Saturday, 3 January 2015

தொடாமல் தொடர்ந்த முப்பது வருடக் காதல்

ஆழ்கடலில் மூழ்கினால் ஆச்சரியங்கள் பலவற்றைச் சந்திக்கலாம் என ஓர் அறிஞர் சொல்லி இருக்கிறார். வாழ்க்கையும் அப்படித்தான்.

நான் அடியவர்க்கும் அடியவன். இருப்பினும் என்னை நம்பி ஒவ்வொரு நாளும் பலர் வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் இன்னல்களையும் குறிப்பிடுகிறார்கள்.

அவற்றில் சில என்னை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்று இருக்கின்றன. இது சாத்தியம்தானா என்று சிந்திக்க வைத்திருக்கின்றன.

சுமார் 55 வயது மதிக்கத்தக்க மாது. திருமணமாகி மூன்று குழந்தகளுக்குத் தாய். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

பொருளாதாரத்திலும் குறைவில்லை. இருப்பினும் அவர் மனதில் நெருஞ்சி முள்ளாய் உருண்டு கொண்டிருந்த ஒரு பிரச்சினையை என்னிடம் மனம் விட்டு சொன்னார்.

இவருக்கு திருமணம் ஆன புதிது. கணவர் மேல் காதல் இல்லாவிட்டாலும் வெறுப்பு இல்லை. இவர் படித்தவர். இவருடைய கணவனுக்கு படிப்பறிவு இல்லை.

இருந்தாலும் தன்னைத் தவிர உலகத்தில் யாரும் அறிவாளி இல்லை என்பது கணவரின் எண்ணம். தோற்றப் பொருத்தத்தில் இருவருக்கும் மிகப் பெரிய இடைவெளி.

இந்த நிலையில் அந்தப் பெண்ணின் பெரிய மாமனார் மகன் மீது இனம் தெரியாத ஈர்ப்பனிந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டு விட்டது. இரு வீட்டுக்கும் பேச்சு வார்த்தை இல்லை.

சுமார் நான்கு வருடங்களாக அந்தப் பையனை நினைத்து மனதில் மருகிக் கொண்டிருந்திருக்கிறார். அதற்கு பின்னர் இவர்கள் பேசிக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

தனியாக சந்திக்க வேண்டும் என்று அந்தப் பையனுக்கு தூது அனுப்பி இருக்கிறார். சந்திக்க சம்மதம். ஆனால், எந்தக் காரணம் கொண்டும் என்னைத் தொடக்கூடாது என்பது அந்தப் பையன் விதித்த நிபந்தனை.

இவனுக்கு என்ன பைத்தியமா.... அழகான பெண் அழைக்கிறார். தொடக்கூடாது என நிபந்தனை விதிக்கிறார். தூது போனவருக்கு ஆச்சரியம்.

இருவரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அந்தக்காலகட்டத்தில் இரு குடும்பமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி சிதைந்து போயிருந்தது. இதற்கிடையில் பையனுக்குத் திருமணம் ஆனது. குழந்தைகளும் பிறந்தன.

இருந்தாலும் இவர்கள் உறவு மட்டும் வாடிப் போகவில்லை. வடிவம் மாறவில்லை. இனிமை குறையவில்லை. இளமை குன்றவில்லை.

தாலி கட்டியர் இன்னொருவராக இருந்தாலும் இவரைத் தான் கணவனாக எண்ணி வாழ்ந்து வந்திருக்கிறார்.

இருவருக்கும் சம வயது. இரு குடும்பத்தவரும் மன முரண்பாடு இல்லாமல் உறவுகளைப் பேணி காத்து வருகின்றனர். இதுவரை இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளவில்லை என்பது வியப்பான உண்மை.

சின்ன கண்ணீர் முத்து விழியோரத்தில் எட்டி பார்க்க அந்தப் பெண் சொன்ன இந்தக் கதையில் துளியளவும் பொய் இல்லை என்று என் மனம் அறிவுக்கு அறிவுறுத்தியது.

இப்பொழுது இவர் கேள்வி என்ன தெரியுமா.... தாலி கட்டியர் ஒருவர் இருக்க... இன்னொருவரைக் கணவராக வரித்து வாழ்ந்து விட்டேனே.. இதற்கு என்ன காரணம்.

நான் செய்தது தவறா.. அல்லது என் ஜாதக  அமைப்பு இப்படித்தான் இருந்ததா... விடைகூறுங்கள் சாமி என்று கேட்டார்.

ஜாதகத்தை மிக அணுக்கமாக ஆராய்ந்தேன். இன்னும் சில அம்சங்களை வைத்து ஆய்வு செய்தேன். அதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தேன்.

அந்தப் பெண்ணுக்கு இரு மண அமைப்பு. போன ஜென்மத்தில் இந்தப் பெண்ணும் அந்தப் பையனும் கருத்தொருமித்த கணவன் மனைவியாக இருந்திருக்கிறார்கள்.

இந்தப் பிறவியில் உறவினர்களாக பிறந்திருக்கிறார்கள். அதனால்தான் மலேசியாவில் மலாக்கா மாநிலத்தில் பிறந்த இந்தப் பெண் இந்தியாவில் திருமணமாகிச் சென்றிருக்கிறார்.

அங்கு அந்தப் பையனைச் சந்தித்து இருக்கிறார். போன ஜென்மத்தின் நினைவு பூரணமாக வராவிட்டாலும் அதன் விட்ட குறை தொட்ட குறையாக இவர்களின் உறவு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவரங்களை எடுத்துக் கூறி அவர் மனதைப் பிசைந்து கொண்டிருந்த பிரச்சினையைக் கிள்ளி எறிந்தேன்.

இதயம் முழுக்க கனத்துக் கொண்டிருந்த சுமையை இறக்கி வைத்த மகிழ்ச்சியோடு என்னிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார்.

மகா பாரதத்தில் ஐவருக்கு மனைவியான பாஞ்சாலி கூட கணவன்மார்களை ஆண்டுக்கு ஒருவராக மகிழ்வித்தார்.

இந்தப் பெண்ணோ உள்ளத்தால் நினைந்து உடலால் விலகி உறவைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கிறார். எல்லாம் இறைவன் செயல்.
 

No comments:

Post a Comment