Tuesday, 30 December 2014

வேலைக்கு லஞ்சம்... ஜாதகம் என்ன சொல்கிறது

"சார் லஞ்சம் கொடுத்தால் எனக்கு வேலை கிடைக்குமா..." 10 நாட்களுக்கு முன்னர் என் மின்னஞ்சல் முகவரிக்கு அன்பர் ஒருவர் இந்தக் கேள்வியை அனுப்பி இருந்தார்.

மேலும் அவருடைய பிறந்த தேதியையும் நேரத்தையும் அனுப்பி இருந்தார். அவரைப்பற்றிய சுயவிளக்க குறிப்பு ஒன்றையும் இணைத்திருந்தார்.

வசதி வாய்ப்புக் குறைவான குடும்பம். ஏழு பெண்பிள்ளைகளுக்கு பின்னர் எட்டாவதாக எட்டிப் பிடிக்கப்பட்டவர். பொருளாதாரச் சிரமங்களுக்கு இடையே பி.காம். வரை படித்திருக்கிறார். ஒரு கால் சற்று ஊனமாம்.

போக்குவரத்துத் துறையில் இளநிலை உதவியாளர் பதவிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார். வேலையின் தன்மை.. அதற்கு உரிய ஊதியம் என்ன என்பது அவருக்குத் தெரியவில்லை.ஆனால், லஞ்சம் கொடுத்தால்தான் வேலையில் சேர முடியுமாம்.

அவருடைய உறவினர் ஒருவர் அரசியலில் செல்வாக்கு மிக்கவராம். அந்தத் துறை அமைச்சரிடம் பணம் கொடுத்தால் பதவி நிச்சயம் என்று உறுதி சொல்லி அதற்கான தொகையைத் தயார் செய்யும்படி கூறியிருக்கிறார்.

ஏறக்குறைய 6 லட்சம் ரூபாய் அதற்கான கையூட்டுத் தொகை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு மேல் விவரம் கூறவில்லை.

ஏனென்றால் குற்றவாளிகளை விட குற்றம் சாட்டுகின்றவர்கள்தான் இந்தியாவில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மான நஷ்ட வழக்குப் போட்டு மண்டைக்கு மணி அடித்து விடுவார்கள் என எழுதி இருந்தார்.

அவருடைய கிரக நிலைகளை ஆராய்ந்தேன். அவருக்கு அரசு வேலை கிடைப்பதற்கான அம்சங்கள் மிகக் குறைவாகவே இருந்தது.

ஆனால், அதை குறிப்பிட்டு அவரின் அரசு வேலை நம்பிக்கையைக் குலைக்க விரும்பவில்லை. வேலையின் தன்மை என்ன சம்பளம் எவ்வளவு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு என்னை அழைக்கும்படி தொலைபேசி எண்ணைக் கொடுத்தேன்.

மலேசிய எண் என்பதால் வெறும் அழைப்பு மட்டும் விடுத்தால் போதும். நான் பேசுகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

நேற்று என்னை அழைத்தார். நான் பேசினேன். அப்போது அவர் கூறிய விபரங்கள் என்னை ஆச்சரியத்தில் மட்டுமல்ல... அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

இளநிலை உதவியாளர் என்றால் அலுவலகத்தில் எழுத்தர் பணி. இதற்கு உரிய ஆரம்பநிலை ஊதியம் 7000 இந்திய ரூபாயாம். மேலும் ஒப்பந்த அடிப்படையில்தான் பணி நியமனம் கிடைக்குமாம்.

ஆகவே, மிகப்பெரிய தொகையை லஞ்சமாகக் கொடுத்து பணியில் சேர விரும்பவில்லை. வேறு என்ன செய்யலாம் என கேட்டிருந்தார்.

ஆக, 6 லட்சம் ரூபாய் கடனாகவும் உதவியாகவும் தயார் செய்யக்கூடிய தரத்தில் அவர் இருப்பதை நான் உணர்ந்தேன். அதனால், அவருக்கு மாற்று ஆலோசனை ஒன்றைத் தெரிவித்தேன்.

அவருடைய ஜாதகத்தில் பூமிகாரகனான செவ்வாயும் இரும்புக்குப் பிரியமானவனான சனியும் சற்று சாதகமாக இருக்கிறார்கள்.

ஆகவே, லஞ்சம் கொடுத்து இரும்பு சம்பந்தமான வேலையில் சேர்வதை விட அதே தொகையை வைத்து இரும்பு, மின்சாதனப் பொருட்கள் விற்கும் சின்னக் கடையைத் திறக்குமாறு கூறினேன். அப்படிச் செய்தால் மூன்று ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றும் கிடைக்கும். இது உறுதி என அவருக்கு ஊக்கம் கொடுத்தேன்.

ஏற்கனவே அவருக்கு மின்சாதனப் பொருட்கள் விற்பதில் அனுபவம் இருப்பதாக தெரிவித்தார். சுமார் 5 ஆண்டுகள் ஒரு கடையில் வேலை பார்த்திருக்கிறார்.

என்னுடைய ஆலோசனைப்படி நடப்பதாகத் தெரிவித்தார். தை மாதத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து கடைக்கு முன்பணம் கொடுக்க ஆவன செய்வதாகச் சொன்னார்.

அவர் பேச்சில் இருந்த நம்பிக்கை அவருக்கு கண்டிப்பாக வெற்றியைக் கொடுக்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல... தீர்க்கதரிசனமான கணிப்பும் கூட.

6 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்து அடிமை வேலை பார்ப்பதை விட அதே தொகைக்கு முதலாளியாக உயர்ந்து மற்றவர்களிடம் வேலை வாங்குவது சாலச் சிறந்தது அல்லவா..


No comments:

Post a Comment