சுக்கங்க, அப்புறம் நடக்கிறதே வேறே"
"என்னடி பண்ணுவே, நிக்க வச்சு வெளக்கு மாத்தால அடிப்பியா"
"இங்க பாருங்க, நீங்க என்னடின்னா, நானும் என்னடான்னு கேப்பேன். எங்க லட்சணம் தெரிஞ்சுதானே, நடையா நடந்து என்னைக் கட்டிக்கிட்டீங்க. நானா உங்களுக்கு வாக்கப்படுறேன்னு நட்டுக்கிட்டு நின்னேன்."
"என்னடி வாய் நீளுது. அப்புறம் என் கை நீளும் பாத்துக்க"
"உங்க கை நீண்டா நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க உங்க அண்ணன் பொண்டாட்டி மாதிரி டொப்பிரி இல்லை. அப்புறம் என் கால் நீளும் தெரிஞ்சுக்கங்க"
அவ்வளவுதான் அவனுக்கு ஆத்திரம் தலைக்கு மேல் தாண்டவம் ஆடியது. ஓங்கி கன்னத்தில் ஓர் அறை கொடுத்தான்.
அடுத்த வினாடி அவள் செய்த காரியம் வீட்டில் உள்ளவர்களை விக்கித்துப் போக வைத்து விட்டது.
காலை தூக்கி ஜாக்கி ஜான் மாதிரி கட்டிய கணவனின் நெஞ்சில் ஓர் உதை விட்டாள்.
அம்மா, தம்பி, தம்பி மனைவி, அண்ணன் மனைவி ஆகியோர் முன்னிலையில் இப்படி நடந்தவுடன் அவமானத்தால் குறுகிப் போன அவன் உதைத்த காலைப் பிடித்து தலைகுப்புற அடித்து விட்டான்.
ஐயோ... அப்பா... என கத்திக் கொண்டு சுருண்டு விழுந்து தரையில் கிடந்தாள். அவள் போட்ட சத்தத்தில் ஊரே கூடி விட்டது.
இடுப்பு ஒடிந்து விட்டதோ என்ற பயத்தில் அள்ளிக் காரில் போட்டுக் கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்தார்கள்.
ஸ்கேன் செய்து பார்த்ததில் பாதிப்பு ஒன்றுமில்லை என்று தெரிந்த பின்னர்தான் அவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
பையன் செ

முதலிரவுக்கு ஒத்திகை.. முறிந்து போன வாழ்க்கை...!

"நீங்க செஞ்சது நியாயமா.. என்னை நம்ப வச்சு கழுத்த அறுத்திட்டேங்களே..கமல்"

"என்னை மன்னிச்சிடு சுதா... மனசாற சொல்றேன். உன்ன ஏமாத்தனுமுன்னு நினைக்கல. நாம சேந்து வாழ கொடுத்து வைக்கலை"


"பொய்... அப்பட்டமான பொய்.. மனச்சாட்சி இல்லாத மனுசன் நீங்க.. நல்லவன் மாதிரி நடிச்சு... என்னோட வாழ்க்கையைக் கெடுத்த நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க"

"நடந்தது நடந்து போச்சு. இதை கெட்ட கனவா நினைச்சு மறந்திடு... உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்க. என்னை தொந்தரவு பண்ணாதே.."

"யோய் நீயெல்லாம் மனுசனா.. இப்ப நான் உனக்கு தொந்தரவா.. அன்னைக்கு நீயில்லாட்டி எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு சத்தியம் பண்ணினியே. அது உன்னோட நெஞ்சில நிக்கலையா.."

"என்ன... திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்கே... அப்புறம் என் மண்டைக்கு ஏறிடும் பாத்துக்க."

"ஏன் ஏறாது. உன்னைய பாக்காம ஒரு நிமிசம் கூட இருக்க முடியலைன்னு என்னைய உருக வச்சு நயவஞ்சகமா வீட்டுக்கு கூப்பிட்டு கெடுத்திட்டு இப்ப நல்லவன் மாதிரி பேசுறீங்க."

"நான் மட்டுமா தப்பு செஞ்சேன். நீயும்தானே சம்மதிச்சே.. அப்ப உனக்கு புத்தி எங்க போச்சு."

"ஏன் சொல்ல மாட்டீங்க... உன்னைய கல்யாணம் பண்ணிக்க போறவன் கேட்கிறேன். முதலிரவு எப்படி இருக்குமுன்னு ஒத்திகை பாப்போம். அப்பத்தான் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க முடியுமுன்னு சொன்னதாலதானே உங்க ஆசைக்கு நான் இணங்கினேன்."

"அறிவு கெட்டவளே.. நல்ல சாப்பாடு சாப்பிட ஆம்பிள ஆயிரம் பொய்யைச் சொல்வான். பொட்டச்சி நீதாண்டி பொத்தி வச்சிருக்கணும். அன்னைக்கு கதவத் துறந்து விட்டு காத்தாடக் கிடந்திட்டு. இன்னைக்கு வந்து கத்துற"

" உலகத்திலேயே உன்னைய மாதிரி அழகி இல்லை. உன்னை தொடுறதுக்கு நான் கொடுத்து வச்சவன்னு சொல்லி.. ஒவ்வொரு உடுப்பாக கழட்டி என்னைக் கெடுத்துட்டு இப்ப வியாக்கியானம் பேசுற. நீ எந்தக் காலத்திலும் உருப்பட மாட்டே.. என் சாபம் உன்னைச் சும்மா விடாது"

"பத்தினி சாபம் பலிச்சிடப் போகுது. போடி போக்கத்தவளே... இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசுனே.. நடக்கிறதே வேற.. நாம் ரெண்டு பேரும் சல்லாபமா இருக்கிற பொல்லாத வீடியோவை இண்டர்நெட்டில போட்டேன்னு வச்சுக்க. உன் குடும்பமே விஷத்தக் குடிச்சுட்டு விண்ணுலகம் போக வேண்டியதுதான்."

கண்ணீர் பிரேசர் மலை தண்ணீர் மாதிரி பீறிட்டு வழிய கமலின் வீட்டை விட்டு வெளியேறினாள் சுதா.

சுதா கோலாலம்பூரில் வசிக்கிறாள். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். வயது 27. வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள். அவர்தான் கமல்.

பினாங்கில் வேலை பார்க்கிறார். வசதி இல்லை. வாடகை வீட்டில் வசிக்கிறார். இருந்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே சுதா மனதை பறிகொடுத்து விடுகிறாள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் கமல் பார்ப்பதற்கு அழகானவர் இல்லை. சுமார் ரகம்தான்.

இந்த நிலையில் ஒரு நாள் தொலைபேசியில் சுதாவை அழைத்து உன்னைப் பார்க்கணும் போல் இருக்கு. நெஞ்சு வலிப்பது போல் தெரிகிறது. டாக்டரிடம் காண்பித்து மாத்திரை சாப்பிடுகிறேன். உடனே புறப்பட்டு வா என அழைத்திருக்கிறார்.

இந்த அப்பாவிப் பெண்ணும் அடித்துப் பிடித்துக் கொண்டு பினாங்கிற்கு ஓடி இருக்கிறார். வந்த இடத்தில் வசியமாக பேசி காரியத்தைக் கச்சிதமாக முடித்து விட்டார்.

ஏமாற்றத்தில் கருகிப் போன அந்தப் பெண் என்னைப் பார்க்க வந்தார். நடந்ததைச் சொன்னார். இருவரின் ஜாதகங்களையும் பார்த்தேன்.

இருவருக்கும் பொருத்தமில்லை. மேலும் அந்தப் பையன் ஜாதகத்தில் இடக்கு மடக்காக இருந்த சில கிரகங்கள் பெண்கள் விஷயத்தில் தில்லாலங்கடி வேலை செய்யும் பெரும் கில்லாடி என்பதை வெளிப்படுத்தியது.

ரோஜாப் பூவில் தேன் குடித்த வண்டு தாமரை மலருக்குத் தாவி விட்டது. இந்த விஷயம் சுதாவுக்குத் தெரிய வந்தது. இது அவரை எரிமலைக்குள் தள்ளியது.

என்ன செய்வது விதியின் விளையாட்டை அவருக்கு விளக்கிச் சொன்னேன். கெடுத்தவனை மறந்து விட்டு அடுத்த காரியத்தில் அக்கறைப்படுமாறு அறிவுறுத்தினேன்.

முற்றும் ஏற்றுக் கொள்ளாத மனதோடு சற்று ஆறுதல் வயப்பட்டு சென்றார். மனது வலிக்கும்போதெல்லாம் தொலை பேசியில் அழைக்கிறார்.

அப்பாவிப் பெண்ணின் மனக்காயத்திற்கு என் வசந்த வார்த்தைகள் மருந்தாக அமைகின்றன. அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்கு பின்னால் இவரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும்.

மண வாழ்க்கை கைகூடி மகிழ்ச்சியாக வாழ்வார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாவார். கட்டிய கணவனை கடவுளாக மதிப்பார்.

விதியால் நடந்த கொடுமையை நாம் தவறு எனச் சொல்லி இவரைக் குற்றவாளியாக்க முடியாது. அதே நேரத்தில் திமிர் எடுத்துப் போய் சதை விளையாட்டு நடத்தி சந்தி சிரிக்கும் பெண்களை விதியின் பேரைச் சொல்லி விலக்கி வைக்க இயலாது.

அந்த இளம் பெண்ணின் நலன் கருதி பெயரை மாற்றி பிரசுரித்திருக்கிறேன். நான் வணங்கும் விநாயகப் பெருமானும் இளவல் முருகப் பெருமானும் அவளுக்கு எல்லா நலன்களையும் அளிப்பார்கள்.

Wednesday, 16 September 2015

படிக்காதவனைப் படிக்க வைத்த ஜாதகம்

"ஐயா, என் மகன் படிப்பில் மந்தமாக இருக்கிறான். அக்கறையாக படிக்க மாட்டேன் என்கிறான்" என்று கவலையோடு என்னிடம் கூறினார் ஓர் அம்மையார்.

"அப்படியா... இருக்காதே. பையனின் ஜாதக அமைப்பு சிறப்பாக உள்ளதே" என்று சொன்னேன்.

"என்ன சிறப்பு.. பிளஸ் டு பரிட்சையில் பெயிலாகி விட்டான். மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை" அவருடைய கண்களில் நீர் முத்துக்கள் கொப்பளித்தன.

ஜாதகத்தை மீண்டும் ஆய்வு செய்து பார்த்தேன். புதன் உச்ச வீட்டில் பலமாக இருக்கிறான். குருவும் செவ்வாயும் பதினோராம் வீட்டில் வலுவாக நிற்கிறார்கள்.

"அம்மா.. விசனத்தை விடுங்கள். பையனைக் கொண்டு போய் பாலி டெக்னிக்கில் சிவில் படிப்பு பிரிவில் சேருங்கள்.கண்டிப்பாக பிற்காலத்தில் பெரிய கட்டடங்களைக் கட்டும் இஞ்சினியராக வருவான்" என்று சொல்லி அனுப்பினேன்.

நான் சொன்னபடியே ராயபுரம் சுப்பிரமணியம் பாலிடெக்னிக்கில் பையனைச் சேர்த்து விட்டார். முதலில் படிப்பில் சரிவர கவனம் செலுத்தாத அவன் போகப் போக சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்தான்.

கல்லூரி இறுதி ஆண்டில் 87 சதவிகத மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக தேறினான். பொறியியல் படிப்புக்கு இரண்டாம் ஆண்டில் சேர ஆசைப்பட்டான்.

கல்லூரியில் சேர அந்தக் காலகட்டத்தில் அன்பளிப்பு அதிகமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. 5 லட்சம் 6 லட்சம் என வெகுமானம் கேட்டார்கள்.

இந்த நிலையில் அந்த குடும்பத்துக்கு வேண்டிய செட்டியார் ஒருவர் கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தில் இலவசமாக இடம் வாங்கிக் கொடுத்தார்.

பணக்கார மாணவர்கள் படிக்கின்ற அந்தக் கல்லூரியில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவன் ஆடம்பரங்களை அண்ட விடாமல் படிப்பில் மட்டுமே கவனமாக இருந்தான்.

பேராசிரியரே பாராட்டும் அளவுக்கு மிகுந்த ஈடுபாட்டோடு கல்வியைத் தொடர்ந்தான்.

அதன் பலனாக பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் வாங்கி முதல் மாணவனாக முத்திரை பதித்தான்.

படிப்பு முடித்து வீட்டுக்குத் திரும்பிய மறுநாளே சென்னையில் உள்ள பிரி காஸ்டிங் முறையில் கட்டிடம் கட்டும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்து விட்டார் அவனுடைய தந்தை.

மிகவும் சொற்ப சம்பளம். தந்தைக்கு உடன்பாடு இல்லை. நான் சமாளித்துக் கொள்கிறேன் என தைரியம் சொல்லி தந்தையை அனுப்பி வைத்தான்.

சில மாதங்கள் கழித்து திருவண்ணாமலையில் இருக்கும் நிறுவனத்துக்கு மாறினான். அதன் பின்னார் திருப்பூரில் ஒரு சிக்கலாக கட்டடத்தை கட்டும் வாய்ப்புக் கிடைத்தது.

சவால் நிறைந்த அந்தப் பணியை சக தொழிலாளர்களின் உதவியோடு வெற்றிகரமாக செய்து முடித்தான்.

நிறுவன உரிமையாளருக்கு மிக சந்தோஷம். வேலையை முடித்துக் கொடுத்து அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்த அவனை அடுத்த நாளே அழைத்தார் கட்டுமான நிறுவன உரிமையாளர்.

மறுப்புச் சொல்லாமல் வேலையை ஒப்புக்கொள்ளும்படி தந்தை அறிவுறுத்தினார். உடனே அந்த நிறுவனத்தில் சேர்ந்தான்.

வேளச்சேரியில் பெரிய துணிக்கடை, விழுப்புரத்தில்... சேலத்தில்... ஓசூரில்... என பல கட்டங்களைக் கட்டினான்.

கட்டுமான நிறுவனமும் பிரசித்தி பெற்ற துணிக்கடைகளும் ஒரே குழுமத்தைச் சேர்ந்தவை. பல்லாயிரம் கோடிக்கு பரிவர்த்தனை நடக்கும் குழுமம்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய திரை அரங்கமான தங்கம் தியேட்டரை அந்த நிறுவனத்தினர் விலைக்கு வாங்கினர். இடித்து தரை மட்டமாக்கி விட்டு துணிக்கடைக் கட்டுமான பணியை தொடங்கினார்கள்.

அந்தக் கட்டட கட்டுமானப் பணிக்கும் இந்தப் பையன் தான் முதன்மைப் பொறியியளாளர். 15.05.2015 இல் ஆரம்பித்து 15.08.2015 இல் அதாவது மூன்று மாதத்தில் கட்டுமானப் பணியைப் பூர்த்தி செய்து கொடுத்தான்.

சுமார் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகப் பிரமாண்டமாக எழும்பியிருக்கும் ' தி சென்னை சில்க்ஸ்' கட்டடம் தான் அந்தப் பையன் கட்டியது.

மும்மூர்த்திகளுக்கும் முதல்வனாம் விநாயகப் பெருமான் பிறந்த நாளான இன்று 17.09.2015 ஆம் ஆண்டு திறப்பு விழா காண்கிறது.

விரைவாகவும் செரிவாகவும் நேர்த்தியாகவும் கட்டுமானப் பணியை முடித்துக் கொடுத்த தேவசெந்தூரனுக்கு நிறுவனத்தின் உரிமையாளர் பாராட்டும் பரிசும் வழங்கினார்.

ராமனுக்கு லட்சுமணனைப் போல தேவசெந்தூரனக்கு அவருடைய தம்பி இந்திரன் பக்க துணையாக இருந்து கட்டுமானப் பணி நிறைவுக்கு பங்காற்றினார். இவர் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் இஞ்சினியர்.

பெருமிதத்தோடு என்னை வந்து சந்தித்தார் அந்த அம்மையார் 'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாயாக...'

Thursday, 16 July 2015

ஹோண்டா காருக்கு தொயோத்தா கார் பிஸ்டனா..? பொருத்தமில்லா ஜாதகங்களை இணைக்கலாமா...!

பத்துப் பொருத்தமும் சரியாக இருக்கிறது என்று திருமணம் முடிப்பார்கள். ஆனால், சில மாதங்களிலேயே சிக்கல் சில்லு வண்டாக ரீங்காரமிடும்.
பிறகு ஜாதகங்களை இன்னொரு ஜோதிடரிடம் எடுத்துக் கொண்டு ஓடுவார்கள். என்ன இது... சாம்பாருக்கு சர்க்கரையைப் போட்டது போல் பொருத்தமில்லாமல் திருமணம் செய்து வைத்திருக்கிறீர்களே என ஒரு பொல்லாத குண்டை அவர் தூக்கிப் போடுவார்.

அப்படியா... அவர் பிரபலமான ஜோதிடர் ஆயிற்றே...அவரா இப்படிக் கோட்டை விட்டார் என அவரைக் குறை சொல்வார்கள். நேற்று வரை தலையில் தூக்கி வைத்து ஆடியவர் என்பதை கண நேரத்தில் காற்றில் பறக்கவிட்டு விடுவார்கள்.
இப்படி பலரை நான் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. இருப்பினும் வித்தை தெரிந்தவர்களை விவரமில்லாதவர்கள் என குற்றம் சாட்டும் தகுதி எனக்கு இல்லை.
அதே நேரத்தில் ஏன் இந்தக் குளறுபடி. தொண்டைக்குள் மாட்டிய கெண்டை முள்ளாக இவர்களை பாடாய்ப்படுத்தும் பிரச்சினைகளுக்கு யார் காரணம்.
இவர்கள்தான். ஜாதகத்தைக் கொடுக்கும்போதே பேசி முடித்துவிட்டோம் பிரச்சினை இருந்தால் பாருங்கள். பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள். நிறைவேற்றி விடுகிறோம் என்பர்.
பெண் பெரிய இடம். இருவரும் படித்தவர்கள். பக்குவமானவர்கள். ஓரளவு அனுசரித்துப் போவார்கள் என ஜோதிடரின் வாக்குக்கு ஆப்படித்து விடுவார்கள்.
ஒரு சில ஜோதிடர்கள் மட்டுமே 'கடப்பாரையை முழுங்கியவனுக்கு கசாயம் மருந்தாகாது' என கழட்டி விட்டு விடுவார்கள்.
மற்றவர்களோ 'மனப்பொருத்தம் இருக்கிறது. அறுதியிட்டுக் கூற நாம் என்ன ஆண்டவனா' என்று பெற்றோர் போக்கிலேயே இவர்களும் போவார்கள்.
அதனால் வரும் வினைதான் இளம் தம்பதிகளின் இல்வாழ்க்கையில் சிக்கல்களும் சிரமங்களும் விலக்க முடியாத விக்கலாக வில்லங்கம் செய்வது.
தன்னுடைய மகனுக்கு வரன் பார்த்திருப்பதாக ஒரு அன்பர் என்னிடம் ஜாதகங்களைக் கொடுத்தார்.
பெண்ணின் ராசி உத்திரம் 2 ஆம் பாதம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ராசிக் கட்டத்தில் சந்திரன் இருப்பதோ கடகத்தில்.
முறைப்படி பார்த்தால் சந்திரன் கன்னியில் நிற்க வேண்டும். மேலும் அந்தப் பெண் ஆவணி மாதத்தில் பிறந்திருக்கிறார்.ஆனால், சூரியன் நிற்பதோ கடகத்தில்.
இப்படிச் சில குளறுபடிகள். அந்த அன்பரோ இரு ஜோதிடர்களிடத்தில் பொருத்தம் பார்த்து விட்டேன். ஏழு பொருத்தம் இருப்பதாகக் கூறினார்கள் எனச் சொன்னார்.
பையன் திருவாதிரை நட்சத்திரம். இதன்படி பார்த்தால் ஏழு பொருத்தம் வரும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், ஜென்ம ஜாதகத்தில் கிரகங்கள் நிலையில் மாற்றம் ஏற்படுவதால் உண்டாகும் பிரச்சினைகளைப் பார்க்க வேண்டாமா...
தசவிதப் பொருத்தம், ஜென்ம ஜாதகப் பொருத்தம், சூக்குமப் பொருத்தம் என சில விதிகள் இருக்கும்போது அதைக் கணக்கில் கொள்ள வேண்டாமா...
இதையெல்லாம் அந்த அன்பரிடம் நான் சொன்னவுடன் அவரின் முகம் சுட்ட கத்தரிக்காய் போல சுருங்கி விட்டது. 'ஏன்டா இவனிடம் ஜாதகத்தைக் கொடுத்தோம்' என்று நினைத்திருப்பார் போலும்.
ஏனென்றால்' பெண் பெரிய இடம். பார்க்க லட்சணமாக இருக்கிறாள். பையன் கருப்பு. பருத்த தேகம். ஜோடிப் பொருத்தம் சற்று சுமார்தான்.
அதனால், அவரிடம் தோன்றிய வாட்டம் நியாயமானதுதான். இருந்தாலும், ஹோண்டா காருக்கு தொயோத்தா காரின் பிஸ்டனைப் பொருத்த இயலுமா... ஆகவே, என்னைப் பொருத்தவரை ஜாதகம் எழுதியது தவறு என உறுதியாகக் கூறிவிட்டேன்.
மேலும்,ஜாதகத்தில் குறிப்பிட்டுள்ள பிறந்த நேரத்தை வைத்து கணித்துப் பார்த்தேன். கட்டங்களில் கிரகங்கள் மாறுபட்டு நிற்பது தெரிந்தது.
பெண் வீட்டாருக்கு போன் செய்து ஒரு தேர்ந்த ஜோதிடரிடம் மீண்டும் ஜாதகத்தை எழுதச் சொல்லுங்கள் என அந்த அன்பரிடம் தெரிவித்தேன்.
ஒரு வாரம் கடந்து விட்டது. ஜாதகம் சரியாக இருந்திருந்தால் அடுத்த நொடியே போனில் அழைத்து என்னை ஒரு பிடி பிடித்திருப்பார். அதுதானே தமிழர்களின் தனிப் பண்பு.
ஆனால்,அழைப்பு வரவில்லை. ஆகவே, ஜாதகம் குழப்பமாக இருப்பதை ஊர்ஜீதப்படுத்தி இருப்பார் என நினைக்கிறேன்.
வாழ்க்கைப் பாதை கரடு முரடானதுதான், ஒப்புக் கொள்கிறேன். அதே நேரத்தில் 'கண்ணுக்குத் தெரிந்த பள்ளத்தில் முன்னுக்கு போய் விழுகிறேன்' என்பவர்களுக்கு நாம் உறுதுணையாக நிற்பது ஜோதிட சாஸ்திர விதிகளுக்கு முரணானது அல்லவா.

ஜோதிடர்களுக்கு சொக்குப் பொடி போட்டால் பாதிப்பு பந்தயம் கட்டிக் கொண்டு வரும்

ஜோதிடர்களுக்கே சொக்குப் பொடி போடும் சம்பவங்கள் பின்னாளில் பெரிய பிரச்சினைகளைக் கொண்டுவரும் என்பதை அனுபவப்பூர்வமாக எனக்கு ஒரு சம்பவத்தின் மூலம் ஆண்டவன் உணர்த்தினான்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகப் பெரிய சிக்கலோடு என்னை ஒரு குடும்பத்தினர் வந்து சந்தித்தனர். மகளின் ஜாதகத்தைப் பார்த்தவுடனேயே எனக்கு பிரச்சினை என்ன என்பது புரிந்துவிட்டது.
கண்ணில் விழுந்த தூசியை நாக்கால் நக்கி எடுப்பதுபோல் உற்றார் உறவினர் உணராத வண்ணம் பாதிப்பை பாதியாக குறைத்து விட்டோம்.
பழக்கம் வழக்கமாகி வழக்கம் நட்பாகி நட்பு உறவாகி அந்தக் குடும்பத்தில் ஒருவனாகவே நான் மாறி விட்டேன். எத்தனையோ இடங்களுக்குச் சென்றும் தீர்க்க  முடியாத இன்னலை கருப்பன் வாசலில் களைந்து விட்டதாகக் கூறி என் மீது அன்பைப் பொழிந்தனர்.

இந்த நிலையில் நான் மலேசியா சென்று விட்டேன். பல்வேறு பணிகள் காரணமாக நான் அங்கிருந்து திரும்பும் காலம் சற்று நீண்டு விட்டது.
நான் தாயகம் திரும்பிய ஓரிரு நாளில் என்னை வந்து சந்தித்தார்கள். பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகக் கூறி ஜாதகங்களைக் கொண்டு வந்திருந்தார்கள்.
இரண்டு முக்கியமான ஜோதிடர்களிடம் பார்த்து விட்டோம். பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருப்பதாகச் சொல்லி விட்டார்கள். இந்தப் பெண்ணுக்கு இந்த மாப்பிள்ளைதான் என்று அடித்துக் கூறிவிட்டார்கள் என்று கணவன் மனைவி இருவருமே ஒரு சேரக் குறிப்பிட்டார்கள்.
இரண்டு ஜாதகங்களையும் பார்த்தேன். சில முக்கிய பொருத்தங்கள் இல்லை. இருவரும் இணை சேருவது நன்மை அளிக்காது என்ற வகையிலேயே என் கணிப்பு அமைந்தது.
திருமணப் பொருத்த நூலிலும் பொருந்தாது என்பது விடையாக இருந்தது. கணினியில் பார்க்கும்போதும் திருமணம் கூடாது என பதில் கிடைத்தது.
ஆனால், அவர்களிடம் நான் இதைச் சொல்ல இயலவில்லை. குளத்தில் மூழ்கி விட்டு குளிக்கலாமா என அனுமதி கேட்ட கதையாக இருந்தது அவர்களின் நடவடிக்கை.
நான் ஜாதகம் குறித்து எதுவும் பேசாமல் எல்லாம் இறைவன் செயல். அவன் பட்டனை அழுத்துகிறான்.நமக்குப் படம் தெரிகிறது. நடப்பது நல்லதாகவே நடக்கட்டும் என்று கூறி அனுப்பி வைத்தேன்.
திருமணம் குறிப்பிட்ட நாளில் நடந்தது. கூடப் பிறக்கவில்லை என்றாலும் தாய் மாமன் என்ற தகுதியை அவர்கள் திருமண நிகழ்வில் தந்தார்கள்.
மாப்பிள்ளையும் திடகாத்திரமானவர். பெண்ணும் ஆரோக்கியத்திற்கு குறைவில்லாதவர். வசதிக்கும் வஞ்சனை இல்லை. ஆனால் குழந்தை குறைப்பிரசவத்தில் அறுவைச் சிகிச்சை மூலமாக பூமிக்கு அறிமுகமானது.
எடை இரண்டு கிலோவுக்கும் குறைவு. ஏறக்குறைவு இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல் மருத்துவச் செலவு மட்டுமே ஆகியிருக்கிறது.
கணவர் வேலை செய்வது மும்பையில். பெண் மதுரை தாய் வீட்டில். இவருக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் சற்று வித்தியாசமானது.
கணவர் எந்த நேரம் வேண்டுமானாலும் போன் செய்வார். உடனே போனை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அன்று இழவு வீடுதான்.
"ஏன் போனை எடுக்க இவ்வளவு நேரம். தினவெடுத்துப் போய் திரிகிறாயா.. புருஷன் போன் பண்ணுவான் என்ற அக்கறை இல்லாத மூக்கறையாக இருக்கிறாயே" என வாயால் வறுத்து எடுத்து விடுவாராம்.
சில நேரங்களில் சிக்கல் வேறு மாதிரியாக வேட்டியைக் கட்டிக் கொண்டு நிற்கும். அந்த மனிதன் போன் பண்ணும் போது இந்தப் பெண் வேறு யாருடனாவது பேசிக் கொண்டிருந்தால் போதும். கரகாட்டம் ஆடி கச்சேரி நடத்தி விடுவாராம்.
"ஏன்டி இவ்வளவு நேரம் எவனோடு பேசிக் கொண்டிருந்தாய். கட்டியவன் பக்கத்தில் இல்லையென்றால் கண்ட நாய்களோடு கொண்டாட்டமா" என்று கத்தி முனை வார்த்தைகளால் குத்திக் கிழிப்பாராம்.
நஞ்சுபோய்க் கிடக்கும் பிஞ்சுக் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதே பெரும் போராட்டம். அந்த நேரத்தில் போன் வந்து விட்டால் வேறு வினையே வேண்டாம்.

பிள்ளைக்கு பால் கொடுக்கிறேன். சற்று நேரம் கழித்து கூப்பிடுங்கள் என்று அச்சம் அடிவயிற்றைக் கிள்ள மெல்லச் சொன்னால் போதும்.
"என்னை விட பிள்ளை உனக்கு முக்கியமாகப் போய்விட்டதா.. எனக்குப் பிறகுதான் எந்த உறவும் தெரிகிறதா..." என்றுஅந்தப் பெண்ணின் இதயத்தில் சம்மட்டியை இறக்குவாராம்.
இவற்றையெல்லாம் சொல்லி அந்தப் பெண் கண்ணீர் வடித்தபோது எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியாமல் திகைத்துப் போனேன்.
என்ன நினைத்தேனோ அது நடந்து விட்டதே என நான் என் முதுகைத் தட்டிக் கொள்ளவில்லை. அந்த இளம் பெண்ணுக்கு இப்படி ஒரு இன்னலா எனத் துடித்துப் போனேன்.
பிள்ளை சற்று பெரிதாகட்டும். பதினெட்டாம்படி கருப்பன் வாசலுக்குத் தூக்கி வாருங்கள். சில பரிகாரம் சொல்கிறேன். அதன்படி நடந்து வாருங்கள்.
தன்னம்பிக்கையைத் தளர விடாதீர்கள். காலம் மாறும்போது கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். பொறுமை மட்டுமே பொல்லாத நேரத்திற்கு மருந்து என்று தேறுதல் சொல்லி விட்டு வந்தேன்.
அழகான அமைதியான அந்தப் பெண்ணுக்கு இறைவன் கண்டிப்பாக அனுக்கிரகம் செய்வான். அதற்காக நான் தினமும் பிரார்த்தனை செய்வேன்.

Wednesday, 15 July 2015

ஜாதகத்தை மீறினால் பாதகத்திற்கு பஞ்சமில்லை!

எதிர்காலம் எப்படி இருக்குமோ என வாழ்க்கையைத் தொடங்கியவர். வறுமை இவர் வாய்க்குள் விரலை விட்டு ஆட்டிய காலம். அதாவது ஒரு வேளைக் கஞ்சிக்கே உயிர் போராட்டம் நடத்திய நேரம்.
தனியாக ஏன் கஷ்டப்படுகிறாய் என நினைத்தார்களோ என்னவோ...இவரின் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.
இவரைத் தூக்கி நடக்கவே இவரின் கால்களுக்குத் தெம்பில்லை. இந்தநிலையில் மனைவி என்ற இறக்கி வைக்க இயலாத சுமை இவரின் தோள்மீது. ஆண்டிப்பட்டி இவரின் சொந்த ஊர்.
வைகை அணை கட்டும்போது வேலைக்குச் சேர்ந்தார். ஒரு நாள் சம்பளம் 2 ரூபாய். அயராத உழைப்பு. தளராத முயற்சி. இவை இரண்டும் இவருக்கு தனலட்சுமியைஅறிமுகப்படுத்தி வைத்தன.

ஒரு கட்டத்தில் கட்டுமான ஒப்பந்தகாரராக உருவெடுத்தார். விடாத மழையிலால் ஏற்பட்ட வெள்ளம் இவர் வீட்டுக்குள் பாய்ந்ததுபோல் துட்டுக்காக வேலை பார்த்த இவர் கையில் கட்டுக் கட்டாக பணம் கரைபுரண்டது.
இடமாக, மனையாக, காராக, நகையாக இவரின் அந்தஸ்து சிவகங்கை மாவட்ட சீமைக்கருவை மரங்களப் போல செழித்து வளர்ந்தது.
இந்த காலகட்டத்தில் 2011 ஆண்டு வாக்கில் குடும்பத்துடன் வந்து என்னை சந்தித்தார். இவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள்.
செல்வச் செழிப்பின் காரணமாக இருவருமே வஞ்சகமில்லாமல் உடலை வளர்த்து இருந்தனர். நான் அவர்களைப் பார்த்த விதத்தைப் புரிந்து கொண்ட அவர், "ஒரு வேளைக்கு இரண்டு கிலோ கறி தின்றால் உடம்பு இப்படி இருக்காமல் எப்படி இருக்கும்" என சொல்லி சிரித்தார்.
அவர் மனைவிக்கு வருத்தம் என்றாலும் மறுக்க இயலவில்லை. இருந்தாலும் பிள்ளைக்கு பெண் அமைய வேண்டுமே.. அந்த ஏக்கம் அவருக்கு.
பிள்ளைகளின் ஜாதகத்தைப் பார்த்தேன். மல்லாக்கப் படுத்த பிள்ளை குப்புறப்படுப்பதற்குள் குடிசையைக் கோபுரமாக்கும் அபார ஜாதகம்.
இளையவனின் ஜாதகமும் அதற்கு இளைத்ததில்லை. எவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்கப் பட்ட டயராக இருந்தாலும் சின்ன ஆணி குத்தி பஞ்சாராவது போல தகப்பனாரின் ஜாதகத்தில் சில கோளாறுகள் கோச்சார நிலையிலும் தசா புத்தி நிலையிலும் தலைதூக்க ஆரம்பித்தன.
பிள்ளைகளின் ஜாதகத்திலும் கோச்சார வகையில் பாதிப்பு சற்று அதிகமாக இருந்தது.
பிள்ளைக்கு பெண் தேடுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இரண்டு ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். பிள்ளையும் பிறக்கும் என்றேன்.
என் வார்த்தையில் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்பதை அவரின் முகக்குறிப்புக் காட்டியது. ஆனால், அவரின் மனைவிக்குப் பரம சந்தோசம்.
என் கணிப்புப்படி உரிய கால கட்டத்தில் திருமணம் நடந்தது. நான் குடும்பத்துடன் கலந்து கொண்டேன். அழகானபெண் பிள்ளை பிறந்தது. பெயர் வைக்கும் விழாவிற்கு சென்றிருந்தேன்.
அதன் பின்னர் மீண்டும் என்னைத் தேடிவந்தார். ரயில்வேயில் மிகப் பெரிய பதவி கிடைக்கவிருப்பதாகவும் அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் வரும் என்றும் சொன்னார்.
இந்த முறை தெளிவாகவே என் கணிப்பையும் கருத்தையும் எடுத்துச் சொன்னேன். உங்களுக்கு இப்போது சிரமமான காலகட்டம்.
பணமா... உயிரா.. என பந்தயம் கட்டி விதி உங்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்து விட்டது. எச்சரிக்கையாக இருங்கள். ஏற்கனவே உழைத்து வாழ்க்கையில் உச்சம் தொட்டவர் என்பதால் இந்த ஆலோசனை உங்கள் எண்ணத்தின் ஓரத்தைக் கூட கிள்ளிப் பார்க்காது என்று குறிப்பிட்டேன்.
அதற்கு பின்னர் மலையகம் சென்று விட்டேன். ஒரு நாள் இரவு 9 மணி இருக்கும். தொலைபேசியில் என்னை அழைத்தார்.
உங்கள் பேச்சை அலட்சியம் செய்த எனக்கு உரிய தண்டனை கிடைத்து விட்டது. ரயில்வேயில் ஒப்பந்தம் வாங்கித்தருவதாகச் சொன்ன நபர் என்னிடம் 80 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார்.
காவல்துறையில் புகார் செய்திருக்கிறேன். விசாரணை செய்து அவரைக் கைது செய்திருக்கிறார்கள். பணம் கிடைக்குமா என பச்சை புள்ளை பாலுக்கு அழுவதைப் போல கேட்டார்.
தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதைப்போல இப்போது அவருக்கு தன்னம்பிக்கை மட்டுமே சரியான மருந்து என்பதை உணர்ந்தேன்.
நீங்கள் தேடியதில் ஒரு பகுதியைத்தான் இழந்திருக்கிறீர்கள். கையில் வைத்திருந்த பாட்டில் தவறி விழுந்து பாதி தண்ணீர் தரைக்கு இரையானது.
பாதித் தண்ணீர் பறி போய்விட்டதே என தவிக்கிறீர்கள் நீங்கள். மீதித் தண்ணீர் மிச்சம் இருக்கிறதே என்று சுட்டிக் காட்டுகிறேன் நான்.
இழந்ததை எண்ணி இளைப்பதை விட இருப்பதை வைத்து பிழைப்பதே புத்திசாலித்தனம் என அவரைத் தேற்றினேன்.
சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனத்திற்கு சாலை அமைக்கும் ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. தைரியமாக இறங்கலாமா என இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார்.
ஜாதகம் என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டிதான். அதுவே உழைப்புக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கக்கூடாது. தைரியமாக இறங்குங்கள் என உற்சாகம் கொடுத்திருக்கிறேன்.
இனிமேல் அவர் எடுத்து வைக்கும் அடியை எச்சரிக்கையாக வைப்பார். இழந்த பணத்தை மீட்டார். தொலைந்த மகிழ்ச்சியை பெறுவார்.

Tuesday, 14 July 2015

தன் வாழ்க்கையை தானே அழிக்கும் பெண்கள்

முகநூலிலும் வலைப்பதிவிலும் கால்பதிக்காத இரண்டு மாத இடைவெளியில் ஜோதிட ஆலோசனை பெற பலர் என்னை அணுகினர்.
விதவிதமான அனுபவங்கள் வித்தியாசமான பிரச்சினைகள். வண்ணத் திரையை விலக்கிப் பார்த்தால் எண்ணத் தொலையாத இன்னல்கள் இடுக்கண்கள்.
நேற்றுச் சந்தித்து ஜாதகம் பார்த்த ஒரு பெண்மணியின் பிரச்சினைகளை இலைமறை காயாக இங்கே பதிவிடுகிறேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்னரே என்னை சந்திக்க விரும்புவதாக சொன்னார். நேரம் வாய்க்குமா என்று கேட்டார்.
நான் மதுரை, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய இடங்களுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தேன். மதுரையில் ஒரு செல்வந்தர் வீட்டில் வாஸ்து பார்க்க வேண்டும்.
ஆண்டிப்பட்டியில் ஆசை வார்த்தைக்கு மயங்கி மோசம் போய் கோடிக்கு கொஞ்சம் குறைவான பணத்தைப் பறிகொடுத்த நெருக்கமான நண்பரின் உருக்கமான வேண்டுகோள்.

திருமணமாகி சில மாதங்களே ஆன இளம் தம்பதியர் மத்தியிலே எழுந்த கருத்து வேறுபாடு, குடும்ப வாழ்க்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் அவலநிலை. இது தேனியில்
ஆகவே, தாமதமாக நேற்றுத்தான் அந்தப் பெண்மணியைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடைய சித்தப்பா, சிற்றன்னையுடன் என்னைச் சந்தித்தார்.
அவருக்கு பிள்ளைகள் இரண்டு. ஆண் பள்ளி இறுதியாண்டு படிக்கிறார். பெண் ஏழாம் வகுப்புக்குச் செல்கிறார்.
பிள்ளைகள் ஜாதகத்தில் அதிக பிரச்சினை இல்லை. பெண் பிள்ளைக்கு செவ்வாய் தோஷம். ஆண்பிள்ளைக்கு குட்டிச் சுக்கிரன்.
ஆனால், கணவரின் ஜாதகம் சற்று வித்தியாசம், காள சர்ப்ப தோஷம். மேலும் சில கிரகங்கள் தாறுமாறாக கெட்டுக் கிடந்தன.
வசதிக்கு குறைவில்லை. கணவரோ அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர். ஊரில் முக்கிய பிரமுகர்.
அவருக்கு இருதார ஜாதக அமைப்பு. களத்திரகாரகன், களத்திர ஸ்தானம் பாதிப்பு. அதில் உள்ள சிக்கல்களை என் உள் மனசு சொன்னாலும் அவர்களின் வாழ்க்கை முறையை வைத்து பலன் சொல்வதில் எனக்கு சற்று தடுமாற்றம்.
"அம்மா.. நான் ஜாதகத்தை துல்லியமாக ஆய்வு செய்து பார்த்து விட்டேன். சில சிக்கல்கள் இருக்கின்றன. இது குறி பார்க்கும் இடமல்ல. என்னிடம் உள் மனதில் உள்ளதை ஒளிக்காமல் சொல்ல வேண்டும்.
உதடுகளும் இதயமும் ஒரே வார்த்தையை உச்சரிக்க வேண்டும். உண்மை தெரிந்தால் அதற்கான பரிகாரகங்களைச் செய்து சிக்கல்களைச் சீரமைக்கலாம்" என்று அவரிடம் சொன்னேன்.
நாம் அறிவாளி என்று அவர்களிடம் படம் காட்டினால் முட்டாள்களாக அவர்கள் முடங்கிப் போவார்கள். நீங்கள் அறிவாளிகள் என்று அவர்களை அறிவுறுத்தி விட்டால் தயங்காமல், தடங்கள் இல்லாமல் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
இப்படிச் சொன்னவுடன் உதடு பேச ஆரம்பித்தது. அதற்குள் கண்கள் முந்திக் கொண்டு கண்ணீரைக் கொட்டியது.
"என்னுடைய கணவருக்கு நான் இரண்டாம் தாரம். அவருடைய அண்ணனுக்கு வாக்கப்பட்டு பிரச்சினைகள் காரணமாகப் பிரிந்து இவரோடு வந்து விட்டேன்.
இவரின் முதல் மனைவி இவரை விட்டு விலகி விட்டார். மகள் வீட்டில் வசிக்கிறார். ஆரம்பத்தில் எந்தக் குறையும் இல்லை.
இரண்டு பிள்ளைகள் பிறந்து விட்டன. இப்போது எதற்கெடுத்தாலும் சண்டை. என்ன செய்தாலும் குற்றம் சொல்கிறார்.
ஒரே வீட்டில் இருந்தாலும் நாங்கள் பேசி ஒருவருடம் ஆகிவிட்டது. தனித்தனியாக படுக்கிறோம். சமைத்து வைக்கும் சாப்பாட்டை விருப்பப்பட்டால் சாப்பிடுகிறார். இல்லை என்றால் வெளியேறி விடுகிறார்.
ஏதாவது கேள்வி கேட்டால் நெருப்பாக வார்த்தைகளைக் கக்குகிறார், எட்டி உதைக்கிறார். வாழ்க்கையை இழந்து விடுவோமோ என்ற பயமாக இருக்கிறது. நீங்கள்தான் வழி காட்ட வேண்டும்" என்று கையெடுத்து கும்பிட்டார்.
ஓரளவு நான் கணித்ததுதான். ஜாதக பலன்களைச் சொல்லி அச்சுறுத்துவதை விட நடைமுறை வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நலம் பயக்கும் என்று எண்ணினேன்.
"அம்மா, நீங்கள் சொல்வதைப் பரிசீலித்தேன். மனக்குறைகளை உள்வாங்கிக் கொண்டேன். ஆனால், இதைக் களைவதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்.
நெருப்பை நீரால் அணைக்க வேண்டும். நெருப்பால் அணைக்க இயலுமா... அதைத்தான் இந்த நிமிடம் வரை நீங்கள்
செய்து வருகிறீர்கள்.
நீங்கள் கொல்லைப் புற வழியாக வந்தவர் என்பதால் வாழ்க்கை பறிபோய் விடுமோ என்று பயப்படுகிறீர்கள். அந்தப் பயத்தில் பதற்றமாக வார்த்தைகளை அள்ளி வீசுகிறீர்கள்.
அதனால், உங்கள் கணவரின் கோபம் எல்லை கடந்து விடுகிறது. சமுதாயத்தில் மற்றவர்கள் எல்லாம் மரியாதை தரும்போது மனைவி மட்டும் மதிக்க மறுக்கிறாளே என்ற எண்ணம் உங்கள் கணவரின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
இது கோர்ட்டு அல்ல, குடும்பம். விவாதம் செய்து வெற்றி பெற இயலாது. விட்டுக் கொடுத்துத்தான் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
சுற்றி இருப்பவர்கள் விவரம் தெரியாமல் உங்களைத் தூண்டி விட்டு வில்லங்கத்திற்கு விழா எடுப்பார்கள். பாதிப்பு உங்களுக்குத்தான்.
ஒரு எடுத்துக் காட்டுக்காக இதைச் சொல்கிறேன். குடி என்பது பழக்கம் அல்ல, அது பழகப் பழக உடலில் பதியமிட்ட நோய். அவர்கள் குடிகாரர்கள் அல்ல, குடி நோயாளிகள். மருந்து கொடுத்துக் குணப்படுத்துவதற்குப் பதிலாக மட்டம் தட்டி ரணப்படுத்தினால் விளைவு விபரீதம்தான்.
அதுபோல்தான் உங்கள் நிலையும். உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம். ஆனால், எல்லா நியாயங்களும் எதார்த்த வாழ்க்கைக்கு ஒத்து வராது. வாழ்க்கையில் சந்தேகம் சதிராட ஆரம்பித்தால் சந்தோசம் விரைந்தோடும் என்பது விதி.
முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள், பிறகு கணவர் தானாக மாறி விடுவார். பிள்ளைகள் மீது பாசமுள்ள எந்தத் தகப்பனும் தடுமாறுவதில்லை. தடம் மாறுவதும் இல்லை என்று விளக்கிக் கூறினேன்.
கணவருக்கு அஷ்டமச்சனி பாதிப்பு இருப்பதால் திருநள்ளாறு சென்று வரும்படி அறுவுறுத்தி உள்ளேன்.
அவரின் கணவரைச் சந்தித்து பேசுவதாக வாக்களித்து இருக்கிறேன். புரிந்து கொள்ளக் கூடிய நபர். மற்றவர்களின் சிரமங்களுக்கு தோள் கொடுக்கும் தன்மை உடையவர்.
இருப்பினும் விதி விளையாடும்போது என்ன செய்ய இயலும். விதியை மதியால் வெல்லலாம். ஆனால், அதற்கு இரண்டு தரப்பிலும் இணக்கம் இருக்க வேண்டும்.
என் நாவில் குடியிருக்கும் கலைமகளின் அருளால் அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீச வைக்கும் ஆற்றல் எனக்கு இருக்கிறது.
இன்னும் சில மாதங்களில் கண்டிப்பாக அதைச் செய்து முடிப்பேன். அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைப்பேன்.
Saturday, 7 March 2015

இடைப்பட்ட நாளில் தடைப்பட்ட திருமணம்....ஏன்?

நமக்கு வரப் போகின்ற பெரிய துன்பங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக சிறிய துன்பங்களைக் கொடுப்பது இறைவனின் திருவுள்ளம்.
இதைப் பலர் உணர்வதில்லை. அறியாமையால் ஆண்டவனைத் திட்டுகிறார்கள்.
நேற்று என்னை ஒரு தம்பதியினர் சந்தித்தனர். மிக முக்கியமான அம்சம் குறித்து ஆலோசனை கேட்க வேண்டும் என்று முன்பே தொலைபேசியில் தெரிவித்து இருந்தனர்.
இரண்டு வாரங்களாக அலுவல்சுமையின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் நேற்றுத் தான் அந்த நல்வாய்ப்பு அமைந்தது.
கணவன் அரசு தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறார். பிரதமர் செல்லும் நாடுகளுக்கு கூடவே போக வேண்டும்.
மனைவியும் கல்வித்துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.
மூத்தவள் பெண். கணினித்துறையில் பட்டம் பெற்று சிறப்பான பணியில்
இருக்கிறார். வயது 28.
இவருக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டார்கள். பையனும் படித்தவர். பொருளாதாரப் பஞ்சமில்லை.
ஆனால் குறித்த நாளில் திருமணம் நடக்கவில்லை. பெண் வீட்டாரே கல்யாணத்தை நிறுத்தி விட்டார்கள்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதுதான். பையன் எதெற்கெடுத்தாலும் குறை பேசுகிறார்.
ஏட்டிக்கு போட்டியாகவே விவாதம் செய்கிறார். எங்கள் மகள் அமைதியானவர்.
போனில் பேசுவதற்குகூட உங்கள் மகளுக்கு வலிக்கிறதா என எங்களிடமே கேட்கிறார்.
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், என்னை யாரும் அடக்கி ஆள முடியாது என்று சம்பந்தமில்லாமில் பேசுகிறார்.
ஆகவே எங்களுக்கு பயம் வந்து விட்டது. பின்னாளில் சிரமப்படுவதை விட இப்போதே திருமணத்தை நிறுத்தி விடுவது உத்தமம் என்று கருதி இவ்வாறு செய்து விட்டோம்.
இப்படிச் செய்தது சரியா... தவறா எனத் தெரியவில்லை. குழப்பமான நிலையில் உள்ளோம்.
ஒன்றுக்கு மூன்று ஜோதிடர்களிடம் பொருத்தம் பார்த்து விட்டுத்தான் திருமண ஏற்பாட்டைச் செய்தோம் என்று கண்ணீர் மல்கக் கூறினார்கள்.
அவர்கள் பேசும்போதே சில குறிப்புகளை ஒரு தாளில் எழுதினேன். அதன்பிறகு ஜாதகங்களைப் பார்த்தேன்.
ஜாதகக் கட்டங்களில் இருக்கும் கிரகங்களின் அமைப்பு மற்றும் தோஷ விவரங்களை எடுத்துக் கூறினேன்.
என் குறிப்பில் 80 சதவிகிதம் மிகச் சரியாக இருந்ததைக் கண்டு அவர்கள் வியந்து போனார்கள்.
பின்னர் ஜாதகத்தில் உள்ள நிறைகுறைகளை எடுத்துக் கூறினேன். ஒருவேளை இந்தத் திருமணம் நடந்திருந்தால் என்னென்ன இடர்பாடுகளைச் சந்தித்திருக்க வேண்டும் என்று விளக்கினேன்.
இன்னும் ஓர் ஆண்டிற்கு பின்னர் கண்டிப்பாக நல்ல மாப்பிள்ளை அமைவார். இந்தத் திருமணத்தை நீங்கள் தடுக்கவில்லை.
உங்கள் உள்ளத்தில் இருந்து இறைவன் தான் நிறுத்தி இருக்கிறார் என அறிவுறுத்தி புராண இதிகாசங்களில் இருந்து சில விளக்கங்களை எடுத்துக் கூறினேன்.
அரை மணி அவகாசத்தில் பகாவ் செல்ல வேண்டும் என்று அமர்ந்தவர்கள் ஏறக்குறைய மூன்று மணி நேரம் என்னிடம் பேசினர்.
வீட்டிற்குள் வரும் போது மன நிறையக் கவலைகளைச் சுமந்து கொண்டு வந்தோம்.
உங்களிடம் இருந்து விடைபெறும் போது மனம் முழுக்க நிம்மதியை நிறைத்துக் கொண்டு செல்கிறோம் எனக் கூறி விடை பெற்றுச் சென்றனர்.
என் மூலமாக இறைவன் அவர்களின் மனக்கவலைக்கு மருந்து தடவி இருக்கிறார். எனக்கும் மனம் நிறைய சந்தோஷம் தான்.

Tuesday, 3 March 2015

சொன்ன வாக்கு பலித்து...ஜாதகம் ஜெயித்தது...!

ஒருவரின் ஜாதக அமைப்பு எந்த அளவுக்கு அவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.
2002 ஆம் ஆண்டில் நான் டாமான்சாரா டாமாயில் வீடு வாங்கி குடியேறினேன். அப்போது ஓர் இளைஞர் அறிமுகமானார். அவருக்கு வயது 25.
பழக்கம் வழக்கமாகி, நட்பு உறவாக மாறி என்னை சகோதரனாகவே கருத ஆரம்பித்தார்.
அவருக்கு சொந்த ஊர் சிரம்பான். கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
வந்த இடத்தில் வேலை அமையவில்லை. சாப்பாட்டுக்கே சிரமமான நிலை. இருந்தாலும் கடுமையான உழைப்பாளி.
இதற்கு இடையில் முத்து என்ற நபர் அறிமுகமாக நல்ல நண்பராக மாறினார். கேரளாவைச் சேர்ந்தவர். பொறியியலாளர்.
சுங்கைபூலோவில் துப்பாக்கி ரவை தயாரிக்கும் அரசாங்கத் தொழிற்சாலையில் வேலை பார்த்தார்.
அவருடைய அப்பா மிகச் சிறந்த ஜோதிடர். நான் ஜாதகம் பார்க்கும் ஆற்றல் கொண்டவன் என்பதை அறிந்து கொண்டார்.

ஒரு நாள் நான் மேலே குறிப்பிட்ட சகோதரர் சந்துருவின் ஜாதகத்தைக் கொண்டு வந்து காண்பித்தார்.
மகர லக்கனம், ரிஷிப ராசி. செவ்வாய், சந்திரன் குரு உச்சம். சூரியனும் புதனும் மறைவு ஸ்தானத்தில் இருந்தனர்.
அப்போது தம்பி சந்துருவும் என் வீட்டிற்கு வந்து விட்டார். இருவரிடமும் பலன் சொன்னேன்.
இன்று இவர் சிரமப்படலாம். ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் இவர் பொருளாதார நிலையில் மிக ஏற்றத்தில் இருப்பார் என்று.
அவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ஆனால், நம்பிக்கை பிறக்கவில்லை.
அதன்பின்னர் ஒவ்வொரு நாளும் அப்பார்ட் மெண்டுக்கு கீழே உள்ள காபிக் கடையில் நாங்கள் சந்திப்போம். பேசுவோம். மிகவும் உறுதுணையாக இருப்பார்.
ஒரு நாள் காலையில் பசியாறிக் கொண்டிருக்கும்போது 18 வயது மதிக்கத்தக்க இளம் பெண் அந்தக் குடியிருப்பில் இருந்து வெளியே சென்றார்.
அந்தப் பெண்ணைப் பார்த்த சந்துருவின் முகத்தில் காதல் மின்னல் இழையோடியதைப் பார்த்தேன்.
ஒரு வருட இடைவெளியில் அதே பெண்ணை மணம் முடித்து வைத்தேன். மிக மரியாதை கொண்ட பெண்.
நாங்கள் அருகருகே இருக்கும்வரை அவர்கள் என் வீட்டிற்கு வந்தாலும் சரி. நான் அவர்கள் வீட்டிற்கு சென்றாலும் சரி எனக்கு முன்னால் ஷோபாவிலோ தரையிலோ அமர்ந்ததில்லை. எவ்வளவு நேரமானலும் நின்று கொண்டே இருப்பாள்.
இது மலேசியாவில் மட்டுமல்ல இந்தியாவில் கூட இந்தக் காலக் கட்டத்தில் பார்க்க முடியாத காட்சியாகும்.
அவருக்கு இரண்டு பையன்கள். பெரியவருக்கு அர்ச்சுன்என்று பெயர். இளையவர் பெயர் நாகார்சுன்.
இருவருக்கும் ஜாதகம் பார்த்து பெயர் வைத்தது நான் தான். குடும்பம் விரிவடைந்தவுடன் சுங்கைபூலோவிற்கு வீடு மாறி சென்றார்.
இருவருக்கும் சுமார் 30 கிலோ மீட்டர் இடைவெளி ஏற்பட்டது. அதனால் சந்திக்கும் வாய்ப்புக் குறைந்தது.
 பல தடைகளைத் தாண்டி மேடு பள்ளங்களைக் கடந்து இன்று தார்ச் சாலை போடும் ஒப்பத்தக்காரராக தம்பி சந்துரு உருவெடுத்து விட்டார்.
வசதி வாய்ப்புகள் பெருகி விட்டது. மோட்டார் சைக்கிள் வாங்க தடுமாறியவர் இப்போது கேம்ரி கார் பாவிக்கிறார்.
சுமார் 9 லட்சம் வெள்ளியில் வீடு பார்த்திருக்கிறார். கடந்த வாரம் என்னைச் சந்தித்தபோது அனைத்து விவரங்களையும் சொன்னார்.
நான் எவ்வளவு உயர்ந்தாலும் உங்களை மறக்க மாட்டேன். இருந்தாலும் அன்று டாமாயில் சந்தோசமாக வாழ்ந்த மகிழ்ச்சி இப்போது இல்லை என்று கூறினார்.
அது இருவர் வாழ்க்கையிலும் ஓரளவுக்கு உண்மைதான். பணம் காசுக்கு அலையும்போது மனதில் மகிழ்ச்சி மண்டிக்கிடந்தது.
வசதி வாய்ப்புகள் வந்தவுடன் மகிழ்ச்சியைத் தேடி அலைய வேண்டிய நிர்பந்தம் உருவாகி விட்டது.
மீண்டும் வெள்ளிக்கிழமை சந்திப்போம் எனச் சொல்லிப் பிரிந்தோம். இன்னும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை.
வேளைப்பளு கூடி விட்டது. கால்களில் சக்கரக்கதைக் கட்டிக் கொண்டு அலைகிறார். இதில் பழையதை நினைக்க நேரம் எங்கே கிடைக்கப் போகிறது.
எப்படி என்று தெரியாது, ஆனால் நிச்சயமாக நீ உச்சத்ததில் இருப்பாய் என்று நான் அன்று சொன்ன வார்த்தை பலித்து விட்டது.
சந்துருவை நினைத்து மனப்பூர்வாக மகிழ்ச்சி அடைகிறேன். என் அன்பும் ஆசீர்வாதமும் அவருக்கு என்றும் உண்டு.
ஏனென்றால் அவர் என் பாசமிக்க சகோதரர்.

Monday, 23 February 2015

இறந்த பிள்ளை பேசுகிறது...ஆவியாக வந்து...!

அரசியலில் செல்வாக்கு மிக்கவர். எல்லாரிடமும் அன்பாக...அணுக்கமாகப் பழகக்கூடியவர். என்னுடைய நீண்ட கால நண்பர்.
நான் மலையகத்தில் தங்கும் நிலை ஏற்பட்டதால் கடந்த 15 ஆண்டுகளாக சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.
கடந்த மாதம் நான் அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சிங்கப்பூரில் உணவகம் நடத்தும் நண்பரின் மைத்துனர் திருமணத்தில் அவரைச் சந்தித்தேன்.
கல்யாணம் மதுரையில் நடந்தது. மதிய உணவுக்குப் பின்னர் நானும் அவரும் காரில் காரைக்குடிக்குத் திரும்பினோம்.
அவர் மனைவியும் கூட இருந்தார். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். இருப்பினும் அவர் முகத்தில் ஏதோ ஒரு சோகம் தோன்றித் தோன்றி மறைந்தது.
பேச்சு வாக்கில் கேட்டேன். அவர் சொன்ன சம்பவங்கள் என்னை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். ஒரு பெண்ணுக்கு திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கிறார். இன்னொரு பெண் படித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு பெண் குழந்தை 6 வயதில் இறந்து விட்டது. இறந்த குழந்தை நேரடியாக வந்து பேசுகிறது என்று நண்பரின் மனைவி சொன்னார்.
அந்தக் குழந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க நண்பரின் மனைவி பிறந்த ஊரில் சொந்த இடத்தில் சின்ன கோவில் கட்டி இருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் விழா எடுத்து அன்னதானம் வழங்கி வந்திருக்கிறார்கள். இதற்கு அவரின் தம்பி இருவரும் ஒத்துழைப்புத் தந்திருக்கிறார்கள்.
என்ன காரணத்தாலோ இரண்டு குடும்பத்துக்கும் மன வருத்தம் ஏற்பட்டு விட்டது.
அதனால் பூஜை போடக்கூடாது . அன்னதானம் வழங்கக்கூடாது என தம்பிகள் இருவரும் தகராறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு கட்டத்தில் மோதல் முற்றி என் நண்பரின் கண் எதிரிலேயே அவரின் மனைவியை அடித்து கையை ஒடித்து விட்டார்கள்.
என் நண்பருக்கு ஜாதகத்தில் அதீதமான நம்பிக்கை. அடிக்கடி ஜாதகம் பார்ப்பது வழக்கம்.
"நான் துலாம் ராசி. ஏழரைச் சனி நடக்கிறது. வம்பு வழக்கு வேண்டாம். உடலில் ஒச்சம் ஏற்படலாம். சிறை செல்ல நேரலாம். உயிருக்குக்கூட ஆபத்து உண்டாகலாம் என ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ஆகவே, நடந்த அக்கிரமங்களைக் கண்களால் கண்டும் கையைக் கட்டிக் கொண்டு கல்லைப் போல் இருந்து விட்டேன்" என்று சொன்னார்.
அப்போது அவர் மனைவியின் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.
மலேசியாவுக்கு போகும் முன்னால் வீட்டுக்கு வந்து விட்டுச் செல்ல முடியுமா எனக் கேட்டார்.
காரைக்குடியில் உள்ள அவரின் வீட்டுக்குப் போனேன். ஜாதகத்தைக் காண்பித்தார். பார்த்தேன்.
இதுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்த என் மகள் இப்போது என் தம்பிகளுக்குச் சாதகமாக இருக்கிறாள்.
அவர்களைக் குறை கேட்க மறுக்கிறாள். அர்த்த ஜாமத்தில் என் முன்னே தோன்றி அழுகிறாள். எதுவும் பேச மாட்டேன் என்கிறாள் என்று அவர் சொன்னார்.
ஜாதகப்படி அந்த நண்பருக்கு இக்கட்டான சூழ்நிலை. மேலும் அவர் வசிக்கும் வீட்டில் வாஸ்து குற்றம் அதிகமாக உள்ளது.
அதைச் சுட்டிக் காட்டினேன். ஒப்புக் கொண்டார். காளஹஸ்திக்கும் திருநள்ளாறுக்கும் திருப்பதிக்கும் ஆண்டுக்கு இரு முறை போய் வருவார்.
சனி ஈஸ்வரத் தலமான பெரிச்சிக் கோவிலுக்கு சனி தோறும் சென்று வருவார்.
தட்சணாமூர்த்தி எழுந்தருளி இருக்கும் பட்டமங்களத்துக்குச் சென்று வியாழக்கிழமைகளில் தவறாது  வழிபாடு செய்வார்.
ஆகவே, ஆலயங்களுக்குச் செல்லுங்கள் என்று பரிகாரம் சொல்வது பொருத்தமற்றது.
அதனால் இதற்கு மாற்று ஏற்பாடாக சில காரியங்களைச் செய்யச் சொல்லி இருக்கிறேன்.
மலேசியாவில் இருந்து திரும்பி வந்த பின்னால் வீட்டில் கவச யாகம் ஒன்றை நடத்தலாம் எனச் சொன்னேன்.
நான் ஜாதக பலன்களைச் சொன்னபோது நண்பரின் மனைவி பல உண்மைகளை ஒத்துக் கொண்டார்.
ஆகவே கண்டிப்பாக இந்த யாகத்தைச் செய்ய வேண்டும் என சொல்லி இருக்கிறேன்.
கம்பீரமாகவும் கலகலப்பாகவும் காட்சி தரும் என் நண்பரின் வீட்டுக் கதவுகளுக்குப் பின்னால் இத்தனை துன்பங்களும் துயரங்களும் மண்டிக் கிடப்பதை எண்ணிப் பார்க்கும்போது விதியின் கரங்கள் எத்தனை வலிமையானவை என உணர்கிறேன்.

Monday, 12 January 2015

உயிரைப் பறித்த ஏழரைச் சனி

மிக மன வேதனையோடு இந்தப் பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

உள்ளத்தைப்  பிசைந்து விழிகளைக் குளமாக்கிய ஒரு மரணத்தின் வலி இன்னும் என் இதயத்தை விட்டு இறங்கவில்லை.

ஒரு வருடத்துக்கு முன்னர் ஒரு தம்பதியர் என்னைச் சந்தித்தனர். அவர்களுக்கு இரண்டு மகள்கள். ஒரு ஆண்.

மகள்களுக்குத் திருமணம் முடித்து விட்டார். மகன் கொஞ்சம் உடற்குறை உடையவர். பேசும் போது நாக்கு சற்று குளறும்.

அப்பாவுக்கும் பிள்ளைக்கும் அவ்வளவாக நெருக்கம் கிடையாது. எலியும் பூனையும் பேசிக் கொள்வது போல்தான் எப்போதாவது அவர்களுக்கு இடையே உரையாடல் நடக்குமாம்.

ஜாதகத்தைப் பார்த்தேன். பித்ருகாரகன் மிக மோசமான நிலையில் இருந்தார். ஒன்பதாம் இடத்தில் சனியும் ராகும்.

அந்தப் பையன் ஒரு வங்கியில் உதவியாளராக பணி புரிந்து வந்தார். பையனைக் கூட்டி வர முடியுமா என்று கேட்டேன்.

நாங்கள் கூப்பிட்டால் வரமாட்டான் என்று சொல்லி விட்டார்கள். தொலைபேசியில் நான் அழைத்தேன்.

மறுப்புக் கூறாமல் அரை மணி நேரத்தில் வருவதாக தெரிவித்தார். பெற்றோரை மறைவாக வீட்டுக்குள் இருக்கச் சொன்னேன்.

குறிப்பிட்ட நேரத்தில் வந்து விட்டார். நான் பேச ஆரம்பித்த சிறிது சில நிமிடங்களில் என் வசம் ஈர்க்கப்பட்டு விட்டார்.

தகப்பனாரின் தியாகங்கள், தாயார் பட்ட சிரமங்கள் அனைத்தையும் அவருக்கு புரியும் வண்ணம் எடுத்துக் கூறினேன்.

ஜாதக பலாபலன்களையும் தெரிவித்தேன். அவர் ஒரு பெண்ணைக் காதலித்து அது நிறைவேறாமல் போய்விட்டதாக குறிப்பிட்டார்.

அவமிருத்த யோக அமைப்பு. ஆகையால் தற்கொலைக்கு ஆட்படுகின்ற நிலை ஏற்படலாம் என்பது என் கணிப்பு.

வாழ்க்கையில் வரிசை பிடித்து நிற்கும் இடையூறுகளையும் இடர்பாடுகளையும் எடுத்துக் கூறி, அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று விளக்கினேன்.

புரிந்து கொண்டார். புதுச் சிந்தனைகளை நடைமுறையில் புகுத்திக் கொண்டார். அப்பாவிடம் அன்பாக பேசத் தொடங்கினார்.

குடும்பத்தில் குதூகலம் களை கட்டியது. கால் கட்டுப் போட பெண் பார்க்கத் தலைப்பட்டனர். உறவு முறையிலே ஒரு பெண் அமைந்தது.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் இடி போன்ற செய்தி என்னை வந்து அடைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு சாலை விபத்தில் தலை நசுங்கி மாண்டு விட்டார் என்பதுதான் அந்தத் தகவல்.

ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்ததால் அடக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் அங்கு சென்றேன்.

என்னைக் கண்டதும் தாயும் தந்தையும் தரையில் விழுந்து புரண்டு அழுதார்கள். ஆறுதல் சொல்லக் கூட என் நாக்குக்குத் தைரியம் இல்லை.

மருத்துவரும் ஜோதிடரும் லௌகீக வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கவலைப்படக் கூடாது. அவர்களுக்கு முன்னறியும் ஆற்றல் இருப்பதால் பக்குவம் அவர்கள் பக்கத்திலேயே நிற்க வேண்டும்.

தனுசு ராசிக்காரர். பலவீனப்பட்ட ஆயுள் ஸ்தானம். மாரகாதிபதி திசை சந்திப்பு. ஏழரைச் சனி தொடக்கம். 

வண்டி வாகனங்கள் ஓட்டாமல் இருக்க இயலாது. இருப்பினும் இரண்டு மடங்கு கவனம் தேவை. ஏழரைச் சனியின் தாக்கம் உடலை ஊனப்படுத்தி விடலாம் என ஜாதகம் பார்க்கும்போது எச்சரித்து இருந்தேன்.

ஊனப்படுத்தி விடும் என்றுதானே சொன்னீர்கள்... உயிரைப்பறித்து விடும் என்று சொல்லவில்லையே என என் கையைப் பிடித்துக் கொண்டு கதறினார்.

ஆயுளை நிர்ணயிக்க நாம் ஆண்டவன் இல்லை. இருந்தாலும் அந்த அகால மரணம் என்னை உலுக்கி விட்டது.

Wednesday, 7 January 2015

தாய் தந்தையரை எட்டி மிதிக்கும் பிள்ளை

தாயிற் சிறந்த கோவிலுமில்லை... தந்தை சொல் மிக்க மந்திரமில்லை... இந்த ஒரு வாசகத்தை எத்தனை பிள்ளைகள் திருவாசகமாக கருதுகிறார்கள் இந்த நாளில்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.... இந்த பொன்மொழியை எத்தனை பிள்ளைகள் எண்ணிப் பார்த்து நடக்கின்றனர்.

ஆலாய்ப் பறந்து தனம் தேடி அலையும் அவசர காலம் இது. சொந்தம் சுருத்து பந்த பாசம் எல்லாமே பணத்துக்குப் பின்னால்தான்.

பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் தோள் மீதும் மார் மீதும் போட்டு வளர்த்து கல்விக் கண்ணைக் கொடுத்த தந்தையையும் எத்தி விட்டு ஏறி மிதித்து வெற்றிக் கொடி நாட்ட விரையும் பிள்ளைகள் அதிகரித்து விட்ட காலம் இது.

அண்மையில்  வயதான தம்பதியர் என்னைச் சந்தித்தார்கள். வசதியாக வாழ்ந்தவர்கள் என்பதை அசதியாக இருந்த அந்த நேரத்திலும் உடல் வாகு உணர்த்தியது.

களை பறிக்காத வயலைப் போல களை இழந்த முகம். அவர்களை வருத்துவது உடல் வலியா... மனவலியா... என பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வேதனை அவர்கள் தோற்றத்தில் விளையாடி இருந்தது.

திருமணம் ஆகி 6 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்தது ஆண் குழந்தை. அந்தக் குழந்தையைக் கருவறையில் சுமக்க தாய் இருந்த விரதமும் தந்தை நோற்ற நோன்பும் வார்த்தைகளில் வடிக்க இயலாது.

தவமாய் தவமிருந்து பெற்ற மகனின் மேனியில் பூ விழுந்தால்கூட தாயின் உடல் புண்ணானது. ஈ அமர்ந்தால் கூட தந்தையின் இதயம் வலித்தது.

அழுதால் குழந்தைக்கு ஆரோக்கியம். இது மருத்துவ உண்மை. ஆனால், சின்னச் சிணுங்கள் கூட பெற்றவர்களை பேதலிக்க வைத்தது.

படிக்க வைத்தார்கள். பல கலைகளை வடிக்க வைத்தார்கள். பள்ளிக் காலத்தில் மகன் எழுதும் பேனாவில் மைக்குப் பதிலாக தங்கள் இரத்தத்தை ஊற்றி அனுப்பி வைத்தார்கள்.

பெற்றோரை மகன் ஏமாற்றவில்லை. பள்ளி வாழ்க்கை மகனின் குணத்தை மாற்றவில்லை. பட்டம் பெற்றான், பெரிய பதவிக்கு வந்தான்.

ஒரு பிள்ளைதானே என்று  மொத்த சொத்தையும் விற்று மகனின் வாழ்க்கைக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தார்கள். திருமணமும் செய்து வைத்தார்கள். பாசமாக இருந்த மகன் மோசமாக மாறி விட்டான்.

அடிவயிற்றில் பிள்ளையைச் சுமந்த தாய்க்கு பிடி சோறு போட மகனுக்கு மனமில்லை. கண்ணை இமைபோல காத்த தந்தை கனக்கும் சுமையாக மாறிப் போனார்.

'வீட்டின் பெயரோ அன்னை இல்லம். அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்'... கண்ணீர் மல்க ஒரு கவிஞன் எழுதிய வெந்நீர் வரி இது.

இந்தக் கவிதை வரிக்கு உயிர் கொடுப்பதைப் போல உயிர் கொடுத்த பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்து விட்டான் அந்த மகன்.

எங்களுக்கு ஏன் இந்த நிலை. செத்த பிறகு கொள்ளி போடுவான் என்று நினைத்த மகன், உயிரோடு இருக்கும்போதே கொள்ளி வைத்து விட்டான். இதற்கு என்ன காரணம் என்று என்னிடம் கேட்டார்கள்.

பிள்ளைகளின் நிலை குறித்து நிர்ணயம் பண்ணுவது புத்திரஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் பாவம்.

இது கெட்டுப் போகக் கூடாது. ஐந்தாம் பாவத்தின் அதிபதி நல்ல இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். புத்திரகாரகன் பலமாக சஞ்சரிக்க வேண்டும்.

இவற்றில் ஏதேனும் கோளாறு இருந்தால் பிள்ளைபேறு ஏற்படுவது கஷ்டம். ஒருவேளை ஆண்டவனின் அனுக்கிரகத்தால் குழந்தை பிறந்தால் மூன்று வகையான பாதிப்புகளைக் கொண்டு வரும்.

1. பிறந்த பிள்ளை அற்ப ஆயுளில் மடிந்து போகும். அல்லது தீர்க்க இயலாத வியாதியால் பயனற்றுக் கிடக்கும்.

2. தாய் தந்தையரை விட்டு பிரிந்து செல்லும். அல்லது பெற்றோரை வீட்டை விட்டு விரட்டி அடிக்கும்.

3. ஒரே வீட்டில் வசிப்பார்கள். பெற்றோரை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். நடைபிணங்களாக வீட்டில் நடமாட வேண்டிய அவல நிலை ஏற்படும்.

இந்த விபரங்களை எடுத்துக் கூறினேன். மேலும் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இறைவன் அவதாரங்கள் அடையும் இன்ப துன்பங்களை விளக்கினேன்.

நடைமுறை வாழ்க்கையில் என்னைச் சந்தித்து சோகங்களைப் பரிமாறிக் கொண்ட பல பெற்றோரின் கதைகளை அவர்களுக்கு புரிய வைத்தேன்.

ஆன்மீக ரீதியாக பல அம்சங்களை அவர்களுக்கு உணர்த்தினேன். அதன் பின்னர் அவர்கள் முகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. நீண்ட நேர தேறுதலுக்கு பின்னரே அவர்கள் என்னிடம் இருந்து விடை பெற்றார்கள். 

தள்ளாத வயதில் பெற்றோரை ஒதுக்கித் தள்ளாத பிள்ளைகள் கிடைப்பது நாம் சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின் பலனால்தான் அமையும்.

என்ன செய்வது இதை ஏற்றுக் கொண்டு வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை.