Thursday 29 October 2009

விதவைக்கு வாழ்வு தரும் ஜாதக அமைப்பு

ஒரு பெரியவரை மகா பெரியவராக பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு ஒரு முறை ஏற்பட்டது. 65 வயது மதிக்கத்தக்க பெரியவர் என்னை ஒரு நாள் சந்தித்தார். அவர் மூன்று ஜாதகங்களை எடுத்து வந்திருந்தார்.ஆண்களின் ஜாதகம் இரண்டு. பெண்ணின் ஜாதகம் ஒன்று.





வைத்தியம் பார்க்கப் போகும் ஒருவர், மருத்துவரிடம் "எனக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை நீங்களே கண்டுபிடித்துச் சொல்லுங்கள்" என்று அடம்பிடிப்பதைப் போல் சிலர் ஜாதகத்தைக் கொடுத்து விட்டு ஜோதிடரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள் ஆற்றோரம் இருக்கின்ற சாமியாரிடம் குறி கேட்கப்போன குப்புசாமியைப்போல.

இவர் அப்படி இல்லை. " ஐயா.. இது என் மூத்த மகனோட ஜாதகம். படகில போகும்போது தவறிவிழுந்து இறந்துட்டான். அந்தச் சம்பவம் மனைவி கண்ணு முன்னாடியே நடந்திருச்சு. என்னோட மருமக தங்கமான பொண்ணு. அதை பூ இல்லா... பொட்டு இல்லா.. என்னால பாக்க முடியலை. இந்த சின்ன வயசில வாழ்க்கையை தொலைக்கிறதை என்னால நினைச்சுக்கூட பாக்க முடியலை.

அதனால என் இளைய மகனுக்கே திருமணம் செஞ்சு வச்சிடலாமுன்னு நினைக்கிறேன்.

இது இளையவனோட ஜாதகம். இது என் மருமகளோட ஜாதகம்" என்று மூன்று ஜாதகங்களையும் கொடுத்தார்.

வியாதி என்னவென்று விளக்கமாகத் தெரிந்துவிட்டதால் அதன் தன்மையையும் பாதிப்பையும் பார்க்கும் வேலை மட்டுமே பாக்கி இருந்தது. இறந்தவருக்கு ஆயுள் ஸ்தானத்தில் தேய்பிறைச் சந்திரன். அதோடு பாபர்களின் கொடூரமான பார்வையை வேறு கொண்டிருந்தான்.

இலக்கனாதிபதி நீச ஸ்தானம் ஏறி இருந்தான். இப்படிப்பட்ட அமைப்பு உடைய சாதகத்தை அவமிருத்த யோகம் கொண்டது என ஜோதிட ஞானிகள் குறிப்பிடுவர்.

அவமிருத்த யோகம் என்பது அகால மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. எட்டாம் இடம் என்ன ராசி, அதில் எந்தக் கிரகம் இருக்கிறது என்பதைப் பொறுத்து அவர் தீயினால் மடிவாரா..ஆயுதங்களால் தாக்கப்பட்டு மரணமடைவாரா... தண்ணீரில் உயிரை விடுவாரா.. என கணிக்கலாம்.

இளைய மகனின் லக்கனம் மகரம். கடகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து இருந்தனர். அந்தப் பெண்ணுக்கு எட்டாமிடத்தில் செவ்வாய். 2இல் ராகு 8-இல் கேது.

இப்படி பார்த்த வகையில் இருவருக்கும் திருமணத்தை செய்து வைக்கலாம் என்று சொன்னேன். மேலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தை கேட்டீர்களா என வினவினேன்.

"முதலில் பிடிவாதமாக மறுத்தாள். நீ இதற்கு ஒப்புக் கொள்ளலைனா.. என் மகன் போன இடத்துக்கே நானும் போயிருவேன்ன்னு சொன்னதும் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

இளையவனும் எந்த மறுப்பும் சொல்லலை . என் மருமகள் சந்தோசமா இருக்கணும். அதுதான் எனக்கு வேணும்" இப்படிச் சொல்லும் போது பெரியவரின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் சிதறின.

"கவலைப்படாதீர்கள் ஐயா.. உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்" என்று சொல்லி அனுப்பினேன். இப்போது அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்துகிறார்கள்.

ஒரு முக்கியமான விஷயத்தை ஆரம்பத்தில் சொல்ல மறந்து விட்டேன். அந்தப் பெண்ணுக்கு கணவன் இறக்கும் போது ஒரு வயதில் பெண் குழந்தை இருந்தது. இப்போது புதுவரவாக ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. எந்த வேறுபாடும் இல்லாமல் இரண்டு குழந்தைகளும் பாசத்தோடு வளர்கிறார்கள்.

*** ஓர் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து ஏழாம்பாவத்தில் இருந்தால் அவன் ஒரு விதவையை மணம் புரிய வேண்டிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday 28 October 2009

கணவனைப் பிரிக்கும் 8-ஆம் இடத்து செவ்வாய்


புருசனை மதிக்காத அந்தப் பொண்ணுக்கிட்ட இந்த விஷயத்தைத்தான் சொன்னேன். "இங்க பாரும்மா... அவரோட ஜாதகப்படி இரண்டு தாரம். உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. புத்தி தடுமாறி இந்த வீணா போன டிவி நாடகங்களைப் பாத்து... அதுமாதிரி நடக்க நினைச்சு... வாழ்க்கையைக் கெடுத்துக்காதே.

உன்னோட இடத்துக்கு வேற ஒருத்தி வந்துட்டான்னா.. அப்புறம் தலைகீழா நின்னாலும் இதுமாதிரியான வாழ்க்கை கிடைக்காது"ன்னு சொன்னவுடன் அலறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்தாள்.

அந்தப் பெண்ணுக்கு லக்கனத்துக்கு இரண்டில் சனி. இதைச் சொல்லி " நீ அடங்கி நடக்காவிட்டால் அடுத்து வருகிற தசாபுத்தியில் நீ வாழ்க்கையை இழந்து விடுவாய்.

உன்னுடைய முட்டாள்தனமான நடவடிக்கைகளால் பூனையாக இருக்கும் கணவனை புலியாக மாற்றி விடாதே. அப்புறம் உன்.கதி அதோகதிதான்" என எச்சரித்தேன்.

சில நேரங்களில் அதிர்ச்சி வைத்தியம் நன்றாக வேலை செய்யும் என்பதை நன்கு அறிவேன். இப்போது பிரச்சினை இல்லாமல் குடும்ப வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது என்னிடம் ஆலோசனை கேட்டுக் கொள்கிறார்கள். ஒரு குடும்பத்தை சேர்த்து வைத்த நிம்மதி எனக்கு.

சின்ன ஜோதிட குறிப்பு: ஒரு பெண்ணின் லக்கனம் கும்பம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு எட்டாம் இடம் கன்னி. இதில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லை என்றால் அந்தப் பெண், நிரந்தரமாக கணவனைப் பிரிந்து விடுவாள் என்பது ஜோதிட விதி.

Monday 26 October 2009

பேய் அடிக்கவில்லை... பெண்டாட்டிதான் அடித்தாள்....

ஒரு நாள் நான் அலுவலகத்தை விட்டு கிளம்பிக் கொண்டிருந்தேன். ஒரு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் தயங்கித் தயங்கி என்னுடைய அறைக்குள் வந்தார்.


"சார் எனக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு குழுந்தைகள். வாழ்க்கையில் எனக்கு நிம்மதியே இல்லை. சாகலாம் போல் இருக்கிறது" என்றார்.

"கற்களும் முட்களும் நிறைந்ததுதான் வாழ்க்கைப் பாதை. அதைத் ஏற்றுக்கொண்டு கடப்பதுதான் இல்லறம். இராமாயணத்தில் ராமனும் மகாபாரதத்தில் தருமனும் படாத கஷ்டமா..." என்று ஆறுதல் கூறினேன்.

"ஆறுதல் சொல்வது சுலபம். அனுபவிப்பவனுக்குத்தானே தெரியும் கஷ்டம்" என்று வாய்க்குள் முணுமுணுத்தது எனக்கு கேட்டது. ஆனால், பரிதாபமாக பார்த்தார்.

"என்ன தம்பி... பிரச்சினையைச் சொல்லுங்கள். எதற்காக பேய் அடித்தது போல் இருக்கிறீர்கள்" என்றேன்




" பேய் அடிக்கவில்லை சார்.. என் பெண்டாட்டிதான் தினமும் என்னை அடிக்கிறாள்" சொல்லும் போது அழுதே விட்டார்.

கதை இதுதான். இவருடைய மனைவி ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவள். இவர் வசதியான குடும்பம். வரதட்சணை எதுவும் கேட்கவில்லை. தன்னையும் அம்மாவையும் கவனித்துக் கொண்டால் போதும் என்று நினைத்தார். அதே நேரத்தில் மனைவி மீது உள்ள அன்புக்கும் குறைவில்லை.

மாமியாரும் மருமகளை மகளாகவே நினைத்தார். ஆனால், அந்தப் பெண்ணோ யாரையும் மதிப்பதில்லை. ஏதாவது பேசினால் கணவனின் கன்னத்தையே பதம் பார்த்து விடுகிறாள்.

இப்போது இது போன்ற பிரச்சினைகள் பலவீடுகளில் இருப்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். அவருடைய ஜாதகத்தையும் மனைவியின் ஜாதகத்தையும் பார்த்தேன். இவர் மனுச கணம். அந்தப் பெண் ராட்சஷ கணம். வசியப் பொருத்தம் இல்லை. மேலும் சில பாதிப்புகள் இருந்தது.

அவரிடம் நிலவரத்தைக் கூறி சிறிது நாட்கள் அமைதியாக இருக்கும்படி சொல்லி... அவருடைய வீட்டுத் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தேன்.

இந்தக் குடும்பத்தில் உள்ள பிரச்சினையை எப்படியாவது களைந்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆகவே, சில நாட்கள் கழித்து அவருடைய வீட்டுக்கு போன் செய்து அந்தப் பெண்ணிடம் பேசினேன். என்னை வந்து பார்க்கச் சொன்னேன்.

முதலில் ஏன்... எதற்கு என்று கேட்டு முரண்டு பிடித்தார். உங்கள் இருவரின் ஜாதகத்தை பார்த்தேன். உங்களிடம் முக்கியமாக ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்று சொல்லி விட்டு 'இதுதான் அந்த விஷயம். என ஒன்றைக் குறிப்பிட்டேன்.

அவ்வளவுதான் "எப்பொழுது வரட்டும் ஐயா" என உடனே ஒப்புக்கொண்டாள். அந்தக் குடும்பத்தில் எப்படி அமைதி மலர்ந்தது என்பதை அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன்.

Thursday 22 October 2009

பிடிவாதமே பிரச்சினைக்கு மூல காரணம்

கணவனுக்கு மனைவி மீது பாசம். மனைவிக்கு கணவன் என்றால் கொள்ளை பிரியம். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது.





எதுக்கு எடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியாக முட்டிக் கொண்டார்கள். வேலை விட்டு கணவன் எப்போது வருவான் என்று மனைவி ஆசையோடு பார்த்துக் கொண்டிருப்பாள். மனைவியைக் காண கணவன் ஓடி வருவான்.

ஆனால், வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே ஏதாவது பிரச்சினை குறித்து சண்டை நாறத் தொடங்கி விடும். ஏண்டா கல்யாணம் செய்து கொண்டோம் என தனித்தனியாக படுத்துக் கொள்வார்கள்.

ஒருநாள் என்னைப் பார்க்க வந்தார்கள். இருவரின் ஜாதகத்தைப் பார்த்தேன். வசியப் பொருத்தம், கணப்பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் முரண்பட்டு இருந்தது.

மருத்துவரிடம் செல்கிறோம். அவர் சர்க்கரை வியாதி இருக்கிறது. இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார். நாம் அதன் படி நடந்தால் பிரச்சினை இல்லை. மீறி இனிப்பு சாப்பிட்டால் இதய நோய் வரும். புண் வந்தால் ஆறாது. கை கால்களை அகற்றவேண்டி வரும். கண்பார்வை பறிபோகும். சில வேளைகளில் உயிருக்கும் ஆபத்து.

அது மாதிரிதான் ஜாதகமும். எந்தக் கிரகத்தால் பாதிப்பு. எந்த அம்சத்தில் பொருத்தக் குறைவு என்பதை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் நம்மை மாற்றிக் கொண்டால் வாழ்க்கை சுமூகமாக போகும். இல்லை என்றால் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு மனநோயாளியாகத் திரிய வேண்டியதுதான்.

இதைத்தான் அந்த ஜோடியிடம் எடுத்துச் சொன்னேன்.

அந்தப் பெண்ணுக்கு முன்கோபம் ஜாஸ்தி. அளவு கடந்த ஈகோ. வியாதி தெரிந்த பின்னரும் விட்டுக் கொடுத்துப் போகும் பக்குவம் இல்லை. இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இதனால், அந்த ஆணுக்கு பெரிய பாதிப்பு இல்லை. இப்போது நிம்மதியாக இருக்கிறார் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு. அந்தப் பெண்தான் பாவம். ஆதரவின்றி அல்லாடிக் கொண்டிருக்கிறார். பிறந்த வீட்டிலும் ஒதுக்கி விட்டார்கள். பிடிவாதம் என்பது வாத நோயைவிட கொடுமையானது.

இன்று எத்தனையோ வீடுகளில் இந்த ஜோடியைப்போல எலியும் பூனையுமாக கீரியும் பாம்புமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் விட்டுக் கொடுத்து (இருவரும்) போனால் வசந்தம் வாசல்படியிலே மண்டியிட்டு படுத்திருக்கும் என்பது  மறுக்கமுடியாத உண்மை.

Tuesday 13 October 2009

செவ்வாய் தோஷத்துக்கு அல்வா கொடுத்தவர்கள்

கடந்த முறை சொன்ன ஜாதகம் இதுதாங்க. லக்கனமும் ராசியும் கடகம். 5-இல் ராகு. 8-ல் குரு. 9-இல் சனி. 10-இல் புதன். 11-இல் சூரியனும் கேதும். 12-இல் சுக்கிரனும் செவ்வாயும்.


இவர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவர். சமீபத்தில் ஒரு ஜோதிடரைப் பார்த்திருக்கிறார். அவர், " உங்களுக்கு ஏழரைச்சனி. இது மூன்றாவது சுற்று. மாரகத்தை ஏற்படுத்தலாம். கடுமையான செவ்வாய் தோஷம். மனைவி இருக்க முடியாது. புத்திர ஸ்தானத்தில் ராகு. அதனால் பிள்ளைகளுக்கு வாய்ப்பு குறைவு" எனச் சொல்லி இருக்கிறார்.

அவ்வளவுதான் மனிதர் ஆடிப்போய் விட்டார். என்னைப் பற்றி கேள்விப்பட்டு அலுவலகத்தில் வந்து சந்தித்தார். நான் அவருடைய ஜாதகத்தைப் பார்த்தேன். ஆயுள் ஸ்தானத்தில் குரு இருப்பதாலும் ஆயுள் ஸ்தானாதிபதியும் ஆயுள்காரகனுமான சனி குரு வீட்டில் இருந்து பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் ஆயுள் பங்கம் வருவதற்கு வாய்ப்பில்லை என அவரிடம் கூறினேன்.




அதே நேரத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை. 12-ஆம் இடத்து ஆதிபத்தியம். லக்கனத்தில் சந்திரன் சொந்த வீட்டில் இருப்பது ஒரு வகையில் நல்லது என்றாலும் லக்கனத்திலேயே மாந்தி. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சர்ப்ப கிரகம். இப்படி பல பாதிப்புகளைக் கூறலாம்.

அவர் ஆசிரியராக இருந்தவர். மூன்று பிள்ளைகள். உயர்ந்த படிப்பு படித்திருக்கிறார்கள்.

இதுவரை கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் மனைவியும் உடன் வந்திருந்ததால் பலமுறை என்னுடைய சந்தேகங்களை உறுதிப்படுத்த முடிந்தது.

ஆயுள்பங்கம் இல்லை என்று நான் சொன்னவுடன் அவர் கேட்ட அடுத்த கேள்வி, " எனக்கு அதிர்ஷ்ட வகையில் பணம் வர வாய்ப்பு இருக்கிறதா?"

எனக்கு சிரிப்புத்தான் வந்தது. "இதுவரை ஆண்டவன் நோய் நொடி இல்லாமல் வைத்திருக்கிறானே... அதுவே உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். இதைவிட உங்களுக்கு என்ன வேண்டும்" என்று சொல்லி விட்டு கண்ணதாசன் மொழி மாற்றம் செய்த பஜகோவிந்தம் பாடலில் உள்ள 'பாடிடுக...பாடிடுக.. பரந்தாமன் மெய்புகழை என்ற பாடலில் உள்ள "சந்ததமும் பாடுபடு...வந்தவரை நிம்மதி கொள் தங்குவது தெய்வ யோகம்" என்ற வரியை அவருக்கு விளக்கினேன்.

அவருடைய மனைவிக்கு மிகுந்த சந்தோஷம். கனத்த இதயத்தோடு வந்தவர்கள், சிரித்த முகத்தோடு கிளம்பினார்கள். இந்த ஜாதகத்தை அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் காட்டி செவ்வாய்தோஷ அமைப்பு பற்றி கேட்டேன்.

"இது பாதிப்பான ஜாதகம்தான். நம்முடைய கணக்கு.... இறைவனின் கணக்குக்கு முன்னால் எம்மாத்திரம்" என்று விளக்கம் தந்தார். நான் மிக மிகச் சிறியவன் அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டேன்.

12- இடத்து செவ்வாய் நிலையற்ற வாழ்க்கையை அமைத்துத்தருவான் என்பது ஜோதிட ஞானிகளின் கருத்து. விட்டுக் கொடுத்து நடந்தால் அந்தக் கருத்தையும் பொய்யாக்கி வெற்றிகரமாக வாழலாம் என்பதை மேற்கண்ட ஜாதகம் எனக்கு உணர்த்தியது.

பிடிவாதத்தால் வாழ்க்கையைத் தொலைத்த ஒரு தம்பதியரின் கதையை அடுத்து கூறுகிறேன்.

* படம் பார்வைக்கு மட்டும்

Monday 12 October 2009

உறவைப் பிரிக்கும் செவ்வாய் தோஷம்

என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண். சுறுசுறுப்பு பரபரப்பு இரண்டும் அவளிடம் அதிகம். ஆனால், சில நேரங்களில் எதையோ பறி கொடுத்தது போல் ஆகி விடுவாள்.


வேலையில் கவனம் போய் விடும். இந்தக் காலத்தில் கைத்தொலைபேசியும் காதலும் இல்லாத பெண்கள் மிகக்குறைவு. அதனால் காதல் பிரச்சினையாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

ஒரு நாள் அவளிடம் இது பற்றி கேட்டேன்.

" நான் ஒருவரை விரும்புகிறேன். அவரும் என்னை நேசிக்கிறார். ஆனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது. அதுதான் பயமாக இருக்கிறது. எங்கள் இருவரின் ஜாதகத்தை பார்க்க முடியுமா" என்றாள்.




"காதலும் மோதலும் சகஜம்தானே...காலப்போக்கில் சரியாகி விடும்" என்றேன். ஆனால் அவள் பிடிவாதமாக இருந்தாள்.

ஒரு நாள் மாலை வேலையில் அந்தப் பையனை அலுவலகத்துக்கு வரச்சொன்னேன். இருவரின் ஜாதகத்தையும் கணித்துப் பார்த்தேன்.

அந்தப் பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய். லக்கனத்தில் சூரியன். பையனின் ஜாதகத்தில் தோஷமில்லை. இருந்தாலும் மூன்றாம் இடத்தில் ராகுவோடு சந்திரன். இது அடிக்கடி உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மையை ஏற்படுத்தும்.

ஆனால், இதையெல்லாம் அவர்களிடம் சொல்லாமல் " வாழ்க்கைக்கு புரிந்துணர்வு முக்கியம். நீங்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்தால் பிரச்சினை இல்லாமல் வாழலாம்" என்றதோடு பல அறிவுரைகளையும் கூறினேன். காதலித்த பின்னர் கணக்கு போடுவதில் என்ன லாபம்.

அவருக்கும் திருமணம் நடந்தது. திருமண விழாவில் நானும் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினேன். அந்தப் பெண்ணும் வேலையை ராஜினாமா செய்து விட்டு போய் விட்டார்.

சுமார் ஒரு வருடம் கழித்து எனக்கு போன் செய்தார். "கணவருக்கும் எனக்கும் ஒத்து வரவில்லை. நாங்கள் பிரிந்து விட்டோ ம். இப்போது தகவல் நுட்பத்துறையில் மேல்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சரியாக எங்களுக்கு பொருத்தம் பார்க்கவில்லை" என்று சொல்லி அழுதார்.

ஜாதகத்தை விட காதல் வலிமையானது என்று நினைத்தேன். ஆனால் ஏறுக்குமாறாக நடந்து விட்டது.

முதலிலேயே சொல்லி இருக்கலாமோ என்று என்னுடைய மனம் வலித்தது.

காதலர்களே, உங்களுடைய ஜாதகத்தை ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். பிரிந்து போவதற்கு அல்ல, புரிந்து நடந்து வாழ்வதற்கு.

அதேவேளையில், செவ்வாய் தோஷமுள்ள ஜாதகம். இவர்கள் சேர்ந்து வாழ்வது கடினம் என்று ஜோதிடரால் சொல்லப்பட்ட ஒரு ஜோடி. இன்றும் இணைந்து வாழ்கிறார்கள். அந்த நபருக்கு வயது 72. அம்மையாருக்கு வயது 65. இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்களைச் சந்தித்தேன்.அடுத்து அவர்களைப் பற்றி எழுதுகிறேன்.

Friday 9 October 2009

ஜெயலலிதாவும் சனி பகவானும்

இதுவரை கொட நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா சென்னை திரும்பப் போகிறார். அதிமுக தொண்டர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அதிமுக இருக்கிறதா காணாமல் போய்விட்டதா என்று கேட்கும் நிலையில் இருக்கும்போதும் ஏன் ஜெயலலிதா மௌனமாக இருந்தார்.


எல்லாம் அவருக்கு நடக்கும் ஏழரைச் சனிதான். அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கத்தான் அவர் எல்லாரையும் விட்டு ஒதுங்கி இருந்தார்.

ஜெயலலிதா 24-2-1948-இல் பிறந்தவர். இவருடைய நட்சத்திரம் மகம் 1-ஆம் பாதம். நட்சத்திரத்துக்கு அதிபதி கேது. ராசி சிம்மம். இவர் ஏழரைச் சனியில் பிறந்தவர். ராசிக்கு 12-இல் சனி. இப்பொழுது ஏழரைச் சனியின் கடைசி பாகத்தில் இருக்கிறார்.




சிம்மத்தின் அதிபதி சூரியன். சனிக்கும் சூரியனுக்கும் எப்போதும் ஆகாது. இதில் வேடிக்கை என்னவென்றால் சூரியனுக்கு பிறந்தவர்தான் சனி. சூரியனின் மனைவி பெயர் சம்ஞா. சூரியனுக்கும் சம்ஞாவுக்கும் பிறந்தவர் யமன்.

என்னதான் அன்பு மனைவியாக இருந்தாலும் சூரியனின் வெப்பத்தை சம்ஞாவால் தாங்க முடியவில்லை. அதனால் தன்னுடைய நிழலை ஒரு பெண்ணாக (அதன் பெயர் சாயா.... கவனிக்க பாபா படப் பாடல், சாயா... சாயா... மாயா...மாயா...) படைத்து சூரியனிடம் தள்ளிவிட்டு தந்தை வீட்டிற்கு போய்விட்டாள்.

இந்த சாயா தேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவர்தான் சனி. ஒரு கட்டத்தில் பங்காளிச் சண்டை முற்றி சனியை யமன் எட்டி உதைக்க சனிக்கு கால் ஒடிந்து விட்டது. அதனால் சனி நொண்டி நொண்டி மெதுவாகத்தான் நடப்பார். ஆகவே அவருக்கு சனைச்சரன் ( மெதுவாக நடப்பவன்) என்று பெயர்... ராசி மண்டலத்தில் சூரியனைச் சுற்றி வர சனிதான் அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. அதாவது 30 ஆண்டுகள்.

இப்படி பலவிதங்களில் பாதிக்கப்பட்டதால் சூரியன் மீது சனியனுக்கு அடங்காத கோபம். அதனால்தான் சிம்ம ராசிக்காரர்களை எழரைச் சனி காலத்தில் சனிபகவான் படாத பாடு படுத்தி விடுகிறார்.

ஏழரைச் சனி காலத்தில் சனியனோடு மல்லுக்கட்டாமல் சற்று ஒதுங்கி இருந்தால் அவர் சற்று கரிசனமாகவே கஷ்டத்தைக் கொடுப்பார். ஆகவே, எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு ஜெயலலிதா கொட நாட்டில் ஓய்வெடுத்தார்.

இந்தச் சுற்றில் சனியின் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இருந்தாலும் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் மகம் ஒன்றாம் பாதத்திற்கு அதிபதி செவ்வாய் .போர்க்குணம் கொண்டவர். இவர் யாருக்கும் மடங்கிப் போக விடமாட்டார். இதுதான் ஜெயலலிதாவுக்கு இருக்கும் பலவீனம். இதைச் சரி செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கு அருகில் இருக்கும் ஆஸ்தான ஜோதிடர்களின் வேலை.

அதே நேரத்தில் ஏழரைச் சனி எல்லாருக்கும் கெடுதலை செய்வார் என்று கூறமுடியாது. நட்பு வீடு, உச்ச வீடு, நீச்ச வீடு போன்றவற்றில் இருந்தால் சனியின் தொல்லை மிகக் குறைவாகவே இருக்கும்.

காளசர்ப்ப தோஷம் காளசர்ப்ப யோகமாக மாறும்

நீங்களே எப்படி சுலபமா உங்க கோச்சார பலன்களைப் பார்த்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு முன்பாக இன்றைக்கு என்னைக் காண வந்த ஒரு பெண்ணோட ஜாதக பலன்களைப் பார்ப்போம். அந்த இளம் பெண்ணுக்கு இருபத்து நாலு வயது. பார்க்க லட்சணமான முகவெட்டு. நல்ல வேலையில் இருக்கிறார். கை நிறையச் சம்பாதிக்கிறார்.


திருமணத்திற்காக காத்திருக்கிறார். கைகூடி வரவில்லை. திருமண வகையில் தோஷமில்லை. இருந்தாலும் திருமணத்தடையை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் இந்த ஜாகத்தில் இருக்கின்றன.

லக்கனமும் ராசியும் ஒன்று. லக்கனத்தில் சனி. புத்திரஸ்தானத்தில் செவ்வாய். இப்படி சில தடைகள். இவற்றைத் தாண்டலாம். ஆனால், இவர் ஜாதக கிரக முடக்கம் அமைப்புடையது. அதாவது காளசர்ப்ப தோஷம். இந்தத் தோஷம் 35 வயதுக்கு பிறகு யோகமாக மாறும்.

ராகு, கேது என்ற சர்ப்ப கிரகங்களுக்கிடையே மற்ற ஏழு கிரகங்களும் மாட்டிக்கொண்டால் அதற்கு காளசர்ப்ப தோஷம் என்று பெயர். இவருக்கு கொஞ்சம் காலம் கடந்து திருமணம் நடக்கும்.

ஆனால், அந்த திருமண வாழ்க்கையில் இவர் அனுசரித்து நடந்து கொண்டால் பிரச்சினை இல்லாமல் இருக்கும். கொஞ்சம் மதியோடு நடந்தால் விதியை வெல்ல முடியாவிட்டாலும் அதன் தாக்கத்தில் இருந்து விலகிச் செல்ல முடியும்.

நான் கூறிய வார்த்தைகளைக் கேட்டு நம்பிக்கையோடு சென்றிருக்கிறார்.

Wednesday 7 October 2009

புதன் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் படிப்பு சிறப்பாக வரும்

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். ஒரு பெண், தன்னுடைய மகன் படிப்பைப் பற்றி என்னிடம் கேட்க வந்தார்.

ஜாதகத்தை பார்த்தேன். வித்தியாகரனான புதன் ஆட்சி உச்சம் பெற்று சூரியனோடு இருந்தார். கர்ம தர்ம ஸ்தானாதிபதி சனி. அவரும் நல்ல இடத்தில் இருந்தார். குரு பார்வை பெற்றிருந்தார்.




நான் அந்தப் பெண்ணைப் பார்த்து " படிப்பு சிறப்பாக வருமே பையனுக்கு " என்றேன்.

"எங்கே சாமி படிக்கிறான். பிளஸ் டூ வில் பெயிலாகி விட்டான். ராங்கியத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் சேர்த்து விட்டிருக்கிறேன்" என்றார்.

ஜாதக அமைப்போ மிக நன்றாக இருக்கிறது. ஆனால், அந்த பெண்ணோ சரியாக படிக்க மாட்டான் என்று சொல்கிறார். எனக்கு குழப்பமாக இருந்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். மிதுனராசி அந்தப் பையனுக்கு. ஏழரைச் சனி இடைஞ்சல் செய்திருக்கலாம் என்று நினைத்தேன்.

இறுதியாக " அம்மா... உங்கள் பையன் படிப்பில் வெற்றி பெற்று உயர்ந்த நிலைக்கு வருவான்... நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று சொல்லி அனுப்பினேன்.

ஆனால், மனதுக்குள் குறுகுறுப்பு. இந்த ஜாதக அமைப்புப்படி அவன் பொறியியலாளராக வர வேண்டும். ஆனால், படிப்பு வரவில்லை என்று அந்தப் பெண் சொல்கிறார். கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

கடந்த மாதம் அந்தப் பெண் என்னைத் தேடி வந்தார். ஒரு தட்டில் தேங்காய், பழம், வெத்திலை, பாக்கு அதோடு அவரால் முடிந்த காணிக்கையையும் வைத்து என்னிடம் கொடுத்து ஆசீர்வாதம் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் தெரியாமல் திகைத்தேன்.

"ஐயா, என்னுடைய மகன் பாலிடெக்னிக்கில் நல்ல மார்க் எடுத்திருந்தான். இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்றான். அவனுடைய அப்பாவும் நானும் எப்படி முடியும் என்று கவலைப்பட்டோ ம். அவன் எடுத்திருந்தது சிவில் இஞ்சினியரிங்.
கற்பகம் காலேஜ் என்பது கோயம்புத்தூரில் உள்ள பிரபலமான இஞ்சியனியரிங் காலேஜ். இடம் கிடைப்பதே சிரமம். அதிலும் இவன் பாலிடெக்னிக் படித்தவன். எங்களுக்கு பெரிய பணவசதி கிடையாது. என் தம்பி வேலை பார்க்கும் கடை முதலாளி என் பையனை அந்தக் காலேஜில் டொனேஷன் இல்லாமல் சேர்த்து விட்டார்.
இப்பொழுது அவன் சிவில் இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருக்கிறான் ஐயா..."

இப்படிச் சொல்லும்போது அந்தப் பெண்ணின் கண்கள் கலங்கின. என்னுடைய கணிப்பு சரியாக இருந்த சந்தோஷம் எனக்கு. சில நேரங்களில் ஜாதக கட்டத்தையும் தாண்டி சில சம்பவங்கள் நடப்பதும் உண்டு. அவற்றை பின்னர் பார்ப்போம்.

Tuesday 6 October 2009

ஜோதிடம் வாழ்க்கை அல்ல... வழிகாட்டி

ஜோதிடமா... அதெல்லாம் உல்டா என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். ஜோதிடத்தையே உயிர் மூச்சாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் தலைசிறந்த அறிவாளிகள் என போற்றப்படுபவர்கள் இஸ்ரேலியர்கள். அவர்களுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியும். அந்த நாட்டில் மட்டும் தான் 12 ராசிகளின் படம் போட்டு தபால் தலை வெளியிட்டிருக்கிறார்கள்.







அப்படி என்றால் அவர்கள் எந்த அளவுக்கு ஜோதிடத்தை நம்புகிறார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மாவீரன் அலெக்ஸாண்டரில் இருந்து அமெரிக்காவின் முதல் குடிமகன் வாஷிங்டன் வரை ஜோதிடத்தில் அபார நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார்கள் என்பது பல ஆய்வுகள் மூலமாக தெரியவந்திருக்கிறது.


பெரிய பெரிய தொழில் அதிபர்கள் ஜோதிடத்தை நம்புகிறார்கள். அரசியல்வாதிகள், நடிகர்கள் ஜோதிடத்தை நம்புகிறார்கள். மூட நம்பிக்கையை ஒழிக்கிறோம் என முழக்கமிட்டு களம் இறங்கி வலம் வந்தவர்கள்கூட யாகம்...பூஜை என அமர்க்களப்படுத்துகிறார்கள்.


ஆனால், ஏனோ தெரியவில்லை சிலர் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள். இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஜோதிடம் என்பது வாழ்க்கை அல்ல...வழிகாட்டி... இதை உணர்ந்து நடந்தால் வரும் துன்பங்களைத் தடுக்க முடியாவிட்டாலும் விலகிச் செல்லலாம்.


எப்படி விலகிச் செல்வது என்பதை உங்களுக்கு புரியும் வகையில் வரும் காலங்களில் வகைப்படுத்துகிறேன்.

Monday 5 October 2009

என்னைப் பற்றி நான்...

அன்பிற்கினிய என் நண்பர்களே....


இந்த வலைப்பதிவின் நோக்கம் என்னுடைய ஜோதிட அனுபங்களையும் என்னை திக்கு முக்காட வைத்த உண்மைச் சம்பவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதுதான். கடந்த
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை கிடையாது. கடவுள் இல்லை என்ற கொள்கையில் பிடிப்போடு இருந்தேன்.

அப்போது ஒரு நாளிதழில் துணை ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். ஒரு ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றிய கட்டுரையை எழுதி எடுத்து வந்து இருந்தார். நான் படித்துப் பார்த்தேன்.

பெண்களுக்கு எதிராக இருப்பது போல் எனக்குப் பட்டது. அதைப் பிரசுரிக்க இயலாது என மறுத்து விட்டேன்.

" நீங்கள் கவிதை எழுதுவதில் கெட்டிக்காரராக இருக்கலாம். ஆனால் ஜோதிடம் என்பது அப்படி அல்ல. அதற்கெல்லாம் தெய்வீக அருள் வேண்டும்" என்று சொல்லி விட்டு கோபத்தோடு போய் விட்டார்.

அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. எப்படியாவது ஜோதிடத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பு பாடாய் படுத்தியது. இரவு ஒரு மணிக்கு மேல் என்னை அறியாமலேயே இமைகள் தூக்கத்தை சுமந்தன. 50 வயது மதிக்கத்தக்க பெண் எனக்கு எதிரே தோன்றினார். அவர் முகத்தில் தெய்வீகக் களை சொட்டியது. "மகனே கவலைப்படாதே... உன்னுடைய குழப்பத்திற்கு விரைவில் விடை கிடைக்கும்" என்று சொல்லி விட்டு மறைந்து விட்டார்.

நான் திடுக்கிட்டு விழித்தேன். உடலெல்லாம் வேர்த்துக் கொட்டியது. அப்புறம்தான் அது கனவு என்று தெரிந்தது. ஓரிரு மாதங்கள் உருண்டன. ஒரு முறை நான் வசிக்கும் நகரத்துக்கு
மாதா அமிர்தானந்தமயி அம்மா வருகை தந்திருந்தார். ஒரு பத்திகையாளான அந்த நிகழ்வுக்கு போயிருந்தேன்.

சரியான கூட்டம். ஏறக்குறைய 50000 பேர் இருப்பார்கள். இதில் எங்கே நாம் அவரை அருகில் சென்று பார்ப்பது என்று நினைத்துக் கொண்டு மேடைக்கு சற்று தள்ளி ஓரமாக நின்று
கொண்டிருந்தேன். திடீரென்று அம்மா என்னை கை நீட்டி அழைத்தார். பக்கத்தில் போனேன். கட்டி அணைத்து "நீ நினைக்கும் காரியத்தில் வெற்றி அடைவாய்" என காதுக்குள்
சொன்னார். ஒருபக்கம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் குழப்பம். இரண்டையும் சுமந்து கொண்டு அங்கிருந்து வந்தேன்.

எனக்கு மாப்பிள்ளை முறைகொண்ட ஒருவர். ஆன்மீகவாதி. அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது "ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது. ஆனால், எப்படி என்றுதான் தெரியவில்லை" என்று கூறினேன்.

அது சாதாரண காரியம் அல்ல. கலைமகளின் அருள் பூரணமாக இருக்க வேண்டும். ஜோதிடத்தை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், வாக்கிலும் நாக்கிலும் வாணி நிற்க வேண்டும். இந்தாருங்கள் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்" என்று சொல்லி 'சுலபமாக ஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி?' என்ற சிறிய நூல் ஒன்றைக் கொடுத்தார். என்னிடம். சின்ன அதிர்ச்சி.



இப்போது இருபது ஆண்டுகள் பின்னோக்கி போகப் போகிறேன். காரைக்குடியில் என் நண்பர் ஒருவரின் வீட்டில் மாலை நேரத்தில் காபி அருந்திக் கொண்டிருந்தேன். அவர் செல்வந்தர்.
ஜமீன் சொக்கு என்று அவரை அழைப்பார்கள்.

அவருடைய வீட்டுக்கு ஜோதிடர் ஒருவர் வந்தார். நண்பர், அவரின் குடும்பத்தார்கள் ஆகியோரின் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்து பலன் சொன்னார். என்னை பார்த்து ஜாதகம் இருக்கிறதா... என்று கேட்டார். இல்லை....அதோடு எனக்கு ஜோசியம் ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை... என்று கூறினேன். சிரித்துக் கொண்டே பிறந்த நேரத்தையும் தேதியையும் கேட்டார்.

என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமே என்ற எண்ணத்தில் இரண்டையும் சொன்னேன். ஒரு சில நிமிடத்திலேயே என் ஜாதகக் கட்டத்தைப் போட்டு சில விஷயங்களைச் சொன்னார்.

"இன்று எதை நம்பிக்கை இல்லை என்று ஒதுக்குகிறீர்களோ... அது ஒரு நாள் உங்களிடம் வந்து சேரும். பலருக்கு வழிகாட்டியாக இருக்கப் போகிறீர்கள். அதற்கான அம்சம் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறது. இது நடக்கும். நான் கும்பிடும் ஜக்கம்மா மீது ஆணை" என்று சொன்னார்.

அவருடைய பெயர் பெத்த பெருமாள். வசித்த ஊர் காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூர். என்னுடைய மாப்பிள்ளை ஜோதிட நூலைக் கொடுத்த போது இந்த சம்பவம் என்னுடைய நெஞ்சில் நிழலாடியது.

அதன் பிறகு நடந்த இன்னொரு சம்பவம். ஞான சக்திவேலன் என்ற ஜோதிடர், ஜோதிட மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு ஒரு விழா மலர் தயார் செய்தார். அதில்
என்னுடைய வாழ்த்துக் கவிதை இடம் பெற வேண்டும் என்று கேட்டார். "அப்துல் காதரிடம் வந்து அமாவாசைக்கு குறிப்பு கேட்பது மாதிரி இருக்கிறது உங்கள் வேண்டுகோள்" என்று
சிரித்தேன்.

விடாப்பிடியாக வாங்கிக் கொண்டு போனவர் இரண்டாம் பக்கத்தில் அந்தக் கவிதையை அச்சிட்டு இருந்தார். அதோடு விழா நாளன்று நானே அந்தக் கவிதையை மேடையில் வாசிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். விழாவுக்கு போனேன். புகழ் பெற்ற ஜோதிடர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். கவிதையைப் படித்தேன்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒரு ஜோதிட மேதை என்னை அருகில் அழைத்தார். "உனக்குத் தெரியாமலேயே உன்னிடம் ஒரு சக்தி ஒளிந்திருக்கிறது. உரிய நேரத்தில் வெளிப்படும்" என்றார்.

இது நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்தான் எனக்கு ஜோதிடம் படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு நிறைய ஜோதிடப் புத்தகங்களைப் படித்தேன். முதலில்
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. போகப் போக அதில் ஆர்வமும் ஒருவித ஆளுமையும் உருவானது.

ஜோதிடம் சம்பந்தமாக சுமார் 600 கேள்விகளைத் தயார் செய்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் அனுபவம் வாய்ந்த ஒரு ஜோதிடரின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு பின்னர் குடும்ப உறவாக மாறியது.
என்னுடைய கேள்விகளை எல்லாம் அவரிடம் வைத்தேன். அதற்கு உரிய விளக்கத்தை பொறுமையாக உள்வாங்கிக் கொண்டேன்.பின்னர்தான் புரிந்தது ஜோதிடம் என்பது மகாசமுத்திரம் என்பது. அதில் கரை கண்டு விட்டோம் என்று யாரும் மார்தட்ட இயலாது. அப்படி யாராவது சொன்னால் குருவி குண்டுக்கல்லைத் தூக்கிக் கொண்டு குத்தாட்டம் போட்ட கதை மாதிரிதான். நான் ஓரளவு அடிப்படையைத் தெரிந்த பின்னர் பலன்களையும் கணிக்கத் தொடங்கினேன்.

நான் ஜோதிடத்தை தொழிலாக பார்க்கவில்லை. கலையாகவே பார்த்தேன். ஆகவே, பலன்களைக் கணிக்கும்போது நடைமுறை வாழ்க்கைக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதை அதிக கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.



ஒரு நாள் ஒரு காதல் ஜோடி என்னிடம் வந்தது. " நாங்கள் மூன்று வருடமாகக் காதலிக்கிறோம். திருமணம் செய்து கொள்ள நினைக்கிறோம். பொருத்தம் பார்த்துக் கூறுங்கள்" என்று கேட்டனர்.

"இருவரும் காதலிக்கிறீர்கள். இனிமேல் பொருத்தம் பார்ப்பது தவறு. மனப்பொருத்தம் இருந்தால் மணம்பொருத்தம் அமையும்" என்று கூறினேன். அவர்கள் விடவில்லை. இருவரின் ஜாதகங்களையும் பார்த்தேன். பெண்ணுக்கு கடுமையான செவ்வாய்தோஷம். பாம்பு வேறு பாதகமான இடத்தில் நின்றது. பத்துப் பொருத்தங்களில் சில முக்கிய பொருத்தங்கள் பொருந்தி வரவில்லை.

இதைக்கூறி அவர்களைப் பலவீனப்படுத்த விரும்பவில்லை. நான் சொன்னாலும் அவர்களிடம் இருந்த காதல் வேகம் காது கொடுத்து கேட்கவிடாது என்பது எனக்குத் தெரியும். ஆகவே, சில அறிவுரைகளைச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

மூன்று வருடம் கழிந்திருக்கும். ஓர் இலக்கியக் கூட்டத்தில் பேசி விட்டு மேடையை விட்டு இறங்கினேன். என்னிடம் முன்பு ஆலோசனை கேட்க வந்த அந்தப் பெண் கை கூப்பி வணங்கியபடி எனக்கு முன்னால் நின்றாள். மேகம் நிலவை மூடியதைப் போல சோகம் அவள் முகத்தைக் கவ்வி இருந்தது.

"எப்படி இருக்கிறாய் அம்மா... " என்று கேட்டேன்.

கண்களுக்குள் கங்கை உற்பத்தியானது. விழித்திரையைப் பிளந்து கொண்டு கன்னத்தில் பாய்ந்தது. "திருமணமான அடுத்த வருடமே ஒரு விபத்தில் அவர் என்னை விட்டு போய்விட்டார்."

அந்தப் பெண் சொன்ன செய்தி அமிலமாய் என் இதயத்திற்குள் இறங்கியது. அடுத்த விநாடி என்னுடைய நினைவு அவள் ஜாதகத்திற்கு பாய்ந்தது. அவள் ஜாதகத்தில் இருந்த செவ்வாய்தோஷம் என் மூளைக்குள் மின்னலாய் பளிச்சிட்டது.

முன்னோர்கள் சொல்லி வைத்த கருத்துக்கள் சொத்தை அல்ல முத்துக்கள் என்பதை அன்றுதான் முழுமையாக உணர்ந்தேன். அதே வேளையில் இந்தச் சம்பவத்தை வைத்து ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் இப்படித்தான் நடக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

அதற்கு விதிவிலக்குகள் இருக்கின்றன. பல கூறுகள் இருக்கின்றன. பல அம்சங்கள் உள்ளன. இறைவனின் அருளால் ஜோதிடனின் கணிப்பையும் தாண்டி பல்லாண்டு வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி விதியை வென்ற தம்பதிகளும் உள்ளனர். வாழ்க்கை, தொழில், வேலை, பிள்ளைகள், நோய், சமுதாய அந்தஸ்து, அரசியல், கலை என பல தரப்பட்ட அம்சங்கள் குறித்து என்னிடம் பலர் ஆலோசனை பெற்றிருக்கிறார்கள்.

அந்த அனுபவங்களையும் தேவைப்படுவோருக்கு இறைவன் அருளால் என்னால் இயன்ற ஆலோசனைகளையும் அடுத்த கட்டங்களில் உங்களுக்குத் தருகிறேன். உங்களோடு உறவாடி என்னை நானே புதுபித்துக் கொள்ள இந்த வலைப்பதிவின் மூலம் ஆண்டவன் வழி அமைத்துக் கொடுத்து இருக்கிறான் என்ற நம்புகிறேன்.

வாழ்க வளமுடன். ராசிகளின் ஆசிகள் என்றும் உங்களுக்குத் துணை நிற்கும்.