Monday, 29 April 2013

மீண்டும் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்

மலேசியாவில் மே 5-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறப் போகிறது. 

2007-ஆம் ஆண்டு ஹின்ட்ராப் என்ற இந்தியர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய எழுச்சியை மக்களிடையே ஏற்படுத்தியது.

அப்போது துன் அப்துல்லா படாவி பிரதமராக இருந்தார். அடுத்து 2008- ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி பெரிய சரிவைச் சந்தித்தது.

அடுத்து டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக பதவி ஏற்றார். அதன் பின்னர் இந்திய சமுதாய்த்தின் ஆதரவைப் பெறுவதற்காக பல திட்டங்களை கொன்டு வந்தார்.

இருப்பினும் இந்தமுறை வெற்றி வாய்ப்பு ஆளும் கட்சிக்கா... எதிர்க்கட்சிக்கா என்பது இழுபறியாகவே இருக்கிறது. கருத்துக் கணிப்புகள் கண்ணாமூச்சி 
காட்டுகின்றன.



நஜீப் அவர்களின் பிறந்த நேரம் தெரியாததால் ஜாதகம் கணிக்க முடியவில்லை. ஆயினும் அவரின் சில அம்சங்களை வைத்துப் பார்க்கும் போது மீண்டும் அவரே ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

எதிர்க்கட்சிகள்தான் வெற்றி பெறும் என்று பரவலாக பேசப்பட்டாலும் அதற்கான வாய்ப்பு குறைவு.

நஜிப் என்ற தனிமனிதரின் அம்சம் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமர வழி வகுக்கும் என்பது காலத்தின் கட்டாயம்

Saturday, 13 April 2013

வெற்றித் திருமகன் டத்தோஶ்ரீ பழனிவேலு

ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ பழனிவேலு. மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார்.

கடந்த முறை உலுசிலாங்கூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்.

ஆர்ப்பாட்டமில்லாத அரசியல்வாதி. ஆனால், பேசுவது குறைவு. சேவை அதிகம்.

புத்தகத்தின் அட்டையைப் பார்த்து உள்ளே இருப்பதை எடை போடாதே... என்ற  பழமொழி உண்டு.

இவரின் அமைதியைப் பார்த்து ஆற்றலைக் குறைவாக மதிப்பிடுபவர்கள், கண்டிப்பாக ஏமாந்து போவார்கள்.



இவரின் பிறந்த நேரம் தெரியாது. ஆகையால் முறையான ஜாதகத்தைக் கணிக்க இயலவில்லை.

இருப்பினும் இவரின் சில அம்சங்களை வைத்து அலசிப் பார்த்தேன். அந்த வகையில் இவரின் பதவி யோகத்தை இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

கட்சிச் தலைவருக்கு விசுவாசமாக இருந்தவர். கிடைத்த பொறுப்புக்களைக் கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொண்டவர்.

கட்சித் தலைமைப் பதவி கஷ்டம் தராமல் இவரைத் தேடி வந்தது.

 கட்சிப் பதவிக்கு கடும் போட்டியாக இருப்பார் எனக் கருதிய செல்வாக்கு மிக்க  தலைவர் ஒருவரை இயங்க விடாமல் காலம் கட்டிப் போட்டு விட்டது.

இது இவரின் அரசியல் வெற்றிப் பாதைக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தது.

உலுசிலாங்கூர் தொகுதியில் இவருக்கு தோல்வியைத் தந்த மாற்றுக் கட்சி உறுப்பினர் துரதிஷ்டவசமாக இயற்கை எய்தினார்.

அதன் காரணமாக நடந்த இடைத்தேர்தலில் இந்தத் தொகுதி மீண்டும் ம.இ.கா. வசம் ஆனது.  இது மீட்சி யோக அமைப்பாகும்.

இவரின் மூக்கு அமைப்பும் தீட்சண்யம் மிக்க திருஷ்டியும் உச்ச பதவியில் உட்காருகின்ற அம்சத்தை அளிக்கிறது.

எதிர்க்கட்சியினரின் எழுச்சி இவரைக் கண்டிப்பாக வீழ்த்தி விடும் என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

அந்தக் கணக்கை காலம் மாற்றப் போகிறது. இவருக்கு வெற்றியைக் காணிக்கையாக தரப் போகிறது.

டத்தோஶ்ரீ பழனிவேலு, உலுசிலாங்கூர் தொகுதியை ஒதுக்கி விட்டு வேறு தொகுதிக்கு செல்வார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

எந்தத் தொகுதியாக இருந்தாலும் இவரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

வாக்கு வித்தியாசங்கள் அதிகமா... குறைவா... என்பது குறித்து எனக்கு தெரியாது.

ஆனால், இவரின் வெற்றி மட்டும் நிச்சயமானது என்பது என் கணிப்பு.

என் கணிப்பு என்று சொல்வதை விட காலத்தின் தீர்ப்பு என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் என் ஆத்மார்த்த நண்பரும் மிகச் சிறந்த ஊடகவியளாருமான ஒருவரிடம் டத்தோஶ்ரீ பழனி குறித்து பேசிக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னர்
இந்தக் கணிப்பை எழுதினேன்.






Tuesday, 2 April 2013

கலைஞர் கருணாநிதிக்கு இது போதாத காலம்

கலைஞர் கருணா நிதிக்கு இது போதாத காலம். வீட்டுக்குள்ளேயே வெட்டுக் குத்து. அழகிரி ஒரு பக்கம். ஸ்டாலின் ஒரு பக்கம். கனிமொழி இன்னொரு பக்கம்.

இலங்கை பிரச்சினையைக் காட்டி காங்கிரசுக்கு கல்தா கொடுத்தாகி விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது கலைஞருக்கே தெரியாது.

குடும்பத்தில் நடக்கும் குத்து வெட்டுக்கு முடிவு கட்டுவது எப்படி என தெரியாமல் முழிப்பதும் வெட்ட வெளிச்சம்.

இந்த நேரத்தில் கலைஞருக்கு சாதகமாக ஜாதகம் பலன் இருக்கிறதா என்று பார்த்தால் கணிப்பு என்னவோ பாதகமாகத்தான் தெரிகிறது.

ரிஷப ராசி கலைஞருக்கு. ஆறாம் இடத்தில் சனி. இது சாதகமாக இருந்தாலும் இது வரை கலைஞருக்கு கை கொடுத்து வந்த குரு பகவான் முகத்தைத் திருப்பிக் கொண்டு முறுக்கி நிற்கிறார்.



அடுத்த மாதத்தில் இருந்து இந்த முறுக்கலின் இறுக்கம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் பன்னிரண்டாம் இடத்துக் குரு கண்ணிரண்டில் விரலை விட்டு ஆட்டாமல் போக மாட்டார்.

ஆகவே நிதானமாக அடி எடுத்து வைக்கா விட்டால் நிச்சயம் அதன் பலனை அனுபவிக்காமல் கலைஞரால் தப்பி முடியாது

Wednesday, 27 March 2013

உருட்டுக் கட்டை... காந்தி... காங்கிரஸ்.....



மாணவர்கள் போராட்டம் தமிழ் நாட்டை தணலாக கொதிக்க வைத்திருக்கிறது.. பொறுப்பு இல்லாதவர்கள் என பொல்லாங்கு பேசியவர்களுக்கு இந்த நெருப்பு மலர்கள்.. செறுப்பு சாமரம் வீசியிருக்கின்றன.



காங்கிரஸ்காரர்களுக்கு பஞ்சு மெத்தை நஞ்சு மெத்தை ஆகி உறக்கத்தை உறிஞ்சி விட்டது. தமிழர்களின் இரத்ததை ஸ்ட்ரா போட்டு குடித்த ராஜபக்சேவின் ராத்தூக்கம் ராத்துக்கமாகி விட்டது.

திவ்யா என்ற அனல் பூ... கனல் வீசி கக்கிய கருத்துக்கள்.. ஆகா... என்ன ஆக்ரோசம்... என்ன ஆவேசம்... என்ன இறுமாப்பு... எத்தனை பொறுப்பு...

போராட்டம் எங்கள் குடும்பச்சொத்து என்று உதட்டிலேயே உடுக்கடித்து தமிழ் நாட்டை கூறு போட்ட திமுக.. திடுக்கிட்டு நிற்கிறது..



குண்டு வீச்சில் சிதறிய இரண்டு லட்சம் உயிர்களுக்கு ஆறுதல் மட்டுமே சொல்லி அஞ்சலி பாடிய கலைஞர் கருணா நிதி.. அடி வயிறு கலங்கிய கருணா நிதியாக அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

இந்த இக்கட்டான நேரத்தில்தான் அகிம்சை தான் எங்கள் தாரக மந்திரமென அகிலமெல்லாம் ஒலிபரப்பிய காந்தி கண்ட காங்கிரஸ்காரர்கள் உருட்டுக் கட்டை மன்னர்களாக உருவெடுத்து மனிதாபிமானப் போர் தொடுத்த மாணவர்களின் மண்டையை பிளந்திருக்கிறார்கள்.



அடடா... பாட்ஷா படத்தில் ரஜினிகாந்துக்கு பின்னால் வேக நடை போட்டு வரும் வில்லன் களைப் போல அவர்கள் வந்த கோலம் இருக்கிறதே... காணக் கண் கோடி  வேண்டும்.

சும்மா.. வெள்ளை சட்டை... வேட்டி.. பேண்டு என அவர்கள் வித விதமான கெட்டப்புகளில் வந்து பிறவி தாதாக்களை பின்னுக்கு தள்ளி  விட்டார்கள்..

சாண்டோ சின்னப்ப தேவரிடம் கம்புச்சண்டை கற்றவர்கள் மாதிரி மாணவர்களை அவர்கள் புரட்டி எடுத்த காட்சி இருக்கிறதே... சினிமா தோற்றுவிட்டது போங்கள்...

மாணவர்கள் திருப்பி போட்டிருந்தால் அந்த தொந்தி தாதாக்கள்.. சந்து கிழிந்திருக்கும். ஆனால்.. மரணத்தைக் கூட மலர்ப்படுக்கையாக கருதும் மாணவர்கள்... காங்கிரஸ் கட்டெறும்புகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

சொந்த ரத்தம் நக்கும் அந்த காங்கிரஸ் ஓநாய்களுக்கு தெரியவில்லை... எரிமலையை இதயத்தில் சுமக்கும் மாணவர் சமுதாயத்தின் விழி அவர்களின் பக்கம் திரும்பினால் இங்கிருக்கும் தலைவர்கள் அன்னைக்கு அடி வருட டெல்லியில் முகாம் போட வேண்டி இருக்கும் என்பது.

இந்த நேரத்தில் இன்னொரு அசிங்கத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். சென்னையில் கிரிக்கெட் போட்டி நடக்க போகிறதாம்.. அதற்காக பல நடை பிணங்கள் டிக்கெட் வாங்க ஐந்தாறு மணி நேரம் காத்து நிற்கிறதாம்.

பெத்த ஆத்தா செத்துக் கிடந்தாக்கூட அதை பத்தி கவலைப்படாமல் பிரியாணி தின்னுற மானங்கெட்ட ஜென்மங்க மாதிரி டிக்கட் வாங்கிய பெருமையை டிவியில பல்லக் காட்டி சொல்லும்போது அடி வயிறு பத்தி எரியுதுங்க....

அட.. கிரிக்கெட் பைத்தியம் பிடித்த கிறுக்கு சிகாமணிகளா.... தொப்புள் கொடி உறவுக்கு நீ உயிரையும் கொடுக்க வேண்டாம்... ஒரு மயிரையும் கொடுக்க வேண்டாம்... கிரிக்கெட்டை பாக்க மாட்டோமுனு ஒரு தடவை ஒதுக்கித்தான் தொலையுங்களேன்..


Sunday, 16 September 2012



எல்லாம் சனி பகவான் செய்த வேலை அய்யா.


வல்லியர் தெள்ளியர் ஆயினும் ஊழ் வினை மெல்ல வந்து உறுத்தும் என்பது பெரியவர்கள் வாக்கு. அது சும்மா போகுமா?

கிரைனைட் கிங் என்று சொல்லப் பட்ட பிஆர் பழனிச்சாமி இப்போது சிறைக் கம்பி களூக்கு இடையே சிக்கிக் கொண்டு சிதைந்து போய் நிற்கிறார்.

அவருக்கு அல்லக் கைகளாக இருந்த அரசாங்க அதிகாரிகள் எல்லாம் அலங்க மலங்க விழித்த படி அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.



பிஆர்பி...கிரானைட் கற்களைக் கிண்டினாரா? இல்லை கிட்டிப் புல் விளையாண்டாரா?... என்பது இந்தப் பகுதிக்கு தேவை இல்லாத விஷயம்.

ஆனால்.. மத்திய மாநில அரசுகளுக்கு மல்கோவா கொடுத்த பிஆர் பி ஏன் எலிப் பொறிக்குள் மாட்டிக்கொண்ட புலிக் குட்டிக் போல் இன்று முக்கி முணகிக் கொண்டிருக்கிறார்.

எல்லாம் சனி பகவான் செய்த வேலை அய்யா...எப்படி நான் அடித்துக் கூறுகிறேன் என்று நினைக்கிறீர்களா?

சில மாத்ங்களுக்கு முன்னர் கன்னியில் வக்கிரமான சனி பகவான்... அவரால் பலன் அடைந்தவர்கள் பல பேரின் பல்லைக் கழட்டி இருக்கிறார்.

அந்த வரிசையில் பி ஆர் பி யும் மாட்டிக் கொண்டிருப்பார் என்பது என் எண்ணம்.

அவருடைய ஜாத்க அமைப்பு எனக்கு தெரியாது. ஆனால் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அதைதான் காட்டுகின்றன.

ஒரு வேளை கடந்த சனிப் பெயர்ச்சியின் போது அவர் ஜாதகத்தை ஊன்றி கவனித்து இருந்தால் இந்த் கண்டத்தில் இருந்து தப்பி இருக்கலாம் என்ப்து என் எண்ணம்.



இருந்தாலும் கொட்டி குவிந்த பணம்... அலட்சியம் காட்டிய அரசாங்கம். மாலை மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்கள், கை கட்டி நின்ற காவல்துறை.. இவை யாவும் அவரின் அகக் கண்களுக்கு ஆப்பு வைத்து விட்டது.

அதன் விளைவுதான் இந்த அவலம்.

மேலும் அவருக்கு மாரக ஸ்தானாதிபதி தசை நடக்கலாம். அது அவருக்கு மாரகத்தை கொடுப்பதற்கு பதிலாக இந்த அவலத்தை அளித்து தங்கக் குவளையில் காப்பி குடித்த அவரை தகரக் குவளையில் தண்ணி குடிக்க வைத்து விட்டது.

இனியாவது இறைவன் திருவுள்ளத்துக்கு எதிராக இருக்காமல் ஜாதகத்தை சரியாக பார்த்து தகுந்த பரிகாரங்கள் செய்தால் தோஷம் விலகி சந்தோசம் நிலவும்.

Friday, 14 May 2010

உரிய நேரம் வந்து விட்டால் உயிர் போய்விடும்

அண்மையில் என்னை அதிர வைத்த ஒரு சோகச் செய்தி. கார் விபத்தில் ஒருவர் அடைந்த அகால மரணம். மலேசியாவில் ரவாங் என்ற இடத்தில் மிகப் பிரமாண்டமான துர்க்கை அம்மன் கோவில் இருக்கிறது. இதை நிர்மாணித்தவர் கணேசன் என்பவர். இவருடைய பற்றாளர்கள் இவரைக் கணேசனார் என்றே அழைப்பார்கள்.



நல்ல பண்பாளர். சிறந்த சமூக சேவையாளர். தேடி வருகின்ற பக்தர்களின் குறைகளை முன்னுணர்ந்து பரிகாரம் சொல்பவர். இவருக்கும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். யாரும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாதவர். குடும்பம், மனைவி பிள்ளைகள் என இல்லறத்திலும் நல்லறம் கண்டவர்.

இப்படிப்பட்டவர் தமிழ் நாட்டில் பொள்ளாச்சி அருகே காரில் போய்க் கொண்டிருந்த போது கார் விபத்துக்குள்ளாகி அந்த இடத்திலேயே மரணம் அடைந்து விட்டார். இந்த செய்தி என்னை உலுக்கி எடுத்து விட்டது. நல்லவர் கெட்டவர் என்பது நமனுக்கு தெரியாது. விழிப்போடு இருந்தாலும் உரிய நேரம் வந்து விட்டால் மாயையின்பால் சிக்கி உயிர் போய்விடும் என்பதற்கு கணேசனாரின் மரணம் உதாரணமாகி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.  அன்னாரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

"நல்லவர்கள் எல்லாம் சீக்கிரமே சிவலோகம் சென்று விடுகிறார்கள்" என்று அவரின் சீடர்கள் கண்ணீர் விட்டு கதறிய காட்சி இன்னும் மனதைப் பிசைகிறது.

Tuesday, 4 May 2010

நித்தியானந்தா கால்பட்ட இடமெல்லாம் கருகிப் போன துயரம்




நேரம் சரியில்லை என்றால் சந்தனக் குழம்பில் குளித்தவன் சாக்கடையில் மிதப்பான்... கோபுரத்தில் குடியிருந்தவன் குடிசையில் கிடப்பான்....பல்லக்கில் போனவன் பாதம் நோக நடப்பான்... தங்கச் சிம்மாசனத்தில் இருந்தவன் தனிமைச்சிறையில் கழிப்பான்... இதற்கு நல்ல உதாரணம் நித்தியானந்த சாமியார்.

தமிழகத்தில் மருமகள்கள் பெரிதும் பயப்படுவது 'மாமியாருக்கா... சாமியாருக்கா... என பட்டிமன்றம் போட வைத்தவர். கடவுளைக் கண்டு விட்டதாக கதை விட்ட இந்த மனிதருக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது இறைவன் செலுத்திய ஈட்டி.

நான் இங்கே சொல்லப்போவது இவருக்கு நேர்ந்த அவலத்தை அல்ல. இவர் கால் பட்ட இடமெல்லாம் கருகிப் போன துயரத்தை. இவர் தன்னை கடவுள் என்றார். கோபியர் கொஞ்சும் ரமணன் என்றார். ரஞ்சிதாவோடு பாலியல் ஆராய்ச்சி செய்து வலிக்காமல் பிள்ளை பெறுவது எப்படி என அமெரிக்க மருத்துவர்களுக்கு ஆராய்ச்சிக் கட்டுரை அனுப்பினார். பெரிய பெரிய புள்ளிகளின் மனைவிகளைக் கூட ஒப்பந்தம் போட்டு ஒளிவிளக்கு ஏற்றினார்.

இவர் கால் பட்டாலே கஷ்டங்கள் மறைந்து போகுமாம். கை பட்டாலே துயரங்கள் தூள் தூளாகும். பார்வை பட்டாலே பாதங்கள் எல்லாம் பறந்து ஓடுமாம். இப்படித்தான் எல்லாரும் இவர் காலைக் கழுவி தண்ணீர் குடித்தார்கள். அப்படிப்பட்ட மகான் இப்போது ஏன் சிறையில் இருக்கிறார். இவரை நம்பியவர்களின் கதி என்ன?

இவரால் ஆசீர்வதிக்கப்பட்ட ரஞ்சிதா இப்போது ரகசிய ராத்திரி தேவதையாக இருக்கிறார். கட்டிய கணவனுக்கு கடுக்காய் கொடுத்தவர் போலீசாருக்கு போக்கு காட்ட முடியாமல் தவிக்கிறார்.

அமெரிக்காவில் இவருக்கு முதலில் அடைக்கலம் கொடுத்து விசாவுக்கெல்லாம் ஏற்பாடு செய்த ஒருவர் இப்போது பணத்தை இழந்து பட்டமரமாக நிற்கிறார். "சாமியாரோடு குடும்பம் நடத்திக் கொள்" என சொல்லி விட்டு இவருடைய மனைவி டாடா காண்பித்து போய் விட்டார்.

இந்த சாமியாருக்கு நேரடி முகவராக விளங்கிய ராகசுதா என்ற நடிகை திரை உலகத்திலும் சரி.... சொந்த வாழ்க்கையிலும் சரி....சொதப்பலாகத்தான் இருக்கிறாரே தவிர சுபிட்சமாக அல்ல. இவரும் வெளியே முகம் காட்ட முடியாமல் முக்காடு போட்டுக் கொண்டு திரிகிறார்.

தமிழகத்திலேயே நம்பர் 1 வார இதழ் குமுதம். இதில்தான் நித்தியானந்தாவின் "கதவைத் திறங்கள் காற்று வரட்டும்" என்ற ஆன்மீகத் தொடர் அலப்பறை பண்ணியது. இதைப் படித்து விட்டுத்தான் நித்தியானந்தாவின் கதவைப் பல பெரிய புள்ளிகளின் மனைவிகள் திறந்தார்கள்.

இப்போது அந்த குமுதம் பத்திரிகையில் பிரச்சினை.உரிமையாளருக்கு பதிப்பாளருக்கும் உள்குத்து நடந்து அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. குமுதம் நிர்வாகத்தில் பலகோடி நஷ்டம் என பகிரங்கமாகவே சொல்லப்படுகிறது. அங்கு பாலியல் கூத்துகளும் நடந்ததாக போலீசில் புகாரும் செய்யப்பட்டிருக்கிறது.

நித்தியானந்த இப்போது இருப்பது கர்நாடகாவில்.. அங்குள்ள சிறையில்தான் விசாரிக்கப்பட்டு வருகிறார். அங்கு பாரதிய ஜனதா ஆட்சி நடப்பதால் சாமியாருக்கு பெரிய பிரச்சினை இல்லை. தமிழ் நாட்டைப்போல தடியால் விசாரிக்க முடியாது. இந்தத் தைரியம்தான் சாமியாரை தெம்பாக வைத்திருக்கிறது.

ஆனால், கர்நாடகாவில்  பாரதிய ஜனதா ஆட்சிக்கே ஆப்பு வைக்கும் நிலை உருவாகி இருக்கிறது. உணவுத்துறை அமைச்சராக இருந்தவர்... நண்பனின் மனைவி மீது கை வைத்து விட்டார். அது சந்திக்கு வந்து அமைச்சர் பதவிக்கு சங்கு ஊதி விட்டது. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடியூரப்பாவும் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டம் வெடித்திருக்கிறது.

சாமியாருக்கு ஜோதிடம்... தீர்க்க தரிசனம் தெரிந்திருந்தால் நிச்சயமாக இன்று ஏற்பட்டிருக்கும் அவலத்தின் அஸ்திவாரம் உணரப்பட்டிருக்க வேண்டும். அப்படி தெரிந்திருக்கவில்லை என்றால் ஊருக்கு உபதேசம் செய்யும் ஊதுகுழாய் மட்டுமே அவர். வேறு விஷேச ஆற்றல் என்பது ஏமாற்று வேலை தான்.

அவருக்கு தெரியாவிட்டாலும் அவருக்கு நெருக்கமான ஜோதிடர்களுக்கு அவரின் நடப்பு மகா தசை, புத்தி, கோச்சாரம் போன்றவை தெரிந்திருக்கும். அல்லது இது மாரகாதிபதி தசையாக கூட இருக்கலாம். அப்படிப்பட்ட தசை, புத்தி நடக்கும்போதுதான் மரணத்திற்கு பதிலாக இதுமாதிரியான அசிங்கத்தை தசா நாதனோ புத்தி நாதனோ  கொடுப்பான்.

ஏன் இதை மாரகத்துக்கு சமமாக சொல்கிறேன் என்றால்... புகழின் உச்சியில் இருந்து மக்களால் போற்றப்பட்ட ஒருவன், அதே மக்களால் காரி உமிழ்ந்து தூற்றப்பட்டால் இறந்து போனவனுக்கு இணைதான். மேலும் இது மாதிரி அசிங்கம் மானமுள்ள ஒருவனுக்கு நடந்திருந்தால் அவன் என்ன செய்திருப்பான். நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்திருப்பான்.

தூக்குப் போட்டு சாகலாம். மருந்து குடித்து சாகலாம். மாடியில் இருந்து குதித்து சாகலாம். அது என்ன நாக்கைப் பிடுங்கிக் கொண்டு... இந்த நாக்கு பேசிய தத்துவத்துவம் வேறு.. நடந்து கொண்ட முறை வேறு என்பதால்.

இது நமது கண்ணுக்கு தெரிந்தது. கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ. எத்தனைதான் ஆன்மீக அறிவு இருந்தாலும் காவி வேட்டி நடத்தி கண்காட்சி நடத்தினாலும் கையை உயர்த்தி காலை தூக்கி ஆசீர்வாதம் செய்தாலும் இறைவன் முடிவு எடுத்து விட்டால் நித்தியானந்தா என்ன அவரை விட ஆயிரம் மடங்கு செல்வாக்கு மிக்க சுத்தியானந்தாவாக இருந்தாலும் சும்மா... சும்மா... தான்.