Wednesday, 18 November 2009

மலேசியாவில் ஒரு சாதனைத் தமிழர்

என்னுடைய வலைப்பூவை வலம் வருகின்ற அன்பு நெஞ்சங்களுக்கு பணிவான வணக்கங்கள். இரண்டு வாரமாக உங்கள் உள்ளத்தோடு உறவாடுகின்ற பாக்கியத்தை இழந்து விட்டேன். அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்.





டத்தோ ரெனா. துரைசிங்கம்


ஒரு சாதனைத் தமிழரின் 50-ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வெளிநாடு சென்றிருந்தேன். அதனால்தான் நம்முடைய தொடர்பில் ஒரு நீண்ட தொய்வு.

உணவகம், திரையரங்கு, திரைப்படம் தயாரிப்பு என பல தொழில்களில் கொடிகட்டிப் பறக்கும் லோட்டஸ் குழுமத்தின் தலைவர டத்தோ ரெனா.துரைசிங்கம் அவர்களின் பிறந்த நாள் விழாதான் அது.

திருப்பத்தூர் தந்த வள்ளல் ரெங்கசாமி பிள்ளை- பார்வதி அம்மாள் தம்பதியரின் தவப்புதல்வர்களில் மூத்தவர் ரெனா.துரை. அண்ணனின் வழித்தடம் மாறாத தம்பிகள் இருவர். டத்தோ ரெனா. ராமலிங்கம். ரெனா. நாகசுந்தரம்.

ஒற்றுமைக்கு உதாரணமாக இருக்கும் இந்த சகோதரர்கள் பல நூறுகோடி ரூபாயில் கடற்கரை உல்லாசத்தளம் ஒன்றை எழுப்பி இருக்கிறார்கள். 2400 அறைகளை...அல்ல...அல்ல...அழகான சிறிய வீடுகளைக் கொண்ட இந்த உல்லாசத்தளம் மலேசியாவில் ஜொகூர் நகரத்துக்கு அருகில் இருக்கிறது.




இங்கிருந்து சிங்கப்பூருக்கு இருபது நிமிடத்தில் சென்றுவிடலாம். சும்மா கூப்பிடு தூரம்தான். அள்ள அள்ளக் குறையாத செல்வம் இருந்தாலும் கள்ளம் கபடு இல்லாத மனதுக்கு சொந்தக்காரர்கள். எளிமை...எளிமை... எளிமை...இந்தச் சொல் இவர்களைப் பார்த்து தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.




                                மோட்டார் சைக்கிளில் இருப்பவர் டத்தோ.ரெனா.துரைசிங்கம்
பின்னால் அமர்ந்திருப்பவர்
மலேசியாவில் பெர்லிஸ்  மாநிலத்தின்  முதலமைச்சர்
(கலைஞர் கருணாநிதியைப் போல)
அருகில் சிரித்துக் கொண்டு நிற்பது அடியேன்


பணிவு...பணிவு...பணிவு....இது இவர்களின் பாரம்பரியச் சொத்து. இந்த சாதனைத் தமிழரை வாழ்த்த எனக்கு வாய்ப்பு நல்கிய ஆண்டவனுக்கு ஆயிரம் லட்சம் கோடியாய் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.

அடுத்த பதிவில் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு ஏன் வரவில்லை என்பதை குறிப்பிடுகிறேன்.

Wednesday, 4 November 2009

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜாதகம்

இனம் கடந்து, மொழி கடந்து, மதம் கடந்து, நாடு கடந்து நேசிக்கப்படுகின்ற ஒரு மனிதரின் ஜாதகத்தை உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன். இதில் நாம் பார்க்கப்போவது அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதை மட்டுமே.





மற்றபடி கிரகங்களின் அமைப்பை வைத்து தன்மூப்பாக எந்தக் கருத்தையும் நான் வெளியிட விரும்பவில்லை. ஒருவரின் ஜாதக பலன் ஜென்மம், உடுமகா தசை, கோச்சாரம் என்ற வகையில் கணிக்கப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி பூர்வ ஜாதகம் என்ற அமைப்பு இருக்கிறது. இதைக் கொண்டு போன பிறவியில் அவர் எப்படிப்பட்ட பிறப்பை எடுத்திருந்தார் என்பதையும் அவருடைய குண நலன்கள் எத்தகையது என்பதையும் ஓரளவு கணித்துவிடலாம் என அனுபவம் வாய்ந்த ஜோதிட ஞானி ஒருவர் கூறி இருக்கிறார்.அந்த வகையிலும் ரஜினியின் ஜாதகத்தை ஓர் ஆய்வு செய்து பார்த்தேன்.




ரஜினியின் ராசி மகரம். லக்கனம் சிம்மம். நட்சத்திரம் திருவோணம். (ஒருவேளை இதில் தவறு இருந்தால் சரியான ஜாதகத்தை என் பார்வைக்கு அனுப்பலாம்)

ஆனால், இந்த ஜாதக அமைப்புப்படி பெரும்பாலான விஷயங்கள், அவருடைய வெற்றிகள், குணாம்சங்கள் ஒத்துப் போகின்றன. அதனால் என் நண்பரிடம் அப்போது சில விஷயங்களைக் கூறினேன்.

அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்போது விவேக சிந்தாமணியில் கூறுப்பட்டுள்ள ஒரு கருத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.



"பட்சம் வழக்கறியாது

நித்திரை சுகமறியாது

பிச்சை தரமறியாது

இச்சை முறையறியாது"



இது தான் அந்தப்பாடல். இதில் பட்சம் என்பது சார்பு என்று பொருள். ஒருதலைப்பட்சமாக என்ற சொல் அடிக்கடி புழக்கத்தில் உள்ள ஒன்று. நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தி விட்டால் அவரைப்பற்றி மற்றவர்கள் என்ன குறை சொன்னாலும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இந்த நிலையில்தான் என் நண்பர் இருந்தார். ரஜினிமீது கொண்ட அளப்பறிய காதல் அவரை ஓர் அரசியல் தலைவராக மட்டும்தான் என் நண்பரால் பார்க்க முடிந்தது.

நான் என் நண்பரிடம் என்ன சொன்னேன் என்பதை அடுத்த அங்கத்தில் விவரிக்கிறேன்.

Monday, 2 November 2009

சூப்பர் ஸ்டார் ஏன் அரசியலுக்கு வரவில்லை

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் குதிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் அடம்பிடித்து... அடம்பிடித்து சோர்ந்து விட்டார்கள். அவரை அரசியலுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என முயற்சித்த சில அரசியல் வல்லுனர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார்கள்.





சந்திரமுகி படத்தின் சகாப்த வெற்றிக்கு பின்னர் ரஜினி அரசியல் களத்தில் சுனாமியாக பொங்கப் போகிறார் என்று பலர் ஆரூடம் கூறிக்கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய அன்றைய சூழ்நிலைகளும் அவ்வாறுதான் இருந்தன.

அந்த சமயத்தில் என் நண்பர் ஒருவர் என்னிடம் ரஜினி பற்றி பேசினார். அவர் மிகத்தீவிரமான ரஜினி ரசிகர். ரஜினி ஒருவரால் மட்டுமே ஊழல் இல்லாத ஆட்சியைத் தர இயலும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்.

எனக்கு ரஜினி மீது அபார மரியாதை உண்டு. பல கோடிப் பேரை கவர்ந்த நடிகர் என்பதற்காக அல்ல...அலை எழும்பி ஆர்ப்பரிக்காத ஆன்மீகக் கடல் என்பதற்காக.

அவரிடம் ஏராளமான செல்வங்கள் கொட்டிக்கிடக்கலாம். ஆனால், அவர் எளிமையானவர். அவரிடம் ஆடம்பரமான வசதிகள் அணிவகுத்து நிற்கலாம்... ஆனால், அவர் அமைதியானவர். திரைப்படங்களில் விதவிதமான ஒப்பனைகளில் ஜொலிப்பார். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒப்பனையும் கிடையாது ஒளிவு மறைவும் கிடையாது. இப்படி ஏராளமான நல்ல குணங்களை எடுத்து அடுக்கிக் கொண்டே போகலாம்.




"ரஜினி அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று என்னிடம் கேட்டார்.

"அவர் மனதில் என்ன இருக்கிறதோ... எனக்கு எப்படித் தெரியும். ஒருவேளை அவருடைய ஜாதகம் தெரிந்தால் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா என என் சிற்றறிவுக்கு எட்டியவரை கணித்து பார்க்கலாம்" என்றேன்.

"இதோ இருக்கிறது ஜாதகம். பார்த்துச் சொல்லுங்கள்" என பரபரப்புடன் ஒரு ஜாதகத்தைக் கொடுத்தார்.

அது உண்மையான ஜாதகம் தானா என்பதை பலவழிகளில் அவர் மூலமாகவே உறுதிப்படுத்திக் கொண்டேன். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெனன ஜாதகத்தைப் பார்த்து என் நண்பரிடம் சில விஷயங்களைச் சொன்னேன்.

அவை என்ன என்பதையும் ரஜினியின் ஜனன ஜாதகத்தையும் அடுத்த அடுத்த நாட்களில் பார்க்கலாம்.