Monday 12 October 2015

தெய்வத்தாயின் தரிசனம்... தேடிச் சேர்த்த புண்ணியம்...!

உடலைப் படைத்தது இறைவன். அதற்கு உயிரைக் கொடுத்தது இறைவன். வினை செய்யும் விதியைக் அளித்தது இறைவன். அதில் இருந்து விலகும் மதியைத் தந்தது இறைவன்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதியான ஆண்டவன் உறையும் ஆலயங்களுக்குச் செல்லும்போது மனம் சாந்தி அடைகிறது.

வாட்டும் துன்பங்களுக்கு வடிகால் கிடைக்கிறது. துரத்தும் துயரங்களுக்கு துயரம் உண்டாகிறது.

இது ஒரு புறமிருக்க, சில வேளைகளில் மனிதர்களே தெய்வங்களாக காட்சி தரும் அதிசய அனுபவங்களை அடைகிறோம்.

அப்படிப்பட்ட மகத்தான அனுபவம் இரு தினங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம்.

அருமைச் சகோதரன் மகேந்திரனுக்கு அணுக்கமான நண்பர் கண்ணன். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்.

அவரும் அவர் துணைவியாரும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் ஒரு ஹோமம் செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள்.

தம்பி மகேந்திரன் என்னை அணுகினார். குறிப்பிட்ட நாளில் கணபதி ஹோமம் செய்ய வேறு ஒருவர் முன்பதிவு செய்து விட்டார்.

ஒரு நாளில் ஒரு நபர் மட்டுமே ஹோகம் செய்ய இயலும் என்ற வகையில் நிர்வாகம் வரையறை செய்துள்ளது.

அதனால் அபிஷேக ஆராதனை செய்து விநாயகப்பெருமானை வழிபட ஆவன செய்தோம். ஏனெனில் அக்.11 அவரின் பிறந்த நாள்.

கண்ணன் தம்பதியரும் கட்டுமானத் தொழிலில் கோலோச்சும் லெட்சுமணன் தம்பதியரும் குறிப்பிட்ட நாளில் சென்னையில் காரைக்குடி வந்து விட்டார்கள்.

பிள்ளையார்பட்டியில் மிக நேர்த்தியாக அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கற்பக விநாயகரை பூரண அலங்காரத்தோடு தரிசித்து புளகாங்கிதம் அடைந்தோம்.

பின்னர் பட்டமங்கலம் தட்சணாமூர்த்தியைத் தரிசித்தோம். திருக்கோஷ்டியூர் சென்று பள்ளிகொண்ட பெருமாளை வணங்கினோம்.

அன்புத்தம்பி நாகராஜன் (ARC உணவக உரிமையாளர்) அனுப்பி வைத்த மதிய உணவை ரசித்து ருசித்தோம்.

அதற்கு பின்னர்தான் நான் மேலே குறிப்பிட்ட அற்புத அனுபவம் கிடைத்தது.

நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த திரு அண்ணாமலை அவர்களின் துணைவியாரின் இல்லத்தை பார்க்க சென்றோம். திரு அண்ணாமலை கண்ணன், லெட்சுமணன், மகேந்திரன் ஆகியோருக்கு நெருக்கமான நணபர்.

காரைக்குடி மத்திய பகுதியில் மிகப் பெரிய வீடு. நாங்கள் வரும் செய்தி ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டு விட்டது.

நாங்கள் வாசலில் நின்று அழைப்பு மணியை அழுத்திய சில விநாடிகளில் பல கோடி மதிப்புள்ள பிரமாண்டமான ராஜநிலைக்கதவு திறந்தது.

பார்த்தவுடன் பாதம் பணிந்து வணங்க வைக்கும் அருட்கடாட்சத்தோடு வெள்ளை உடையில் 80 வயது மதிக்கத்தக்க அம்மையார் அன்பும் அருளும் இழையோட எங்களை வரவேற்றார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரிய வீடு. அன்று பதிக்கப்பட்ட தரைக்கற்கள் இன்றும் அழுக்குப்படாமல் இருக்கின்றன.

சிபிஐ புலனாய்வுத்துறை களத்தில் இறங்கினால் கூட ஒரு ஒரு தூசி தும்பைக் கண்டுபிடிக்க முடியாது. அத்தனை சுத்தம்.

அந்தத் தாயைப் பார்த்து சுறுசுறுப்பே வெட்கப்பட வேண்டும். சுமார் மூன்று நிமிடத்தில் எங்களுக்கு காபி தாயரித்து உபசரித்த பாங்கை இந்தக் கால இளைய சமுதாயம் ஏணி வைத்தாலும் எட்டிப் பிடிக்க முடியாது.

வசதியான குடும்பம், வளமான வாழ்க்கை. இறையருள் நந்தவனமாக விளங்கிய இந்த இல்லத்திலும் விதி விஷ நாக்கை நீட்டி சோகச் சொக்கட்டான் விளையாடியது கொடுமையிலும் கொடுமை.

மடை திறந்த வெள்ளம் போல தடையில்லாமல் இவர் பேசியபோது அந்தச் சோகத்தின் வேதனை நெல்லோடு கலந்த கல்லாக... சொல்லோடு சேர்ந்து வந்தது.

தவமிருந்து பெற்ற பிரிய மகனை 14 வயதில் பறிகொடுத்திருக்கிறார். அந்தச் சோகத்தில் ஆழ்ந்து போன கணவரை அடுத்த நான்கு ஆண்டுகளில் இழந்திருக்கிறார்.

சோகமும் துயரமும் சூறாவளியாக இவரைச் சுழற்றி அடித்தாலும் இறை பக்தி தந்த தன்னம்பிக்கை இவரைத் தளர விடவில்லை.

வீட்டு நிர்வாகத்தையும் மில் நிர்வாகத்தையும் கையில் எடுத்துக் கொண்டு பாரம்பரியத்திற்கு பங்கம் வராமல் இரண்டு பெண்களைக் கரை சேர்த்தார்.

இன்றும் தானே சமைத்துச் சாப்பிடுகிறார். இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக வசிக்கிறோமே என்ற உணர்வு இவருக்கு சிறிதளவேனும் இல்லை.

இதோ எங்கள் அய்யா (கணவர்) அன்புக்குரிய ராமு (மகன்) மாமனார் மாமியார், தாயார் தகப்பனார் எல்லோரும் என்னுடன் இருக்கிறார்கள். நான் எதற்கு அஞ்ச வேண்டும் என்று கேட்கிறார்.

பக்கத்தில் பல்லி கத்தினாலே பயத்தில் பத்தடி தள்ளிப் பாயும் இன்றைய மனிதர்கள் மத்தியில் இவர் ஒரு கலங்கரை விளக்கம்.

அனைவரும் அந்த அருட் தாயின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம்.

"இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் என்னை வந்து பார்த்து விட்டுப் போங்கப்பா" என்று அப்பழுக்கில்லாத உள்ள சுத்தியோடு சொன்ன வாசகம் எந்நாளும் எங்கள் இதயத்தை விட்டு இறங்காது.













Friday 9 October 2015

விதியை மதியால் வென்ற பெண்...!

நான் பெரிய ஜோதிடன், சாஸ்திர வித்தைகளின் சாகரம் என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்களைக் கூட கிறுகிறுக்க வைக்கும் ஜாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

நேற்று ஒரு தம்பதியர் என்னை சந்தித்தார்கள். கணவனுக்கு 46 வயது. மனைவிக்கு 32 வயது.

பெண் நல்ல அழகு. கணவர் கருப்பு. அதே நேரத்தில் தோற்றப் பொலிவும் குறைவு.

அவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள். கடைசிப் பிள்ளை ஆணாகத்தான் பிறக்கும் என்று... பார்த்த ஜோதிடர்கள் எல்லாம் சொன்னார்களாம்.

ஆணாகப் பிறக்கவில்லை என்றால் ஜாதகம் பார்ப்பதையே விட்டு விடுவதாக ஒரு ஜோதிடர் அடித்துக் கூறினாராம்.

ஆனால், பிறந்தது பெண். அதனால் இவருக்கு ஜோதிடர்கள் மீது அடக்க முடியாத கோபம்.

இந்த நிலையில் என்னைப் பற்றி கேள்விப்பட்டு அலுவலகத்திற்கு வந்தார்.

முதலில் இறுக்கமாக இருந்தவர் என் பேச்சைப் பார்த்து மனதில் உள்ளதை மளமளவென்று கொட்டி விட்டார்.

அனைத்து ஜாதகங்களையும் ஆய்வு செய்தேன். பிள்ளைகள் மூவருமே குட்டிச் சுக்கிரனில் பிறந்தவர்கள். காளசர்ப்பதோஷ அமைப்பு உடையவர்கள்.

புத்திரஸ்தானம் கெட்டுப் போய் பொல்லாத கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கும்போது இவருக்கு பிள்ளைகள் பிறந்ததே பெரும் பாக்கியம்.

இதனால் இவர் சம்பாதித்த செல்வம், பிள்ளைகள் பிறந்தவுடன் டாட்டா காட்டி விட்டு போய் விட்டது.

மேலும் இருவர் ஜாதகங்களும் சிக்கலான அமைப்பில் இருந்தன. அனைத்து தோஷங்களும் அரவணைத்து நின்றன.

மனமொத்து வாழ்வதற்கான மார்க்கம் அதில் சிறிதளவேனும் இல்லை.

" அம்மா, உன் முகத்தில் விசனத்திற்கான அறிகுறி கொஞ்சம் கூட இல்லை. ராட்ஷஸ குணத்தில் பிறந்தவள். அமைதியின் அடுத்த பிறவியாக இருக்கிறாய். எப்படிச் சாத்தியமானது" என்று கேட்டேன்.

அப்போது எனக்குக் குருவாக அவள் மாறினாள். அவள் எளிமையாக சொன்ன காரணங்கள் என் மனதில் வலிமையாக இறங்கின.

" சாமி... திருமணம் ஆகி மூன்று வருடங்கள் போராட்டம்தான். இளமையாக இருந்த என்னை கட்டி அணைத்து மகிழ்வதை விட எட்டி உதைத்து இன்பம் காண்வதில் அவருக்கு அலாதிப் பிரியம்.

அடுப்பில் வைத்த விறகு எரிந்துதானே ஆக வேண்டும். நான் அவரை மாற்ற முயற்சி செய்யவில்லை. என்னை மாற்றிக் கொண்டேன். பாலைவன வாழ்க்கை சோலைவனமாக மாறியது.

முதலில் அவருக்கு என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொண்டேன். பின்னர் என்ன பிடிக்கும் என்பதைப் அறிந்து கொண்டேன்.

பிறகு அவரிடம் இருக்கும் நிறை குறைகளைப் புரிந்து கொண்டேன். இதனால் அவரை முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

இப்போது பணம் இல்லை எங்களிடம். ஆனால், பக்குவமான மனம் இருக்கிறது" என்றார்.

விதியை மதியால் வெல்ல முடியும் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா... என்ன...

என்ன தொழில் செய்யலாம் என்று கேட்டார்கள். துணி வியாபாரம், இரும்பு சம்பந்தமான தொழில் சிறப்பாக இருக்கும் என கூறினேன்.

துணிக்கடை வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். அதையே நீங்கள் கூறியது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

இழந்ததை நினைத்து கவலைப்படவில்லை. வருவதை எதிர்கொள்ள தயாராகி விட்டோம் எனக் கூறினர் அந்தத் தன்னம்பிக்கைத் தம்பதிகள்.

என்னிடம் பேசிக் கொண்டிருந்த மூன்று மணி நேரமும் அவர்கள் எனக்கு ஆசானாகத் திகழ்ந்தார்கள். நான் மாணவனாக மாறி என்னை நானே புதுப்பித்துக் கொண்டேன்.


Thursday 8 October 2015

ரச்சுத் தட்டியது.... வாழ்க்கை கெட்டது....!

முகத்தைப் பார்த்து அகத்தை அறிந்து கொள்ளலாம் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

ஆனால், அழகான முகத்துக்குப் பின்னால் ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பின்னால் இதயத்தில் இழையோடும் சோகத்தை அறிந்து கொள்வது அவ்வளவு சுலபமில்லை.

அண்மைய காலங்களில் அனுபவத்தின் மூலமாக அடியேன் அறிந்து கொள்ளும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்தான்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்து ஜோதிட ஆலோசனை பெற தாயும் மகளும் வந்தார்கள்.

மகள் இளங்களைப் பட்டம் பெற்று ஆசிரியர் பயிற்சி முடித்து இருக்கிறார். இவருக்கு இரண்டு தம்பிகள். ஒருவர் மெக்கானிக் இஞ்சினியர் படிப்பு. இன்னொருவர் பள்ளி இறுதி வகுப்பு.

பெண்ணின் கணவர் துபாயில் வேலை பார்க்கிறார். அந்தப் பெண்ணின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது பொருளாதாரப் பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அனைவரின் ஜாதகத்தையும் கணித்தேன். எதார்த்தமாக கணவன் மனைவிக்கு பொருத்தம் எவ்வாறு உள்ளது என்பதைப் பார்த்தேன்.

அதிர்ச்சி அலை என் இதயத்தில் மோதிச் சிதறியது. கணவனுக்கும் மனைவிக்கும் ரச்சுப் பொருத்தம் இல்லை.

அதை வெளிக்காட்டி நான் மிகப் பெரிய ஜோதிடன் என அலப்பறை பண்ண விரும்பவில்லை.

என் பேச்சு அவர்களுக்கு மிகத் திருப்தியாக இருந்தது என்பதை அவர்கள் அடுத்தடுத்து அடுக்கிய கேள்விகளால் உணர முடிந்தது.

இறுதியாக அந்தப் பெண் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். "சாமி என் ஜாதகத்தில் முக்கியமான அம்சம் இருக்கிறது அதைச் சொல்ல முடியுமா" என்று.

"ஜோதிடம் என்பது வழிகாட்டி.. ஜோதிடனிடம் ஆலோசனை கேட்கலாம். சோதனை நடத்தக் கூடாது. அது விபரீத விளைவுக்கு வித்திட்டு விடும்" என்று அறிவுறுத்தினேன்.

" அம்மா... ஆண்டவன் அருளால் உன் குடும்ப வண்டி குடை சாயாமல் இவ்வளவு நாட்கள் ஓடி விட்டன.

அதற்காக இறைவனுக்கு நீ ஒவ்வொரு நாளும் நன்றி சொல்ல வேண்டும். உன் பிள்ளைகள் இறைவனின் அருட்கொடை.

அதுதான் சுமங்கலியாக உன்னை பூவையும் பொட்டையும் சுமக்க வைத்திருக்கிறது. இருப்பினும் வாழ்ந்தும் நீ வாழா வெட்டி" என்று சொன்னேன்.

அடுத்த வினாடி ஒரு விம்மல் வெடித்துச் சிதறியது. கண்கள் அருவியாகின. ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஐந்தாறு நிமிடங்கள் ஆகி விட்டன.

அணைக்குள் அடங்கி இருக்கும்வரைதான் தண்ணீர். உடைத்துக் கொண்டு வெளியேறினால் வெள்ளம்.

அந்த நிலையில் இருந்தார் அந்தப் பெண். தாய் அழுவதைப் பார்த்து மகளும் அழுதார்.

இந்த நிலைக்கு என்ன காரணம். இருவருக்கும் மிக முக்கிய பொருத்தமான ரஜ்ஜு இல்லை. இப்படி ஒரு நிலை இருந்தால் எந்த ஜோதிடரும் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்.

"தாலியைக் கழட்டி விட்டு உண்டியலில் போடும்படி ஒருத்தர் சொன்னார். அப்படிச் செய்யலாமா சாமி" என்று கேட்டார்.

தலையில் விழுந்த இடி எல்லாவற்றையும் தாங்கி ஆகி விட்டது. தொடர்ச்சியான துன்பமே துணையாகி விட்டது. இனித் தேவையில்லை. பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் சொல்லி அனுப்பினேன்.

சில பரிகாரங்களை செய்யச் சொல்லி இருக்கிறேன். குறை இருக்கிறது என்று தெரிந்தும் 'கொண்டு நோக்கி' வாழ்ந்த அந்த அம்மையாரின் பொறுமையும் திற்மையும் பாராட்டுக்குரியவை.

நேற்று என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, " உங்களைச் சந்தித்து விட்டு வந்த இரண்டு நாட்களில் என் மனம் மிகவும் லேசாக இருக்கிறது.

தொலைந்து போன தூக்கம் மீண்டு வந்திருக்கிறது. என் வாழ்க்கைப் பிரச்சினைக்கு உங்கள் மூலமாக ஒரு வடிகால் அமைந்திருக்கிறது" எனச் சொன்னார்.

எல்லாம் என்னுள் இருந்து என்னை இயக்கும் முருகப் பெருமான், அவருடைய அண்ணன் விநாயகப் பெருமானின் அருள்.