Thursday, 16 July 2015

ஹோண்டா காருக்கு தொயோத்தா கார் பிஸ்டனா..? பொருத்தமில்லா ஜாதகங்களை இணைக்கலாமா...!

பத்துப் பொருத்தமும் சரியாக இருக்கிறது என்று திருமணம் முடிப்பார்கள். ஆனால், சில மாதங்களிலேயே சிக்கல் சில்லு வண்டாக ரீங்காரமிடும்.
பிறகு ஜாதகங்களை இன்னொரு ஜோதிடரிடம் எடுத்துக் கொண்டு ஓடுவார்கள். என்ன இது... சாம்பாருக்கு சர்க்கரையைப் போட்டது போல் பொருத்தமில்லாமல் திருமணம் செய்து வைத்திருக்கிறீர்களே என ஒரு பொல்லாத குண்டை அவர் தூக்கிப் போடுவார்.

அப்படியா... அவர் பிரபலமான ஜோதிடர் ஆயிற்றே...அவரா இப்படிக் கோட்டை விட்டார் என அவரைக் குறை சொல்வார்கள். நேற்று வரை தலையில் தூக்கி வைத்து ஆடியவர் என்பதை கண நேரத்தில் காற்றில் பறக்கவிட்டு விடுவார்கள்.
இப்படி பலரை நான் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. இருப்பினும் வித்தை தெரிந்தவர்களை விவரமில்லாதவர்கள் என குற்றம் சாட்டும் தகுதி எனக்கு இல்லை.
அதே நேரத்தில் ஏன் இந்தக் குளறுபடி. தொண்டைக்குள் மாட்டிய கெண்டை முள்ளாக இவர்களை பாடாய்ப்படுத்தும் பிரச்சினைகளுக்கு யார் காரணம்.
இவர்கள்தான். ஜாதகத்தைக் கொடுக்கும்போதே பேசி முடித்துவிட்டோம் பிரச்சினை இருந்தால் பாருங்கள். பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள். நிறைவேற்றி விடுகிறோம் என்பர்.
பெண் பெரிய இடம். இருவரும் படித்தவர்கள். பக்குவமானவர்கள். ஓரளவு அனுசரித்துப் போவார்கள் என ஜோதிடரின் வாக்குக்கு ஆப்படித்து விடுவார்கள்.
ஒரு சில ஜோதிடர்கள் மட்டுமே 'கடப்பாரையை முழுங்கியவனுக்கு கசாயம் மருந்தாகாது' என கழட்டி விட்டு விடுவார்கள்.
மற்றவர்களோ 'மனப்பொருத்தம் இருக்கிறது. அறுதியிட்டுக் கூற நாம் என்ன ஆண்டவனா' என்று பெற்றோர் போக்கிலேயே இவர்களும் போவார்கள்.
அதனால் வரும் வினைதான் இளம் தம்பதிகளின் இல்வாழ்க்கையில் சிக்கல்களும் சிரமங்களும் விலக்க முடியாத விக்கலாக வில்லங்கம் செய்வது.
தன்னுடைய மகனுக்கு வரன் பார்த்திருப்பதாக ஒரு அன்பர் என்னிடம் ஜாதகங்களைக் கொடுத்தார்.
பெண்ணின் ராசி உத்திரம் 2 ஆம் பாதம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ராசிக் கட்டத்தில் சந்திரன் இருப்பதோ கடகத்தில்.
முறைப்படி பார்த்தால் சந்திரன் கன்னியில் நிற்க வேண்டும். மேலும் அந்தப் பெண் ஆவணி மாதத்தில் பிறந்திருக்கிறார்.ஆனால், சூரியன் நிற்பதோ கடகத்தில்.
இப்படிச் சில குளறுபடிகள். அந்த அன்பரோ இரு ஜோதிடர்களிடத்தில் பொருத்தம் பார்த்து விட்டேன். ஏழு பொருத்தம் இருப்பதாகக் கூறினார்கள் எனச் சொன்னார்.
பையன் திருவாதிரை நட்சத்திரம். இதன்படி பார்த்தால் ஏழு பொருத்தம் வரும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், ஜென்ம ஜாதகத்தில் கிரகங்கள் நிலையில் மாற்றம் ஏற்படுவதால் உண்டாகும் பிரச்சினைகளைப் பார்க்க வேண்டாமா...
தசவிதப் பொருத்தம், ஜென்ம ஜாதகப் பொருத்தம், சூக்குமப் பொருத்தம் என சில விதிகள் இருக்கும்போது அதைக் கணக்கில் கொள்ள வேண்டாமா...
இதையெல்லாம் அந்த அன்பரிடம் நான் சொன்னவுடன் அவரின் முகம் சுட்ட கத்தரிக்காய் போல சுருங்கி விட்டது. 'ஏன்டா இவனிடம் ஜாதகத்தைக் கொடுத்தோம்' என்று நினைத்திருப்பார் போலும்.
ஏனென்றால்' பெண் பெரிய இடம். பார்க்க லட்சணமாக இருக்கிறாள். பையன் கருப்பு. பருத்த தேகம். ஜோடிப் பொருத்தம் சற்று சுமார்தான்.
அதனால், அவரிடம் தோன்றிய வாட்டம் நியாயமானதுதான். இருந்தாலும், ஹோண்டா காருக்கு தொயோத்தா காரின் பிஸ்டனைப் பொருத்த இயலுமா... ஆகவே, என்னைப் பொருத்தவரை ஜாதகம் எழுதியது தவறு என உறுதியாகக் கூறிவிட்டேன்.
மேலும்,ஜாதகத்தில் குறிப்பிட்டுள்ள பிறந்த நேரத்தை வைத்து கணித்துப் பார்த்தேன். கட்டங்களில் கிரகங்கள் மாறுபட்டு நிற்பது தெரிந்தது.
பெண் வீட்டாருக்கு போன் செய்து ஒரு தேர்ந்த ஜோதிடரிடம் மீண்டும் ஜாதகத்தை எழுதச் சொல்லுங்கள் என அந்த அன்பரிடம் தெரிவித்தேன்.
ஒரு வாரம் கடந்து விட்டது. ஜாதகம் சரியாக இருந்திருந்தால் அடுத்த நொடியே போனில் அழைத்து என்னை ஒரு பிடி பிடித்திருப்பார். அதுதானே தமிழர்களின் தனிப் பண்பு.
ஆனால்,அழைப்பு வரவில்லை. ஆகவே, ஜாதகம் குழப்பமாக இருப்பதை ஊர்ஜீதப்படுத்தி இருப்பார் என நினைக்கிறேன்.
வாழ்க்கைப் பாதை கரடு முரடானதுதான், ஒப்புக் கொள்கிறேன். அதே நேரத்தில் 'கண்ணுக்குத் தெரிந்த பள்ளத்தில் முன்னுக்கு போய் விழுகிறேன்' என்பவர்களுக்கு நாம் உறுதுணையாக நிற்பது ஜோதிட சாஸ்திர விதிகளுக்கு முரணானது அல்லவா.

ஜோதிடர்களுக்கு சொக்குப் பொடி போட்டால் பாதிப்பு பந்தயம் கட்டிக் கொண்டு வரும்

ஜோதிடர்களுக்கே சொக்குப் பொடி போடும் சம்பவங்கள் பின்னாளில் பெரிய பிரச்சினைகளைக் கொண்டுவரும் என்பதை அனுபவப்பூர்வமாக எனக்கு ஒரு சம்பவத்தின் மூலம் ஆண்டவன் உணர்த்தினான்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகப் பெரிய சிக்கலோடு என்னை ஒரு குடும்பத்தினர் வந்து சந்தித்தனர். மகளின் ஜாதகத்தைப் பார்த்தவுடனேயே எனக்கு பிரச்சினை என்ன என்பது புரிந்துவிட்டது.
கண்ணில் விழுந்த தூசியை நாக்கால் நக்கி எடுப்பதுபோல் உற்றார் உறவினர் உணராத வண்ணம் பாதிப்பை பாதியாக குறைத்து விட்டோம்.
பழக்கம் வழக்கமாகி வழக்கம் நட்பாகி நட்பு உறவாகி அந்தக் குடும்பத்தில் ஒருவனாகவே நான் மாறி விட்டேன். எத்தனையோ இடங்களுக்குச் சென்றும் தீர்க்க  முடியாத இன்னலை கருப்பன் வாசலில் களைந்து விட்டதாகக் கூறி என் மீது அன்பைப் பொழிந்தனர்.

இந்த நிலையில் நான் மலேசியா சென்று விட்டேன். பல்வேறு பணிகள் காரணமாக நான் அங்கிருந்து திரும்பும் காலம் சற்று நீண்டு விட்டது.
நான் தாயகம் திரும்பிய ஓரிரு நாளில் என்னை வந்து சந்தித்தார்கள். பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகக் கூறி ஜாதகங்களைக் கொண்டு வந்திருந்தார்கள்.
இரண்டு முக்கியமான ஜோதிடர்களிடம் பார்த்து விட்டோம். பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருப்பதாகச் சொல்லி விட்டார்கள். இந்தப் பெண்ணுக்கு இந்த மாப்பிள்ளைதான் என்று அடித்துக் கூறிவிட்டார்கள் என்று கணவன் மனைவி இருவருமே ஒரு சேரக் குறிப்பிட்டார்கள்.
இரண்டு ஜாதகங்களையும் பார்த்தேன். சில முக்கிய பொருத்தங்கள் இல்லை. இருவரும் இணை சேருவது நன்மை அளிக்காது என்ற வகையிலேயே என் கணிப்பு அமைந்தது.
திருமணப் பொருத்த நூலிலும் பொருந்தாது என்பது விடையாக இருந்தது. கணினியில் பார்க்கும்போதும் திருமணம் கூடாது என பதில் கிடைத்தது.
ஆனால், அவர்களிடம் நான் இதைச் சொல்ல இயலவில்லை. குளத்தில் மூழ்கி விட்டு குளிக்கலாமா என அனுமதி கேட்ட கதையாக இருந்தது அவர்களின் நடவடிக்கை.
நான் ஜாதகம் குறித்து எதுவும் பேசாமல் எல்லாம் இறைவன் செயல். அவன் பட்டனை அழுத்துகிறான்.நமக்குப் படம் தெரிகிறது. நடப்பது நல்லதாகவே நடக்கட்டும் என்று கூறி அனுப்பி வைத்தேன்.
திருமணம் குறிப்பிட்ட நாளில் நடந்தது. கூடப் பிறக்கவில்லை என்றாலும் தாய் மாமன் என்ற தகுதியை அவர்கள் திருமண நிகழ்வில் தந்தார்கள்.
மாப்பிள்ளையும் திடகாத்திரமானவர். பெண்ணும் ஆரோக்கியத்திற்கு குறைவில்லாதவர். வசதிக்கும் வஞ்சனை இல்லை. ஆனால் குழந்தை குறைப்பிரசவத்தில் அறுவைச் சிகிச்சை மூலமாக பூமிக்கு அறிமுகமானது.
எடை இரண்டு கிலோவுக்கும் குறைவு. ஏறக்குறைவு இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல் மருத்துவச் செலவு மட்டுமே ஆகியிருக்கிறது.
கணவர் வேலை செய்வது மும்பையில். பெண் மதுரை தாய் வீட்டில். இவருக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் சற்று வித்தியாசமானது.
கணவர் எந்த நேரம் வேண்டுமானாலும் போன் செய்வார். உடனே போனை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அன்று இழவு வீடுதான்.
"ஏன் போனை எடுக்க இவ்வளவு நேரம். தினவெடுத்துப் போய் திரிகிறாயா.. புருஷன் போன் பண்ணுவான் என்ற அக்கறை இல்லாத மூக்கறையாக இருக்கிறாயே" என வாயால் வறுத்து எடுத்து விடுவாராம்.
சில நேரங்களில் சிக்கல் வேறு மாதிரியாக வேட்டியைக் கட்டிக் கொண்டு நிற்கும். அந்த மனிதன் போன் பண்ணும் போது இந்தப் பெண் வேறு யாருடனாவது பேசிக் கொண்டிருந்தால் போதும். கரகாட்டம் ஆடி கச்சேரி நடத்தி விடுவாராம்.
"ஏன்டி இவ்வளவு நேரம் எவனோடு பேசிக் கொண்டிருந்தாய். கட்டியவன் பக்கத்தில் இல்லையென்றால் கண்ட நாய்களோடு கொண்டாட்டமா" என்று கத்தி முனை வார்த்தைகளால் குத்திக் கிழிப்பாராம்.
நஞ்சுபோய்க் கிடக்கும் பிஞ்சுக் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதே பெரும் போராட்டம். அந்த நேரத்தில் போன் வந்து விட்டால் வேறு வினையே வேண்டாம்.

பிள்ளைக்கு பால் கொடுக்கிறேன். சற்று நேரம் கழித்து கூப்பிடுங்கள் என்று அச்சம் அடிவயிற்றைக் கிள்ள மெல்லச் சொன்னால் போதும்.
"என்னை விட பிள்ளை உனக்கு முக்கியமாகப் போய்விட்டதா.. எனக்குப் பிறகுதான் எந்த உறவும் தெரிகிறதா..." என்றுஅந்தப் பெண்ணின் இதயத்தில் சம்மட்டியை இறக்குவாராம்.
இவற்றையெல்லாம் சொல்லி அந்தப் பெண் கண்ணீர் வடித்தபோது எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியாமல் திகைத்துப் போனேன்.
என்ன நினைத்தேனோ அது நடந்து விட்டதே என நான் என் முதுகைத் தட்டிக் கொள்ளவில்லை. அந்த இளம் பெண்ணுக்கு இப்படி ஒரு இன்னலா எனத் துடித்துப் போனேன்.
பிள்ளை சற்று பெரிதாகட்டும். பதினெட்டாம்படி கருப்பன் வாசலுக்குத் தூக்கி வாருங்கள். சில பரிகாரம் சொல்கிறேன். அதன்படி நடந்து வாருங்கள்.
தன்னம்பிக்கையைத் தளர விடாதீர்கள். காலம் மாறும்போது கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். பொறுமை மட்டுமே பொல்லாத நேரத்திற்கு மருந்து என்று தேறுதல் சொல்லி விட்டு வந்தேன்.
அழகான அமைதியான அந்தப் பெண்ணுக்கு இறைவன் கண்டிப்பாக அனுக்கிரகம் செய்வான். அதற்காக நான் தினமும் பிரார்த்தனை செய்வேன்.

Wednesday, 15 July 2015

ஜாதகத்தை மீறினால் பாதகத்திற்கு பஞ்சமில்லை!

எதிர்காலம் எப்படி இருக்குமோ என வாழ்க்கையைத் தொடங்கியவர். வறுமை இவர் வாய்க்குள் விரலை விட்டு ஆட்டிய காலம். அதாவது ஒரு வேளைக் கஞ்சிக்கே உயிர் போராட்டம் நடத்திய நேரம்.
தனியாக ஏன் கஷ்டப்படுகிறாய் என நினைத்தார்களோ என்னவோ...இவரின் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.
இவரைத் தூக்கி நடக்கவே இவரின் கால்களுக்குத் தெம்பில்லை. இந்தநிலையில் மனைவி என்ற இறக்கி வைக்க இயலாத சுமை இவரின் தோள்மீது. ஆண்டிப்பட்டி இவரின் சொந்த ஊர்.
வைகை அணை கட்டும்போது வேலைக்குச் சேர்ந்தார். ஒரு நாள் சம்பளம் 2 ரூபாய். அயராத உழைப்பு. தளராத முயற்சி. இவை இரண்டும் இவருக்கு தனலட்சுமியைஅறிமுகப்படுத்தி வைத்தன.

ஒரு கட்டத்தில் கட்டுமான ஒப்பந்தகாரராக உருவெடுத்தார். விடாத மழையிலால் ஏற்பட்ட வெள்ளம் இவர் வீட்டுக்குள் பாய்ந்ததுபோல் துட்டுக்காக வேலை பார்த்த இவர் கையில் கட்டுக் கட்டாக பணம் கரைபுரண்டது.
இடமாக, மனையாக, காராக, நகையாக இவரின் அந்தஸ்து சிவகங்கை மாவட்ட சீமைக்கருவை மரங்களப் போல செழித்து வளர்ந்தது.
இந்த காலகட்டத்தில் 2011 ஆண்டு வாக்கில் குடும்பத்துடன் வந்து என்னை சந்தித்தார். இவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள்.
செல்வச் செழிப்பின் காரணமாக இருவருமே வஞ்சகமில்லாமல் உடலை வளர்த்து இருந்தனர். நான் அவர்களைப் பார்த்த விதத்தைப் புரிந்து கொண்ட அவர், "ஒரு வேளைக்கு இரண்டு கிலோ கறி தின்றால் உடம்பு இப்படி இருக்காமல் எப்படி இருக்கும்" என சொல்லி சிரித்தார்.
அவர் மனைவிக்கு வருத்தம் என்றாலும் மறுக்க இயலவில்லை. இருந்தாலும் பிள்ளைக்கு பெண் அமைய வேண்டுமே.. அந்த ஏக்கம் அவருக்கு.
பிள்ளைகளின் ஜாதகத்தைப் பார்த்தேன். மல்லாக்கப் படுத்த பிள்ளை குப்புறப்படுப்பதற்குள் குடிசையைக் கோபுரமாக்கும் அபார ஜாதகம்.
இளையவனின் ஜாதகமும் அதற்கு இளைத்ததில்லை. எவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்கப் பட்ட டயராக இருந்தாலும் சின்ன ஆணி குத்தி பஞ்சாராவது போல தகப்பனாரின் ஜாதகத்தில் சில கோளாறுகள் கோச்சார நிலையிலும் தசா புத்தி நிலையிலும் தலைதூக்க ஆரம்பித்தன.
பிள்ளைகளின் ஜாதகத்திலும் கோச்சார வகையில் பாதிப்பு சற்று அதிகமாக இருந்தது.
பிள்ளைக்கு பெண் தேடுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இரண்டு ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். பிள்ளையும் பிறக்கும் என்றேன்.
என் வார்த்தையில் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்பதை அவரின் முகக்குறிப்புக் காட்டியது. ஆனால், அவரின் மனைவிக்குப் பரம சந்தோசம்.
என் கணிப்புப்படி உரிய கால கட்டத்தில் திருமணம் நடந்தது. நான் குடும்பத்துடன் கலந்து கொண்டேன். அழகானபெண் பிள்ளை பிறந்தது. பெயர் வைக்கும் விழாவிற்கு சென்றிருந்தேன்.
அதன் பின்னர் மீண்டும் என்னைத் தேடிவந்தார். ரயில்வேயில் மிகப் பெரிய பதவி கிடைக்கவிருப்பதாகவும் அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் வரும் என்றும் சொன்னார்.
இந்த முறை தெளிவாகவே என் கணிப்பையும் கருத்தையும் எடுத்துச் சொன்னேன். உங்களுக்கு இப்போது சிரமமான காலகட்டம்.
பணமா... உயிரா.. என பந்தயம் கட்டி விதி உங்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்து விட்டது. எச்சரிக்கையாக இருங்கள். ஏற்கனவே உழைத்து வாழ்க்கையில் உச்சம் தொட்டவர் என்பதால் இந்த ஆலோசனை உங்கள் எண்ணத்தின் ஓரத்தைக் கூட கிள்ளிப் பார்க்காது என்று குறிப்பிட்டேன்.
அதற்கு பின்னர் மலையகம் சென்று விட்டேன். ஒரு நாள் இரவு 9 மணி இருக்கும். தொலைபேசியில் என்னை அழைத்தார்.
உங்கள் பேச்சை அலட்சியம் செய்த எனக்கு உரிய தண்டனை கிடைத்து விட்டது. ரயில்வேயில் ஒப்பந்தம் வாங்கித்தருவதாகச் சொன்ன நபர் என்னிடம் 80 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார்.
காவல்துறையில் புகார் செய்திருக்கிறேன். விசாரணை செய்து அவரைக் கைது செய்திருக்கிறார்கள். பணம் கிடைக்குமா என பச்சை புள்ளை பாலுக்கு அழுவதைப் போல கேட்டார்.
தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதைப்போல இப்போது அவருக்கு தன்னம்பிக்கை மட்டுமே சரியான மருந்து என்பதை உணர்ந்தேன்.
நீங்கள் தேடியதில் ஒரு பகுதியைத்தான் இழந்திருக்கிறீர்கள். கையில் வைத்திருந்த பாட்டில் தவறி விழுந்து பாதி தண்ணீர் தரைக்கு இரையானது.
பாதித் தண்ணீர் பறி போய்விட்டதே என தவிக்கிறீர்கள் நீங்கள். மீதித் தண்ணீர் மிச்சம் இருக்கிறதே என்று சுட்டிக் காட்டுகிறேன் நான்.
இழந்ததை எண்ணி இளைப்பதை விட இருப்பதை வைத்து பிழைப்பதே புத்திசாலித்தனம் என அவரைத் தேற்றினேன்.
சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனத்திற்கு சாலை அமைக்கும் ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. தைரியமாக இறங்கலாமா என இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார்.
ஜாதகம் என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டிதான். அதுவே உழைப்புக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கக்கூடாது. தைரியமாக இறங்குங்கள் என உற்சாகம் கொடுத்திருக்கிறேன்.
இனிமேல் அவர் எடுத்து வைக்கும் அடியை எச்சரிக்கையாக வைப்பார். இழந்த பணத்தை மீட்டார். தொலைந்த மகிழ்ச்சியை பெறுவார்.

Tuesday, 14 July 2015

தன் வாழ்க்கையை தானே அழிக்கும் பெண்கள்

முகநூலிலும் வலைப்பதிவிலும் கால்பதிக்காத இரண்டு மாத இடைவெளியில் ஜோதிட ஆலோசனை பெற பலர் என்னை அணுகினர்.
விதவிதமான அனுபவங்கள் வித்தியாசமான பிரச்சினைகள். வண்ணத் திரையை விலக்கிப் பார்த்தால் எண்ணத் தொலையாத இன்னல்கள் இடுக்கண்கள்.
நேற்றுச் சந்தித்து ஜாதகம் பார்த்த ஒரு பெண்மணியின் பிரச்சினைகளை இலைமறை காயாக இங்கே பதிவிடுகிறேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்னரே என்னை சந்திக்க விரும்புவதாக சொன்னார். நேரம் வாய்க்குமா என்று கேட்டார்.
நான் மதுரை, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய இடங்களுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தேன். மதுரையில் ஒரு செல்வந்தர் வீட்டில் வாஸ்து பார்க்க வேண்டும்.
ஆண்டிப்பட்டியில் ஆசை வார்த்தைக்கு மயங்கி மோசம் போய் கோடிக்கு கொஞ்சம் குறைவான பணத்தைப் பறிகொடுத்த நெருக்கமான நண்பரின் உருக்கமான வேண்டுகோள்.

திருமணமாகி சில மாதங்களே ஆன இளம் தம்பதியர் மத்தியிலே எழுந்த கருத்து வேறுபாடு, குடும்ப வாழ்க்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் அவலநிலை. இது தேனியில்
ஆகவே, தாமதமாக நேற்றுத்தான் அந்தப் பெண்மணியைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடைய சித்தப்பா, சிற்றன்னையுடன் என்னைச் சந்தித்தார்.
அவருக்கு பிள்ளைகள் இரண்டு. ஆண் பள்ளி இறுதியாண்டு படிக்கிறார். பெண் ஏழாம் வகுப்புக்குச் செல்கிறார்.
பிள்ளைகள் ஜாதகத்தில் அதிக பிரச்சினை இல்லை. பெண் பிள்ளைக்கு செவ்வாய் தோஷம். ஆண்பிள்ளைக்கு குட்டிச் சுக்கிரன்.
ஆனால், கணவரின் ஜாதகம் சற்று வித்தியாசம், காள சர்ப்ப தோஷம். மேலும் சில கிரகங்கள் தாறுமாறாக கெட்டுக் கிடந்தன.
வசதிக்கு குறைவில்லை. கணவரோ அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர். ஊரில் முக்கிய பிரமுகர்.
அவருக்கு இருதார ஜாதக அமைப்பு. களத்திரகாரகன், களத்திர ஸ்தானம் பாதிப்பு. அதில் உள்ள சிக்கல்களை என் உள் மனசு சொன்னாலும் அவர்களின் வாழ்க்கை முறையை வைத்து பலன் சொல்வதில் எனக்கு சற்று தடுமாற்றம்.
"அம்மா.. நான் ஜாதகத்தை துல்லியமாக ஆய்வு செய்து பார்த்து விட்டேன். சில சிக்கல்கள் இருக்கின்றன. இது குறி பார்க்கும் இடமல்ல. என்னிடம் உள் மனதில் உள்ளதை ஒளிக்காமல் சொல்ல வேண்டும்.
உதடுகளும் இதயமும் ஒரே வார்த்தையை உச்சரிக்க வேண்டும். உண்மை தெரிந்தால் அதற்கான பரிகாரகங்களைச் செய்து சிக்கல்களைச் சீரமைக்கலாம்" என்று அவரிடம் சொன்னேன்.
நாம் அறிவாளி என்று அவர்களிடம் படம் காட்டினால் முட்டாள்களாக அவர்கள் முடங்கிப் போவார்கள். நீங்கள் அறிவாளிகள் என்று அவர்களை அறிவுறுத்தி விட்டால் தயங்காமல், தடங்கள் இல்லாமல் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
இப்படிச் சொன்னவுடன் உதடு பேச ஆரம்பித்தது. அதற்குள் கண்கள் முந்திக் கொண்டு கண்ணீரைக் கொட்டியது.
"என்னுடைய கணவருக்கு நான் இரண்டாம் தாரம். அவருடைய அண்ணனுக்கு வாக்கப்பட்டு பிரச்சினைகள் காரணமாகப் பிரிந்து இவரோடு வந்து விட்டேன்.
இவரின் முதல் மனைவி இவரை விட்டு விலகி விட்டார். மகள் வீட்டில் வசிக்கிறார். ஆரம்பத்தில் எந்தக் குறையும் இல்லை.
இரண்டு பிள்ளைகள் பிறந்து விட்டன. இப்போது எதற்கெடுத்தாலும் சண்டை. என்ன செய்தாலும் குற்றம் சொல்கிறார்.
ஒரே வீட்டில் இருந்தாலும் நாங்கள் பேசி ஒருவருடம் ஆகிவிட்டது. தனித்தனியாக படுக்கிறோம். சமைத்து வைக்கும் சாப்பாட்டை விருப்பப்பட்டால் சாப்பிடுகிறார். இல்லை என்றால் வெளியேறி விடுகிறார்.
ஏதாவது கேள்வி கேட்டால் நெருப்பாக வார்த்தைகளைக் கக்குகிறார், எட்டி உதைக்கிறார். வாழ்க்கையை இழந்து விடுவோமோ என்ற பயமாக இருக்கிறது. நீங்கள்தான் வழி காட்ட வேண்டும்" என்று கையெடுத்து கும்பிட்டார்.
ஓரளவு நான் கணித்ததுதான். ஜாதக பலன்களைச் சொல்லி அச்சுறுத்துவதை விட நடைமுறை வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நலம் பயக்கும் என்று எண்ணினேன்.
"அம்மா, நீங்கள் சொல்வதைப் பரிசீலித்தேன். மனக்குறைகளை உள்வாங்கிக் கொண்டேன். ஆனால், இதைக் களைவதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்.
நெருப்பை நீரால் அணைக்க வேண்டும். நெருப்பால் அணைக்க இயலுமா... அதைத்தான் இந்த நிமிடம் வரை நீங்கள்
செய்து வருகிறீர்கள்.
நீங்கள் கொல்லைப் புற வழியாக வந்தவர் என்பதால் வாழ்க்கை பறிபோய் விடுமோ என்று பயப்படுகிறீர்கள். அந்தப் பயத்தில் பதற்றமாக வார்த்தைகளை அள்ளி வீசுகிறீர்கள்.
அதனால், உங்கள் கணவரின் கோபம் எல்லை கடந்து விடுகிறது. சமுதாயத்தில் மற்றவர்கள் எல்லாம் மரியாதை தரும்போது மனைவி மட்டும் மதிக்க மறுக்கிறாளே என்ற எண்ணம் உங்கள் கணவரின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
இது கோர்ட்டு அல்ல, குடும்பம். விவாதம் செய்து வெற்றி பெற இயலாது. விட்டுக் கொடுத்துத்தான் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
சுற்றி இருப்பவர்கள் விவரம் தெரியாமல் உங்களைத் தூண்டி விட்டு வில்லங்கத்திற்கு விழா எடுப்பார்கள். பாதிப்பு உங்களுக்குத்தான்.
ஒரு எடுத்துக் காட்டுக்காக இதைச் சொல்கிறேன். குடி என்பது பழக்கம் அல்ல, அது பழகப் பழக உடலில் பதியமிட்ட நோய். அவர்கள் குடிகாரர்கள் அல்ல, குடி நோயாளிகள். மருந்து கொடுத்துக் குணப்படுத்துவதற்குப் பதிலாக மட்டம் தட்டி ரணப்படுத்தினால் விளைவு விபரீதம்தான்.
அதுபோல்தான் உங்கள் நிலையும். உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம். ஆனால், எல்லா நியாயங்களும் எதார்த்த வாழ்க்கைக்கு ஒத்து வராது. வாழ்க்கையில் சந்தேகம் சதிராட ஆரம்பித்தால் சந்தோசம் விரைந்தோடும் என்பது விதி.
முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள், பிறகு கணவர் தானாக மாறி விடுவார். பிள்ளைகள் மீது பாசமுள்ள எந்தத் தகப்பனும் தடுமாறுவதில்லை. தடம் மாறுவதும் இல்லை என்று விளக்கிக் கூறினேன்.
கணவருக்கு அஷ்டமச்சனி பாதிப்பு இருப்பதால் திருநள்ளாறு சென்று வரும்படி அறுவுறுத்தி உள்ளேன்.
அவரின் கணவரைச் சந்தித்து பேசுவதாக வாக்களித்து இருக்கிறேன். புரிந்து கொள்ளக் கூடிய நபர். மற்றவர்களின் சிரமங்களுக்கு தோள் கொடுக்கும் தன்மை உடையவர்.
இருப்பினும் விதி விளையாடும்போது என்ன செய்ய இயலும். விதியை மதியால் வெல்லலாம். ஆனால், அதற்கு இரண்டு தரப்பிலும் இணக்கம் இருக்க வேண்டும்.
என் நாவில் குடியிருக்கும் கலைமகளின் அருளால் அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீச வைக்கும் ஆற்றல் எனக்கு இருக்கிறது.
இன்னும் சில மாதங்களில் கண்டிப்பாக அதைச் செய்து முடிப்பேன். அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைப்பேன்.