Tuesday 1 October 2013

கணவனை கட்டையால் அடித்த மனைவி


காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல. ஏழு வருடங்களுக்கு முன்னர் இதயத்தை இடமாற்றிக் கொண்டவர்கள்.

திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. ஒரு வயதில் அழகான ஆண் குழந்தை. இரண்டு வருடங்களுக்குள் இல்லறம் கசந்துவிட்டது.

ஒரே வீட்டுக்குள் எலியும் பூனையுமாக வாழ ஆரம்பித்தார்கள். எதற்கு எடுத்தாலும் சண்டை. ஏட்டிக்கு போட்டியான பேச்சு. வீடு நரகமாக மாறி விட்டது.

அந்தப் பையன் என்னிடம் ஆலோசனை கேட்டு வந்தார். இரண்டு பேரின் ஜாதகத்தையும் பார்த்தேன். பெண்ணுக்கு எட்டில் சனி. பையனுக்கு இரண்டில் ராகு எட்டில் கேது.

பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை. காளசர்ப்ப தோஷம் வேறு. பொருத்தத்தில் கணப்பொருத்தமும் வசியமும் இல்லை.

காதல் என்பதால் முதலில் அவர்கள் ஜாதகப் பொருத்தத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. வாழ்க்கை கசக்க ஆரம்பித்தபின்னர்தான் ஜாதகம் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்து போன காலத்தையும் நடந்து போன சம்பவத்தையும் நினைத்து கவலைப்பட்டு லாபம் இல்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்தான் எதிர்காலம் பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்று அறிவுரை சொன்னேன்.

ஆனால் அவர்கள் சண்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் உச்சகட்டத்தை அடைந்து விட்டது. இருவரும் இரவு ஒரு சாப்பாட்டுக் கடைக்கு சாப்பிட போயிருக்கிறார்கள்.



வாய் வார்த்தை வசமிழந்து சண்டைக்கு அடிகோலியது. பிரச்சினை பெரிதாக கீழே கிடந்த கட்டையை எடுத்து கணவன் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டாள்.

கணவனுக்கு மொட்டைத்தலை. ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவர்கள் பதைபதைத்து விக்கித்து நின்றனர்.

நிலைமையின் தாக்கத்தைப் புரிந்து கொண்ட பையன் உடனே காவல்நிலையத்துக்கு சென்று மனைவியிடம் இருந்து தன்னை காப்பாற்றும்படி புகார் கொடுத்து விட்டான்.

காவல் அதிகாரி இரண்டு வீட்டினருக்கும் தகவல் அனுப்பினர். பெற்றோர்கள் வந்து இருவரையும் பிரித்து அவரவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

விவாகரத்து ஒன்றுதான் விடுதலை எனக் கருதி கணவன் வழக்கறிஞரின் உதவியை நாடி இருக்கிறான்.

சாந்தி செய்யப்படாத காளசர்ப்ப தோஷம், சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் நிற்பது, மேலும் செவ்வாய் சேர்க்கை இவை அனைத்தும் அந்தப் பெண்ணின் குடும்ப வாழ்க்கை குந்தகத்தை ஏற்படுத்தி விட்டது.

மாங்கல்ய ஸ்தானத்தில் சனீஸ்வரன் இருப்பதும் பெரிய பாதிப்பாக அமைந்து விட்டது.

பையனுக்கு ராகு கேது இருக்கும் இடம் வாழ்க்கைப் பயணத்தில் சிக்கல் சிரமங்களுக்கு வழி கோலி விட்டது.

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். பல நேரங்களில் ஜாதக கோளாறுகளால் காதல் வாழ்க்கை மோதல் வாழ்க்கையாக மாறி எதிர்காலத்தை சூன்யமாக்கி விடும் என்பதை ஏனோ பலர் உணர மறுக்கிறார்கள்.

No comments:

Post a Comment