ஜோதிடம் என்பது ஞானிகளின் அற்புத ஆன்மீக கண்டுபிடிப்பு. இது பொய் என்று புறம் தள்ளி போகின்றவர்களும் உண்டு... உண்மை என்று ஒத்துக் கொண்டு வாழ்கின்றவர்களும் உண்டு.
எட்டி மிதிப்பவர்களுக்கும் ஏற்று மதிப்பவர்களுக்கும் ஜோதிடம் பாகுபாடு பார்த்து பலன் தருவதில்லை. கிழக்கு வானை கிழித்து ஒளி சிந்தும் சூரியனைப் போல வாழ்க்கையின் வழி காட்டி அது.
எல்லாம் இருந்தும் ஒன்று இல்லாதது... எதுவும் இல்லாமல் ஏதாவது ஒன்று இருப்பது ஜோதிடத்தின் சூட்சமம்.
ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிட்டாலும் இறக்காத சகோதர பாசம் கொண்டவர்.அன்பு இளவல் மகேந்திரன்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் சின்ன கிராமத்தில் இவர் வசிக்கிறார்.
ஊருக்கு அம்பலகாரர். ஊரை வழி நடத்தும் கடமை இவருக்கு உண்டு. அதற்கான தகுதியும் ஏராளம். இவருக்கு வயது 36. பாதை தடுமாற வைக்கும் போதைப்பழக்கம் இல்லை. உடலுக்கு பகையான புகை பிடிக்கும் பழக்கம் கிடையாது.
வசதி வாய்ப்புக்கள் ஏராளம். ஓடியாடி தேடித்தான் ஒருவேளை உணவு உண்ண வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அழகும் சுறுசுறுப்பும் இவருக்கு அணி செய்பவை.
எல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தாலும் திருமண வாழ்க்கை கண்ணாமூச்சி காட்டியது. எடுத்த முயற்சிகளுக்கெல்லாம் இறுதிப் பலன் தோல்விதான்.
மகனுக்கு இன்னும் மணவாழ்க்கை அமையவில்லையே என ஈன்ற அன்னைக்கு இதயச் சுமை ஏறிக் கொண்டே போனது. இனிமேல் ஏது திருமணம் என்ற விரக்தி அந்த இளைஞனின் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலந்தது.
இந்த காலகட்டத்தில் நான் இந்தியாவில் இருந்தேன். என்னை வந்து சந்தித்தார்கள். நான் மட்டுமே தீர்வு காண முடியும் என உறவுகளும் நட்புகளும் உறுதியாக நம்பின.
ஜாதகத்தைப் பார்த்தேன். காளசர்ப்ப தோஷத்தின் கடுமையான பிடியில் சிக்கி அனைத்து கிரகங்களும் முடங்கிக் கிடந்தன. களத்திரகாரகனான சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தான்.
சர்ப்பங்களுக்கு சாந்தி செய்ய திருக்காளகஸ்திக்கு அழைத்துச் சென்றேன். திருமண வகையில் இருந்த மற்ற இடையூறுகளூக்கு உரிய பரிகாரம் சொன்னேன்.
காலம் நீண்டதால் தண்ணீரில் தலை தூக்கும் கெண்டை மீனைப் போல ஏமாற்றம் அவர்கள் இதயத்தில் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதை இலை மறை காயாக என்னிடம் உணர்த்தினார்கள்.
அன்னக்கிளி படம் ஆரம்பத்தில் தடுமாறி இடைப்பட்ட காலத்தில் வசூலில் எகிற வைத்தது போல இவருக்கு பரிகாரகங்கள் பலன் தர ஆரம்பித்தன.
இந்தப் பெண்தான் இல்லத்தரசியாக வரவேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் நினைத்து அது ஈடேறாமல் மனம் வெந்து போயிருந்தாரோ அதே பெண் அவருக்கு மனைவியாக அமையும் வாய்ப்பை காலம் ஏற்படுத்தித் தந்தது.
காளசர்ப்ப தோஷம் 35 வயதுக்கு மேல் காளசர்ப்ப யோகமாக மாறும் என்பது பொதுவான விதி. இருப்பினும் களத்திர வகையில் அவருக்கு இருந்த இடையூறுகள் எல்லாம் களையப்பட்டு இன்று இல்லறச் சோலையில் தடம்
பதிக்கப் போகிறார்.
இதில் முக்கியமான ஒரு அம்சத்தை நான் இங்கே குறிப்பிட வேண்டும். இவருடைய ஜாதக பலனை கணிக்கும் போது தசா புத்தி கணக்கிட்டேன். அப்போது கழித்தலில் பிழை ஏற்பட்டு வயதை சற்று குறைத்து சொல்லி விட்டேன்.
இது நான் தெரிந்து செய்த பிழை அல்ல. என்னை அறியாமல் என் இதழ் பிளந்து விழுந்த சொல். நல்லது நடக்க இறைவன் நடத்தும் நாடகங்களில் இதுவும் என்று நான் வியந்து போனேன்.
வரும் ஆவணி மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம். சுமார் 3500 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் மலேசியாவில் நான் இருக்கிறேன். அன்பு இளவலின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் நெஞ்சு நிறைந்த ஆசை. ஆனால், காலம்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment