Wednesday, 16 December 2009

எங்கே நிம்மதி.....?

என் நண்பர்... என் துன்பத்தில் தோள் கொடுத்து நான் துவண்டு விடாமல் காத்தவர். வெறித்தனமான பாசக்காரர். சலிப்படையாத நேசக்காரர். இப்போது லண்டனில் சட்டம் படித்து விட்டு உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தையும் அதற்கு நான் அளித்த பதிலையும் இங்கே தந்திருக்கிறேன்.


வேலைப்பளுவும் அலுவல் அலைச்சலும் வலைப்பூவுக்குள் என்னை வரவிடாமல் தடுத்து விட்டன.
 
வணக்கம். வாழ்த்துக்கு நன்றி.



இங்கு விருந்து என்பது மது அருந்துவதுதான். உடல் நல காரணத்தால் மிக சிறிய அளவில் வீட்டிலேயே செய்து முடித்துக்கொண்டோம்.


மாஸ்டர் முடித்து விட்டேன் என்பது உங்களுக்கு தெரியும். பி.எச்.டி செய்ய முயற்சிப்பேன். தற்பொழுது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறேன்.


இங்கிலாந்தின் குடிநுழைவுத்துறையின் வழங்கும் High skilled Immigrant அங்கீகாரத்தையும். இங்கிலாந்தின் நிதிநிறுவனங்களின் இயக்குனர் வாரியத்தில் இடம் பெறுவதற்கு தேவையான Financial Service Authority... யின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளேன்.


நான் இங்கு அரசு ஊழியர்களுக்கான கூட்டுறவு கழகத்தின் வாரியத்தின் செயல் பாட்டு கண்காணிப்பு அதிகாரியாக பணி ஆற்றுகிறேன். தற்போது கூட்டுறவு கழகத்தின் வாரியத்தில் பொறுப்பேற்றேன்.


மனைவியோடு வாழ முடியாமல் போன வாழ்க்கையை, எந்த தேசமும் திருப்பி தந்து விடமுடியாது கவிஞரே, இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும், இந்த வரிகளை எழுதும் போதே கண்கள் கலங்குகின்றன. இவ்வளவு பாசத்தையும் வெளிப்படுத்த தெரியாத மூர்க்கமான முட்டாளாய் வாழ்ந்து விட்டேனே என்பதுதான் எனது இன்றைய கவலை. இந்த கவலைகள் எல்லாம் ஆழ்கடல் மணலாய் அடங்கி கிடக்கும். நெஞ்சோடு நெருக்கமானவர்களை சந்திக்கும் போது விழித்துக்கொள்ளும். பொதுவாக பிடித்து இருக்கிறது.


கவிஞரே, நாம் கிள்ளானில் ஜாதகம் பார்த்த சகோதருக்கு இந்த திருமணம் சரி இல்லை என்பதனை மிகத்திட்டவட்டமாக உணர்ந்திருந்தார் என்பதனை என்னால் உணர முடிகிறது. அவர் சொன்னார், அம்மனை துதிப்பவன், நல்லதே நடக்கும் என்று சொன்னால் நல்லா இல்லாத ஜாதகம் கூட நன்மையில் முடியும். அவரது குரல் பாதிதூக்கத்தில் இப்போதும் கேட்கும். பாவம் அவரால் சரி இல்லை என்று எப்படி சொல்ல முடியும், நாம் திருமண தேதி குறிக்க அல்லவா சென்றோம். இதற்கிடையில் இப்போது நமது ஜாதகம் என்ன சொல்கிறது என்பதும் முக்கியம். பார்த்துச் சொல்லுங்கள்.




அருமை நண்பருக்கு வாழ்த்துக்கள்

உங்களுடைய ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தேன். நட்சத்திரம் பூரம் 2, ராசி சிம்மம், லக்கனம் மிதுனம். நீங்கள் அரசியல் வாழ்க்கையில் பிரகாசிக்க முடியும்.
பத்தாம் வீட்டு அதிபதியும் ஏழாம் அதிபதியுமான குரு லக்கனத்தில் அமர்ந்து ஏழாம் வீட்டையும் லாபஸ்தானமான 11-ஆம் வீட்டையும் பார்க்கிறார். இது
அரசியலில் வெற்றி வாய்ப்பைத் தருகின்ற அம்சமாகும்.

10- ஆம் அதிபதியான குரு லக்கனத்தில் இருப்பது கடின உழைப்பால் சொந்த முயற்சியால் முன்னுக்கு வருகின்ற நிலையை ஏற்படுத்தும். விஜய வீரிய ஸ்தானதிபதி சூரியன் 6-ஆம் இடத்தில் சிறப்பாக இருப்பதால் எத்தகைய எதிர்ப்பையும் சமாளிக்கும் வல்லமை உடையவர் நீங்கள். மற்றவர்களால் முடிக்க இயலாத காரியத்தை முழுவீச்சில் இறங்கி முடிக்கின்ற திறன் படைத்தவர்.

சந்திரன் 3-ஆம் வீட்டில் இருப்பது ஏதாவது நோய்த் தொல்லையைத் தந்து கொண்டே இருக்கும். லக்கனாதிபதி புதன் ரோகஸ்தானத்தில் இருக்கிறார்.
துடுக்காக பேசுதல், எதற்கெடுத்தாலும் சண்டை போடுதல், கர்வமாக நடந்து கொள்ளுதல் போன்ற காரியங்களை 6-ஆம் வீட்டில் இருக்கின்ற புதன் செய்யத் தூண்டுவார்.

இப்படி பல அம்சங்கள் இருக்கின்ற உங்கள் ஜாதகத்தில் பாதகமான நிலைகளையும் பார்ப்போம். உங்கள் நட்சத்திர பாதம் புதன் அம்சத்தில் அமர்ந்திருக்கிறது.

புதன் ஒரு அலி கிரகம். இவன் குடும்பவாழ்க்கைக்கு எதிரி. வாரிசுகள் இருக்கக்கூடாது என வரிந்து கட்டிக் கொண்டு கெடுதல் செய்பவன்.
அடுத்து களத்திரகாரனான சுக்கிரன் 8-ஆம் வீட்டில் கெட்டுப் போய் இருக்கிறான். இதுவும் பாதகமான அம்சம். கலகப் பிரியனாக இருத்தல், வயிறு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு நோய் போன்றவற்றை இந்தச் சுக்கிரன் ஏற்படுத்துவான்.

மேலும் சுக்கிரன் நிற்பது திருவோண நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில். இதற்கு செவ்வாய் அதிபதி. மேலே சொன்ன பலன்களை இந்தச் செவ்வாய் கண்டிப்பாக ஜாதகருக்கு கொடுத்தே தீருவான்.

முக்கியமாக செவ்வாய்.... மங்களன் என்று சொல்லக்கூடிய செவ்வாய் களத்திரஸ்தானமாகிய 7-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறான். இது மிகக் கடுமையான செவ்வாய் தோஷமாகும். இது குடும்ப வாழ்க்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்துகின்ற ஸ்தானாதிபத்தியமாகும்.

மேலும் ஆதிபத்தியத்திலும் மணவாழ்க்கைக்கு எதிராகவே ஜாதக பலன்கள் இருக்கின்றன. ரோகஸ்தானாதிபதியான செவ்வாய் (6- வீட்டுக்கு அதிபதி)
களத்திர ஸ்தானத்தில் (7-ஆம் வீட்டில் ) இருப்பது மிகவும் தீமை பயக்கக்கூடியதாகும்.
மனைவியைப் பிரித்து விடுவான். அல்லது மனைவிக்கு மாரகத்தைத் (மரணம்) தந்து விடுவான். இல்லையேல் மனைவியை தீராத நோயாளியாக்கி விடுவான்.

அதே மாதிரி 4-ஆம் அதிபதியான புதன் 6-ஆம் வீட்டில் இருப்பது உங்களுக்கு முன்கோபத்தையும் யாரையும் எடுத்து எறிந்து பேசுகின்ற
தன்மையையும் மற்றவர்களை புண்படுத்திப் பார்ப்பதில் சந்தோசத்தையும் ஒருவருக்கொருவர் கலகமூட்டி ரசிக்கின்ற மனப்பான்மையையும் உருவாக்குவான். இது குடும்பத்தின் நிம்மதியைக் குலைக்கின்ற மிகப் பெரிய ஆபத்தான குணமாகும்.

ஆகக்கூட்டி பார்த்தால் குடும்பம் என வருகின்றபோது அதற்கான கிரகங்கள் பாதகமான அமைப்புப் பெற்று இருப்பதோடு தோஷ நிவர்த்தி அடையாத் தன்மையையும் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மையாகும்.

உங்கள் மணவாழ்க்கையைக் கெடுத்ததற்கு பிரதி உபகாரமாக பல நன்மைகளைச் செய்யும் விதமாக 12-ஆம் அதிபதி சுக்கிரன் 8-ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறான். அயல் நாட்டில் வேலை, மிகப்பெரிய செல்வாக்கு, புகழ், செல்வம், கீர்த்தி போன்றவற்றை சுக்கிரனே உங்களுக்கு அருளுகிறான். இந்த அமைப்பு விபரீத ராஜ யோக அமைப்பாகும். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பது ஜோதிட பொன்மொழியாகும்.

கோச்சாரப்படி இப்போது நீங்கள் ஏழரைச் சனியின் பிடிக்குள் இருக்கிறீர்கள். சூரியனுக்கு எதிரி சனி என்பதால் சிம்ம ராசிக்காரர்களை ஒரு கை பார்த்து விட்டுத்தான் சனி ஓய்வெடுப்பான். அந்த வகையில் இந்தக் காலகட்டத்தில் நீங்கள் சிரமத்தை எதிர் நோக்கத்தான் வேண்டும்.

இது வரை 6-ஆம் வீட்டில் இருந்த குரு இம்மாதம் 19-ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்பத்திற்கு போகிறார். இது நல்ல அமைப்பாகும்.

மேலும் தற்போது ராகு மகா தசையில் சனி புத்தி நடக்கிறது. 2010- 7-ஆம் மாதம் வரை நீடிக்கும். இதுவும் சாதகமான காலம் அல்ல. அதற்கு பின்னர்
2013-1-ஆம் மாதம் வரை மிக நேர்த்தியான காலம் ஆகும். உங்கள் எதிர்கால லட்சியத்துக்கு ராஜ பாட்டை அமைக்கின்ற நேரம் என்றுகூடச் சொல்லலாம்.
2020- வருடத்தில் குருமகாதசை வருகிறது. அந்தக் காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருப்பீர்கள்.
மேலும் உங்களை மாதிரி ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு 45- வயதுக்கு மேல் அதாவது வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்தில் மிகச் சிறப்பான
பலன்கள் நடைபெற ஆரம்பிக்கும் என்பது ஜோதிட மாமுனி புலிப்பாணியின் கூற்று.

இன்னொரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன். கிள்ளான் ஜோதிடர் தொழில் முறையில் அதிகமான சம்பாத்தியத்தை பெற்றவர். அவருக்கு ஐந்து கிரகங்கள் உச்சம். இப்படி உச்சம் பெற்ற கிரகங்கள் நல்ல ஆதிபத்தியம் அடைந்திருந்தால் ஆண்டியையும் அரசனாக்கி விடும்.

அதே நேரத்தில் பணம் ஒன்றே அவரின் குறிக்கோளாக மாறியது. என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அதனால், அவரிடம் பாசத்தோடு ஒரு எச்சரிக்கை விடுத்தேன்.

"அண்ணே பணம் என்பது வாழ்க்கையின் இரத்த ஓட்டம் என்பார்கள்... ஆனால், இரத்த ஓட்டம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. நோயற்ற
வாழ்வே...குறைவற்ற செல்வம்" என சொல்வேன்.

அவரோ சிரித்துக் கொண்டே " குறைவற்ற செல்வமே... நோயற்ற வாழ்வாகும். காசைக் காட்டினால் நோய் வந்த வழியே திரும்ப ஓடிவிடும்." என சொல்வார். கோடி ரூபாய் சம்பாதிப்பதுதான் என் லட்சியம் என்பார்.

அவர் சொன்ன மாதிரியே இரவு பகல் பாராமல் உழைத்து சில கோடி ரூபாய் சம்பாதித்து விட்டார். கடந்த ஆண்டு தீபாவளி கழித்து மூன்றாம் நாள் மதிய வேளையில் சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்தவர் பக்கத்தில் இருந்தவர்களுக்குக்கூட தெரியாமல் பரம பதம் அடைந்து விட்டார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய மனைவியும் இறந்துவிட்டார்.

அவர் என்ன வைத்திருக்கிறார். எங்கு வைத்திருக்கிறார் என்பது தெரியாமல் வாரிசுகள் தவிக்கிறார்கள். அதோடு பிள்ளைகளும் சரியான வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை.

இந்த வேதனையும் என் மனதை பிறாண்டிக் கொண்டிருக்கிறது.

1 comment:

  1. நெஞ்சம் நெகிழும் கடிதம்.
    நேர்த்தியான பதில்.

    எனது சிற்றறிவுக்கு எட்டியவை. காதல் திருமணமோ, ஏற்பாட்டு திருமணமோ, ஜாதம் பார்க்க வேண்டும். ஆனால் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ஓன்றாக செல்வது உத்தமம் அல்லா.

    ஜாதகமே வாழ்க்கை என்பதல்ல, ஜாத குறிப்பை அறிந்திருந்தால், திட்டமிட வாய்பாக அமையும். வாழ்க்கையில் எதிர்பாரதவை நடக்கும் போது, காரண காரியங்களை நாம் உணர்ந்திருப்பதால் மேலும் முன்ஜாக்கிரத்தையாக நடந்துக் கொள்ள வாய்பாக அமையும்.

    "மற்றவர்களை புண்படுத்தி பார்க்கும் போது சந்தோசம் அடையும் குணம் அமையும்" என்ற வரிகளை படிக்கும் போது உங்கள் வெறித்தனமான பாசக்கார நணபர், கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் நினைத்து பார்த்து, வேதனைகளின் விழிம்ப்பிற்கு போய் கண்ணீர் வடித்திருப்பாரோ?

    எல்லோருக்கும் இனிய வாழ்வு அமையட்டும்.

    மோகனன் பெருமாள்.

    ReplyDelete