Friday 13 November 2015

ஜோதிடம் பொய்யா.. விடை தெரிந்தோர் விளக்குங்கள்

விதியை மதியால் வெல்ல முடியுமா... இது விடை காண முடியாத வில்லங்கமான கேள்வி.

மலேசியாவில் நான் பத்திரிகை முழு நேர பணியில் இருந்தபோது தமிழ்நாட்டில் இருந்து வந்த பல பிரபலமான ஜோதிடர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அவர்கள் முன்னால்  வைக்கும் முதல் கேள்வி இதுதான். ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய நாள் குறித்து கொடுத்தவர் வசிஷ்ட மகரிஷி.

ஆனால், பட்டாபிஷேகம் நடக்கவில்லை. மாறாக காட்டுக்கு போனார். இது எதனால் நடந்தது. மகரிஷியின் வாக்கு பொய்த்தது ஏன்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி. சுமார் 2 லட்சம் உயிர்களை சுருட்டிக் கொண்டு போனது. இவர்கள் அத்தனை பேருக்கும் அவமிருத்த யோகம் இருந்ததா..?

இப்படி சிக்கலான கேள்விகளைக் கேட்டு விடை தேடி அழைந்த காலம் அது.

 புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் ஆஸ்தான ஜோதிடராக இருந்த வித்வான் லெட்சுமணன் ஐயா அவர்கள் இதற்கு பொருத்தமான விளக்கத்தைத் தந்தார்.

பொருள் புரியாமல் மனனம் செய்த திருக்குறள் வரிகளைப் போல அவர் சொன்ன விளக்கம், விளங்காமலேயே மூளைக்குள் முடங்கியது.

காலையில் புல்லை மேய்ந்த மாடு மாலையில் மீண்டும் அசைபோட்டு உணவாக்கிக் கொள்வதைப் போல பின்னாளில் அதன் பொருள் புரிந்தது.

வாழ்க்கையின் வெற்றி பொருளாதாரம் என்பது ஒரு சாரரின் கருத்து. இல்லை நிம்மதி என்பது இன்னொரு சாரரின் கருத்து.

பணம் இல்லாமல் வாழ முடியுமா... பணம் இருந்தால் மட்டும் வாழ முடியுமா... இப்படிப்பட்ட வினாக்களை என் மீது வீசியவர்கள் ஏராளம்.

பணம் சம்பாதித்திவன் எல்லாம் புத்திசாலி இல்லை. பற்றாக்குறையோடு வாழ்பவன் எல்லாம் முட்டாள் இல்லை. இப்படி சொல்லலாமா...

உலகத்தில் பணக்காரர்களாக இருக்கிற அறிவாளிகள் ஏராளம். முட்டாளாக முனைமழுங்கித் திரிகிற ஏழைகளும் ஏராளம்.

அறிவு என்பது என்ன... வெற்றிகரமாக தொழில் நடத்தி கோடி கோடியாக சம்பாதிப்பவன் இல்லற வாழ்க்கையில் சில்லறைத்தனமாக இருக்கிறான்.

பொருளாதாரத்தில் வெற்றி பெற்ற அவன் ஏன் குடும்ப வாழ்க்கையில் குதர்க்கமாக நடந்து கொள்கிறான்.

திறமை என்பது என்ன.... ஒரு போட்டியில் 200 ரன் அடித்த கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் இன்னொரு போட்டியில் இரண்டு ரன்னைக் கூட எட்ட முடியாமல் மட்டையைத் தூக்கிக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்.

அதே மட்டை... அதே.. பந்து... அதே கைகள்... திறமை மட்டுமே வெற்றி என்றால் இங்கும் அவர் 200 ரன்னைத் தொட்டிருக்க வேண்டும் அல்லவா...

பக்தி மட்டும் வெற்றி என்றால்... பழனிக்கும் ஐயப்பன் கோவிலுக்கும் படை எடுக்கின்ற அத்தனை பேரும் பணக்காரர்களாகவும் வெற்றியாளர்களாகவும் திகழ வேண்டும் அல்லவா...

அதே வேளையில் இரவு பகலாக உழைத்து கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு, அல்லல்பட்டு, அவதிப்பட்டு உழைத்து சம்பாதித்த பலர் திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் கோடி கோடியாக கொட்டுகிறார்களே ஏன்...

அவர்கள் எல்லாம் முட்டாள்களா.. மூடர்களா...

படிக்கவே லாயக்கில்லை என்று குருகுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் கண்ணதாசன்.

கல்வியைக் கசடறக் கற்று கவிதையால் வறுமையை வெல்ல வேண்டும் என்று வெறிபிடித்து எழுதுகோல் ஏந்தியர் வைரமுத்து..

படிக்காமல் கவிதை வார்த்து படித்தவர்களை பாமர மக்களை ஈர்த்தவர் கண்ணதாசன்... படித்து கவிதை யாத்து வைரவரிகளை தந்தவர் வைரமுத்து. இவர்கள் இருவருமே வெற்றியாளர்கள்.

ஆனால், எழுதுகோல் எடுத்த இருசாரருமே இவர்களைப் போல ஆகி விட முடியுமா...

சிவகங்கையில் பிரபலமான வழக்கறிஞர்.. என் மீது மாறா அன்பு கொண்டவர். என் குடும்பத்தில் மூத்த சகோதரர் போன்றவர். போன்றவர் என்ன மூத்த சகோதரர்தான்.

மதுரையில் சென்னை சில்க்ஸ் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. என் பிள்ளைகள் இருவரும் கட்டிட பொறியாளர்கள்.

ஒரு மதிய வேளையில் நானும் பிள்ளைகளும் பக்கத்தில் உள்ள சபரி உணவகத்திற்கு சாப்பிடச் சென்றோம்.

அப்போது மெதுவாக எங்களைக் கடந்து சென்ற ஹோண்டா சிட்டி கார் சில அடி தூரத்தில் நின்றது. பின் கதவைத் திறந்து வெள்ளை உடையில் வெளியே வந்தார். ஒரு நபர்.

அவர்தான் என் வழக்கறிஞ சகோதரர். " இங்க என்னடா.. பண்ணுகிறாய்.. எப்போது மலேசியாவில் இருந்து வந்தாய்.. ஏன் வீட்டுக்கு வரவில்லை" என்று கேட்டார்.

பிள்ளைகளை அறிமுகப்படுத்தினேன். அவரின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார்கள். அப்படிப்பட்ட வழக்கறிஞர் சில சிக்கலான வழக்குகளில் வாதத்திறமையால் குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கித் தந்திருக்கிறார்.

நீதி வென்றதா... அல்லது நீங்கள் வென்றீர்களா... என்று அப்போதே நான் அவரைப் பார்த்து கேட்டிருக்கிறேன்.

இது தொழில் தர்மம். நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்று உதடு வலிக்காமல் சொல்லி விடுவார்.

இதைப் போல இன்னும் ஏராளமான உதாரணங்களை எடுத்து வைக்க என்னால் இயலும்.

சூப்பர் டெலஸ்கோப் என்ற நுண் தொலைநோக்காடி இல்லாமலேயே 'யுனிவர்ஸ்' என்று சொல்லக்கூடிய பிரபஞ்சத்தையும் 'கேலக்ஸி' என்று சொல்லக்கூடிய நட்சத்திரக் கூட்டத்தையும் 'மில்க்கி வே' என்று சொல்லக் கூடிய பால்வெளி மண்டலத்தையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே பாகுபடுத்திப் பார்த்து சொன்னவர்கள் நம் முன்னோர்கள்.

நிலவளி, ஜலவளி, அண்டவளி, ஆகாசவளி, பரவளி, பராபரவளி, சதாசிவவளி, சச்சிதானந்தவளி என்று எட்டு வளி மண்டலத்தை ஆய்ந்து உலகுக்கு உணர்த்தி முதன்மையாக நின்றவர்கள் நம் முன்னோர்கள்.

வெளிநாட்டுக்கார விஞ்ஞானிகளை எல்லாம் இன்றும் வியக்க வைக்கும் விந்தைகள் இவை.

நம்மை விட ஆயிரம் மடங்கு அறிவாளிகள் என்று சொல்லப்படுபவர்கள் இஸ்ரேலியர்கள்.

அவர்கள் 1969 ஆம் ஆண்டுகளில் மேஷம் முதல் மீனம் வரையான ராசிச் சக்கர படங்களை அப்படியே அதிகாரத்துவ தபால்தலையாக வெளியிட்டிருக்கிறார்கள். இணையத்திற்கு சென்றால் இந்த உண்மையைக் காணலாம்.

விஞ்ஞானம் ஒரு கலை.. விவசாயம் ஒரு கலை.. ஓவியமும் காவியமும் கலைதான். இல்லறமும் துறவறமும் கலைதான். ஜோதிடமும் மருத்துவமும் கலைதான். இவர்களில் யார் வெற்றியாளர்கள்.

ஜோதிடக் கலையின் சூட்சுமங்கள் தெரிந்த விற்பன்னர்கள் ஏராளமாக வாழும் நாடு இது. அவர்கள் நடுவே ஊர்ந்து செல்லும் பிள்ளைப் பூச்சி போன்றவன் நான்.

அவர்கள் எல்லாம் ஜாதக சாகரம் என்ற ஆழியில் மூழ்கி முத்தெடுத்தவர்கள். அலைக்குழந்தை தலைசுமந்து கரைமணலில் வீசிச் செல்லும் கிளிஞ்சல்களைப் பொறுக்கி ஆனந்தம் அடைபவன் நான்.

'யார் அறிவாளி.. யார் வெற்றியாளர்... யார் ஏமாளி.. யார் முட்டாள்... யார் விதியை மதியால் வென்றவர்... யார் மதியால் வாழ்ந்து விதியால் வீழ்ந்தவர்...

என் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள் இவை. தெரிந்தவர்கள் விளக்கினால் நான் தெளிவடைவேன்.

வாதம் மட்டும் வாழ்க்கை அல்ல.. பிடிவாதம் மட்டும் வாழ்க்கை அல்ல.. விதண்டாவாதம் மட்டும் வாழ்க்கை அல்ல. வாழ்க்கை என்றால் என்ன.. வெற்றி என்றால் என்ன என்று நேற்று என்னைச் சந்தித்த ஒருவர் கேட்டார்.

"நாம் அறிவாளிகள் என்று நிரூபிப்பதைவிட மற்றவர்களை முட்டாள்கள் என்று மட்டம் தட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறவர்கள் நாம்" என்று சொல்வேந்தர் சுகி. சிவம் அடிக்கடி கூறுவார்.

அறிந்தவர்கள் சொன்னால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். உண்மையானவர்கள் உதவுங்களேன்.

1 comment:

  1. அற்புதமான சிந்தனை தேடல்.

    என் தேடலும் தொடர்கிறது...

    இறுதியில் மௌனம், தியானம் & ஞானம்!!!

    ReplyDelete