Monday, 29 April 2013

டத்தோ சரவணன் வெற்றி ஏற்கனவே எழுதப்பட்டது

மலேசிய கூட்டரசு பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன்.

பேராக் மாநில தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றார்.

இந்த முறை அதே தொகுதியில் போட்டி இடுகிறார். சிறந்த சேவையாளர். 

இனப்பாகுபாடு இல்லாமல் எல்லா மக்களிடமும் அணுக்கமான அன்பும் பாசமும் கொண்டவர்.

இவரின் ஜாதகமும் கிடைக்கவில்லை. ஆனால், இவரின் வெற்றி ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பு.

அரசியல் சேவை இவரின் வெற்றிக்கு வழி வகுத்தாலும் ஆன்மீக ஆற்றல் இவரின் எல்லா வெற்றிகளுக்கும் அடித்தளமாக இருக்கிறது.

இறைவனை இவர் தேடிப்போக வேண்டியதில்லை. இறையருள் இவரைத்தேடி வரும்.கலைமகள் இவர் நாவில் நடனமிடுகிறாள். அதனால், மற்றவர்களை வார்த்தையால் வசப்படுத்தும் வல்லமை இவருக்கு இயல்பாகவே அமைந்து
விட்டது.

எதிரியின் பலத்தில் பாதியை ஈர்க்கும் வல்லமை வாலிக்கு இருந்ததாக இதிகாசம் கூறுகிறது.

இந்திய அரசியல் வாதிகளில் எம் ஜி ஆருக்கு அந்தப்பலம் அளவற்று இருந்ததாக அவரின் ஆஸ்தான ஜோதிடர், ஜோதிட பூஷன், ஜோதிட சாம்ராட் வித்வான் லெட்சுமணன் அவர்கள் கூறுவார்கள்.

அந்தப் பலம் டத்தோ சரவணனுக்கு அமைந்திருக்கிற அம்சத்தை பல கட்டங்களில் காண முடிகிறது.

இவை அனைத்தும் டத்தோ சரவணன் அவர்களின் அரசியல் வெற்றிக்கு அனுசரணையாக உள்ளன.

இந்த வெற்றி மட்டுமல்ல... இன்னும் பல உச்ச பதவிகளை அடையும் பாக்கியத்தை இவரின் சாமுத்திரிகா லட்சண யோகம் அளிக்கிறது.

மீண்டும் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்

மலேசியாவில் மே 5-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறப் போகிறது. 

2007-ஆம் ஆண்டு ஹின்ட்ராப் என்ற இந்தியர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய எழுச்சியை மக்களிடையே ஏற்படுத்தியது.

அப்போது துன் அப்துல்லா படாவி பிரதமராக இருந்தார். அடுத்து 2008- ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி பெரிய சரிவைச் சந்தித்தது.

அடுத்து டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக பதவி ஏற்றார். அதன் பின்னர் இந்திய சமுதாய்த்தின் ஆதரவைப் பெறுவதற்காக பல திட்டங்களை கொன்டு வந்தார்.

இருப்பினும் இந்தமுறை வெற்றி வாய்ப்பு ஆளும் கட்சிக்கா... எதிர்க்கட்சிக்கா என்பது இழுபறியாகவே இருக்கிறது. கருத்துக் கணிப்புகள் கண்ணாமூச்சி 
காட்டுகின்றன.நஜீப் அவர்களின் பிறந்த நேரம் தெரியாததால் ஜாதகம் கணிக்க முடியவில்லை. ஆயினும் அவரின் சில அம்சங்களை வைத்துப் பார்க்கும் போது மீண்டும் அவரே ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

எதிர்க்கட்சிகள்தான் வெற்றி பெறும் என்று பரவலாக பேசப்பட்டாலும் அதற்கான வாய்ப்பு குறைவு.

நஜிப் என்ற தனிமனிதரின் அம்சம் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமர வழி வகுக்கும் என்பது காலத்தின் கட்டாயம்

Saturday, 13 April 2013

வெற்றித் திருமகன் டத்தோஶ்ரீ பழனிவேலு

ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ பழனிவேலு. மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார்.

கடந்த முறை உலுசிலாங்கூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்.

ஆர்ப்பாட்டமில்லாத அரசியல்வாதி. ஆனால், பேசுவது குறைவு. சேவை அதிகம்.

புத்தகத்தின் அட்டையைப் பார்த்து உள்ளே இருப்பதை எடை போடாதே... என்ற  பழமொழி உண்டு.

இவரின் அமைதியைப் பார்த்து ஆற்றலைக் குறைவாக மதிப்பிடுபவர்கள், கண்டிப்பாக ஏமாந்து போவார்கள்.இவரின் பிறந்த நேரம் தெரியாது. ஆகையால் முறையான ஜாதகத்தைக் கணிக்க இயலவில்லை.

இருப்பினும் இவரின் சில அம்சங்களை வைத்து அலசிப் பார்த்தேன். அந்த வகையில் இவரின் பதவி யோகத்தை இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

கட்சிச் தலைவருக்கு விசுவாசமாக இருந்தவர். கிடைத்த பொறுப்புக்களைக் கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொண்டவர்.

கட்சித் தலைமைப் பதவி கஷ்டம் தராமல் இவரைத் தேடி வந்தது.

 கட்சிப் பதவிக்கு கடும் போட்டியாக இருப்பார் எனக் கருதிய செல்வாக்கு மிக்க  தலைவர் ஒருவரை இயங்க விடாமல் காலம் கட்டிப் போட்டு விட்டது.

இது இவரின் அரசியல் வெற்றிப் பாதைக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தது.

உலுசிலாங்கூர் தொகுதியில் இவருக்கு தோல்வியைத் தந்த மாற்றுக் கட்சி உறுப்பினர் துரதிஷ்டவசமாக இயற்கை எய்தினார்.

அதன் காரணமாக நடந்த இடைத்தேர்தலில் இந்தத் தொகுதி மீண்டும் ம.இ.கா. வசம் ஆனது.  இது மீட்சி யோக அமைப்பாகும்.

இவரின் மூக்கு அமைப்பும் தீட்சண்யம் மிக்க திருஷ்டியும் உச்ச பதவியில் உட்காருகின்ற அம்சத்தை அளிக்கிறது.

எதிர்க்கட்சியினரின் எழுச்சி இவரைக் கண்டிப்பாக வீழ்த்தி விடும் என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

அந்தக் கணக்கை காலம் மாற்றப் போகிறது. இவருக்கு வெற்றியைக் காணிக்கையாக தரப் போகிறது.

டத்தோஶ்ரீ பழனிவேலு, உலுசிலாங்கூர் தொகுதியை ஒதுக்கி விட்டு வேறு தொகுதிக்கு செல்வார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

எந்தத் தொகுதியாக இருந்தாலும் இவரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

வாக்கு வித்தியாசங்கள் அதிகமா... குறைவா... என்பது குறித்து எனக்கு தெரியாது.

ஆனால், இவரின் வெற்றி மட்டும் நிச்சயமானது என்பது என் கணிப்பு.

என் கணிப்பு என்று சொல்வதை விட காலத்தின் தீர்ப்பு என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் என் ஆத்மார்த்த நண்பரும் மிகச் சிறந்த ஊடகவியளாருமான ஒருவரிடம் டத்தோஶ்ரீ பழனி குறித்து பேசிக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னர்
இந்தக் கணிப்பை எழுதினேன்.


Tuesday, 2 April 2013

கலைஞர் கருணாநிதிக்கு இது போதாத காலம்

கலைஞர் கருணா நிதிக்கு இது போதாத காலம். வீட்டுக்குள்ளேயே வெட்டுக் குத்து. அழகிரி ஒரு பக்கம். ஸ்டாலின் ஒரு பக்கம். கனிமொழி இன்னொரு பக்கம்.

இலங்கை பிரச்சினையைக் காட்டி காங்கிரசுக்கு கல்தா கொடுத்தாகி விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது கலைஞருக்கே தெரியாது.

குடும்பத்தில் நடக்கும் குத்து வெட்டுக்கு முடிவு கட்டுவது எப்படி என தெரியாமல் முழிப்பதும் வெட்ட வெளிச்சம்.

இந்த நேரத்தில் கலைஞருக்கு சாதகமாக ஜாதகம் பலன் இருக்கிறதா என்று பார்த்தால் கணிப்பு என்னவோ பாதகமாகத்தான் தெரிகிறது.

ரிஷப ராசி கலைஞருக்கு. ஆறாம் இடத்தில் சனி. இது சாதகமாக இருந்தாலும் இது வரை கலைஞருக்கு கை கொடுத்து வந்த குரு பகவான் முகத்தைத் திருப்பிக் கொண்டு முறுக்கி நிற்கிறார்.அடுத்த மாதத்தில் இருந்து இந்த முறுக்கலின் இறுக்கம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் பன்னிரண்டாம் இடத்துக் குரு கண்ணிரண்டில் விரலை விட்டு ஆட்டாமல் போக மாட்டார்.

ஆகவே நிதானமாக அடி எடுத்து வைக்கா விட்டால் நிச்சயம் அதன் பலனை அனுபவிக்காமல் கலைஞரால் தப்பி முடியாது