Tuesday, 30 December 2014

வேலைக்கு லஞ்சம்... ஜாதகம் என்ன சொல்கிறது

"சார் லஞ்சம் கொடுத்தால் எனக்கு வேலை கிடைக்குமா..." 10 நாட்களுக்கு முன்னர் என் மின்னஞ்சல் முகவரிக்கு அன்பர் ஒருவர் இந்தக் கேள்வியை அனுப்பி இருந்தார்.

மேலும் அவருடைய பிறந்த தேதியையும் நேரத்தையும் அனுப்பி இருந்தார். அவரைப்பற்றிய சுயவிளக்க குறிப்பு ஒன்றையும் இணைத்திருந்தார்.

வசதி வாய்ப்புக் குறைவான குடும்பம். ஏழு பெண்பிள்ளைகளுக்கு பின்னர் எட்டாவதாக எட்டிப் பிடிக்கப்பட்டவர். பொருளாதாரச் சிரமங்களுக்கு இடையே பி.காம். வரை படித்திருக்கிறார். ஒரு கால் சற்று ஊனமாம்.

போக்குவரத்துத் துறையில் இளநிலை உதவியாளர் பதவிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார். வேலையின் தன்மை.. அதற்கு உரிய ஊதியம் என்ன என்பது அவருக்குத் தெரியவில்லை.ஆனால், லஞ்சம் கொடுத்தால்தான் வேலையில் சேர முடியுமாம்.

அவருடைய உறவினர் ஒருவர் அரசியலில் செல்வாக்கு மிக்கவராம். அந்தத் துறை அமைச்சரிடம் பணம் கொடுத்தால் பதவி நிச்சயம் என்று உறுதி சொல்லி அதற்கான தொகையைத் தயார் செய்யும்படி கூறியிருக்கிறார்.

ஏறக்குறைய 6 லட்சம் ரூபாய் அதற்கான கையூட்டுத் தொகை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு மேல் விவரம் கூறவில்லை.

ஏனென்றால் குற்றவாளிகளை விட குற்றம் சாட்டுகின்றவர்கள்தான் இந்தியாவில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மான நஷ்ட வழக்குப் போட்டு மண்டைக்கு மணி அடித்து விடுவார்கள் என எழுதி இருந்தார்.

அவருடைய கிரக நிலைகளை ஆராய்ந்தேன். அவருக்கு அரசு வேலை கிடைப்பதற்கான அம்சங்கள் மிகக் குறைவாகவே இருந்தது.

ஆனால், அதை குறிப்பிட்டு அவரின் அரசு வேலை நம்பிக்கையைக் குலைக்க விரும்பவில்லை. வேலையின் தன்மை என்ன சம்பளம் எவ்வளவு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு என்னை அழைக்கும்படி தொலைபேசி எண்ணைக் கொடுத்தேன்.

மலேசிய எண் என்பதால் வெறும் அழைப்பு மட்டும் விடுத்தால் போதும். நான் பேசுகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

நேற்று என்னை அழைத்தார். நான் பேசினேன். அப்போது அவர் கூறிய விபரங்கள் என்னை ஆச்சரியத்தில் மட்டுமல்ல... அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

இளநிலை உதவியாளர் என்றால் அலுவலகத்தில் எழுத்தர் பணி. இதற்கு உரிய ஆரம்பநிலை ஊதியம் 7000 இந்திய ரூபாயாம். மேலும் ஒப்பந்த அடிப்படையில்தான் பணி நியமனம் கிடைக்குமாம்.

ஆகவே, மிகப்பெரிய தொகையை லஞ்சமாகக் கொடுத்து பணியில் சேர விரும்பவில்லை. வேறு என்ன செய்யலாம் என கேட்டிருந்தார்.

ஆக, 6 லட்சம் ரூபாய் கடனாகவும் உதவியாகவும் தயார் செய்யக்கூடிய தரத்தில் அவர் இருப்பதை நான் உணர்ந்தேன். அதனால், அவருக்கு மாற்று ஆலோசனை ஒன்றைத் தெரிவித்தேன்.

அவருடைய ஜாதகத்தில் பூமிகாரகனான செவ்வாயும் இரும்புக்குப் பிரியமானவனான சனியும் சற்று சாதகமாக இருக்கிறார்கள்.

ஆகவே, லஞ்சம் கொடுத்து இரும்பு சம்பந்தமான வேலையில் சேர்வதை விட அதே தொகையை வைத்து இரும்பு, மின்சாதனப் பொருட்கள் விற்கும் சின்னக் கடையைத் திறக்குமாறு கூறினேன். அப்படிச் செய்தால் மூன்று ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றும் கிடைக்கும். இது உறுதி என அவருக்கு ஊக்கம் கொடுத்தேன்.

ஏற்கனவே அவருக்கு மின்சாதனப் பொருட்கள் விற்பதில் அனுபவம் இருப்பதாக தெரிவித்தார். சுமார் 5 ஆண்டுகள் ஒரு கடையில் வேலை பார்த்திருக்கிறார்.

என்னுடைய ஆலோசனைப்படி நடப்பதாகத் தெரிவித்தார். தை மாதத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து கடைக்கு முன்பணம் கொடுக்க ஆவன செய்வதாகச் சொன்னார்.

அவர் பேச்சில் இருந்த நம்பிக்கை அவருக்கு கண்டிப்பாக வெற்றியைக் கொடுக்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல... தீர்க்கதரிசனமான கணிப்பும் கூட.

6 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்து அடிமை வேலை பார்ப்பதை விட அதே தொகைக்கு முதலாளியாக உயர்ந்து மற்றவர்களிடம் வேலை வாங்குவது சாலச் சிறந்தது அல்லவா..


Sunday, 28 December 2014

அமைச்சர்கள் செய்யும் யாகங்கள்... பலன் தருமா பரிகாரம்...?

தமிழக முதலமைச்சராக இருந்து மக்களின் முதல்வராக மாறி விட்ட ஜெயலலிதா வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்று அமைச்சர்கள் அத்தனை பேரும் ஆலயங்களில் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள்.

தினம் ஒரு பூஜை, நாளுக்கொரு யாகம் என்று ஆண்டவனைத் தூங்க விடாமல் திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆளாளுக்குச் செய்கின்ற யாகங்கள் பலிக்குமா... பலன் தருமா... என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய மிகப் பெரிய கேள்வியாகும்.

கடந்த காலங்களில் ஜெயலலிதா செய்யாத யாகங்களையா இப்போது அமைச்சர்கள் செய்து விடப் போகிறார்கள். ஜெயலலிதா செய்து செல்லாமல் போன பூஜைகள் அமைச்சர்கள் செய்தா பலிதமாகப் போகிறது.

ஒருவருக்கு வயிற்று வலி வந்து விட்டது. அதற்காக மருத்துவரைப் பார்க்க வேண்டும். வசதி இருக்கிறது என்பதற்காக ஒரே நாளில் பல மருத்துவர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டால் என்னவாகும்.

ஒரு நாளைக்கு முன்று வேளைக்கு ஒவ்வொரு மாத்திரை என்று மருத்துவர் ஒரு வாரத்த்திற்கு மருந்து எழுதிக் கொடுக்கிறார்.

பட்டம் பதவியில் இருக்கிறோம் என்பதற்காக ஒரு வாரத்து மாத்திரைகளை ஒரே நாளில் வாய்க்குள் போட்டு விழுங்கி வயிற்றுக்குள் தள்ளினால் என்னவாகும்.

அந்தக் கதையாக இருக்கிறது இப்போது தமிழக அமைச்சர்கள் செய்யும் அலப்பறை யாகங்கள். கோவில்களில் நடத்தும் வழிபாட்டுக் கூத்துகள்.

வழக்கில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்பதை விட ஒரு வேளை வெற்றி கிடைத்தால் அது தாங்கள் நடத்திய யாகங்களால்தான் என்று பறை சாற்றிக் கொள்ளும் மனப்போக்கே மந்திரிமார்களின் செயல்பாடுகளில் தெரிகிறது.

அது சரி, இந்த யாகங்கள் பலன் தருமா... இவற்றை  வழி நடத்துகின்ற வேத விற்பன்னர்கள் அமைச்சர்களுக்கு விவரம் சொல்ல மாட்டார்களா...?

அது இயலாத காரியம். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஆலோசனை சொல்வதும் ஆட்டு உரலுக்குள் தலையைக் கொடுப்பதும் ஒன்றுதான்.

ஒரு முறை ஒரு கோவில் குருக்கள் சொன்னது என் காதில் இன்னும் ஒலிக்கிறது. கட்சித் தலைவர் ஒருவர் கோவிலுக்கு வந்தார். நடை சாத்திய பின்னர் கோவிலைத் திறக்கச் சொன்னார்.

அப்படிச் செய்வது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்று சொல்வார்கள். ஆனால், குருக்கள் எதுவும் பேசாமல் கருவறைக் கதவைத் திறந்து அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டினார்.

தலைவர் போன பின்னர் குருக்களிடம் இது குறித்துக் கேட்டேன். "என்ன செய்யச் சொல்றேள்.. நாம ஏதாச்சும் சொன்னா.. கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவன்... பெரியவாள்ன்னு பாக்காம அடிப்பன். பொசுக்குனு பூணூலை அப்பன். எதுக்குண்ணா வம்பு...ஆண்டவா பாத்துக்குவா..." என்று சொன்னார்.

இறைவன் அவரவர் பூர்வ ஜென்ம பலாபலன்களுக்குத் தகுந்த மாதிரி பட்டம் பதவி பணவசதிகளைக் கொடுத்து இருக்கிறார்.

ஜாதக தெசாபுத்தி கோச்சார பலன்களுக்கு ஏற்றவாறு இன்ப துன்பங்களை வாரி வழங்குகிறார். நவக்கிரகங்கள் மூலமாக நிறைவேற்றுகிறார்.

எந்தக் கிரகம் துன்பத்திற்கு தூபம் போடப் போகிறதோ.. அதன் கோபத்தைக் குறைக்க கெஞ்சுகிறோம். வேண்டுகிறோம்.

செய்த குற்றத்திற்கு இரக்கப்பட்ட நீதிபதி அதிக பட்ச தண்டனை அளிக்காமல் குறைந்த பட்ச தண்டனை கொடுப்பது போல நம் இறைஞ்சுதலுக்கு ஏற்ப இறைவனின் ஆஞ்ஞைப்படி கிரகங்கள் பாதிப்புகளைப் பாதியாகக் குறைத்துக் கொள்வதைக் கண்கூடாகக் பார்த்திருக்கிறோம்.

ஆனால், மக்கள் முதல்வருக்காக அமைச்சர்கள் செய்கின்ற யாகங்களில் ஆழமான பக்தி இருப்பதை விட ஆடம்பரமான செய்கைகளே முதலிடம்  பிடிப்பதாகத் தெரிகிறது.

ஆகவே, இவை உரிய பலனைத் தருமா என்பது சந்தேகமே.... ஜெயலலிதா அவர்களின் ஜாதகம் மிகச் சிறப்பானது. சத்ரு சம்கார ஜாதகமும் கூட...

அதனால் ஏற்படும் வெற்றிக்கு தங்கள் யாகங்களும் வழிபாடுகளும் ஒரு காரணம் என்பதைக் காட்டிக் கொள்ளும் செயல்பாடுகள் பலனைவிட பாதிப்பைத் தான் அதிகமாக்கும்.

Saturday, 27 December 2014

நிம்மதியைக் கெடுக்கும் ஏழரைச் சனி

பணம் பதவி வசதி வாய்ப்புகள் இருந்தாலும் ஏழரையாண்டு சனி காலத்தில் மன நிம்மதிக்கு வேட்டு வைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் சனி பகவான்.

மன அமைதிக்கு ஊறு விளைவிப்பது சனிபகவானுக்கு மல்கோவா மாம்பலம் சாப்பிடுவது மாதிரி. பாதிக்கப்படுகின்றவர்கள் படும் துயரத்தை கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதைப் போல கண்டு ரசிப்பார்.அவரை என்ன எதிர்த்துக் கேட்கவா முடியும்.

முதலமைச்சரே முட்டிக்கு முட்டி தட்டி பெண்டு எடுக்கும்போது சாதாரண
தொண்டனால் தடுக்க முடியுமா?

தமிழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். தற்போது சிங்கப்பூர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.

ஆரம்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்ட குடும்பம். அவருடைய தாயாரும் தந்தையாரும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள்.

ஐந்து பிள்ளைகள் இருந்தாலும் இந்தப் பிள்ளைமீது தாயாருக்கு தனிப்பிரியம். இவர் படிப்புக்கு அவர் செய்த தியாகங்கள் ஏராளம்.

சில நாட்களுக்கு முன்னர் இவருடைய தாயார் கீழே விழுந்து இடுப்பு எலும்பில் விரிசல் ஏற்பட்டு விட்டது. மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சைசெய்தார்கள்.

வயது 82. இதுவரை நோய் நொடி என்று  பாயில் படுத்து மற்றவர்களை படுத்தி
எடுக்காத சீரான உடலுக்கு சொந்தக்காரர்.இப்போதும் அடுத்தவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. ஆகவே, மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற மறுத்துவிட்டார்.

தாயாருக்கு அடிபட்ட செய்தி கேட்டவுடன் பிள்ளைகளை சிங்கப்பூரில் விட்டு விட்டு கணவனும் மனைவியும் சொந்த ஊருக்கு பறந்து வந்தனர்.

ஏறக்குறைய 20 நாட்கள் ஓடி விட்டன. பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம். வயசுக்கு வந்த பிள்ளையை தனியே விட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், தாயாரை விட்டு பிரிந்து செல்ல இவர் மனம் தயாராகவில்லை.

இந்த நிலையில் என்னைத் தேடி வந்து தாயாரின் ஜாதகத்தைக் காண்பித்தார். பார்த்தேன். பின்னர் நேரடியாக அவருக்கான பதிலைச் சுறுக்கமாகச் சொன்னேன்.

உங்கள் தாயாருடைய ஜாதகம் தெய்வீக அம்சம் கொண்டது. அவருடைய அன்பும் ஆசியும்தான் வாழ்க்கையில் உங்களை உச்சத்துக்கு கொண்டு போய் உள்ளது.

அப்படிப்பட்ட தாயாரின் அந்திம காலத்தில் அருகே இருக்க முடியவில்லையே என்ற அவஸ்தை உங்கள் மனதைப் பிராண்டுகிறது.

இதுதான் விதி. இல்லாதவர்களுக்கு பொருளாதார ரீதியாக சிரமத்தைக் கொடுப்பார். இருப்பவர்களுக்கு எந்த வகையிலாவது மனநிம்மதியைக் கெடுப்பார். இது சனிபகவானின் தனித்தன்மை.

இதைத் தாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும். தவிர்க்க முடியாது. அதே
நேரத்தில் தங்கள் தாயாரின் இறுதி மூச்சு இப்போது நிற்க வாய்ப்பில்லை.

அவர்களுடைய இறப்பை அவர்களே நிர்ணயிக்கப் போகிறார்கள். ஞானிகளும் யோகிகளும் தாங்கள் விரும்பும்போது உடலை விட்டு உயிருக்கு விடுதலை அளிப்பார்கள்.

அந்த நிலைக்கு வந்து விட்டார் உங்கள் தாயார். மரணத்தைக் கண்டு பயப்படாத பக்குவம் அவருக்கு வந்து விட்டது. இனிமேல் அன்ன ஆகாரங்களைக் குறைத்துக் கொள்ளத் தொடங்குவார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவரின் ஜீவன் ஸ்தூல சரீரத்தை விட்டு விலக ஆரம்பிக்கும். ஆனால், அவர் உயிர் பிரியும் நாளைக் கணிப்பது கடினம் என்று சொன்னேன்.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்த அவர் பல ஜோதிடர்களைப் பார்த்திருக்கிறார். சிலர் ஓரிரு நாட்கள் கெடு சொன்னார்களாம்.

சிலர் என் கருத்தை ஒத்து பலன் சொல்லி இருக்கிறார்கள். ஆண்டவன் அளித்த ஆயுளை நிர்ணயிக்க மானிடப் பூச்சிகளான நமக்கு ஆற்றல் ஏது.

நீங்கள் இப்போது சிங்கப்பூருக்குக் கிளம்புங்கள். மன உளைச்சலை களைந்து
எறியுங்கள். பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள இயலாவிட்டாலும் இறுதி மூச்சு அடங்கும் போது நீங்கள் உங்கள் தாயாரின் அருகில் இருப்பீர்கள்
என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன்.

மனைவியை விட்டு விட்டு அவர் சிங்கப்பூர் கிளம்பிவிட்டார். அன்பு இருக்கிறது, ஆசை இருக்கிறது, பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற பாசம் இருக்கிறது.

ஆனால், அதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டியது... அருள வேண்டியது எல்லாம் வல்ல இறைவன் அல்லவா.

Friday, 26 December 2014

சனிபகவான் கெடுப்பவரா.... கொடுப்பவரா.... பாதிப்புக் குறைய பரிகாரம் என்ன?

சனி கொடுத்தால் யார் தடுப்பார்....சனியைப்போல் கொடுப்பாருமில்லை... அவரைப் போல் கெடுப்பாருமில்லை... விரையச் சனியில் விட்டதை பாதச் சனியில் பார்க்கலாம்... என சனிபகவானின் லீலைகள் பலவிதமாக
பேசப்படுகிறது.

ஜோதிடர்களிடம் கூட சனிபகவான் குறித்து மாறுபட்ட கருத்து நிலவுவதைப் பார்க்கலாம். கெடுப்பதற்கென்றே தோன்றிய கிரகம் சனி. அவரால் நல்லதே நடக்காது என்பது ஒருசாராரின் கருத்து.

அப்படி இல்லை. அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சனி பகவான் தீமைகளையும் நன்மைகளையும் பாகுபாடு இன்றி பந்தி வைப்பார் என்று சொல்வாரும் உண்டு.

என்னதான் மின்சாரம் நமக்கு வெளிச்சத்தை வாரி வழங்கினாலும் அன்றாட வாழ்க்கையில் எண்ணற்ற அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்தாலும் தப்பித் தவறி பிரியத்தோடு தொட்டுப் பார்த்தால் நம் உடலை விட்டு உயிர் பிரிய நேரிடும்.

அது மாதிரிதான் சனிபகவானும்.. அணுகாமலும் அகலாமலும் அனல் காய்வார்போல் என்ற திருவள்ளுவர் வாக்குக்கு இணங்க பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் வழிபாடு செய்ய வேண்டும் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்து.

எது எப்படியோ... மற்றவர்களுக்கு நன்மை செய்வதன் மூலமாகத்தான் சனி பகவானிடமிருந்து நன்மையைப் பெற முடியும் என்பதுதான் நடைமுறை வாழ்க்கை காட்டும் உண்மை.

ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் அல்லாடும் ஓர் ஏழையின் வயிற்றுப் பசியைப் போக்கும் ஒரு பிடி அன்னம், என் முன்னே படைக்கப்படும் சுவை மிகுந்த பத்து வகைப் பதார்த்தங்களை விட உன்னதமானது என்கிறார்
கிருஷ்ண பரமாத்மா.

ஏழரைச் சனியின் பாதிப்பினால் அல்லல் படும் இனிய நண்பர்களே... கவலைப்படாதீர்கள்... வாராவாரம் சனிபகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.

கருப்பு சனிபகவானுக்கு பிடித்த நிறம் கருப்பு. கருப்பு எள் கலந்த உணவுகள் சனிபகவானுக்கு பிரியமானவை.

காக்கை சனிபகவானின் வாகனம். அதற்கு உணவளித்து திருப்திப்படுத்தினால் சனிபகவானின் சிந்தை குளிரும்.

கிராமப் புறங்களில் காலை எழுந்தவுடன் காக்கைக்கு சோறுவைப்பது தாய்மார்களின் வழக்கம். இந்தப் பழக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது.

இருந்தாலும், தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு நாளும் காக்கைக்கு சோறு வைப்பதன் மூலமாக சனிபகவானைக் குளிர்விக்கிறார்கள் நமது தாய்மார்கள் என்பதே உண்மை.

வசதி வாய்ப்புகள் நிறைந்த நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் பொழுது புலரும் நேரத்தில் காக்கைக்கு உணவளிப்பதை இன்றும் காணலாம்.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, ஆகிய பாதிப்புகளில் சிக்கி இருக்கும் அன்பர்களே... இந்தக் கால கட்டத்தில் எண்ணியது ஈடேறாமல் போகலாம்.

உடல் நலத்திற்கு பங்கம் வரலாம். செய்யும் தொழில் துறைகளில் நஷ்டம் ஏற்படலாம். குடும்ப உறவில் விரிசல் உருவாகலாம். நட்புகளில் பிரிவு உண்டாகலாம்.

இப்படி ஒரு நிலை வந்தால் பதற்றப்படாமல் பக்குவத்தோடு நடந்து கொள்ள வேண்டும். சனிபகவானை மனதார வேண்டி ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும்.

சுயநலமான போக்கை விடுத்து பொது நலமான போக்கை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக சனிபகவான் நமக்கு வைக்கும் பரீட்சைதான் அவர் கொடுக்கும் சோதனைகளும் வேதனைகளும்.

கரியனின் கால் ஊனம். ஆகவே, அவரை முடவன் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அந்த வகையில் உடற் குறையுள்ள அன்பர்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்தால் ஏழரைச் சனியின் பாதிப்பு பலமடங்கு குறையும்.

Wednesday, 24 December 2014

பிரிந்தவர் கூடினர்... பிரிச்சினைகள் தீருமா?

கணவன் மனைவி சண்டையில் இறுதிக் கட்டத்துக்கு வந்த ஒரு ஜோடியை இணைத்து வைத்ததாக முன்பு குறிப்பிட்டேன் அல்லவா.

எப்படி அவர்களைச் சேர்த்தேன் என்பதை உங்களுக்குத் தெளிவு படுத்துவது என் கடமை. இது போல் சண்டைபோட்டு வாழ்க்கையை நாசமாக்கும் சிலருக்கு பாடமாக அமையும்.

திருமணத்துக்கு முன்னர் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு பிரியம் இருந்தது உண்மை. ஆனால்,திருமணத்துக்கு பின்னர் அது அன்பாக, பாசமாக, நேசமாக பரிமளிக்கவில்லை.

இதற்கு ஜாதக அமைப்பு ஒரு காரணம். நடைமுறை வாழ்க்கையில் நம்மோடு இணைந்திருக்கும் பிடிவாத குணமும் ஒரு காரணம்.

அந்தத் தம்பதிகள் இரண்டு பேருக்குமே பிள்ளை மீது கொள்ளைப் பிரியம். ஒரு நிமிடங்கூட பிரிந்து இருக்கப் பிரியப்படாதவர்கள்.

இதை வைத்து ஏன் நாம் ஒரு விளையாட்டுக் காட்டக் கூடாது என்று எண்ணினேன். அந்த எண்ணத்தை அவர்களிடம் நடைமுறைப்படுத்தினேன். அது வெற்றியைக் கொண்டு வந்து சேர்த்தது.

எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க எனக்கு முன்னால் அமர்ந்திருந்த அவர்களிடம் சொன்ன கருத்து இதுதான்.

"நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடையாது. அதற்கான கிரகமும் இடமும் கெட்டுப் போய் இருக்கிறது.

இந்த நிலையில் நீங்கள் கொண்ட அன்பின் பயனாக அற்புதமான பிள்ளையை ஆண்டவன் உங்களுக்கு அருளியுள்ளார். இது இறைவன் இட்ட பிச்சை.

ஆனால், அதைப் போற்றி பாதுகாக்கும் பக்குவம் உங்களுக்கு இல்லை. இதே நிலை நீடித்தால் கொடுத்த இறைவனே பிள்ளையை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படக்கூடும்.

நன்றாக சிந்தித்திப்பார்த்து உங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இழப்பு இருவருக்கும்தான்" என்று கண்டிப்பான குரலில் சொன்னேன்.

என் அதிர்ச்சி வைத்தியம் அவர்களை ஆட்டம் காண வைத்தது. சற்று நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மனதில் ஏற்பட்ட மாற்றம் முகத்தில் தெரிந்தது.

தாங்கள் சொல்லியபடி நடக்கிறோம் என உறுதி அளித்து விட்டு விடைபெற்றார்கள். இனி அவர்களுக்குள் சண்டை வருவது அரிதாகத்தான் இருக்கும்.

ஏனென்றால் பிள்ளைப் பாசம் எல்லாவற்றையும் விட பெரிது அல்லவா. அதே நேரத்தில் இந்த அதிர்ச்சி வைத்தியம் இன்னொரு ஜோடிக்கு பலிக்குமா என்பதைப் பார்ப்போம்.

இல்லையென்றால் இன்னொரு வழியை இறைவன் காட்டாமலா போவான்.

Tuesday, 23 December 2014

கணவன் மனைவிக்கு இடையே இடி மின்னல்: சனிபகவான் சதி

சனி ஈஸ்வரன் ஒருவர் வாழ்க்கையில் விளையாட வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டால் முதலில் நாக்கில் நின்றுதான் நாட்டியம் ஆடுவார்.

முடிவு கணவனும் மனைவியும் பட்டிமன்றம் நடத்தி ஆளுக்கொரு பாதையில் செல்ல வேண்டியதுதான்.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. குழந்தை பிறந்து ஆறு மாதம் கடந்து விட்டது. குலதெய்வம் கோவிலுக்கு முடி எடுக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போவதாக முடிவு செய்யப்பட்டது. கூட்டுக் குடும்பம். அண்ணன் தம்பி மூன்று பேர். இரண்டாவது நபரின் பிள்ளைக்குத்தான் முடி எடுக்க வேண்டும்.

இந்த நிலையில் மாவிளக்கு வைப்பதற்காக மாவு தயாரிக்க அரிசி ஊறப்போட்டிருந்திருக்கிறார்கள். இரவு ஏழு மணி ஆகி விட்டது. யாரும் மாவு இடிப்பதாகத் தெரியவில்லை.

"என்னடி ஆளாளுக்கு அக்கறை இல்லாமல் திரிகிறீர்கள். மாவை இடிக்கக்கூடாதா" மாமியார் பொத்தாம் பொதுவில் கேட்டிருக்கிறார்.

அவ்வளவுதான் இரண்டாவது மருமகளுக்கு வந்ததே கோபம். "என் பிள்ளைக்கு மாவிளக்கு வைக்க எனக்குத் தெரியும். யாரும்  காழு காழுன்னு கத்த வேண்டாம்" இப்படிச் சொல்லி மாமியாரைக் கழுதை ஆக்கி விட்டாள் அந்த மருமகள்.

பலபேரைப் பல்லைக் கழட்டி பதம் பார்த்த அந்த மாமியார் கப்சிப். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அல்லவா.

கணவனுக்கு கைகால்களில்  உதறல். யாரும் கை நீட்டி பேசினால் விரலை ஒடிக்கும் அளவுக்கு வீரமானவர். வேகமானவர்.

ஆனால், கல்யாணத்திற்குப் பின்னர் கனவில் கூட யாரையும் திட்டுவ தில்லை. முன் ஜென்ம பலாபலன்.

கோவிலுக்கு போவதில் ஏதேனும் குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாதே என பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார் கணவன்.

மனைவி விடுவதாக இல்லை. பிள்ளையைத் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் நடக்கிறார். கணவன் எதுவும் பேசவில்லை.சில நிமிடங்கள் கடந்திருக்கும்... உங்களுக்கு முன்னால் ஒருத்தி ரோடு போட்டுக் கொண்டிருப்பது தெரியவில்லை. எருமை மாடு மாதிரி உட்கார்ந்திருக்கிறீர்களே.. என வாய் வழியாக நெருப்பைக் கக்கினார்.

திறந்த  வாய் மூடவில்லை. மாமியாருக்கு திகைப்பு அடங்கவில்லை. ஓரளவுக்கு பொறுமையாக இருந்த கணவர் புயலாக கிளம்பி விட்டார்.

மாட்டடி மலையடி என்று சொல்வார்களே... அப்படியொரு அடி. கையைப் பிடித்து முறுக்கியதில் மணிக்கட்டு வேறு பிசகி விட்டது.

பி.இ. படித்த பெண். அடிக்க அடிக்க எதிர்த்து பேசிய ஆணவம் அனைவரையும் வாயடைக்க வைத்து விட்டது.

இதில் முக்கிய அம்சம் என்றவென்றால்... மனைவி மேல் கணவனுக்கு அலாதி பிரியம். தன் உடைகளைத் தானே துவைத்துக்  கொள்வார். மனைவியின் ஆடைகளைத் துவைத்துப் போடத் தயக்கம் காட்ட மாட்டார். யார் கேலி செய்தாலும் அதைக் கருத்தில் கொள்ள மாட்டார். இருப்பினும் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை.

பிறகென்ன...பிள்ளையோடு பிறந்தகம் போய் விட்டாள் அந்தப் பெண். மகனைப் பார்க்க முடியாமல் மருகி நிற்கிறார் கணவன். பேரனைத் தூக்க வழியில்லாமல் பிணாத்திக் கொண்டிருக்கிறார் கணவனின் தாயார்.

இதுதாங்க சனிபகவானின் சதிராட்டம். இருவருமே படித்தவர்கள். வசதி வாய்ப்புகளுக்கு குறைவில்லை. ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொள்ளும் கொடுப்பினையை ஆண்டவன் இவர்களுக்கு அளித்திருக்கிறார்.

இருந்தாலும் அனுபவிக்க முடியவில்லை. அறிவுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. இருவரும் ஜாதக பலாபலன்களை அறிந்து பரிகாரம் செய்து வாழ்க்கை என்றால் என்னவென்று உணர்ந்து விட்டுக் கொடுத்து வாழவில்லை என்றால் விவாகரத்துத்தான் முடிவுவாக இருக்கும்.

இருவீட்டாரையும் அவர்கள் குடும்ப நலனில் அக்கறை உள்ள சிலரையும் வெள்ளிக்கிழமை சந்திக்க சொல்லி இருக்கிறேன்.

கூடிய வரை குடும்பத்தை இணைக்கப் பார்ப்போம். முடிவு இறைவன் கையில்.

Monday, 22 December 2014

ஏழரைச் சனிக்கு என்ன பரிகாரம்

என்ன செய்தால் ஏழரைச் சனி காலத்தில் கரியனின் கடுமையான கோபத்தில் இருந்து தப்பிக்கலாம் என எல்லாத் தரப்பு மக்களும் ஏக்கத்தோடு கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்கள்.

இது ஒரு புறமிருக்க ஜோதிடர்களும் ஆன்மீகவாதிகளும் ஆளுக்கொரு பரிகாரம் சொல்லி பரபரப்பைக் கூட்டி இதயத்துடிப்பை இரண்டு மடங்காக்கி விடுகிறார்கள்.

வழி எதுவோ வாகனம் எதுவோ நினைத்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எல்லாரின் எதிர்பார்ப்பு. அந்த வகையில் சனி பகவானை சரிப்படுத்தி பாதிப்பைக் குறைக்க அவரவர் வழியில் ஆலய தரிசனம் மேற்கொண்டு இறைவனின் அருட் குடைக்குள் அடைக்கலம் ஆவதுதான் சிறந்த வழி.

அதற்கு முன்னால் சனி பகவானுக்கு பிடிக்காத 4 காரியங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவற்றை நாம் கண்டு கொண்டு அதன்படி அடியெடுத்து வைத்தால் துன்பத்தை தூர நகர்த்தி விடலாம்.

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இந்த நான்கும் தான் நான் மேலே குறிப்பிட்ட நான்கு அம்சங்கள்.

அழுக்காறு என்றால் பொறாமை. பொறாமை பொல்லாத ஆமை. அதில் இருந்து தப்பிப்பது கடினம். இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்தி பொறாமைக்கு கடிவாளம் போடலாம்.

அடுத்து அவா.இதற்கு இன்னொரு பெயர்  பேராசை. இந்த பேராசையால் விளையும் துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. ஒருவன் தடம்புரண்டு தரம் தாழ்வதற்கு பேராசை பெரும் பங்கு வகிக்கிறது.

அதற்கு அடுத்ததாக வெகுளி. கிராமப்பகுதியில் வெகுளி என்ற சொல்லுக்கு அப்பாவி என்று கூறுவது உண்டு. அவன் ஒரு விவரம் இல்லாத வெகுளிப்பயல் என்று சுட்டிக்காட்டுவார்கள். நான் சொல்வது அந்த வெகுளி அல்ல. கோபம்.

கோபம் நம் அறிவைக் கொன்று விடும். பின்னால் வரும் விளைவுகளைப் பற்றி கவலைப்படாது. நம் கூடவே இருந்து நம்மை அழிக்க என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டுமோ அவற்றை கன கச்சிதமாக நிறைவேற்றி நம்மை நிர்மூலமாக்கி விடும்.

இந்த நான்கு விஷயங்களையும் எல்லாக் காலங்களிலும் மனிதன் விலக்கி வந்தால் அவன் மகாத்மாவாக மாறி விடுவான். குறிப்பாக ஏழரைச் சனி காலத்தில் இவற்றில் இருந்து எட்டி நின்றால் துன்பம் தூர ஓடும். வீண் விரயங்கள் வீடு தேடி வராது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உண்டாகாது.

குடும்ப உறவில் குத்து வெட்டு நடக்காது. வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகி நம்மை நடுத்தெருவில் நிறுத்தாது. நட்பைப் பிரித்து நம் நிம்மதியை நாசமாக்காது.

ஆகவே, என் இனிய நட்புகளே.. உறவுகளே.. சனிபகவானின் கனிவு மிகுந்த கருணைப் பார்வை கிடைக்க வேண்டும் என்றால் முதலில் இந்த நான்கு அம்சங்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்று குறிப்பிடுகிறேன்.

Friday, 19 December 2014

கணவன் மனைவி பிரிவுக்கு காராணம் ஜாதக அமைப்பா?..திமிரான போக்கா...?

என் தலைக்குள் உலை வைத்து தகிக்க வைத்த சம்பவம் நேற்று முன் தினம் நடந்தது.

40 வயது மதிக்கத்தக்க இளைஞர். வசதி வாய்ப்புக்குப் பஞ்சமில்லை. வெளிநாட்டில் சில பிரச்சினைகளில் சிக்கி சிறைத்தண்டனை அனுபவித்தவர்.

இங்கு வந்த பின்னர் திருமணத்திற்கு முயன்றனர். ஆனால் கைகூடவில்லை. இந்த நிலையில் என்னை அணுகினர்.

ஜாதகத்தை ஆய்வு செய்தேன். காளசர்ப்பதோஷம். இருப்பினும் காலம் கடந்து விட்ட படியால் பாம்புகளின் பாதிப்பு இல்லை..

முக்கிய இடங்களில் சனியும் பாம்பும். இடம் எது என்பதை நான் குறிப்பிட விரும்பவில்லை.

ஏனென்றால் என் பதிவைப் படிப்பவர்களில் சிலர், ஐயா எனக்கு ஏழாம் இடத்தில் இந்தக் கிரகம் இருக்கிறது. எட்டாம் இடத்தில் இந்தக் கிரகம் நிற்கிறது. அதனால் பாதிப்பு உண்டாகுமா என கேட்கிறார்கள்.

மருத்துவக் குறிப்புகளைப் படித்துவிட்டு அறுவைச் சிகிச்சை செய்ய கத்தியை எடுத்த அப்பாவி கதையாக இந்தக் கேள்விகள் அமைவதால் நான் கட்டங்களைக் குறிப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். பிள்ளைக்கு திருமணம் செய்து பேரன் பேத்திகளைக் கொஞ்ச முடியவில்லையே என்ற வேதனை, அந்த இளைஞன் தாயாரின் விழிகளை அருவியாக்கி கன்னத்தில் கண்ணீர் வெள்ளத்தைப் பாய்ச்சியது.

அந்த அம்மாவுக்கு ஆறுதல் சொன்னேன். காள்கஸ்திக்கு சென்று வரும்படி கூறினேன்.


அடுத்த மாதத்திலேயே ஒரு வரன் வந்தது. பொறியியல் பட்டதாரி. ஏழ்மையான குடும்பம். தகப்பனார் சிறு வயதிலேயே இறந்து விட்டார்.

ஒரு வழியாக பேசி நாளும் முடிவு செய்து விட்டார்கள். அதன் பின்னர் என்னிடம் பொருத்தம் பார்க்க வந்தார்கள்.

தீர்ப்பு எழுதப்பட்ட பின்னர் வாதம் செய்வது வீண் வேலை என்பதால் இப்படி வருகின்ற ஜாதங்களைப் பார்த்து பாறையைப் பிளப்பது போல் படீரென்று போட்டு உடைக்காமல் வெண்ணெயை அறுப்பது போல் விவரங்களைக் கூறுவது என் வழக்கம்.

அந்த வகையில் இரண்டு குடும்பத்தினரைப் பார்த்து சில அறிவுரைகளைக் கூறினேன். மணமக்கள் இருவரையும் வரச்சொல்லி அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் குறைபாடுகளை எடுத்துக் கூறினேன்.

இருவரும் படித்தவர்கள் என்பதால் நான் சொன்ன விளக்கத்தின் பொருளை புரிந்து கொண்டார்கள். பொறுமையாகவும் பொறுப்பாகவும் வாழ்வதாக என்னிடம் உறுதி அளித்தார்கள்.

திருமண தேதியைக் குறித்து விட்டு நான் மலேசியா சென்று விட்டேன். ஓர் ஆண்டுகள் கழித்த பின்னர் விடுமுறைக்காக இந்தியா வந்த பொழுது அந்த இளைஞர் என்னைத் தேடி வந்தார்.

எப்படிப் போகிறது வாழ்க்கை என்றேன். கன்னத்தில் கண்ணீர் முத்துக்கள் உருண்டன. ஒரு வித நடுக்கம் உடலை தள்ளாட வைத்தது.

எங்களுடைய வாழ்க்கை இன்பமாக கழிந்தது இரண்டு நாட்கள்தான். மூன்றாம்  நாள் சின்னப்பிரச்சினை காரணமாக முட்டல் ஏற்பட்டது. சரியாகி விடும் என்ற என் எண்ணம் தப்பாகி விட்டது.

இரவு வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இந்த நிலையில் அவள் ஒரு ஆண்பிள்ளையை ஈன்றெடுத்தாள்.

இருந்தாலும் எங்கள் இருவருக்கும் இடையே மூண்ட சண்டை மட்டும் இன்னும் ஓயவில்லை.

நான் எவ்வளவுதான் பொறுத்துப் போனாலும் விட்டுக் கொடுத்து நின்றாலும் வேண்டும் என்றே சண்டை இழுக்கிறாள்.

படித்த திமிரா... கூட்டுக் குடும்பத்தை உடைக்க வேண்டும் என்ற சதியா... அல்லது வாழ்க்கை என்றால் என்ன என்று புரியாதா கிறுக்குத்தனமா...? எனக்கு எதுவுமே புரியவில்லை.

ஏன்டா திருமணம் செய்தோம். ஒண்டிக்கட்டையாகவே காலத்தைக் கழித்திருக்கலாமே என்று மனம் மருகுகிறது.

தயவு செய்து என் ஜாதகத்தை ஆய்வு செய்து எங்காவது கண்காணாத இடத்துக்குச் சென்று விடவா... அல்லது  விவாகரத்துச் செய்து விடவா... என்று நீங்கள்தான் ஆலோசனை கூற வேண்டும் என்று கேட்டார்.

பிரிய இருந்த அவர்களுக்கு சில விஷயங்களைப் புரிய வைத்து அவர்களை எப்படி ஒன்று சேர்த்தேன் என்பதை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.

Thursday, 18 December 2014

ஏழரைச் சனி காட்டும் எச்சரிக்கை

மழை வருவதற்கு முன்னர் மேகம் திரள்வதில்லையா... சண்டை வருவதற்கு முன்னர் கோபம் கொப்பளிப்பதில்லையா... காதல் வருவதற்கு முன்னர் வெட்கம் வேடிக்கை காட்டுவதில்லையா... அது மாதிரிதான் ஏழரைச் சனி காலத்தில் சனிபகவான் சில அறிகுறிகளை நமக்குக் காட்டுவார்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் என்னை வந்து சந்தித்தார் 35 வயது மதிக்கத்தக்க ஓர் அன்பர். திருமண விஷயமாக பார்க்க வந்திருந்தார். பல இடங்களில் பெண் தேடியும் ஒன்றும் அமையவில்லை.விருச்சிக ராசிக்காரர் என்பதால் ஏழரைச் சனியின் தாக்குதலுக்குத் தயாராக இருந்தார். இனிமேல் திருமணம் நடக்க வாய்ப்பு இல்லை என்ற அவநம்பிக்கையோடு என்னிடம் பேசினார்.

சனிபகவானுக்கு இன்னொரு பெயர் கலிபுருஷன். ஆகவே கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். காளசர்ப்பதோஷ பாதிப்புக்கு உள்ளாகி  கிரக முடக்கம் ஏற்பட்டுள்ளதால் தாமதமாக திருமணம் நடக்கும் என சொன்னேன்.

அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை. இருப்பினும் இன்னொரு கேள்வியைத் தொடுத்தார். அப்படியே திருமணம் நடந்தாலும் குழந்தை இருக்காது என சொல்கிறார்களே என்று வினவினார்.

அது ஒருவகையில் சரிதான். புத்திர ஸ்தானமும் புத்திர காரகனும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

இருப்பினும் எனக்கொரு குருட்டு நம்பிக்கை உண்டு. மதி நீச்சம் அடைந்த விருச்சிகராசிக்காரர்கள் இளமையில் பல இன்னல்களை அடைந்தாலும் சுயமுன்னேற்றத்தில் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார்கள்.

மேலும் இவருக்கு நாலாம் இடத்தில் சுக்கிரம் நல்ல நிலையில் இருந்தார். ஆகவே திருமணம் கண்டிப்பாக நடக்கும். சற்று தாமதமாக இரு ஆண்டுகளுக்குள் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று சொன்னேன்.

ஓரிரு மாதங்களில் பெண் அமைந்தது. இருவீட்டாரும் என்னை வந்து பார்த்தார்கள். திருமண நாள் குறித்துக் கொடுத்தேன். சரியாக ஒன்ன்ரை ஆண்டுகளில் அந்தப் பெண் கருத்தரித்தாள்.

இந்த விஷயத்தை என்னிடம் மகிழ்ச்சியோடு தொலைபேசி வாயிலாக கூறினார். முதன் முதலாக என்னிடம் தெரிவித்ததாகச் சொன்னார்.

சனிப்பெயர்ச்சிக்கு என்ன பரிகாரம் செய்யலாம் என கேட்டார். பெரிதாக ஒன்றும் தேவையில்லை. பெரிச்சிக் கோவிலுக்காவது குச்சனூருக்காவது சென்று வாருங்கள் என்று சொன்னேன்.

இந்த நிலையில் கார் வாங்க நினைக்கிறேன் என்று சொல்லி கார் எண்ணையும் கூறினார்.

முடிவுரை எழுதி விட்டு முன்னுரைக்கு யோசிப்பது முட்டாள்தனம். இருந்தாலும் அவர் ஆவலின் வேகத்தைக் குறைக்க விரும்பவில்லை.

தாராளமாக வாங்குங்கள். வண்டி வாகனங்கள் ஓட்டும்போது இரு மடங்கு எச்சரிக்கையாக இருங்கள் என ஆலோசனை கூறினேன்.

சனிப்பெயர்ச்சி அன்று நானும் என் மாப்பிள்ளை கௌரியும் சில நண்பர்களும் பெரிச்சிக் கோவில் சனிபகவான் ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தோம். அப்போது அந்த அன்பர் போன் செய்தார்.

ஐயா.. நான் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலையில் அந்தப் பக்கத்தில் நின்ற மாடு குறுக்கே ஓடி வந்து மோட்டார் சைக்கிளில் மோதி விட்டது. எனக்கு அடி அதிகம் இல்லை. மோட்டார் சைக்கிளின் முன்பக்கம் சேதமடைந்து விட்டது என கூறினார். அச்சப்படத்தேவையில்லை என்று ஆறுதல் சொன்னேன்.

இரவு எட்டு மணி இருக்கும். தொலைபேசி மணி ஒலித்தது. அவர்தான் அழைத்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தும்போது சாய்ந்து என் விரலை நசுக்கி விட்டது. எனக்கு பயமாக இருக்கிறது. வண்டி வாகனங்கள் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னீர்கள். அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் நடந்து விட்டன. ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா எனக் கேட்டார்.

இது ஒரு இக்கட்டான நிலை. சனிக்கு பரிகாரம் சொல்வதா... அல்லது அவரின் அவநம்பிக்கைக்கு பரிகாரம் சொல்வதா...

சனிபகவான் ஏழரையாண்டுகள் முழுமையும் பாதிப்பைஉண்டு பண்ணுவாரா... நல்லதே செய்ய மாட்டாரா.. இப்படி பல குழப்பங்கள் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இனி சனி பகவானை எப்படி குஷிப்படுத்துவது... சரிப்படுத்துவது... சமாதானப்படுத்துவது என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
Wednesday, 17 December 2014

கெடுத்த சனி... கொடுத்த சனி

எவ்வளவு பெரிய ரவுடியாக இருக்கட்டும். தாதாவாக பேட்டையைக் கலக்கட்டும், ஏழரைச் சனி என்றால் காலரை தொங்கவிட்டு பம்மி பதுங்குகிறார்கள்.

ஏன் இந்தப் பயம். அவர்களின் தெனாவட்டு தெறித்துப் போனதற்கு என்ன காரணம். கத்திக்கும் ரத்தத்திற்கும் கலங்காதவர்கள் சனிபகவான் என்றாலேபூனையைப் பார்த்த எலியைப் போல பொந்துக்குள் ஒளிந்து கொள்கிறார்கள்.

சனி நினைத்தால் அவர்களுக்கு சங்கஊதி விடுவார். கொஞ்சம் கோபப்பட்டால் நெஞ்சு வேலை நிறுத்தம் செய்து விடும். அதனால் தான் அச்சம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

சனிபகவான் இத்தனை பொல்லாதவரா... அதெல்லாம் கிடையாது. நல்லவருக்கு நல்லவர். பொல்லாதவருக்கும் நல்லவர்.

நல்லவர்களாக இருந்தால் போன ஜென்ம பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப பலன் கொடுப்பார். கெட்டவர்களாக இருந்தால் முதலில் கண்டிப்பார். அதிலும் அடங்கவில்லை என்றால் பின்னர் தண்டிப்பார்.

ஏழரைச் சனி காலத்தில் எவ்வளவு கடுமை காட்டுகிறாரோ... அதற்கு ஈடாக அடுத்து வரும் காலங்களில் அள்ளிக் கொடுக்கவும் தயங்க மாட்டார்.

அப்படி ஏழரைச் சனி காலத்தில் திருவோடு ஏந்தும் நிலைக்குச் சென்ற ஒருவர் இப்போது பணம் பதவி என்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் என்னைச்சந்தித்தார். என்னிடம் ஆலோசனை கேட்டுச் சென்றார். அதன் பின்னர் கடந்த மாதம் என்னை வந்து பார்த்தார்.

பாலைவனமாக இருந்த அவரின்  வாழ்க்கை சோலைவனமாக மாறி இருப்பதை அவரின் தோற்றமே உணர்த்தியது.

அவர் பட்ட துயரம் என்ன. அதில் இருந்து எவ்வாறு  மீண்டார் என்பதை அடுத்து பார்ப்போம்.

Tuesday, 16 December 2014

விருச்சிக ராசி சனி பகவான் வில்லங்கம் செய்வாரா?

துலாம் ராசியில் இருந்து துள்ளிக் குதித்து சனி பகவான் விருச்சிக ராசிக்கு தாவி வந்திருக்கிறார்.

ஆகா இன்னும் இரண்டரை வருடம்தான் என்று துலாம் ராசிக்காரர்கள் பெருமூச்சு விட.... ஐந்தரை ஆண்டுகளை எப்படிக் கடத்தப் போகிறோம் என விருச்சிக ராசிக்காரர்கள் விசும்பி நிற்க...விரையச் சனியின் பிடியில் சிக்கிய தனுசு ராசிகாரர்கள் என்ன நடக்குமோ என கலங்கித் தவிக்க சனிபகவான் குடி கொண்டிருக்கும் கோவில்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

ஆதிசிவனையே ஆட்டிவைத்த சனி பகவானே எங்கள் பக்கம் உன் கோபப் பார்வையைத் திருப்பி விடாதே என சாப விமோசன விண்ணப்பம் அளிக்க மக்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வீடு வாசல் மாடி மனை என்று செல்வத்தையும்செல்வாக்கையும் அள்ளித்தரும் சனி பகவானைப் பார்த்து ஏன் மக்கள் இப்படிப் பயப்படுகிறார்கள்.

இந்தப் பயம் நியாயம்தானா... இனி வரும் நாட்களில் நாம் அலசி ஆராய்வோம். நீண்ட நாட்களாக  என் பதிவைப் பார்த்து பாசத்தைப் பரிமாறி வந்த இனிய நண்பர்களோடு இனி தடையின்றி உசாவ எனக்கு அவகாசம் ஏற்பட்டுள்ளது.

என்னைச் சந்தித்த அன்பர்களின் அனுபவங்களை இனிமேல் தங்களுக்கு பந்தி வைக்கிறேன். அதைப் படித்து முடிந்தவரை பயன்பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.