Friday, 14 May 2010

உரிய நேரம் வந்து விட்டால் உயிர் போய்விடும்

அண்மையில் என்னை அதிர வைத்த ஒரு சோகச் செய்தி. கார் விபத்தில் ஒருவர் அடைந்த அகால மரணம். மலேசியாவில் ரவாங் என்ற இடத்தில் மிகப் பிரமாண்டமான துர்க்கை அம்மன் கோவில் இருக்கிறது. இதை நிர்மாணித்தவர் கணேசன் என்பவர். இவருடைய பற்றாளர்கள் இவரைக் கணேசனார் என்றே அழைப்பார்கள்.நல்ல பண்பாளர். சிறந்த சமூக சேவையாளர். தேடி வருகின்ற பக்தர்களின் குறைகளை முன்னுணர்ந்து பரிகாரம் சொல்பவர். இவருக்கும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். யாரும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாதவர். குடும்பம், மனைவி பிள்ளைகள் என இல்லறத்திலும் நல்லறம் கண்டவர்.

இப்படிப்பட்டவர் தமிழ் நாட்டில் பொள்ளாச்சி அருகே காரில் போய்க் கொண்டிருந்த போது கார் விபத்துக்குள்ளாகி அந்த இடத்திலேயே மரணம் அடைந்து விட்டார். இந்த செய்தி என்னை உலுக்கி எடுத்து விட்டது. நல்லவர் கெட்டவர் என்பது நமனுக்கு தெரியாது. விழிப்போடு இருந்தாலும் உரிய நேரம் வந்து விட்டால் மாயையின்பால் சிக்கி உயிர் போய்விடும் என்பதற்கு கணேசனாரின் மரணம் உதாரணமாகி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.  அன்னாரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

"நல்லவர்கள் எல்லாம் சீக்கிரமே சிவலோகம் சென்று விடுகிறார்கள்" என்று அவரின் சீடர்கள் கண்ணீர் விட்டு கதறிய காட்சி இன்னும் மனதைப் பிசைகிறது.

Tuesday, 4 May 2010

நித்தியானந்தா கால்பட்ட இடமெல்லாம் கருகிப் போன துயரம்
நேரம் சரியில்லை என்றால் சந்தனக் குழம்பில் குளித்தவன் சாக்கடையில் மிதப்பான்... கோபுரத்தில் குடியிருந்தவன் குடிசையில் கிடப்பான்....பல்லக்கில் போனவன் பாதம் நோக நடப்பான்... தங்கச் சிம்மாசனத்தில் இருந்தவன் தனிமைச்சிறையில் கழிப்பான்... இதற்கு நல்ல உதாரணம் நித்தியானந்த சாமியார்.

தமிழகத்தில் மருமகள்கள் பெரிதும் பயப்படுவது 'மாமியாருக்கா... சாமியாருக்கா... என பட்டிமன்றம் போட வைத்தவர். கடவுளைக் கண்டு விட்டதாக கதை விட்ட இந்த மனிதருக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது இறைவன் செலுத்திய ஈட்டி.

நான் இங்கே சொல்லப்போவது இவருக்கு நேர்ந்த அவலத்தை அல்ல. இவர் கால் பட்ட இடமெல்லாம் கருகிப் போன துயரத்தை. இவர் தன்னை கடவுள் என்றார். கோபியர் கொஞ்சும் ரமணன் என்றார். ரஞ்சிதாவோடு பாலியல் ஆராய்ச்சி செய்து வலிக்காமல் பிள்ளை பெறுவது எப்படி என அமெரிக்க மருத்துவர்களுக்கு ஆராய்ச்சிக் கட்டுரை அனுப்பினார். பெரிய பெரிய புள்ளிகளின் மனைவிகளைக் கூட ஒப்பந்தம் போட்டு ஒளிவிளக்கு ஏற்றினார்.

இவர் கால் பட்டாலே கஷ்டங்கள் மறைந்து போகுமாம். கை பட்டாலே துயரங்கள் தூள் தூளாகும். பார்வை பட்டாலே பாதங்கள் எல்லாம் பறந்து ஓடுமாம். இப்படித்தான் எல்லாரும் இவர் காலைக் கழுவி தண்ணீர் குடித்தார்கள். அப்படிப்பட்ட மகான் இப்போது ஏன் சிறையில் இருக்கிறார். இவரை நம்பியவர்களின் கதி என்ன?

இவரால் ஆசீர்வதிக்கப்பட்ட ரஞ்சிதா இப்போது ரகசிய ராத்திரி தேவதையாக இருக்கிறார். கட்டிய கணவனுக்கு கடுக்காய் கொடுத்தவர் போலீசாருக்கு போக்கு காட்ட முடியாமல் தவிக்கிறார்.

அமெரிக்காவில் இவருக்கு முதலில் அடைக்கலம் கொடுத்து விசாவுக்கெல்லாம் ஏற்பாடு செய்த ஒருவர் இப்போது பணத்தை இழந்து பட்டமரமாக நிற்கிறார். "சாமியாரோடு குடும்பம் நடத்திக் கொள்" என சொல்லி விட்டு இவருடைய மனைவி டாடா காண்பித்து போய் விட்டார்.

இந்த சாமியாருக்கு நேரடி முகவராக விளங்கிய ராகசுதா என்ற நடிகை திரை உலகத்திலும் சரி.... சொந்த வாழ்க்கையிலும் சரி....சொதப்பலாகத்தான் இருக்கிறாரே தவிர சுபிட்சமாக அல்ல. இவரும் வெளியே முகம் காட்ட முடியாமல் முக்காடு போட்டுக் கொண்டு திரிகிறார்.

தமிழகத்திலேயே நம்பர் 1 வார இதழ் குமுதம். இதில்தான் நித்தியானந்தாவின் "கதவைத் திறங்கள் காற்று வரட்டும்" என்ற ஆன்மீகத் தொடர் அலப்பறை பண்ணியது. இதைப் படித்து விட்டுத்தான் நித்தியானந்தாவின் கதவைப் பல பெரிய புள்ளிகளின் மனைவிகள் திறந்தார்கள்.

இப்போது அந்த குமுதம் பத்திரிகையில் பிரச்சினை.உரிமையாளருக்கு பதிப்பாளருக்கும் உள்குத்து நடந்து அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. குமுதம் நிர்வாகத்தில் பலகோடி நஷ்டம் என பகிரங்கமாகவே சொல்லப்படுகிறது. அங்கு பாலியல் கூத்துகளும் நடந்ததாக போலீசில் புகாரும் செய்யப்பட்டிருக்கிறது.

நித்தியானந்த இப்போது இருப்பது கர்நாடகாவில்.. அங்குள்ள சிறையில்தான் விசாரிக்கப்பட்டு வருகிறார். அங்கு பாரதிய ஜனதா ஆட்சி நடப்பதால் சாமியாருக்கு பெரிய பிரச்சினை இல்லை. தமிழ் நாட்டைப்போல தடியால் விசாரிக்க முடியாது. இந்தத் தைரியம்தான் சாமியாரை தெம்பாக வைத்திருக்கிறது.

ஆனால், கர்நாடகாவில்  பாரதிய ஜனதா ஆட்சிக்கே ஆப்பு வைக்கும் நிலை உருவாகி இருக்கிறது. உணவுத்துறை அமைச்சராக இருந்தவர்... நண்பனின் மனைவி மீது கை வைத்து விட்டார். அது சந்திக்கு வந்து அமைச்சர் பதவிக்கு சங்கு ஊதி விட்டது. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடியூரப்பாவும் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டம் வெடித்திருக்கிறது.

சாமியாருக்கு ஜோதிடம்... தீர்க்க தரிசனம் தெரிந்திருந்தால் நிச்சயமாக இன்று ஏற்பட்டிருக்கும் அவலத்தின் அஸ்திவாரம் உணரப்பட்டிருக்க வேண்டும். அப்படி தெரிந்திருக்கவில்லை என்றால் ஊருக்கு உபதேசம் செய்யும் ஊதுகுழாய் மட்டுமே அவர். வேறு விஷேச ஆற்றல் என்பது ஏமாற்று வேலை தான்.

அவருக்கு தெரியாவிட்டாலும் அவருக்கு நெருக்கமான ஜோதிடர்களுக்கு அவரின் நடப்பு மகா தசை, புத்தி, கோச்சாரம் போன்றவை தெரிந்திருக்கும். அல்லது இது மாரகாதிபதி தசையாக கூட இருக்கலாம். அப்படிப்பட்ட தசை, புத்தி நடக்கும்போதுதான் மரணத்திற்கு பதிலாக இதுமாதிரியான அசிங்கத்தை தசா நாதனோ புத்தி நாதனோ  கொடுப்பான்.

ஏன் இதை மாரகத்துக்கு சமமாக சொல்கிறேன் என்றால்... புகழின் உச்சியில் இருந்து மக்களால் போற்றப்பட்ட ஒருவன், அதே மக்களால் காரி உமிழ்ந்து தூற்றப்பட்டால் இறந்து போனவனுக்கு இணைதான். மேலும் இது மாதிரி அசிங்கம் மானமுள்ள ஒருவனுக்கு நடந்திருந்தால் அவன் என்ன செய்திருப்பான். நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்திருப்பான்.

தூக்குப் போட்டு சாகலாம். மருந்து குடித்து சாகலாம். மாடியில் இருந்து குதித்து சாகலாம். அது என்ன நாக்கைப் பிடுங்கிக் கொண்டு... இந்த நாக்கு பேசிய தத்துவத்துவம் வேறு.. நடந்து கொண்ட முறை வேறு என்பதால்.

இது நமது கண்ணுக்கு தெரிந்தது. கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ. எத்தனைதான் ஆன்மீக அறிவு இருந்தாலும் காவி வேட்டி நடத்தி கண்காட்சி நடத்தினாலும் கையை உயர்த்தி காலை தூக்கி ஆசீர்வாதம் செய்தாலும் இறைவன் முடிவு எடுத்து விட்டால் நித்தியானந்தா என்ன அவரை விட ஆயிரம் மடங்கு செல்வாக்கு மிக்க சுத்தியானந்தாவாக இருந்தாலும் சும்மா... சும்மா... தான்.