Monday 2 November 2009

சூப்பர் ஸ்டார் ஏன் அரசியலுக்கு வரவில்லை

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் குதிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் அடம்பிடித்து... அடம்பிடித்து சோர்ந்து விட்டார்கள். அவரை அரசியலுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என முயற்சித்த சில அரசியல் வல்லுனர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார்கள்.





சந்திரமுகி படத்தின் சகாப்த வெற்றிக்கு பின்னர் ரஜினி அரசியல் களத்தில் சுனாமியாக பொங்கப் போகிறார் என்று பலர் ஆரூடம் கூறிக்கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய அன்றைய சூழ்நிலைகளும் அவ்வாறுதான் இருந்தன.

அந்த சமயத்தில் என் நண்பர் ஒருவர் என்னிடம் ரஜினி பற்றி பேசினார். அவர் மிகத்தீவிரமான ரஜினி ரசிகர். ரஜினி ஒருவரால் மட்டுமே ஊழல் இல்லாத ஆட்சியைத் தர இயலும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்.

எனக்கு ரஜினி மீது அபார மரியாதை உண்டு. பல கோடிப் பேரை கவர்ந்த நடிகர் என்பதற்காக அல்ல...அலை எழும்பி ஆர்ப்பரிக்காத ஆன்மீகக் கடல் என்பதற்காக.

அவரிடம் ஏராளமான செல்வங்கள் கொட்டிக்கிடக்கலாம். ஆனால், அவர் எளிமையானவர். அவரிடம் ஆடம்பரமான வசதிகள் அணிவகுத்து நிற்கலாம்... ஆனால், அவர் அமைதியானவர். திரைப்படங்களில் விதவிதமான ஒப்பனைகளில் ஜொலிப்பார். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒப்பனையும் கிடையாது ஒளிவு மறைவும் கிடையாது. இப்படி ஏராளமான நல்ல குணங்களை எடுத்து அடுக்கிக் கொண்டே போகலாம்.




"ரஜினி அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று என்னிடம் கேட்டார்.

"அவர் மனதில் என்ன இருக்கிறதோ... எனக்கு எப்படித் தெரியும். ஒருவேளை அவருடைய ஜாதகம் தெரிந்தால் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா என என் சிற்றறிவுக்கு எட்டியவரை கணித்து பார்க்கலாம்" என்றேன்.

"இதோ இருக்கிறது ஜாதகம். பார்த்துச் சொல்லுங்கள்" என பரபரப்புடன் ஒரு ஜாதகத்தைக் கொடுத்தார்.

அது உண்மையான ஜாதகம் தானா என்பதை பலவழிகளில் அவர் மூலமாகவே உறுதிப்படுத்திக் கொண்டேன். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெனன ஜாதகத்தைப் பார்த்து என் நண்பரிடம் சில விஷயங்களைச் சொன்னேன்.

அவை என்ன என்பதையும் ரஜினியின் ஜனன ஜாதகத்தையும் அடுத்த அடுத்த நாட்களில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment