Wednesday, 11 September 2013

ஆண்டவன்.... அலட்சியம்... ஆபத்து...!

   என் மனதுக்கு பிடித்த நண்பர்களுள் மகத்தானவர். சிரம்பானைச் சேர்ந்தவர். சிறந்த வழக்கறிஞர். பொருளாதாரத்தில் வலுவானவர்.
   
   இவருக்கு முதுகுத்தண்டில் பிரச்சினை. முழங்கால் மூட்டு தேய்வு. முன்பு ஓய்வும் அசதியும் இவர் பக்கத்தில் வரவே பயப்படும்.

   ஆனால், இப்போது உட்கார்ந்து எழுவதற்கே சிரமப்படும் அளவுக்கு காலம்  இவர் கால்களுக்கு வியாதி என்ற விலங்கைப் பூட்டி விட்டது.



   இவர் பேச்சில் எப்போதும் கலகலப்பு கைகோர்த்து நிற்கும். இன்று அதில் விரக்தியின் வெளிப்பாடு அதிகம் இருப்பது வேதனை.

   இவருடைய ஜாதகத்தைக் கணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மகர லக்கனம். கடக ராசி. பூச நட்சத்திரம் மூன்றாம் பாதம்.

    லக்கனாதிபதி லக்கனத்தில்.  ராசியாதிபதி சொந்த வீட்டில். சிறுவயதில் கஷ்டமும் கவலையும் இவரின் விளையாட்டுத் தோழர்கள். 

    இன்று அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரத்திற்கு இவர் சொந்தக்காரர். ஆனால், உண்பது ஒரு கை பிடியளவுதான்.

    ஏன் இந்த அவஸ்தை இவருக்கு.... சரீரகாரகன் சந்திரனும் எலும்புக்கு அதிபதியான சனியும் சமசப்தம பார்வைப் பரிமாற்றம். ஏழரைச் சனி காலத்தில் இவரை முடமாக்க சனிபகவான் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

   அதற்கான அறிகுறிகளையும் இவருக்கு அனுப்பி வைத்தார். இவரின் மன பலம் ... பணபலம்... அதை அலட்சியப்படுத்தி விட்டது.

   தெய்வபலமும் சேர்ந்து கொண்டதால் தெம்பும் அதிகம் இருந்தது. விளைவு வியாதியை ஓட ஓட விரட்டிய இவரை வியாதி விரட்டிக் கொண்டிருக்கிறது.

   கோச்சாரத்தில் குரு பகவான் பலவீனமாக இருக்கிறார். நான்காம் வீட்டில் இருக்கும் சனியும் குடும்ப உறவில் குழப்பத்தை உண்டு பண்ணி திருப்தி இல்லாத நிலைக்கு தள்ளி விட்டார்.

    மேலும் இவருக்கு மறுபிறவி இல்லை என்பதால் ஜென்மாந்திர பலாபலன்களையும் இந்தப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதி.



   நள மகராஜாவுக்கு விமோசனம் அளித்த திருநள்ளாறு திருத்தளத்துக்கு சென்று திருக்குளத்தில் நீராடி சனிபகவானை வழிபட்டு வருமாறு அறிவுறுத்தி இருக்கிறேன்.

   அதன் பின்னர் வீட்டில் ரோக நிவர்த்தி யாகம் ஒன்றையும் செய்யச் சொல்லி ஆலோசனை கூறியிருக்கிறேன்.

   இவை இரண்டையும் ஆத்ம சுத்தியோடு செய்து சனிபகவான் அனுகிரகத்தை அடைந்து விட்டால் அறுவைச்சிகிச்சை தேவைப்படாது.

   அறுவைச்சிகிச்சை தவிர்க்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டால் கூட கவலைப்பட வேண்டாம். சிகிச்சைக்கு பின்னர் ஓடியாடி விளையாட முடியாவிட்டாலும் வலி இல்லாமல் இயல்பாக வலம் வர இயலும் என்பது திண்ணம்.

   இவர் பார்த்த ஜோதிடரின் அறிவுறையையும் மருத்துவரின் ஆலோசனையையும் அலட்சியப்படுத்தால் ஏழரைச் சனி காலத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் பாதிப்பு பாதி அளவு குறைந்திருக்கும். சிலவேளைகளில் பாதிப்பில் இருந்து தப்பி இருக்கலாம்.

   என்ன செய்வது... மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று.. இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று..

No comments:

Post a Comment