Wednesday 7 August 2013

தற்கொலைக்கு தூண்டும் ஏழரைச் சனி

சிவபெருமானுக்கே சிக்கல் ஏற்படுத்தியவர் சனி பகவான். சாதாரண மனிதர்களை சட்னியாக்கி விடமாட்டாரா என்ன?

அவதார புருஷர்களுக்கே அல்வா கொடுப்பர் சனிபகவான். அகப்பட்ட மனிதர்களை அல்லாட வைத்து விட மாட்டாரா என்ன?

ஏழரைச் சனி  என்பது சனி பகவானுக்கு மிகவும் இன்பமான கால கட்டமாகும். ஒருவருக்கு ஏழரைச் சனி பிடித்து விட்டால் உருக்குலைந்து சின்னாபின்னமாகி விடுவார்.



அதுவும் சனி பகவானுக்கு பிடிக்காத வீட்டுக்காரர்கள் என்றால் (சிம்மம் போன்ற சில ராசிக்காரர்கள்) சும்மா சொல்லிச் சொல்லி அடித்து கில்லி விளையாடி விடுவார்.

இது மாதிரி ஏழரைச் சனியின் பிடியில் சிக்கிய ஒருவர் கடந்த வாரம் என்னைச் சந்தித்தார்.

இவர் துலாம் ராசிக்காரர். லக்கனமும் துலாம்தான். 1992-ஆம் ஆண்டுகளில் மலேசியாவுக்கு வந்தவர்.

படாத கஷ்டங்கள் இல்லை என்றே சொல்லலாம். படுக்கக் கூட இடம் கிடைக்காமல் திண்டாடியவர்.

நாலைந்து ஆண்டுகள் தான் இவருக்கு சிரமம். அடுத்து ஏற்றமான காலகட்டம். சொந்தத்தொழில் ஆரம்பித்தார்.

ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி. மில்லியன் கணக்காக சம்பாத்தியம். இந்த நேரத்தில் தான் சனிபகவான் ஏழரைச்சனி என்ற வாகனம் ஏறி இவர் வாழ்க்கையில் புகுந்தார்.

இவர் நம்பி வேலைக்கு வைத்த இவரின் உறவுக்காரப் பையனை சனியன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

பணக் கையாடலை மிக பக்குவமாக அரங்கேற்றினார். தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட விலை மிகுந்த உபகரணங்களை அடகு வைத்து விட்டு கம்பி நீட்டினார்.

வெளிநாடு போயிருந்த சமயத்தில் இவ்வளவும் நடந்து விட்டது. தொழில் படுத்து விட்டது. கடன் கூடி விட்டது.

படுத்த தொழிலை எழுப்ப பல வகையில் முயன்றும் முடியாமல் தற்கொலை வரை போய் விட்டார்.

"வரும் போது என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு". இதுதான் அவருக்கு நான் சொன்ன ஆறுதல்.

ஆறுதல் மட்டும் இவரின் அழுகைக்கு மருந்து ஆகி விடாது. என்ன செய்வது அது ஒரு முதலுதவி.

நான் அவருக்கு கொடுத்த தன்முனைப்பு கொஞ்சம் தெம்பை அளித்தது. அவர் கண்களில் நம்பிக்கை ஒளி. மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற வேட்கை.

துலாம் சனிக்கு உச்ச ராசியாகும். அதனால் பாதிப்பு அதிகம் தரமாட்டார் என்றாலும் ஜென்மத்தில் பகை வீட்டிலோ... கோளாறான இடத்திலோ இருந்தால் தன்னை மறந்து ஒரு பிடிபிடித்து விடுவார்.

மேலும் மகாதசை வேறு மக்கர் பண்ணுகிறது. ஏழரைச் சனி  காலத்தில்தான் சனி மகா தசை ஆரம்பம். சுயபுத்தியில் இவரின் செயல்பாடு சுனாமியாக இருக்கும்.

திருநள்ளாறு சென்று வர கூறியிருக்கிறேன். சில வழிபாட்டு முறைகளையும் அறிவுறுத்தி இருக்கிறேன்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இவருக்கு சிரமமான காலகட்டமாகும். அதன் பின்னர் மாற்றம் தெரியும். படிப்படியாக ஏற்றம் கிடைக்கும்.

உயர்ந்த நிலைக்கு வருவார் என்பது உறுதி.