Thursday, 1 January 2015

பணம் இருந்தால் திருமணம் நடந்து விடுமா?

ஏராளமாக பணம் இருந்தால் எல்லா வகையான இன்பங்களையும் அடைந்து விடலாம் என பெரும்பாலான மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அது எந்தளவுக்கு உண்மை... சாத்தியம். இக்கரைக்கு அக்கறை பச்சை என்பதைப் போலத்தான் இந்த எண்ணமும்.

பணம் படைத்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வாழ்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. ஒரு மருத்துவருக்குத்தான் தெரியும் உலகத்தில் எத்தனை வகை நோய் இருக்கிறது என்று.

ஆளைப் பார்த்தால் ஆறடி உயரத்தில் ஆஜானபாகுவாக இருப்பார். ஆனால், 100 மீட்டர் வேகமாக நடந்தால் 200 தடவை இழுத்து மூச்சு விடுவார். கொஞ்ச நேரத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்.

சிலர் சீக்குக் கோழி போல தெரிவார்கள். ஆனால், இவர்களுக்கும் நோய்க்கும் நெடுந்தூரம். இவர்களிடம் நோய் நெருங்கவே பயப்படும்.

ஆகவே, பார்த்த மாத்திரத்திலேயே ஒருவரின் வாழ்க்கையை பாகுபடுத்திப் பார்த்து விட இயலாது. உண்மை நிலையை உணர்ந்து கொள்ள முடியாது.

என்னிடம் வருகின்றவர்களின் வாழ்க்கைக் கதைகள் பல வியப்பான விஷயங்களை எனக்கு வெளிப்படுத்துகின்றன.

இப்படியும் இருக்குமா... நடக்குமா... என சில பிரச்சினைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன.

செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து... வசதிக்கு பஞ்சமில்லாத குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு மாது என்னைச் சந்தித்தார்.

இரண்டு ஆண்கள்.. ஒரு பெண்.. ஒரு மகனுக்கு திருமணம் ஆகி அமெரிக்காவில் வசிக்கிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள்.

மகளுக்கும் கல்யாணம் ஆகி அவரும் அமெரிக்காவில்தான் வாழ்கிறார். மூன்றாவது மகனும் அமெரிக்காவில்தான் வேலை பார்க்கிறார்.

கடைசிப் பையனுக்கு மட்டும் கல்யாண வைபவம் கண்ணாமூச்சி காட்டுகிறது. பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை.

ஒரு பெண்ணை பேசி முடித்து அந்தா.. இந்தா.. என்று திருமண நாள் நெருங்கும்போது பெண் பின்வாங்கி விட்டார்.

பெண்கள் வெறுத்து ஒதுக்குமளவுக்கு மாப்பிள்ளை அசிங்கமாக இல்லை. கண்ணுக்கு லட்சணமாக எழில் குறையாத நிலையில்தான் இருந்தார்.

ஏழாம் இடமும் எட்டாமிடமும் பாதிக்கப்பட்டிருந்தது. காளசர்ப்பதோஷம் வேறு அனைத்து கிரகங்களையும் முடக்கி வைத்திருந்தது.

வானளாவ வசதி இருந்தும்... படி வைத்து ஏறி பணத்தை எடுக்கும் அளவுக்கு செல்வம் இருந்தும் பிள்ளைக்கு திருமணம் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருந்தது.

மேலும், அந்த அம்மாவின் குடும்ப வாழ்க்கை வெறும் 16 வருடம்தான். பூத்துக் குலுங்கி புதுவாசம் பரப்பி மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய வயதில் பூவையும் பொட்டையும் இழந்திருக்கிறார்.

என்னைப் பற்றி ஏனோதானோவென்று நினைத்து மகனின் ஜாதகத்தைக் கொடுத்த அவர், என் கணிப்பையும் சொன்ன கருத்தையும் பார்த்து பெரிய மகன் பேரன் பேத்திகள், மகள் மருமகன் ஜாதகங்களையும் கொடுத்தார்.

எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கை அருகுபோல் வேரோட வேண்டிய நேரத்தில் கருகிப் போனதற்கும் மகனுக்கு திருமணம் தள்ளிப் போவதற்கும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறீர்கள்.

எனக்கு பூரண தெளிவு பிறந்திருக்கிறது. இதுவரை என்னைக் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்த கவலையின் கனம் குறைந்திருக்கிறது என்று சொல்லி நான் எதிர்பார்த்ததை விட காணிக்கையை பல மடங்கு கொடுத்தார்.

நான் மறுத்தும் கேட்கவில்லை. வாங்கிக் கொண்டால்தான் மனம் திருப்தி கொள்ளும் என்று பிடிவாதமாக பாசத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது ஒரு பெண் அமைந்திருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார். குவைத் நாட்டில் வேலை பார்ப்பதாகச் சொல்லி ஜாதகத்தையும் அனுப்பி வைத்தார்.

பெண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தம் உள்ளது. பெண்ணின் ஜாதகத்தில் உள்ள குறை பாதிப்பைச் சமப்படுத்தி நிற்கிறது.

கண்டிப்பாக நான் கல்யாணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.. அவ்வளவு பெரிய பணக்கார மாது அவ்வப்போது என் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடக்கிறார்.

கஷ்டமும் கவலையும் எளியவர்களுக்கு மட்டுமல்ல... பணம் படைத்த வலியவர்களுக்கும் உண்டு. எல்லாம் இறைவன் செயல்.No comments:

Post a Comment