Tuesday, 23 December 2014

கணவன் மனைவிக்கு இடையே இடி மின்னல்: சனிபகவான் சதி

சனி ஈஸ்வரன் ஒருவர் வாழ்க்கையில் விளையாட வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டால் முதலில் நாக்கில் நின்றுதான் நாட்டியம் ஆடுவார்.

முடிவு கணவனும் மனைவியும் பட்டிமன்றம் நடத்தி ஆளுக்கொரு பாதையில் செல்ல வேண்டியதுதான்.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. குழந்தை பிறந்து ஆறு மாதம் கடந்து விட்டது. குலதெய்வம் கோவிலுக்கு முடி எடுக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போவதாக முடிவு செய்யப்பட்டது. கூட்டுக் குடும்பம். அண்ணன் தம்பி மூன்று பேர். இரண்டாவது நபரின் பிள்ளைக்குத்தான் முடி எடுக்க வேண்டும்.

இந்த நிலையில் மாவிளக்கு வைப்பதற்காக மாவு தயாரிக்க அரிசி ஊறப்போட்டிருந்திருக்கிறார்கள். இரவு ஏழு மணி ஆகி விட்டது. யாரும் மாவு இடிப்பதாகத் தெரியவில்லை.

"என்னடி ஆளாளுக்கு அக்கறை இல்லாமல் திரிகிறீர்கள். மாவை இடிக்கக்கூடாதா" மாமியார் பொத்தாம் பொதுவில் கேட்டிருக்கிறார்.

அவ்வளவுதான் இரண்டாவது மருமகளுக்கு வந்ததே கோபம். "என் பிள்ளைக்கு மாவிளக்கு வைக்க எனக்குத் தெரியும். யாரும்  காழு காழுன்னு கத்த வேண்டாம்" இப்படிச் சொல்லி மாமியாரைக் கழுதை ஆக்கி விட்டாள் அந்த மருமகள்.

பலபேரைப் பல்லைக் கழட்டி பதம் பார்த்த அந்த மாமியார் கப்சிப். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அல்லவா.

கணவனுக்கு கைகால்களில்  உதறல். யாரும் கை நீட்டி பேசினால் விரலை ஒடிக்கும் அளவுக்கு வீரமானவர். வேகமானவர்.

ஆனால், கல்யாணத்திற்குப் பின்னர் கனவில் கூட யாரையும் திட்டுவ தில்லை. முன் ஜென்ம பலாபலன்.

கோவிலுக்கு போவதில் ஏதேனும் குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாதே என பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார் கணவன்.

மனைவி விடுவதாக இல்லை. பிள்ளையைத் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் நடக்கிறார். கணவன் எதுவும் பேசவில்லை.சில நிமிடங்கள் கடந்திருக்கும்... உங்களுக்கு முன்னால் ஒருத்தி ரோடு போட்டுக் கொண்டிருப்பது தெரியவில்லை. எருமை மாடு மாதிரி உட்கார்ந்திருக்கிறீர்களே.. என வாய் வழியாக நெருப்பைக் கக்கினார்.

திறந்த  வாய் மூடவில்லை. மாமியாருக்கு திகைப்பு அடங்கவில்லை. ஓரளவுக்கு பொறுமையாக இருந்த கணவர் புயலாக கிளம்பி விட்டார்.

மாட்டடி மலையடி என்று சொல்வார்களே... அப்படியொரு அடி. கையைப் பிடித்து முறுக்கியதில் மணிக்கட்டு வேறு பிசகி விட்டது.

பி.இ. படித்த பெண். அடிக்க அடிக்க எதிர்த்து பேசிய ஆணவம் அனைவரையும் வாயடைக்க வைத்து விட்டது.

இதில் முக்கிய அம்சம் என்றவென்றால்... மனைவி மேல் கணவனுக்கு அலாதி பிரியம். தன் உடைகளைத் தானே துவைத்துக்  கொள்வார். மனைவியின் ஆடைகளைத் துவைத்துப் போடத் தயக்கம் காட்ட மாட்டார். யார் கேலி செய்தாலும் அதைக் கருத்தில் கொள்ள மாட்டார். இருப்பினும் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை.

பிறகென்ன...பிள்ளையோடு பிறந்தகம் போய் விட்டாள் அந்தப் பெண். மகனைப் பார்க்க முடியாமல் மருகி நிற்கிறார் கணவன். பேரனைத் தூக்க வழியில்லாமல் பிணாத்திக் கொண்டிருக்கிறார் கணவனின் தாயார்.

இதுதாங்க சனிபகவானின் சதிராட்டம். இருவருமே படித்தவர்கள். வசதி வாய்ப்புகளுக்கு குறைவில்லை. ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொள்ளும் கொடுப்பினையை ஆண்டவன் இவர்களுக்கு அளித்திருக்கிறார்.

இருந்தாலும் அனுபவிக்க முடியவில்லை. அறிவுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. இருவரும் ஜாதக பலாபலன்களை அறிந்து பரிகாரம் செய்து வாழ்க்கை என்றால் என்னவென்று உணர்ந்து விட்டுக் கொடுத்து வாழவில்லை என்றால் விவாகரத்துத்தான் முடிவுவாக இருக்கும்.

இருவீட்டாரையும் அவர்கள் குடும்ப நலனில் அக்கறை உள்ள சிலரையும் வெள்ளிக்கிழமை சந்திக்க சொல்லி இருக்கிறேன்.

கூடிய வரை குடும்பத்தை இணைக்கப் பார்ப்போம். முடிவு இறைவன் கையில்.

No comments:

Post a Comment