Sunday, 28 December 2014

அமைச்சர்கள் செய்யும் யாகங்கள்... பலன் தருமா பரிகாரம்...?

தமிழக முதலமைச்சராக இருந்து மக்களின் முதல்வராக மாறி விட்ட ஜெயலலிதா வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்று அமைச்சர்கள் அத்தனை பேரும் ஆலயங்களில் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள்.

தினம் ஒரு பூஜை, நாளுக்கொரு யாகம் என்று ஆண்டவனைத் தூங்க விடாமல் திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆளாளுக்குச் செய்கின்ற யாகங்கள் பலிக்குமா... பலன் தருமா... என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய மிகப் பெரிய கேள்வியாகும்.

கடந்த காலங்களில் ஜெயலலிதா செய்யாத யாகங்களையா இப்போது அமைச்சர்கள் செய்து விடப் போகிறார்கள். ஜெயலலிதா செய்து செல்லாமல் போன பூஜைகள் அமைச்சர்கள் செய்தா பலிதமாகப் போகிறது.

ஒருவருக்கு வயிற்று வலி வந்து விட்டது. அதற்காக மருத்துவரைப் பார்க்க வேண்டும். வசதி இருக்கிறது என்பதற்காக ஒரே நாளில் பல மருத்துவர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டால் என்னவாகும்.

ஒரு நாளைக்கு முன்று வேளைக்கு ஒவ்வொரு மாத்திரை என்று மருத்துவர் ஒரு வாரத்த்திற்கு மருந்து எழுதிக் கொடுக்கிறார்.

பட்டம் பதவியில் இருக்கிறோம் என்பதற்காக ஒரு வாரத்து மாத்திரைகளை ஒரே நாளில் வாய்க்குள் போட்டு விழுங்கி வயிற்றுக்குள் தள்ளினால் என்னவாகும்.

அந்தக் கதையாக இருக்கிறது இப்போது தமிழக அமைச்சர்கள் செய்யும் அலப்பறை யாகங்கள். கோவில்களில் நடத்தும் வழிபாட்டுக் கூத்துகள்.

வழக்கில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்பதை விட ஒரு வேளை வெற்றி கிடைத்தால் அது தாங்கள் நடத்திய யாகங்களால்தான் என்று பறை சாற்றிக் கொள்ளும் மனப்போக்கே மந்திரிமார்களின் செயல்பாடுகளில் தெரிகிறது.

அது சரி, இந்த யாகங்கள் பலன் தருமா... இவற்றை  வழி நடத்துகின்ற வேத விற்பன்னர்கள் அமைச்சர்களுக்கு விவரம் சொல்ல மாட்டார்களா...?

அது இயலாத காரியம். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஆலோசனை சொல்வதும் ஆட்டு உரலுக்குள் தலையைக் கொடுப்பதும் ஒன்றுதான்.

ஒரு முறை ஒரு கோவில் குருக்கள் சொன்னது என் காதில் இன்னும் ஒலிக்கிறது. கட்சித் தலைவர் ஒருவர் கோவிலுக்கு வந்தார். நடை சாத்திய பின்னர் கோவிலைத் திறக்கச் சொன்னார்.

அப்படிச் செய்வது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்று சொல்வார்கள். ஆனால், குருக்கள் எதுவும் பேசாமல் கருவறைக் கதவைத் திறந்து அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டினார்.

தலைவர் போன பின்னர் குருக்களிடம் இது குறித்துக் கேட்டேன். "என்ன செய்யச் சொல்றேள்.. நாம ஏதாச்சும் சொன்னா.. கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவன்... பெரியவாள்ன்னு பாக்காம அடிப்பன். பொசுக்குனு பூணூலை அப்பன். எதுக்குண்ணா வம்பு...ஆண்டவா பாத்துக்குவா..." என்று சொன்னார்.

இறைவன் அவரவர் பூர்வ ஜென்ம பலாபலன்களுக்குத் தகுந்த மாதிரி பட்டம் பதவி பணவசதிகளைக் கொடுத்து இருக்கிறார்.

ஜாதக தெசாபுத்தி கோச்சார பலன்களுக்கு ஏற்றவாறு இன்ப துன்பங்களை வாரி வழங்குகிறார். நவக்கிரகங்கள் மூலமாக நிறைவேற்றுகிறார்.

எந்தக் கிரகம் துன்பத்திற்கு தூபம் போடப் போகிறதோ.. அதன் கோபத்தைக் குறைக்க கெஞ்சுகிறோம். வேண்டுகிறோம்.

செய்த குற்றத்திற்கு இரக்கப்பட்ட நீதிபதி அதிக பட்ச தண்டனை அளிக்காமல் குறைந்த பட்ச தண்டனை கொடுப்பது போல நம் இறைஞ்சுதலுக்கு ஏற்ப இறைவனின் ஆஞ்ஞைப்படி கிரகங்கள் பாதிப்புகளைப் பாதியாகக் குறைத்துக் கொள்வதைக் கண்கூடாகக் பார்த்திருக்கிறோம்.

ஆனால், மக்கள் முதல்வருக்காக அமைச்சர்கள் செய்கின்ற யாகங்களில் ஆழமான பக்தி இருப்பதை விட ஆடம்பரமான செய்கைகளே முதலிடம்  பிடிப்பதாகத் தெரிகிறது.

ஆகவே, இவை உரிய பலனைத் தருமா என்பது சந்தேகமே.... ஜெயலலிதா அவர்களின் ஜாதகம் மிகச் சிறப்பானது. சத்ரு சம்கார ஜாதகமும் கூட...

அதனால் ஏற்படும் வெற்றிக்கு தங்கள் யாகங்களும் வழிபாடுகளும் ஒரு காரணம் என்பதைக் காட்டிக் கொள்ளும் செயல்பாடுகள் பலனைவிட பாதிப்பைத் தான் அதிகமாக்கும்.

No comments:

Post a Comment