Saturday, 5 October 2013

கணவன் - மனைவி பிரச்சினையைத் தீர்க்கும் காளகஸ்தி

வாழ்க்கை என்பது கைக்குள் இருக்கும் பட்டாம் பூச்சி மாதிரி. திறந்து விட்டால் பறந்து விடும். இறுக்கிப் பிடித்தால் இறந்து விடும்.

இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் இல்லறப் பயணம் இடையூறு இல்லாமல்  தொடரும். இல்லையென்றால் கரடு முரடான கற்பாறைகளில் இடரும்.பெரும்பானவர்களின் வாழ்க்கையில் தோன்றும் பிரச்சினைகளுக்கு மூல காரணம் பிடிவாதம்(ஈகோ).

"ஒரு குடுவையில் இருந்த பொரியை அள்ள அதற்குள் கையை விட்டதாம் ஒரு குரங்கு. வேண்டிய மட்டும் அள்ளிக் கொண்டு கையை வெளியே எடுக்க முயற்சி செய்ததாம்.

குடுவையின் வாய் சிறியதாக இருந்ததால் கையை வெளியே எடுக்க முடியவில்லை. 

பொரியை விட்டு விட்டால் வெறுங்கையை வெளியே எடுத்து விடலாம் என அனுபவசாலியான கிழட்டுக் குரங்கு ஒன்று ஆலோசனை சொன்னதாம்ஆனால், அந்த முட்டாள் குரங்குக்கு பொரியை விட மனசில்லை.

ஒரு நாள்... இரண்டு நாள்.. மூன்று நாள்... என குடுவையோடு சுற்றிய குரங்கு இறுதியாக பட்டினியால் இறந்து விட்டதாம்"

இப்படித்தான் பலர் பிடிவாதம் என்ற பேயோடு கூட்டணி அமைத்துக் கொண்டு வாழ்க்கையை குட்டிச் சுவராக்கி விடுகிறார்கள்.சிலர் ஒரு கட்டத்தில் பிடிவாதத்தை உதறி விட்டு பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருகிறார்கள். பலர் அதற்குள்ளேயே சிக்கி மாண்டு போகிறார்கள்.

சுரேஷ்..... இவர் மேலாண்மைக் கல்வி கற்ற பட்டதாரி. நல்ல வேலை.. கை நிறைய சம்பளம். 

சுகுணா.. இவர் பொறியியல் பட்டதாரி. படபடப்பான பேச்சுக்காரர். அன்பு செலுத்துவதில் வஞ்சனை இல்லாதவர்.

இருவருக்கும் திருமணமாகி இரு ஆண்பிள்ளைகள். பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில் விரிசல் விழுந்ததைப் போல் இவர்கள் இல்லற வாழ்க்கையில் பிரச்சினை பிடில் வாசிக்கத் தொடங்கியது.

விரிசல் வளர்ந்து விலகல் வரை நீண்டு விட்டது. இனி இணைந்து வாழ்வது கானல் நீரில் கட்டுமரம் ஓட்டுவது மாதிரி என்ற நிலை உருவாகி விட்டது.

படித்தவர்களுக்கு அறிவுரை சொல்லி புரிய வைப்பது என்பது உப்பை உரமாக போட்டு தர்ப்பைப் புல் வளர்ப்பது போல.

இருவரும் பிரிந்து விடுவார்களோ என உறவுகளும் நட்புகளும் கையைப் பிசைந்து கொண்டு நின்ற போது....

கறந்த பால் மீண்டும் மடி புகுந்தது போல.... கருவாடு மீண்டும் மீனாக மாறியது போல... தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதி மறக்காமல் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வந்தது போல இவர்கள் வாழ்க்கையிலும் அதிசயம் நடந்தது.

பிரிவின் எல்லைக்கு போனவர்கள்..அறிவின் துணைகொண்டு அன்பின் அரவணைப்பில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் ஏன் இந்தப் புயல்... பின்னர் ஏன் வசந்தத்தின் வரவேற்புரை...

இருவரின் ஜாதகமும் என் பார்வைக்கு வந்தது. சுகுணாவிற்கு லக்னம் துலாம். ராசி ரிஷபம். நட்சத்திரம் மிருகசீரிடம்-1 ஆம் பாதம்.

லக்கனாதிபதியும் ராசியாதிபதியும் ஒருவரே.. லக்கனத்தில் சுக்கிரன் ஆட்சி. சந்திரன் உச்சம். இருந்தாலும் இருக்கும் இடம் அஷ்டமம்.

குரு ஒன்பதில்.. புதன் மூன்றில்... இருவரும் பரிவர்த்தனை.. மேலும் சந்திரனில் இருந்து புதன் வரை எல்லாக் கட்டங்களிலும் கிரகங்கள். கேது மட்டும் ஆறில் தனித்து.

இது ஒரு வகையில் கிரக மாலிகா யோகத்தை கொடுக்கக் கூடியது. செல்வம்... செல்வாக்கு... பணம் வசதி இவற்றுக்கு பஞ்சம் இல்லை.

ஆனால், வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் சூரியன் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேச வைப்பார். தான் ஓட்டும் காருக்கு ஏழு சக்கரம் என ஏட்டிக்கு போட்டியாக சொல்ல வைப்பார்.

தான் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற இறுமாப்பு இவர் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும்.

அன்புக்கு அடிமை.. பணிந்து கேட்டால் குனிந்து நின்று படிக்கட்டாக மாறுவார். அதிர்ந்து கேட்டால் நெருப்பில் போட்ட வெடிக்கட்டாக சீறுவார்.

பணம் இவருக்கு துச்சம். கலை இலக்கியத்தில் இவரின் ஆசை உச்சம். கணவர் தன்னை புரிந்து கொண்டு நடத்த வேண்டும் என்பது இவரின் ஏக்கம். பல நேரங்களில் இவர் செயல்களில் வெளிப்படும் அதன் தாக்கம்.

சுரேஷின் லக்கனம் மிதுனம். ராசி மேஷம். நட்சத்திரம் பரணி-4 ஆம் பாதம். லக்கனத்தில் சூரியன், சனி, கேது சேர்க்கை. 

ஏழில் ராகு. மேலே குறிப்பிட்ட மூவரின் திருஷ்டி வேறு. எட்டில் குரு நீச்சம். நாலில் மாந்தி.

செவ்வாய் பத்தில்... சந்திரன் பதினொன்றில். வாக்குஸ்தானத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை. 

அதுவே குடும்பஸ்தானமும் என்பதால் செல்வம், கல்வி அமைப்புடைய மனைவி வாய்த்தார்.

திருமணத்திற்கு பின்னர் இவர் வாழ்க்கையில் முன்னேற்றம் முகம் காட்டி இருக்கும்.

லக்கனத்தில் பாவ கிரகங்கள் நின்று களத்திர ஸ்தானத்தை பார்ப்பது குடும்ப வாழ்க்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்தியது.

சுகஸ்தானமான நாலாமிடத்தில் மாந்தி நிற்பது இல்லற சுகத்திற்கு இடையூறை ஏற்படுத்தியது.

களத்திர ஸ்தானதிபதியான குரு எட்டில் மறைவு... மேலும் களத்திர ஸ்தானத்தில் ராகு..

ஆக இவை அனைத்தும் கணவன் மனைவியின் கண்களில் விரலை விட்டு ஆட்டி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே பாரதப் போரை உருவாக்கி விட்டது.

கடந்த காலத்தில் தசா புத்தி பலன்கள் கடுமையாக இருந்தன. கோச்சார பலன்களும் கோளாறாக அமைந்தன.

இப்போது இருவருக்கும் குரு பலம் இல்லாவிட்டாலும் கொடுமை குறைந்து இனிமை பூக்கத் தொடங்கி இருக்கிறது.

 எட்டில் மறைந்த குரு நீச்சமாகி போனது பட்டுப் போகவிருந்த இல்லறச் செடி மொட்டுவிட காரணமாக அமைந்தது.

தசவித பொருத்தங்களில் வசியம் இல்லாதது ஒரு குறை. இருப்பினும் எட்டுப் பொருத்தங்கள் இசைந்து வந்தது சிறப்பு. 

இதைப் பக்குவமாக பாதுகாக்க வேண்டியது கணவன் மனைவி இருவரின் கடமையாகும். 

வாழ்க்கையில் கோளாறு செய்த கிரகங்களின் மனம் குளிரும்படி பரிகாரம் செய்து விட்டால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு அணை போட்டு விடலாம்.

காளகஸ்தி திருத்தலத்திற்கு இருவரும் சென்று நாக சாந்தி செய்து கொள்ள வேண்டும்.காளகஸ்திக்கு செல்லும் போது வேறு கோவில்களுக்கு போகக்கூடாது. வீட்டிற்கு திரும்பி விட வேண்டும்.

வார வாரம் சனிக்கிழமைகளில் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும். பக்கத்தில் உள்ள ஆலயத்துக்கு சென்று ராகு.. கேது.. ச்ர்ப்பக் கிரகங்களை வழிபட வேண்டும்.தொடர்ந்து 48 வாரங்கள் செய்தால் பூரண பலன் கிடைக்கும். வேண்டாத விருந்தினரை வீட்டிற்கு சாப்பிட அழைப்பதைப் போல் அல்லாமல் ஆத்ம திருப்தியோடு வழிபாடு செய்ய வேண்டும்.

ஆஸ்துமா... சைனஸ் பிரச்சினைகள் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுகுணா.. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சொந்தமாக தொழில் செய்யாமல் இருப்பது நல்லது.

யாரையாவது முன்னிறுத்தி பின்னால் இருந்து இயங்கலாம். இயக்கலாம். ஆனால் நிதானப் போக்கு மிகவும் முக்கியம்.

விட்டுக் கொடுத்து வாழ்வது சிறப்பு. ஆனால் பல வீடுகளில் யார் முதலில் விட்டுக் கொடுப்பது என்பதில் பிரச்சினை வெடித்து பிரிவினைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

கடந்த காலத்தையோ.... இழந்த இன்பத்தையோ.... திரும்ப பெற இயலாது. இதைக் கருத்தில் கொண்டு கணவன் - மனைவி இருவரும் வாழ்க்கைச் சோலையில் வசந்தத்தை காண வேண்டும்.

இறைவன் அருளால் இனி வரும் காலங்கள் இளமை மாறாத இனிப்புடன் திகழ வாழ்த்துகிறேன்.

1 comment:

 1. Good Morning

  Respected sir

  May i request if your advice can be solicited on this forum or through email id

  thanks
  chara ka

  ReplyDelete