Wednesday, 7 August 2013

தற்கொலைக்கு தூண்டும் ஏழரைச் சனி

சிவபெருமானுக்கே சிக்கல் ஏற்படுத்தியவர் சனி பகவான். சாதாரண மனிதர்களை சட்னியாக்கி விடமாட்டாரா என்ன?

அவதார புருஷர்களுக்கே அல்வா கொடுப்பர் சனிபகவான். அகப்பட்ட மனிதர்களை அல்லாட வைத்து விட மாட்டாரா என்ன?

ஏழரைச் சனி  என்பது சனி பகவானுக்கு மிகவும் இன்பமான கால கட்டமாகும். ஒருவருக்கு ஏழரைச் சனி பிடித்து விட்டால் உருக்குலைந்து சின்னாபின்னமாகி விடுவார்.



அதுவும் சனி பகவானுக்கு பிடிக்காத வீட்டுக்காரர்கள் என்றால் (சிம்மம் போன்ற சில ராசிக்காரர்கள்) சும்மா சொல்லிச் சொல்லி அடித்து கில்லி விளையாடி விடுவார்.

இது மாதிரி ஏழரைச் சனியின் பிடியில் சிக்கிய ஒருவர் கடந்த வாரம் என்னைச் சந்தித்தார்.

இவர் துலாம் ராசிக்காரர். லக்கனமும் துலாம்தான். 1992-ஆம் ஆண்டுகளில் மலேசியாவுக்கு வந்தவர்.

படாத கஷ்டங்கள் இல்லை என்றே சொல்லலாம். படுக்கக் கூட இடம் கிடைக்காமல் திண்டாடியவர்.

நாலைந்து ஆண்டுகள் தான் இவருக்கு சிரமம். அடுத்து ஏற்றமான காலகட்டம். சொந்தத்தொழில் ஆரம்பித்தார்.

ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி. மில்லியன் கணக்காக சம்பாத்தியம். இந்த நேரத்தில் தான் சனிபகவான் ஏழரைச்சனி என்ற வாகனம் ஏறி இவர் வாழ்க்கையில் புகுந்தார்.

இவர் நம்பி வேலைக்கு வைத்த இவரின் உறவுக்காரப் பையனை சனியன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

பணக் கையாடலை மிக பக்குவமாக அரங்கேற்றினார். தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட விலை மிகுந்த உபகரணங்களை அடகு வைத்து விட்டு கம்பி நீட்டினார்.

வெளிநாடு போயிருந்த சமயத்தில் இவ்வளவும் நடந்து விட்டது. தொழில் படுத்து விட்டது. கடன் கூடி விட்டது.

படுத்த தொழிலை எழுப்ப பல வகையில் முயன்றும் முடியாமல் தற்கொலை வரை போய் விட்டார்.

"வரும் போது என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு". இதுதான் அவருக்கு நான் சொன்ன ஆறுதல்.

ஆறுதல் மட்டும் இவரின் அழுகைக்கு மருந்து ஆகி விடாது. என்ன செய்வது அது ஒரு முதலுதவி.

நான் அவருக்கு கொடுத்த தன்முனைப்பு கொஞ்சம் தெம்பை அளித்தது. அவர் கண்களில் நம்பிக்கை ஒளி. மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற வேட்கை.

துலாம் சனிக்கு உச்ச ராசியாகும். அதனால் பாதிப்பு அதிகம் தரமாட்டார் என்றாலும் ஜென்மத்தில் பகை வீட்டிலோ... கோளாறான இடத்திலோ இருந்தால் தன்னை மறந்து ஒரு பிடிபிடித்து விடுவார்.

மேலும் மகாதசை வேறு மக்கர் பண்ணுகிறது. ஏழரைச் சனி  காலத்தில்தான் சனி மகா தசை ஆரம்பம். சுயபுத்தியில் இவரின் செயல்பாடு சுனாமியாக இருக்கும்.

திருநள்ளாறு சென்று வர கூறியிருக்கிறேன். சில வழிபாட்டு முறைகளையும் அறிவுறுத்தி இருக்கிறேன்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இவருக்கு சிரமமான காலகட்டமாகும். அதன் பின்னர் மாற்றம் தெரியும். படிப்படியாக ஏற்றம் கிடைக்கும்.

உயர்ந்த நிலைக்கு வருவார் என்பது உறுதி.

 

Wednesday, 31 July 2013

கல்யாணத்தைத் தடுக்கும் காளசர்ப்ப தோஷம்

நாகநந்தினி என்ற அழகான பெண். வயது 32. இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தார்.

அழகு இருந்தும் பணம் இருந்தும் திருமணம் மட்டும் நடக்கவில்லையே என்ற ஏக்கம் ஏராளமாக இருந்தது.



ஜாதகத்தைப்பார்த்தேன். கடுமையான காளசர்ப்பதோஷம். அதென்ன கடுமையான காளசர்ப்பதோஷம் என நினைக்கிறீர்களா?

இது வியாதி மாதிரிதான். சாதரண காய்ச்சல். டைபாய்டு. மலேசியா. டெங்கு என்பதுபோல்.

களத்திரகாரகனான சுக்கிரன் 8 ஆம் இடத்தில் மறைவு. சனியோடு சேர்க்கை. 7 ஆம் இடத்தில் சூரியன். இப்படி பல கோளாறு.

இதெல்லாம் விட மிக முக்கியமான விஷயம்... அந்த பெண்ணின் முக அமைப்பு நாகத்தைப் போல. 

நம்மைக் கூர்ந்து நோக்கினால் நாகப் பாம்பு படம் எடுத்துப் பார்ப்பதைப்போல பயப்பட வைக்கும்.

இப்படிப் பட்ட பெண்ணுக்கு கணவன் வாய்ப்பது கடினம். இருப்பினும் மணவாழ்க்கை அமைவதற்கு சில வழிகளைச் சொன்னேன்.

திருக்காளகஸ்திக்கு சென்று சர்ப்ப சாந்தி செய்யும்படி அறிவுறுத்தினேன். மேலும் தமிழ்நாட்டில் 48 வாரம் தங்கி இருக்கும்படி கூறினேன்.

தமிழ்நாடு ராமநாதபுரம் இந்தப் பெண்ணின் பூர்வீகம். சொந்த வீடு இருக்கிறது. அதில் இவரின் பெரியம்மா வசிக்கிறார்.

இவர் அங்கு இருந்து வாரம் ஒரு முறை இராமேஸ்வரம் சென்று கடலில் குளித்து தீர்த்தமாடி வந்தால் சர்ப்ப சாந்தி ஏற்படும்.

சங்கராபரணமாக சிவன் கழுத்தில் தவழும் நாகதேவன் மனம் இறங்கி மணவாழ்க்கைக்கு வழி அமைத்துக் கொடுப்பான் என்பது திண்ணம்.

இந்தப் பெண்ணுக்கு 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்னர் கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான். இது இறைவன் திருவருளால் ஈடேறும் என்பது திண்ணம்.

Thursday, 25 July 2013

பரிகாரங்கள் கண்டிப்பாக பலன் கொடுக்கும்....!

ஜோதிடம் என்பது ஞானிகளின் அற்புத ஆன்மீக கண்டுபிடிப்பு. இது பொய் என்று புறம் தள்ளி போகின்றவர்களும் உண்டு... உண்மை என்று ஒத்துக் கொண்டு வாழ்கின்றவர்களும் உண்டு.

எட்டி மிதிப்பவர்களுக்கும் ஏற்று மதிப்பவர்களுக்கும் ஜோதிடம் பாகுபாடு பார்த்து பலன் தருவதில்லை. கிழக்கு வானை கிழித்து ஒளி சிந்தும் சூரியனைப் போல வாழ்க்கையின் வழி காட்டி அது.

எல்லாம் இருந்தும் ஒன்று இல்லாதது... எதுவும் இல்லாமல் ஏதாவது ஒன்று இருப்பது ஜோதிடத்தின் சூட்சமம்.

ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிட்டாலும் இறக்காத சகோதர பாசம் கொண்டவர்.அன்பு இளவல் மகேந்திரன்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் சின்ன கிராமத்தில் இவர் வசிக்கிறார்.

ஊருக்கு அம்பலகாரர். ஊரை வழி நடத்தும் கடமை இவருக்கு உண்டு. அதற்கான தகுதியும் ஏராளம். இவருக்கு வயது 36. பாதை தடுமாற வைக்கும் போதைப்பழக்கம் இல்லை. உடலுக்கு பகையான புகை பிடிக்கும் பழக்கம் கிடையாது.

வசதி வாய்ப்புக்கள் ஏராளம். ஓடியாடி தேடித்தான் ஒருவேளை உணவு உண்ண வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அழகும் சுறுசுறுப்பும் இவருக்கு அணி செய்பவை.

எல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தாலும் திருமண வாழ்க்கை கண்ணாமூச்சி காட்டியது. எடுத்த முயற்சிகளுக்கெல்லாம் இறுதிப் பலன் தோல்விதான்.

மகனுக்கு இன்னும் மணவாழ்க்கை அமையவில்லையே என ஈன்ற அன்னைக்கு இதயச் சுமை ஏறிக் கொண்டே போனது. இனிமேல் ஏது திருமணம் என்ற விரக்தி அந்த இளைஞனின் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலந்தது.



இந்த காலகட்டத்தில் நான் இந்தியாவில் இருந்தேன். என்னை வந்து சந்தித்தார்கள். நான் மட்டுமே தீர்வு காண முடியும் என உறவுகளும் நட்புகளும் உறுதியாக நம்பின.

ஜாதகத்தைப் பார்த்தேன். காளசர்ப்ப தோஷத்தின் கடுமையான பிடியில் சிக்கி அனைத்து கிரகங்களும் முடங்கிக் கிடந்தன. களத்திரகாரகனான சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தான்.

சர்ப்பங்களுக்கு சாந்தி செய்ய திருக்காளகஸ்திக்கு அழைத்துச் சென்றேன். திருமண வகையில் இருந்த மற்ற இடையூறுகளூக்கு உரிய பரிகாரம் சொன்னேன்.

காலம் நீண்டதால் தண்ணீரில் தலை தூக்கும் கெண்டை மீனைப் போல ஏமாற்றம் அவர்கள் இதயத்தில் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதை இலை மறை காயாக என்னிடம் உணர்த்தினார்கள்.

அன்னக்கிளி படம் ஆரம்பத்தில் தடுமாறி இடைப்பட்ட காலத்தில் வசூலில் எகிற வைத்தது போல இவருக்கு பரிகாரகங்கள் பலன் தர ஆரம்பித்தன.

 இந்தப் பெண்தான் இல்லத்தரசியாக வரவேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் நினைத்து அது ஈடேறாமல் மனம் வெந்து போயிருந்தாரோ அதே பெண் அவருக்கு மனைவியாக அமையும் வாய்ப்பை காலம் ஏற்படுத்தித் தந்தது.

காளசர்ப்ப தோஷம் 35 வயதுக்கு மேல் காளசர்ப்ப யோகமாக மாறும் என்பது பொதுவான விதி. இருப்பினும் களத்திர வகையில் அவருக்கு இருந்த இடையூறுகள் எல்லாம் களையப்பட்டு இன்று இல்லறச் சோலையில் தடம் 
பதிக்கப் போகிறார்.

இதில் முக்கியமான ஒரு அம்சத்தை நான் இங்கே குறிப்பிட வேண்டும். இவருடைய ஜாதக பலனை கணிக்கும் போது தசா புத்தி கணக்கிட்டேன். அப்போது கழித்தலில் பிழை ஏற்பட்டு வயதை சற்று குறைத்து சொல்லி விட்டேன்.

இது நான் தெரிந்து செய்த பிழை அல்ல. என்னை அறியாமல் என் இதழ் பிளந்து விழுந்த சொல். நல்லது நடக்க இறைவன் நடத்தும் நாடகங்களில் இதுவும் என்று நான் வியந்து போனேன்.

வரும் ஆவணி மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம். சுமார் 3500 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் மலேசியாவில் நான் இருக்கிறேன். அன்பு இளவலின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் நெஞ்சு நிறைந்த ஆசை. ஆனால், காலம்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.





Monday, 29 April 2013

டத்தோ சரவணன் வெற்றி ஏற்கனவே எழுதப்பட்டது

மலேசிய கூட்டரசு பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன்.

பேராக் மாநில தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றார்.

இந்த முறை அதே தொகுதியில் போட்டி இடுகிறார். சிறந்த சேவையாளர். 

இனப்பாகுபாடு இல்லாமல் எல்லா மக்களிடமும் அணுக்கமான அன்பும் பாசமும் கொண்டவர்.

இவரின் ஜாதகமும் கிடைக்கவில்லை. ஆனால், இவரின் வெற்றி ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பு.

அரசியல் சேவை இவரின் வெற்றிக்கு வழி வகுத்தாலும் ஆன்மீக ஆற்றல் இவரின் எல்லா வெற்றிகளுக்கும் அடித்தளமாக இருக்கிறது.

இறைவனை இவர் தேடிப்போக வேண்டியதில்லை. இறையருள் இவரைத்தேடி வரும்.



கலைமகள் இவர் நாவில் நடனமிடுகிறாள். அதனால், மற்றவர்களை வார்த்தையால் வசப்படுத்தும் வல்லமை இவருக்கு இயல்பாகவே அமைந்து
விட்டது.

எதிரியின் பலத்தில் பாதியை ஈர்க்கும் வல்லமை வாலிக்கு இருந்ததாக இதிகாசம் கூறுகிறது.

இந்திய அரசியல் வாதிகளில் எம் ஜி ஆருக்கு அந்தப்பலம் அளவற்று இருந்ததாக அவரின் ஆஸ்தான ஜோதிடர், ஜோதிட பூஷன், ஜோதிட சாம்ராட் வித்வான் லெட்சுமணன் அவர்கள் கூறுவார்கள்.

அந்தப் பலம் டத்தோ சரவணனுக்கு அமைந்திருக்கிற அம்சத்தை பல கட்டங்களில் காண முடிகிறது.

இவை அனைத்தும் டத்தோ சரவணன் அவர்களின் அரசியல் வெற்றிக்கு அனுசரணையாக உள்ளன.

இந்த வெற்றி மட்டுமல்ல... இன்னும் பல உச்ச பதவிகளை அடையும் பாக்கியத்தை இவரின் சாமுத்திரிகா லட்சண யோகம் அளிக்கிறது.





மீண்டும் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்

மலேசியாவில் மே 5-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறப் போகிறது. 

2007-ஆம் ஆண்டு ஹின்ட்ராப் என்ற இந்தியர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய எழுச்சியை மக்களிடையே ஏற்படுத்தியது.

அப்போது துன் அப்துல்லா படாவி பிரதமராக இருந்தார். அடுத்து 2008- ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி பெரிய சரிவைச் சந்தித்தது.

அடுத்து டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக பதவி ஏற்றார். அதன் பின்னர் இந்திய சமுதாய்த்தின் ஆதரவைப் பெறுவதற்காக பல திட்டங்களை கொன்டு வந்தார்.

இருப்பினும் இந்தமுறை வெற்றி வாய்ப்பு ஆளும் கட்சிக்கா... எதிர்க்கட்சிக்கா என்பது இழுபறியாகவே இருக்கிறது. கருத்துக் கணிப்புகள் கண்ணாமூச்சி 
காட்டுகின்றன.



நஜீப் அவர்களின் பிறந்த நேரம் தெரியாததால் ஜாதகம் கணிக்க முடியவில்லை. ஆயினும் அவரின் சில அம்சங்களை வைத்துப் பார்க்கும் போது மீண்டும் அவரே ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

எதிர்க்கட்சிகள்தான் வெற்றி பெறும் என்று பரவலாக பேசப்பட்டாலும் அதற்கான வாய்ப்பு குறைவு.

நஜிப் என்ற தனிமனிதரின் அம்சம் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமர வழி வகுக்கும் என்பது காலத்தின் கட்டாயம்

Saturday, 13 April 2013

வெற்றித் திருமகன் டத்தோஶ்ரீ பழனிவேலு

ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ பழனிவேலு. மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார்.

கடந்த முறை உலுசிலாங்கூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்.

ஆர்ப்பாட்டமில்லாத அரசியல்வாதி. ஆனால், பேசுவது குறைவு. சேவை அதிகம்.

புத்தகத்தின் அட்டையைப் பார்த்து உள்ளே இருப்பதை எடை போடாதே... என்ற  பழமொழி உண்டு.

இவரின் அமைதியைப் பார்த்து ஆற்றலைக் குறைவாக மதிப்பிடுபவர்கள், கண்டிப்பாக ஏமாந்து போவார்கள்.



இவரின் பிறந்த நேரம் தெரியாது. ஆகையால் முறையான ஜாதகத்தைக் கணிக்க இயலவில்லை.

இருப்பினும் இவரின் சில அம்சங்களை வைத்து அலசிப் பார்த்தேன். அந்த வகையில் இவரின் பதவி யோகத்தை இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

கட்சிச் தலைவருக்கு விசுவாசமாக இருந்தவர். கிடைத்த பொறுப்புக்களைக் கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொண்டவர்.

கட்சித் தலைமைப் பதவி கஷ்டம் தராமல் இவரைத் தேடி வந்தது.

 கட்சிப் பதவிக்கு கடும் போட்டியாக இருப்பார் எனக் கருதிய செல்வாக்கு மிக்க  தலைவர் ஒருவரை இயங்க விடாமல் காலம் கட்டிப் போட்டு விட்டது.

இது இவரின் அரசியல் வெற்றிப் பாதைக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தது.

உலுசிலாங்கூர் தொகுதியில் இவருக்கு தோல்வியைத் தந்த மாற்றுக் கட்சி உறுப்பினர் துரதிஷ்டவசமாக இயற்கை எய்தினார்.

அதன் காரணமாக நடந்த இடைத்தேர்தலில் இந்தத் தொகுதி மீண்டும் ம.இ.கா. வசம் ஆனது.  இது மீட்சி யோக அமைப்பாகும்.

இவரின் மூக்கு அமைப்பும் தீட்சண்யம் மிக்க திருஷ்டியும் உச்ச பதவியில் உட்காருகின்ற அம்சத்தை அளிக்கிறது.

எதிர்க்கட்சியினரின் எழுச்சி இவரைக் கண்டிப்பாக வீழ்த்தி விடும் என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

அந்தக் கணக்கை காலம் மாற்றப் போகிறது. இவருக்கு வெற்றியைக் காணிக்கையாக தரப் போகிறது.

டத்தோஶ்ரீ பழனிவேலு, உலுசிலாங்கூர் தொகுதியை ஒதுக்கி விட்டு வேறு தொகுதிக்கு செல்வார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

எந்தத் தொகுதியாக இருந்தாலும் இவரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

வாக்கு வித்தியாசங்கள் அதிகமா... குறைவா... என்பது குறித்து எனக்கு தெரியாது.

ஆனால், இவரின் வெற்றி மட்டும் நிச்சயமானது என்பது என் கணிப்பு.

என் கணிப்பு என்று சொல்வதை விட காலத்தின் தீர்ப்பு என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் என் ஆத்மார்த்த நண்பரும் மிகச் சிறந்த ஊடகவியளாருமான ஒருவரிடம் டத்தோஶ்ரீ பழனி குறித்து பேசிக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னர்
இந்தக் கணிப்பை எழுதினேன்.






Tuesday, 2 April 2013

கலைஞர் கருணாநிதிக்கு இது போதாத காலம்

கலைஞர் கருணா நிதிக்கு இது போதாத காலம். வீட்டுக்குள்ளேயே வெட்டுக் குத்து. அழகிரி ஒரு பக்கம். ஸ்டாலின் ஒரு பக்கம். கனிமொழி இன்னொரு பக்கம்.

இலங்கை பிரச்சினையைக் காட்டி காங்கிரசுக்கு கல்தா கொடுத்தாகி விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது கலைஞருக்கே தெரியாது.

குடும்பத்தில் நடக்கும் குத்து வெட்டுக்கு முடிவு கட்டுவது எப்படி என தெரியாமல் முழிப்பதும் வெட்ட வெளிச்சம்.

இந்த நேரத்தில் கலைஞருக்கு சாதகமாக ஜாதகம் பலன் இருக்கிறதா என்று பார்த்தால் கணிப்பு என்னவோ பாதகமாகத்தான் தெரிகிறது.

ரிஷப ராசி கலைஞருக்கு. ஆறாம் இடத்தில் சனி. இது சாதகமாக இருந்தாலும் இது வரை கலைஞருக்கு கை கொடுத்து வந்த குரு பகவான் முகத்தைத் திருப்பிக் கொண்டு முறுக்கி நிற்கிறார்.



அடுத்த மாதத்தில் இருந்து இந்த முறுக்கலின் இறுக்கம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் பன்னிரண்டாம் இடத்துக் குரு கண்ணிரண்டில் விரலை விட்டு ஆட்டாமல் போக மாட்டார்.

ஆகவே நிதானமாக அடி எடுத்து வைக்கா விட்டால் நிச்சயம் அதன் பலனை அனுபவிக்காமல் கலைஞரால் தப்பி முடியாது