Monday, 22 December 2014

ஏழரைச் சனிக்கு என்ன பரிகாரம்

என்ன செய்தால் ஏழரைச் சனி காலத்தில் கரியனின் கடுமையான கோபத்தில் இருந்து தப்பிக்கலாம் என எல்லாத் தரப்பு மக்களும் ஏக்கத்தோடு கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்கள்.

இது ஒரு புறமிருக்க ஜோதிடர்களும் ஆன்மீகவாதிகளும் ஆளுக்கொரு பரிகாரம் சொல்லி பரபரப்பைக் கூட்டி இதயத்துடிப்பை இரண்டு மடங்காக்கி விடுகிறார்கள்.

வழி எதுவோ வாகனம் எதுவோ நினைத்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எல்லாரின் எதிர்பார்ப்பு. அந்த வகையில் சனி பகவானை சரிப்படுத்தி பாதிப்பைக் குறைக்க அவரவர் வழியில் ஆலய தரிசனம் மேற்கொண்டு இறைவனின் அருட் குடைக்குள் அடைக்கலம் ஆவதுதான் சிறந்த வழி.

அதற்கு முன்னால் சனி பகவானுக்கு பிடிக்காத 4 காரியங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவற்றை நாம் கண்டு கொண்டு அதன்படி அடியெடுத்து வைத்தால் துன்பத்தை தூர நகர்த்தி விடலாம்.

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இந்த நான்கும் தான் நான் மேலே குறிப்பிட்ட நான்கு அம்சங்கள்.

அழுக்காறு என்றால் பொறாமை. பொறாமை பொல்லாத ஆமை. அதில் இருந்து தப்பிப்பது கடினம். இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்தி பொறாமைக்கு கடிவாளம் போடலாம்.

அடுத்து அவா.இதற்கு இன்னொரு பெயர்  பேராசை. இந்த பேராசையால் விளையும் துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. ஒருவன் தடம்புரண்டு தரம் தாழ்வதற்கு பேராசை பெரும் பங்கு வகிக்கிறது.

அதற்கு அடுத்ததாக வெகுளி. கிராமப்பகுதியில் வெகுளி என்ற சொல்லுக்கு அப்பாவி என்று கூறுவது உண்டு. அவன் ஒரு விவரம் இல்லாத வெகுளிப்பயல் என்று சுட்டிக்காட்டுவார்கள். நான் சொல்வது அந்த வெகுளி அல்ல. கோபம்.

கோபம் நம் அறிவைக் கொன்று விடும். பின்னால் வரும் விளைவுகளைப் பற்றி கவலைப்படாது. நம் கூடவே இருந்து நம்மை அழிக்க என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டுமோ அவற்றை கன கச்சிதமாக நிறைவேற்றி நம்மை நிர்மூலமாக்கி விடும்.

இந்த நான்கு விஷயங்களையும் எல்லாக் காலங்களிலும் மனிதன் விலக்கி வந்தால் அவன் மகாத்மாவாக மாறி விடுவான். குறிப்பாக ஏழரைச் சனி காலத்தில் இவற்றில் இருந்து எட்டி நின்றால் துன்பம் தூர ஓடும். வீண் விரயங்கள் வீடு தேடி வராது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உண்டாகாது.

குடும்ப உறவில் குத்து வெட்டு நடக்காது. வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகி நம்மை நடுத்தெருவில் நிறுத்தாது. நட்பைப் பிரித்து நம் நிம்மதியை நாசமாக்காது.

ஆகவே, என் இனிய நட்புகளே.. உறவுகளே.. சனிபகவானின் கனிவு மிகுந்த கருணைப் பார்வை கிடைக்க வேண்டும் என்றால் முதலில் இந்த நான்கு அம்சங்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்று குறிப்பிடுகிறேன்.

No comments:

Post a Comment