Saturday, 5 October 2013

கணவன் - மனைவி பிரச்சினையைத் தீர்க்கும் காளகஸ்தி

வாழ்க்கை என்பது கைக்குள் இருக்கும் பட்டாம் பூச்சி மாதிரி. திறந்து விட்டால் பறந்து விடும். இறுக்கிப் பிடித்தால் இறந்து விடும்.

இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் இல்லறப் பயணம் இடையூறு இல்லாமல்  தொடரும். இல்லையென்றால் கரடு முரடான கற்பாறைகளில் இடரும்.பெரும்பானவர்களின் வாழ்க்கையில் தோன்றும் பிரச்சினைகளுக்கு மூல காரணம் பிடிவாதம்(ஈகோ).

"ஒரு குடுவையில் இருந்த பொரியை அள்ள அதற்குள் கையை விட்டதாம் ஒரு குரங்கு. வேண்டிய மட்டும் அள்ளிக் கொண்டு கையை வெளியே எடுக்க முயற்சி செய்ததாம்.

குடுவையின் வாய் சிறியதாக இருந்ததால் கையை வெளியே எடுக்க முடியவில்லை. 

பொரியை விட்டு விட்டால் வெறுங்கையை வெளியே எடுத்து விடலாம் என அனுபவசாலியான கிழட்டுக் குரங்கு ஒன்று ஆலோசனை சொன்னதாம்ஆனால், அந்த முட்டாள் குரங்குக்கு பொரியை விட மனசில்லை.

ஒரு நாள்... இரண்டு நாள்.. மூன்று நாள்... என குடுவையோடு சுற்றிய குரங்கு இறுதியாக பட்டினியால் இறந்து விட்டதாம்"

இப்படித்தான் பலர் பிடிவாதம் என்ற பேயோடு கூட்டணி அமைத்துக் கொண்டு வாழ்க்கையை குட்டிச் சுவராக்கி விடுகிறார்கள்.சிலர் ஒரு கட்டத்தில் பிடிவாதத்தை உதறி விட்டு பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருகிறார்கள். பலர் அதற்குள்ளேயே சிக்கி மாண்டு போகிறார்கள்.

சுரேஷ்..... இவர் மேலாண்மைக் கல்வி கற்ற பட்டதாரி. நல்ல வேலை.. கை நிறைய சம்பளம். 

சுகுணா.. இவர் பொறியியல் பட்டதாரி. படபடப்பான பேச்சுக்காரர். அன்பு செலுத்துவதில் வஞ்சனை இல்லாதவர்.

இருவருக்கும் திருமணமாகி இரு ஆண்பிள்ளைகள். பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில் விரிசல் விழுந்ததைப் போல் இவர்கள் இல்லற வாழ்க்கையில் பிரச்சினை பிடில் வாசிக்கத் தொடங்கியது.

விரிசல் வளர்ந்து விலகல் வரை நீண்டு விட்டது. இனி இணைந்து வாழ்வது கானல் நீரில் கட்டுமரம் ஓட்டுவது மாதிரி என்ற நிலை உருவாகி விட்டது.

படித்தவர்களுக்கு அறிவுரை சொல்லி புரிய வைப்பது என்பது உப்பை உரமாக போட்டு தர்ப்பைப் புல் வளர்ப்பது போல.

இருவரும் பிரிந்து விடுவார்களோ என உறவுகளும் நட்புகளும் கையைப் பிசைந்து கொண்டு நின்ற போது....

கறந்த பால் மீண்டும் மடி புகுந்தது போல.... கருவாடு மீண்டும் மீனாக மாறியது போல... தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதி மறக்காமல் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வந்தது போல இவர்கள் வாழ்க்கையிலும் அதிசயம் நடந்தது.

பிரிவின் எல்லைக்கு போனவர்கள்..அறிவின் துணைகொண்டு அன்பின் அரவணைப்பில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் ஏன் இந்தப் புயல்... பின்னர் ஏன் வசந்தத்தின் வரவேற்புரை...

இருவரின் ஜாதகமும் என் பார்வைக்கு வந்தது. சுகுணாவிற்கு லக்னம் துலாம். ராசி ரிஷபம். நட்சத்திரம் மிருகசீரிடம்-1 ஆம் பாதம்.

லக்கனாதிபதியும் ராசியாதிபதியும் ஒருவரே.. லக்கனத்தில் சுக்கிரன் ஆட்சி. சந்திரன் உச்சம். இருந்தாலும் இருக்கும் இடம் அஷ்டமம்.

குரு ஒன்பதில்.. புதன் மூன்றில்... இருவரும் பரிவர்த்தனை.. மேலும் சந்திரனில் இருந்து புதன் வரை எல்லாக் கட்டங்களிலும் கிரகங்கள். கேது மட்டும் ஆறில் தனித்து.

இது ஒரு வகையில் கிரக மாலிகா யோகத்தை கொடுக்கக் கூடியது. செல்வம்... செல்வாக்கு... பணம் வசதி இவற்றுக்கு பஞ்சம் இல்லை.

ஆனால், வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் சூரியன் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேச வைப்பார். தான் ஓட்டும் காருக்கு ஏழு சக்கரம் என ஏட்டிக்கு போட்டியாக சொல்ல வைப்பார்.

தான் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற இறுமாப்பு இவர் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும்.

அன்புக்கு அடிமை.. பணிந்து கேட்டால் குனிந்து நின்று படிக்கட்டாக மாறுவார். அதிர்ந்து கேட்டால் நெருப்பில் போட்ட வெடிக்கட்டாக சீறுவார்.

பணம் இவருக்கு துச்சம். கலை இலக்கியத்தில் இவரின் ஆசை உச்சம். கணவர் தன்னை புரிந்து கொண்டு நடத்த வேண்டும் என்பது இவரின் ஏக்கம். பல நேரங்களில் இவர் செயல்களில் வெளிப்படும் அதன் தாக்கம்.

சுரேஷின் லக்கனம் மிதுனம். ராசி மேஷம். நட்சத்திரம் பரணி-4 ஆம் பாதம். லக்கனத்தில் சூரியன், சனி, கேது சேர்க்கை. 

ஏழில் ராகு. மேலே குறிப்பிட்ட மூவரின் திருஷ்டி வேறு. எட்டில் குரு நீச்சம். நாலில் மாந்தி.

செவ்வாய் பத்தில்... சந்திரன் பதினொன்றில். வாக்குஸ்தானத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை. 

அதுவே குடும்பஸ்தானமும் என்பதால் செல்வம், கல்வி அமைப்புடைய மனைவி வாய்த்தார்.

திருமணத்திற்கு பின்னர் இவர் வாழ்க்கையில் முன்னேற்றம் முகம் காட்டி இருக்கும்.

லக்கனத்தில் பாவ கிரகங்கள் நின்று களத்திர ஸ்தானத்தை பார்ப்பது குடும்ப வாழ்க்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்தியது.

சுகஸ்தானமான நாலாமிடத்தில் மாந்தி நிற்பது இல்லற சுகத்திற்கு இடையூறை ஏற்படுத்தியது.

களத்திர ஸ்தானதிபதியான குரு எட்டில் மறைவு... மேலும் களத்திர ஸ்தானத்தில் ராகு..

ஆக இவை அனைத்தும் கணவன் மனைவியின் கண்களில் விரலை விட்டு ஆட்டி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே பாரதப் போரை உருவாக்கி விட்டது.

கடந்த காலத்தில் தசா புத்தி பலன்கள் கடுமையாக இருந்தன. கோச்சார பலன்களும் கோளாறாக அமைந்தன.

இப்போது இருவருக்கும் குரு பலம் இல்லாவிட்டாலும் கொடுமை குறைந்து இனிமை பூக்கத் தொடங்கி இருக்கிறது.

 எட்டில் மறைந்த குரு நீச்சமாகி போனது பட்டுப் போகவிருந்த இல்லறச் செடி மொட்டுவிட காரணமாக அமைந்தது.

தசவித பொருத்தங்களில் வசியம் இல்லாதது ஒரு குறை. இருப்பினும் எட்டுப் பொருத்தங்கள் இசைந்து வந்தது சிறப்பு. 

இதைப் பக்குவமாக பாதுகாக்க வேண்டியது கணவன் மனைவி இருவரின் கடமையாகும். 

வாழ்க்கையில் கோளாறு செய்த கிரகங்களின் மனம் குளிரும்படி பரிகாரம் செய்து விட்டால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு அணை போட்டு விடலாம்.

காளகஸ்தி திருத்தலத்திற்கு இருவரும் சென்று நாக சாந்தி செய்து கொள்ள வேண்டும்.காளகஸ்திக்கு செல்லும் போது வேறு கோவில்களுக்கு போகக்கூடாது. வீட்டிற்கு திரும்பி விட வேண்டும்.

வார வாரம் சனிக்கிழமைகளில் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும். பக்கத்தில் உள்ள ஆலயத்துக்கு சென்று ராகு.. கேது.. ச்ர்ப்பக் கிரகங்களை வழிபட வேண்டும்.தொடர்ந்து 48 வாரங்கள் செய்தால் பூரண பலன் கிடைக்கும். வேண்டாத விருந்தினரை வீட்டிற்கு சாப்பிட அழைப்பதைப் போல் அல்லாமல் ஆத்ம திருப்தியோடு வழிபாடு செய்ய வேண்டும்.

ஆஸ்துமா... சைனஸ் பிரச்சினைகள் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுகுணா.. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சொந்தமாக தொழில் செய்யாமல் இருப்பது நல்லது.

யாரையாவது முன்னிறுத்தி பின்னால் இருந்து இயங்கலாம். இயக்கலாம். ஆனால் நிதானப் போக்கு மிகவும் முக்கியம்.

விட்டுக் கொடுத்து வாழ்வது சிறப்பு. ஆனால் பல வீடுகளில் யார் முதலில் விட்டுக் கொடுப்பது என்பதில் பிரச்சினை வெடித்து பிரிவினைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

கடந்த காலத்தையோ.... இழந்த இன்பத்தையோ.... திரும்ப பெற இயலாது. இதைக் கருத்தில் கொண்டு கணவன் - மனைவி இருவரும் வாழ்க்கைச் சோலையில் வசந்தத்தை காண வேண்டும்.

இறைவன் அருளால் இனி வரும் காலங்கள் இளமை மாறாத இனிப்புடன் திகழ வாழ்த்துகிறேன்.

Tuesday, 1 October 2013

பிடிவாதத்தால் பிரிந்த தம்பதிகள்.....!
அப்பா மருத்துவர். அம்மா மருத்துவர். அக்காவும் குழந்தை நல மருத்துவர். ஆனால் ஆண்பிள்ளையான இவருக்கு படிப்பு ஏறவில்லை.

கொஞ்சம் பிடிவாதக்காரர். சுயநல சிந்தனை சற்று தூக்கலாக இருக்கும். அம்மா செல்லம் அதிகம் என்பதால் இவர் இப்படி வளர்ந்து விட்டார் என்பது உறவினர்களின் குற்றச்சாட்டு.

இவரின் சகோதரிக்கு 30 வயதுவரை திருமணமாகவில்லை. நல்ல அழகு இருந்தும் வசதி இருந்தும் ஏனோ தள்ளிக் கொண்டேபோனது.என்னை சிரம்பானில் உள்ள இவரின் வீட்டுக்கு அழைத்திருந்தார்கள். சென்று ஜாதகத்தை பார்த்தேன்.

திருமண வகையில் சில குறைகள் இருந்தன. தோஷ நிவர்த்தி செய்யும் படி ஆலோசனைகூறினேன்.

என்னையே செய்யச் சொன்னார்கள். பெரும்பாலும் தொழில் ரீதியாக நான் இதைச் செய்வதில்லை.

மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கணபதி ஹோமம் தோஷ சாந்தி போன்றவற்றை செய்வேன்.

முறைப்படி சர்ப்பதோஷ சாந்தி பூஜைகளை அவர்கள் வீட்டில் அந்தப் பெண்ணுக்கு செய்தேன்.

என்னவோ தெரியவில்லை. என் மீது அந்தப் பெண்ணுக்கும் அவரின் பெற்றோருக்கும் அலாதி நம்பிக்கை.

ஆறு மாத காலத்தில் டாக்டர் மணமகனே அமைந்தார். நான் சிறப்பு விருந்தினராக அந்த கல்யாணத்தில் கலந்து கொண்டேன். இவருக்கு இப்போது இரண்டு ஆண்குழந்தைகள்.

பின்னர் அவளின் சகோதரர் என்னை சந்தித்து ஜாதகத்தை கொடுத்து பலன் கேட்டார்.

திருமணம் எப்போது நடைபெறும் என்று வினவினார். இப்போது வேண்டாம். நான்கு ஆண்டுகள் கழியட்டும்.

அவசரப்பட்டு கல்யாணம் செய்தால் பிரச்சினையில் முடிய வாய்ப்பு இருக்கிறது எனக் கூறினேன்.

தாம் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் இந்த ஆண்டே திருமணத்தை முடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

மேலும் திருமணத்தில் தடை இல்லை என்று தகப்பனாரிடம் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நான் திட்டவட்டமாக மறுத்து விட்டேன். பெண்ணின் ஜாதகத்தை பார்க்க முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டேன்.

இது அவரின் பெற்றோருக்கும் தெரியும். ஆனால், வீம்பாக நின்று அந்தப் பெண்ணையே கரம்பிடித்து விட்டார்.

கடந்த வாரம் ஒரு திருமண விருந்து 5 நட்சத்திர விடுதியில் நடந்தது. அங்கு அவர் மனைவியுடன் வந்திருந்தார்.

விருந்து முடிந்த பின்னர் என்னை தனியாக சந்தித்த அவர், மனைவியைப் பிடிக்கவில்லை என்றும் அவரோடு உறவு வைத்துக் கொள்ள இயலவில்லை என்றும் சொன்னார்.

இனிமேல் சேர்ந்து வாழ்வது இயலாத காரியம். விவாகரத்து செய்து விடலாம் என நினைக்கிறேன். தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என என்னிடம் கேட்டார்.

மேஷ லக்கனம். கும்ப ராசி. ஐந்தில் ராகு. பதினொன்றில் கேது. மற்ற ஏழு கிரகங்களும் பாம்புகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாகி கிடந்தன.

பதினொன்றில் குரு இருந்தால் அது ஆன்மீக ஜாதகம். குடும்பம் அமையாது. அமைந்தாலும் குழந்தைப் பாக்கியம் கிடைப்பது அரிது.

ஆன்மீக குருவான அரவிந்தரில் இருந்து தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த எம்ஜிஆர் வரை பலரை உதாரணம் சொல்லலாம்.

பிடிவாதம் என்பது விலக்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சிக்கலை உண்டு பண்ணி விடும் என்பதற்கு இவரின் வாழ்க்கை ஒரு எடுத்துக் காட்டு.கணவனை கட்டையால் அடித்த மனைவி


காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல. ஏழு வருடங்களுக்கு முன்னர் இதயத்தை இடமாற்றிக் கொண்டவர்கள்.

திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. ஒரு வயதில் அழகான ஆண் குழந்தை. இரண்டு வருடங்களுக்குள் இல்லறம் கசந்துவிட்டது.

ஒரே வீட்டுக்குள் எலியும் பூனையுமாக வாழ ஆரம்பித்தார்கள். எதற்கு எடுத்தாலும் சண்டை. ஏட்டிக்கு போட்டியான பேச்சு. வீடு நரகமாக மாறி விட்டது.

அந்தப் பையன் என்னிடம் ஆலோசனை கேட்டு வந்தார். இரண்டு பேரின் ஜாதகத்தையும் பார்த்தேன். பெண்ணுக்கு எட்டில் சனி. பையனுக்கு இரண்டில் ராகு எட்டில் கேது.

பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை. காளசர்ப்ப தோஷம் வேறு. பொருத்தத்தில் கணப்பொருத்தமும் வசியமும் இல்லை.

காதல் என்பதால் முதலில் அவர்கள் ஜாதகப் பொருத்தத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. வாழ்க்கை கசக்க ஆரம்பித்தபின்னர்தான் ஜாதகம் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்து போன காலத்தையும் நடந்து போன சம்பவத்தையும் நினைத்து கவலைப்பட்டு லாபம் இல்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்தான் எதிர்காலம் பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்று அறிவுரை சொன்னேன்.

ஆனால் அவர்கள் சண்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் உச்சகட்டத்தை அடைந்து விட்டது. இருவரும் இரவு ஒரு சாப்பாட்டுக் கடைக்கு சாப்பிட போயிருக்கிறார்கள்.வாய் வார்த்தை வசமிழந்து சண்டைக்கு அடிகோலியது. பிரச்சினை பெரிதாக கீழே கிடந்த கட்டையை எடுத்து கணவன் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டாள்.

கணவனுக்கு மொட்டைத்தலை. ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவர்கள் பதைபதைத்து விக்கித்து நின்றனர்.

நிலைமையின் தாக்கத்தைப் புரிந்து கொண்ட பையன் உடனே காவல்நிலையத்துக்கு சென்று மனைவியிடம் இருந்து தன்னை காப்பாற்றும்படி புகார் கொடுத்து விட்டான்.

காவல் அதிகாரி இரண்டு வீட்டினருக்கும் தகவல் அனுப்பினர். பெற்றோர்கள் வந்து இருவரையும் பிரித்து அவரவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

விவாகரத்து ஒன்றுதான் விடுதலை எனக் கருதி கணவன் வழக்கறிஞரின் உதவியை நாடி இருக்கிறான்.

சாந்தி செய்யப்படாத காளசர்ப்ப தோஷம், சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் நிற்பது, மேலும் செவ்வாய் சேர்க்கை இவை அனைத்தும் அந்தப் பெண்ணின் குடும்ப வாழ்க்கை குந்தகத்தை ஏற்படுத்தி விட்டது.

மாங்கல்ய ஸ்தானத்தில் சனீஸ்வரன் இருப்பதும் பெரிய பாதிப்பாக அமைந்து விட்டது.

பையனுக்கு ராகு கேது இருக்கும் இடம் வாழ்க்கைப் பயணத்தில் சிக்கல் சிரமங்களுக்கு வழி கோலி விட்டது.

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். பல நேரங்களில் ஜாதக கோளாறுகளால் காதல் வாழ்க்கை மோதல் வாழ்க்கையாக மாறி எதிர்காலத்தை சூன்யமாக்கி விடும் என்பதை ஏனோ பலர் உணர மறுக்கிறார்கள்.