Tuesday, 1 December 2009

சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வரமாட்டார்

2012- உலகம் அழியுமா என்பதுதான் அனைவரின் மனதில் பயத்தோடு தொக்கி நிற்கும் விடை தெரியாத கேள்வி. இதை விட பொது மக்களை பிறாண்டிக் கொண்டு இருக்கும் கேள்வி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதுதான்.




இந்த ஆண்டு வருவார்.. அடுத்த ஆண்டில் அரசியல பிரவேசம் நடத்துவார் என அரசியல் ஆய்வாளர்களும் ஜோதிட விற்பன்னர்களும் சொன்னார்கள்...சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் சுருக்குப் பையில் போட்ட சுக்கான் கல்லு மாதிரி சும்மா இருக்கிறார்.

இப்போது சண்டி யாகம் செய்ய ரஜினி ஆயத்தமாகி வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எதிர்ப்புகளை முறியடிக்கவும் எதிரிகளை வீழ்த்தவும் செய்யப்படுகின்ற யாகம் இது. அரசியல்வாதிகள்தான் இந்த யாகத்தின் மொத்த குத்தகையாளர்கள். இது ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அறிகுறி என பரவலாகப் பேசப்படுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் 7-ஆம் இடத்து அதிபதி 9-ஆம் இடத்து அதிபதி ஆட்சி பெற்றிருந்தால் அரசியல் பதவிகளுக்கு வரலாம். ரஜினி ஜாதகத்தில் 9-ஆம் அதிபதியான செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். சந்திரனோடு இருப்பதால் சந்திர மங்கல யோகத்தையும் தருகிறார்.

ஒருவர் ஜாதகத்தில் 4- ஆம் இடத்து அதிபதி ஆட்சி உச்சம் பெற்று நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மந்திரி ஆகும் வாய்ப்பு உண்டு. ரஜினி ஜாதகத்தில் 4- ஆம் இடம் விருச்சிகம். இதன் அதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம் அடைந்திருக்கிறார். அதோடு 6- ஆம் இடம் என்பது செவ்வாய்க்கு மிக அனுகூலமான இடமாகும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்கனாதிபதியாக இருக்கும் கிரகம் அம்சத்தில் எந்த ராசியில் இருக்கிறதோ... அந்த ராசியாதிபதி ராசிச் சக்கரத்தில் கேந்திர கோணம் ஏறினால் அரசியலில் கோலோச்சலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஆனால் ரஜினியிடம் இருக்கிற பிரத்தியேக குணங்களைப் பார்க்க வேண்டும். ரஜினி மனதில் பட்டதை அப்படியே கூறுபவர். இது அரசியலுக்கு ஆகாது. பொய் சொல்லக்கூடாது என்ற கொள்கையுடையவர். இது அரசியல் கொள்கைக்கு எதிரானது. தன்னால் யாருக்கும் எந்தச் சூழ்நிலையிலும் தீங்கு வரக்கூடாது என நினைப்பவர். அரசியலில் தேவைப்பட்டால் பொதுச்சொத்துகளை எரிக்க வேண்டும். அவசியப்பட்டால் ஆளையே கொளுத்த வேண்டும். இதை ரஜினி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

நேரத்துக்கு தகுந்த மாதிரி நிறம் மாற வேண்டும். இது ரஜினிக்கு ஆகவே ஆகாது. லஞ்ச ஊழலே கூடாது என நினைப்பவர் ரஜினி. அரசியலில் அந்தரங்கச் செயலாளரைக்கூட அடக்கி வைக்க முடியாது.

இப்படி நடைமுறை வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களே ரஜினிக்கு எதிராக இருக்கின்றன. அப்படி இருக்கும்போது ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என சில அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

இப்போது நான் சொல்லப்போகிற விஷயம்தான் மிக முக்கியமானது. ஒருவரின் ஜாதகத்தில் 1-ஆம் 2-ஆம் இடத்து அதிபதிகள் கேந்திரத்திலோ கோணத்திலோ இருந்தால் பிரம்ம ஞானியாக திகழ்வார் என்பது ஜோதிட விதி. 1- ஆம் இடத்து அதிபதி சூரியன் கேந்திரத்தில் இருக்கிறார். 2- ஆம் இடத்து அதிபதி புதன் கோணத்தில் இருக்கிறார்.

இதை வைத்து பார்க்கின்ற போது ரஜினியின் அரசியல் ஆற்றலைவிட ஆன்மீக சக்தியே பலம் பொருந்தியதாக இருக்கிறது. தேரை இழுத்து தெருவில் விட்ட மாதிரி சிலரால் ரஜினி அரசியலுக்கு கொண்டு வரப்பட்டாலும் பின்னால் இருந்து மற்றவர்களை இயக்குவாரே தவிர நேரடியாக நிற்க மாட்டார்.

ஆகவே, ரஜினி அரசியலுக்கு வருவார் என்பது கனவிலும் நடக்காத காரியம். அவர் அரசியலுக்கு வருவார் என அடித்துக் கூறுவது ரஜினி ரசிகர்களுக்கு கொடுக்கும் திருநெல்வேலி அல்வா என்பதில் சந்தேகமில்லை.

அப்படி ஒருவேளை வந்தால் மருத்துவ அதிசயம், அறிவியல் அதிசயம், வான்வியல் அதிசயம் எனபதுபோல் அரசியல் அதிசயம் என கொள்ளலாம்.

No comments:

Post a Comment