Friday 19 December 2014

கணவன் மனைவி பிரிவுக்கு காராணம் ஜாதக அமைப்பா?..திமிரான போக்கா...?

என் தலைக்குள் உலை வைத்து தகிக்க வைத்த சம்பவம் நேற்று முன் தினம் நடந்தது.

40 வயது மதிக்கத்தக்க இளைஞர். வசதி வாய்ப்புக்குப் பஞ்சமில்லை. வெளிநாட்டில் சில பிரச்சினைகளில் சிக்கி சிறைத்தண்டனை அனுபவித்தவர்.

இங்கு வந்த பின்னர் திருமணத்திற்கு முயன்றனர். ஆனால் கைகூடவில்லை. இந்த நிலையில் என்னை அணுகினர்.

ஜாதகத்தை ஆய்வு செய்தேன். காளசர்ப்பதோஷம். இருப்பினும் காலம் கடந்து விட்ட படியால் பாம்புகளின் பாதிப்பு இல்லை..

முக்கிய இடங்களில் சனியும் பாம்பும். இடம் எது என்பதை நான் குறிப்பிட விரும்பவில்லை.

ஏனென்றால் என் பதிவைப் படிப்பவர்களில் சிலர், ஐயா எனக்கு ஏழாம் இடத்தில் இந்தக் கிரகம் இருக்கிறது. எட்டாம் இடத்தில் இந்தக் கிரகம் நிற்கிறது. அதனால் பாதிப்பு உண்டாகுமா என கேட்கிறார்கள்.

மருத்துவக் குறிப்புகளைப் படித்துவிட்டு அறுவைச் சிகிச்சை செய்ய கத்தியை எடுத்த அப்பாவி கதையாக இந்தக் கேள்விகள் அமைவதால் நான் கட்டங்களைக் குறிப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். பிள்ளைக்கு திருமணம் செய்து பேரன் பேத்திகளைக் கொஞ்ச முடியவில்லையே என்ற வேதனை, அந்த இளைஞன் தாயாரின் விழிகளை அருவியாக்கி கன்னத்தில் கண்ணீர் வெள்ளத்தைப் பாய்ச்சியது.

அந்த அம்மாவுக்கு ஆறுதல் சொன்னேன். காள்கஸ்திக்கு சென்று வரும்படி கூறினேன்.


அடுத்த மாதத்திலேயே ஒரு வரன் வந்தது. பொறியியல் பட்டதாரி. ஏழ்மையான குடும்பம். தகப்பனார் சிறு வயதிலேயே இறந்து விட்டார்.

ஒரு வழியாக பேசி நாளும் முடிவு செய்து விட்டார்கள். அதன் பின்னர் என்னிடம் பொருத்தம் பார்க்க வந்தார்கள்.

தீர்ப்பு எழுதப்பட்ட பின்னர் வாதம் செய்வது வீண் வேலை என்பதால் இப்படி வருகின்ற ஜாதங்களைப் பார்த்து பாறையைப் பிளப்பது போல் படீரென்று போட்டு உடைக்காமல் வெண்ணெயை அறுப்பது போல் விவரங்களைக் கூறுவது என் வழக்கம்.

அந்த வகையில் இரண்டு குடும்பத்தினரைப் பார்த்து சில அறிவுரைகளைக் கூறினேன். மணமக்கள் இருவரையும் வரச்சொல்லி அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் குறைபாடுகளை எடுத்துக் கூறினேன்.

இருவரும் படித்தவர்கள் என்பதால் நான் சொன்ன விளக்கத்தின் பொருளை புரிந்து கொண்டார்கள். பொறுமையாகவும் பொறுப்பாகவும் வாழ்வதாக என்னிடம் உறுதி அளித்தார்கள்.

திருமண தேதியைக் குறித்து விட்டு நான் மலேசியா சென்று விட்டேன். ஓர் ஆண்டுகள் கழித்த பின்னர் விடுமுறைக்காக இந்தியா வந்த பொழுது அந்த இளைஞர் என்னைத் தேடி வந்தார்.

எப்படிப் போகிறது வாழ்க்கை என்றேன். கன்னத்தில் கண்ணீர் முத்துக்கள் உருண்டன. ஒரு வித நடுக்கம் உடலை தள்ளாட வைத்தது.

எங்களுடைய வாழ்க்கை இன்பமாக கழிந்தது இரண்டு நாட்கள்தான். மூன்றாம்  நாள் சின்னப்பிரச்சினை காரணமாக முட்டல் ஏற்பட்டது. சரியாகி விடும் என்ற என் எண்ணம் தப்பாகி விட்டது.

இரவு வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இந்த நிலையில் அவள் ஒரு ஆண்பிள்ளையை ஈன்றெடுத்தாள்.

இருந்தாலும் எங்கள் இருவருக்கும் இடையே மூண்ட சண்டை மட்டும் இன்னும் ஓயவில்லை.

நான் எவ்வளவுதான் பொறுத்துப் போனாலும் விட்டுக் கொடுத்து நின்றாலும் வேண்டும் என்றே சண்டை இழுக்கிறாள்.

படித்த திமிரா... கூட்டுக் குடும்பத்தை உடைக்க வேண்டும் என்ற சதியா... அல்லது வாழ்க்கை என்றால் என்ன என்று புரியாதா கிறுக்குத்தனமா...? எனக்கு எதுவுமே புரியவில்லை.

ஏன்டா திருமணம் செய்தோம். ஒண்டிக்கட்டையாகவே காலத்தைக் கழித்திருக்கலாமே என்று மனம் மருகுகிறது.

தயவு செய்து என் ஜாதகத்தை ஆய்வு செய்து எங்காவது கண்காணாத இடத்துக்குச் சென்று விடவா... அல்லது  விவாகரத்துச் செய்து விடவா... என்று நீங்கள்தான் ஆலோசனை கூற வேண்டும் என்று கேட்டார்.

பிரிய இருந்த அவர்களுக்கு சில விஷயங்களைப் புரிய வைத்து அவர்களை எப்படி ஒன்று சேர்த்தேன் என்பதை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.

No comments:

Post a Comment