Friday, 26 December 2014

சனிபகவான் கெடுப்பவரா.... கொடுப்பவரா.... பாதிப்புக் குறைய பரிகாரம் என்ன?

சனி கொடுத்தால் யார் தடுப்பார்....சனியைப்போல் கொடுப்பாருமில்லை... அவரைப் போல் கெடுப்பாருமில்லை... விரையச் சனியில் விட்டதை பாதச் சனியில் பார்க்கலாம்... என சனிபகவானின் லீலைகள் பலவிதமாக
பேசப்படுகிறது.

ஜோதிடர்களிடம் கூட சனிபகவான் குறித்து மாறுபட்ட கருத்து நிலவுவதைப் பார்க்கலாம். கெடுப்பதற்கென்றே தோன்றிய கிரகம் சனி. அவரால் நல்லதே நடக்காது என்பது ஒருசாராரின் கருத்து.

அப்படி இல்லை. அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சனி பகவான் தீமைகளையும் நன்மைகளையும் பாகுபாடு இன்றி பந்தி வைப்பார் என்று சொல்வாரும் உண்டு.

என்னதான் மின்சாரம் நமக்கு வெளிச்சத்தை வாரி வழங்கினாலும் அன்றாட வாழ்க்கையில் எண்ணற்ற அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்தாலும் தப்பித் தவறி பிரியத்தோடு தொட்டுப் பார்த்தால் நம் உடலை விட்டு உயிர் பிரிய நேரிடும்.

அது மாதிரிதான் சனிபகவானும்.. அணுகாமலும் அகலாமலும் அனல் காய்வார்போல் என்ற திருவள்ளுவர் வாக்குக்கு இணங்க பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் வழிபாடு செய்ய வேண்டும் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்து.

எது எப்படியோ... மற்றவர்களுக்கு நன்மை செய்வதன் மூலமாகத்தான் சனி பகவானிடமிருந்து நன்மையைப் பெற முடியும் என்பதுதான் நடைமுறை வாழ்க்கை காட்டும் உண்மை.

ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் அல்லாடும் ஓர் ஏழையின் வயிற்றுப் பசியைப் போக்கும் ஒரு பிடி அன்னம், என் முன்னே படைக்கப்படும் சுவை மிகுந்த பத்து வகைப் பதார்த்தங்களை விட உன்னதமானது என்கிறார்
கிருஷ்ண பரமாத்மா.

ஏழரைச் சனியின் பாதிப்பினால் அல்லல் படும் இனிய நண்பர்களே... கவலைப்படாதீர்கள்... வாராவாரம் சனிபகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.

கருப்பு சனிபகவானுக்கு பிடித்த நிறம் கருப்பு. கருப்பு எள் கலந்த உணவுகள் சனிபகவானுக்கு பிரியமானவை.

காக்கை சனிபகவானின் வாகனம். அதற்கு உணவளித்து திருப்திப்படுத்தினால் சனிபகவானின் சிந்தை குளிரும்.

கிராமப் புறங்களில் காலை எழுந்தவுடன் காக்கைக்கு சோறுவைப்பது தாய்மார்களின் வழக்கம். இந்தப் பழக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது.

இருந்தாலும், தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு நாளும் காக்கைக்கு சோறு வைப்பதன் மூலமாக சனிபகவானைக் குளிர்விக்கிறார்கள் நமது தாய்மார்கள் என்பதே உண்மை.

வசதி வாய்ப்புகள் நிறைந்த நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் பொழுது புலரும் நேரத்தில் காக்கைக்கு உணவளிப்பதை இன்றும் காணலாம்.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, ஆகிய பாதிப்புகளில் சிக்கி இருக்கும் அன்பர்களே... இந்தக் கால கட்டத்தில் எண்ணியது ஈடேறாமல் போகலாம்.

உடல் நலத்திற்கு பங்கம் வரலாம். செய்யும் தொழில் துறைகளில் நஷ்டம் ஏற்படலாம். குடும்ப உறவில் விரிசல் உருவாகலாம். நட்புகளில் பிரிவு உண்டாகலாம்.

இப்படி ஒரு நிலை வந்தால் பதற்றப்படாமல் பக்குவத்தோடு நடந்து கொள்ள வேண்டும். சனிபகவானை மனதார வேண்டி ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும்.

சுயநலமான போக்கை விடுத்து பொது நலமான போக்கை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக சனிபகவான் நமக்கு வைக்கும் பரீட்சைதான் அவர் கொடுக்கும் சோதனைகளும் வேதனைகளும்.

கரியனின் கால் ஊனம். ஆகவே, அவரை முடவன் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அந்த வகையில் உடற் குறையுள்ள அன்பர்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்தால் ஏழரைச் சனியின் பாதிப்பு பலமடங்கு குறையும்.

No comments:

Post a Comment