Tuesday, 23 December 2014

கணவன் மனைவிக்கு இடையே இடி மின்னல்: சனிபகவான் சதி

சனி ஈஸ்வரன் ஒருவர் வாழ்க்கையில் விளையாட வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டால் முதலில் நாக்கில் நின்றுதான் நாட்டியம் ஆடுவார்.

முடிவு கணவனும் மனைவியும் பட்டிமன்றம் நடத்தி ஆளுக்கொரு பாதையில் செல்ல வேண்டியதுதான்.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. குழந்தை பிறந்து ஆறு மாதம் கடந்து விட்டது. குலதெய்வம் கோவிலுக்கு முடி எடுக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போவதாக முடிவு செய்யப்பட்டது. கூட்டுக் குடும்பம். அண்ணன் தம்பி மூன்று பேர். இரண்டாவது நபரின் பிள்ளைக்குத்தான் முடி எடுக்க வேண்டும்.

இந்த நிலையில் மாவிளக்கு வைப்பதற்காக மாவு தயாரிக்க அரிசி ஊறப்போட்டிருந்திருக்கிறார்கள். இரவு ஏழு மணி ஆகி விட்டது. யாரும் மாவு இடிப்பதாகத் தெரியவில்லை.

"என்னடி ஆளாளுக்கு அக்கறை இல்லாமல் திரிகிறீர்கள். மாவை இடிக்கக்கூடாதா" மாமியார் பொத்தாம் பொதுவில் கேட்டிருக்கிறார்.

அவ்வளவுதான் இரண்டாவது மருமகளுக்கு வந்ததே கோபம். "என் பிள்ளைக்கு மாவிளக்கு வைக்க எனக்குத் தெரியும். யாரும்  காழு காழுன்னு கத்த வேண்டாம்" இப்படிச் சொல்லி மாமியாரைக் கழுதை ஆக்கி விட்டாள் அந்த மருமகள்.

பலபேரைப் பல்லைக் கழட்டி பதம் பார்த்த அந்த மாமியார் கப்சிப். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அல்லவா.

கணவனுக்கு கைகால்களில்  உதறல். யாரும் கை நீட்டி பேசினால் விரலை ஒடிக்கும் அளவுக்கு வீரமானவர். வேகமானவர்.

ஆனால், கல்யாணத்திற்குப் பின்னர் கனவில் கூட யாரையும் திட்டுவ தில்லை. முன் ஜென்ம பலாபலன்.

கோவிலுக்கு போவதில் ஏதேனும் குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாதே என பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார் கணவன்.

மனைவி விடுவதாக இல்லை. பிள்ளையைத் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் நடக்கிறார். கணவன் எதுவும் பேசவில்லை.



சில நிமிடங்கள் கடந்திருக்கும்... உங்களுக்கு முன்னால் ஒருத்தி ரோடு போட்டுக் கொண்டிருப்பது தெரியவில்லை. எருமை மாடு மாதிரி உட்கார்ந்திருக்கிறீர்களே.. என வாய் வழியாக நெருப்பைக் கக்கினார்.

திறந்த  வாய் மூடவில்லை. மாமியாருக்கு திகைப்பு அடங்கவில்லை. ஓரளவுக்கு பொறுமையாக இருந்த கணவர் புயலாக கிளம்பி விட்டார்.

மாட்டடி மலையடி என்று சொல்வார்களே... அப்படியொரு அடி. கையைப் பிடித்து முறுக்கியதில் மணிக்கட்டு வேறு பிசகி விட்டது.

பி.இ. படித்த பெண். அடிக்க அடிக்க எதிர்த்து பேசிய ஆணவம் அனைவரையும் வாயடைக்க வைத்து விட்டது.

இதில் முக்கிய அம்சம் என்றவென்றால்... மனைவி மேல் கணவனுக்கு அலாதி பிரியம். தன் உடைகளைத் தானே துவைத்துக்  கொள்வார். மனைவியின் ஆடைகளைத் துவைத்துப் போடத் தயக்கம் காட்ட மாட்டார். யார் கேலி செய்தாலும் அதைக் கருத்தில் கொள்ள மாட்டார். இருப்பினும் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை.

பிறகென்ன...பிள்ளையோடு பிறந்தகம் போய் விட்டாள் அந்தப் பெண். மகனைப் பார்க்க முடியாமல் மருகி நிற்கிறார் கணவன். பேரனைத் தூக்க வழியில்லாமல் பிணாத்திக் கொண்டிருக்கிறார் கணவனின் தாயார்.

இதுதாங்க சனிபகவானின் சதிராட்டம். இருவருமே படித்தவர்கள். வசதி வாய்ப்புகளுக்கு குறைவில்லை. ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொள்ளும் கொடுப்பினையை ஆண்டவன் இவர்களுக்கு அளித்திருக்கிறார்.

இருந்தாலும் அனுபவிக்க முடியவில்லை. அறிவுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. இருவரும் ஜாதக பலாபலன்களை அறிந்து பரிகாரம் செய்து வாழ்க்கை என்றால் என்னவென்று உணர்ந்து விட்டுக் கொடுத்து வாழவில்லை என்றால் விவாகரத்துத்தான் முடிவுவாக இருக்கும்.

இருவீட்டாரையும் அவர்கள் குடும்ப நலனில் அக்கறை உள்ள சிலரையும் வெள்ளிக்கிழமை சந்திக்க சொல்லி இருக்கிறேன்.

கூடிய வரை குடும்பத்தை இணைக்கப் பார்ப்போம். முடிவு இறைவன் கையில்.

Monday, 22 December 2014

ஏழரைச் சனிக்கு என்ன பரிகாரம்

என்ன செய்தால் ஏழரைச் சனி காலத்தில் கரியனின் கடுமையான கோபத்தில் இருந்து தப்பிக்கலாம் என எல்லாத் தரப்பு மக்களும் ஏக்கத்தோடு கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்கள்.

இது ஒரு புறமிருக்க ஜோதிடர்களும் ஆன்மீகவாதிகளும் ஆளுக்கொரு பரிகாரம் சொல்லி பரபரப்பைக் கூட்டி இதயத்துடிப்பை இரண்டு மடங்காக்கி விடுகிறார்கள்.

வழி எதுவோ வாகனம் எதுவோ நினைத்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எல்லாரின் எதிர்பார்ப்பு. அந்த வகையில் சனி பகவானை சரிப்படுத்தி பாதிப்பைக் குறைக்க அவரவர் வழியில் ஆலய தரிசனம் மேற்கொண்டு இறைவனின் அருட் குடைக்குள் அடைக்கலம் ஆவதுதான் சிறந்த வழி.

அதற்கு முன்னால் சனி பகவானுக்கு பிடிக்காத 4 காரியங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவற்றை நாம் கண்டு கொண்டு அதன்படி அடியெடுத்து வைத்தால் துன்பத்தை தூர நகர்த்தி விடலாம்.

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இந்த நான்கும் தான் நான் மேலே குறிப்பிட்ட நான்கு அம்சங்கள்.

அழுக்காறு என்றால் பொறாமை. பொறாமை பொல்லாத ஆமை. அதில் இருந்து தப்பிப்பது கடினம். இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்தி பொறாமைக்கு கடிவாளம் போடலாம்.

அடுத்து அவா.இதற்கு இன்னொரு பெயர்  பேராசை. இந்த பேராசையால் விளையும் துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. ஒருவன் தடம்புரண்டு தரம் தாழ்வதற்கு பேராசை பெரும் பங்கு வகிக்கிறது.

அதற்கு அடுத்ததாக வெகுளி. கிராமப்பகுதியில் வெகுளி என்ற சொல்லுக்கு அப்பாவி என்று கூறுவது உண்டு. அவன் ஒரு விவரம் இல்லாத வெகுளிப்பயல் என்று சுட்டிக்காட்டுவார்கள். நான் சொல்வது அந்த வெகுளி அல்ல. கோபம்.

கோபம் நம் அறிவைக் கொன்று விடும். பின்னால் வரும் விளைவுகளைப் பற்றி கவலைப்படாது. நம் கூடவே இருந்து நம்மை அழிக்க என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டுமோ அவற்றை கன கச்சிதமாக நிறைவேற்றி நம்மை நிர்மூலமாக்கி விடும்.

இந்த நான்கு விஷயங்களையும் எல்லாக் காலங்களிலும் மனிதன் விலக்கி வந்தால் அவன் மகாத்மாவாக மாறி விடுவான். குறிப்பாக ஏழரைச் சனி காலத்தில் இவற்றில் இருந்து எட்டி நின்றால் துன்பம் தூர ஓடும். வீண் விரயங்கள் வீடு தேடி வராது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உண்டாகாது.

குடும்ப உறவில் குத்து வெட்டு நடக்காது. வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகி நம்மை நடுத்தெருவில் நிறுத்தாது. நட்பைப் பிரித்து நம் நிம்மதியை நாசமாக்காது.

ஆகவே, என் இனிய நட்புகளே.. உறவுகளே.. சனிபகவானின் கனிவு மிகுந்த கருணைப் பார்வை கிடைக்க வேண்டும் என்றால் முதலில் இந்த நான்கு அம்சங்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்று குறிப்பிடுகிறேன்.

Friday, 19 December 2014

கணவன் மனைவி பிரிவுக்கு காராணம் ஜாதக அமைப்பா?..திமிரான போக்கா...?

என் தலைக்குள் உலை வைத்து தகிக்க வைத்த சம்பவம் நேற்று முன் தினம் நடந்தது.

40 வயது மதிக்கத்தக்க இளைஞர். வசதி வாய்ப்புக்குப் பஞ்சமில்லை. வெளிநாட்டில் சில பிரச்சினைகளில் சிக்கி சிறைத்தண்டனை அனுபவித்தவர்.

இங்கு வந்த பின்னர் திருமணத்திற்கு முயன்றனர். ஆனால் கைகூடவில்லை. இந்த நிலையில் என்னை அணுகினர்.

ஜாதகத்தை ஆய்வு செய்தேன். காளசர்ப்பதோஷம். இருப்பினும் காலம் கடந்து விட்ட படியால் பாம்புகளின் பாதிப்பு இல்லை..

முக்கிய இடங்களில் சனியும் பாம்பும். இடம் எது என்பதை நான் குறிப்பிட விரும்பவில்லை.

ஏனென்றால் என் பதிவைப் படிப்பவர்களில் சிலர், ஐயா எனக்கு ஏழாம் இடத்தில் இந்தக் கிரகம் இருக்கிறது. எட்டாம் இடத்தில் இந்தக் கிரகம் நிற்கிறது. அதனால் பாதிப்பு உண்டாகுமா என கேட்கிறார்கள்.

மருத்துவக் குறிப்புகளைப் படித்துவிட்டு அறுவைச் சிகிச்சை செய்ய கத்தியை எடுத்த அப்பாவி கதையாக இந்தக் கேள்விகள் அமைவதால் நான் கட்டங்களைக் குறிப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். பிள்ளைக்கு திருமணம் செய்து பேரன் பேத்திகளைக் கொஞ்ச முடியவில்லையே என்ற வேதனை, அந்த இளைஞன் தாயாரின் விழிகளை அருவியாக்கி கன்னத்தில் கண்ணீர் வெள்ளத்தைப் பாய்ச்சியது.

அந்த அம்மாவுக்கு ஆறுதல் சொன்னேன். காள்கஸ்திக்கு சென்று வரும்படி கூறினேன்.


அடுத்த மாதத்திலேயே ஒரு வரன் வந்தது. பொறியியல் பட்டதாரி. ஏழ்மையான குடும்பம். தகப்பனார் சிறு வயதிலேயே இறந்து விட்டார்.

ஒரு வழியாக பேசி நாளும் முடிவு செய்து விட்டார்கள். அதன் பின்னர் என்னிடம் பொருத்தம் பார்க்க வந்தார்கள்.

தீர்ப்பு எழுதப்பட்ட பின்னர் வாதம் செய்வது வீண் வேலை என்பதால் இப்படி வருகின்ற ஜாதங்களைப் பார்த்து பாறையைப் பிளப்பது போல் படீரென்று போட்டு உடைக்காமல் வெண்ணெயை அறுப்பது போல் விவரங்களைக் கூறுவது என் வழக்கம்.

அந்த வகையில் இரண்டு குடும்பத்தினரைப் பார்த்து சில அறிவுரைகளைக் கூறினேன். மணமக்கள் இருவரையும் வரச்சொல்லி அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் குறைபாடுகளை எடுத்துக் கூறினேன்.

இருவரும் படித்தவர்கள் என்பதால் நான் சொன்ன விளக்கத்தின் பொருளை புரிந்து கொண்டார்கள். பொறுமையாகவும் பொறுப்பாகவும் வாழ்வதாக என்னிடம் உறுதி அளித்தார்கள்.

திருமண தேதியைக் குறித்து விட்டு நான் மலேசியா சென்று விட்டேன். ஓர் ஆண்டுகள் கழித்த பின்னர் விடுமுறைக்காக இந்தியா வந்த பொழுது அந்த இளைஞர் என்னைத் தேடி வந்தார்.

எப்படிப் போகிறது வாழ்க்கை என்றேன். கன்னத்தில் கண்ணீர் முத்துக்கள் உருண்டன. ஒரு வித நடுக்கம் உடலை தள்ளாட வைத்தது.

எங்களுடைய வாழ்க்கை இன்பமாக கழிந்தது இரண்டு நாட்கள்தான். மூன்றாம்  நாள் சின்னப்பிரச்சினை காரணமாக முட்டல் ஏற்பட்டது. சரியாகி விடும் என்ற என் எண்ணம் தப்பாகி விட்டது.

இரவு வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இந்த நிலையில் அவள் ஒரு ஆண்பிள்ளையை ஈன்றெடுத்தாள்.

இருந்தாலும் எங்கள் இருவருக்கும் இடையே மூண்ட சண்டை மட்டும் இன்னும் ஓயவில்லை.

நான் எவ்வளவுதான் பொறுத்துப் போனாலும் விட்டுக் கொடுத்து நின்றாலும் வேண்டும் என்றே சண்டை இழுக்கிறாள்.

படித்த திமிரா... கூட்டுக் குடும்பத்தை உடைக்க வேண்டும் என்ற சதியா... அல்லது வாழ்க்கை என்றால் என்ன என்று புரியாதா கிறுக்குத்தனமா...? எனக்கு எதுவுமே புரியவில்லை.

ஏன்டா திருமணம் செய்தோம். ஒண்டிக்கட்டையாகவே காலத்தைக் கழித்திருக்கலாமே என்று மனம் மருகுகிறது.

தயவு செய்து என் ஜாதகத்தை ஆய்வு செய்து எங்காவது கண்காணாத இடத்துக்குச் சென்று விடவா... அல்லது  விவாகரத்துச் செய்து விடவா... என்று நீங்கள்தான் ஆலோசனை கூற வேண்டும் என்று கேட்டார்.

பிரிய இருந்த அவர்களுக்கு சில விஷயங்களைப் புரிய வைத்து அவர்களை எப்படி ஒன்று சேர்த்தேன் என்பதை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.

Thursday, 18 December 2014

ஏழரைச் சனி காட்டும் எச்சரிக்கை

மழை வருவதற்கு முன்னர் மேகம் திரள்வதில்லையா... சண்டை வருவதற்கு முன்னர் கோபம் கொப்பளிப்பதில்லையா... காதல் வருவதற்கு முன்னர் வெட்கம் வேடிக்கை காட்டுவதில்லையா... அது மாதிரிதான் ஏழரைச் சனி காலத்தில் சனிபகவான் சில அறிகுறிகளை நமக்குக் காட்டுவார்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் என்னை வந்து சந்தித்தார் 35 வயது மதிக்கத்தக்க ஓர் அன்பர். திருமண விஷயமாக பார்க்க வந்திருந்தார். பல இடங்களில் பெண் தேடியும் ஒன்றும் அமையவில்லை.



விருச்சிக ராசிக்காரர் என்பதால் ஏழரைச் சனியின் தாக்குதலுக்குத் தயாராக இருந்தார். இனிமேல் திருமணம் நடக்க வாய்ப்பு இல்லை என்ற அவநம்பிக்கையோடு என்னிடம் பேசினார்.

சனிபகவானுக்கு இன்னொரு பெயர் கலிபுருஷன். ஆகவே கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். காளசர்ப்பதோஷ பாதிப்புக்கு உள்ளாகி  கிரக முடக்கம் ஏற்பட்டுள்ளதால் தாமதமாக திருமணம் நடக்கும் என சொன்னேன்.

அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை. இருப்பினும் இன்னொரு கேள்வியைத் தொடுத்தார். அப்படியே திருமணம் நடந்தாலும் குழந்தை இருக்காது என சொல்கிறார்களே என்று வினவினார்.

அது ஒருவகையில் சரிதான். புத்திர ஸ்தானமும் புத்திர காரகனும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

இருப்பினும் எனக்கொரு குருட்டு நம்பிக்கை உண்டு. மதி நீச்சம் அடைந்த விருச்சிகராசிக்காரர்கள் இளமையில் பல இன்னல்களை அடைந்தாலும் சுயமுன்னேற்றத்தில் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார்கள்.

மேலும் இவருக்கு நாலாம் இடத்தில் சுக்கிரம் நல்ல நிலையில் இருந்தார். ஆகவே திருமணம் கண்டிப்பாக நடக்கும். சற்று தாமதமாக இரு ஆண்டுகளுக்குள் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று சொன்னேன்.

ஓரிரு மாதங்களில் பெண் அமைந்தது. இருவீட்டாரும் என்னை வந்து பார்த்தார்கள். திருமண நாள் குறித்துக் கொடுத்தேன். சரியாக ஒன்ன்ரை ஆண்டுகளில் அந்தப் பெண் கருத்தரித்தாள்.

இந்த விஷயத்தை என்னிடம் மகிழ்ச்சியோடு தொலைபேசி வாயிலாக கூறினார். முதன் முதலாக என்னிடம் தெரிவித்ததாகச் சொன்னார்.

சனிப்பெயர்ச்சிக்கு என்ன பரிகாரம் செய்யலாம் என கேட்டார். பெரிதாக ஒன்றும் தேவையில்லை. பெரிச்சிக் கோவிலுக்காவது குச்சனூருக்காவது சென்று வாருங்கள் என்று சொன்னேன்.

இந்த நிலையில் கார் வாங்க நினைக்கிறேன் என்று சொல்லி கார் எண்ணையும் கூறினார்.

முடிவுரை எழுதி விட்டு முன்னுரைக்கு யோசிப்பது முட்டாள்தனம். இருந்தாலும் அவர் ஆவலின் வேகத்தைக் குறைக்க விரும்பவில்லை.

தாராளமாக வாங்குங்கள். வண்டி வாகனங்கள் ஓட்டும்போது இரு மடங்கு எச்சரிக்கையாக இருங்கள் என ஆலோசனை கூறினேன்.

சனிப்பெயர்ச்சி அன்று நானும் என் மாப்பிள்ளை கௌரியும் சில நண்பர்களும் பெரிச்சிக் கோவில் சனிபகவான் ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தோம். அப்போது அந்த அன்பர் போன் செய்தார்.

ஐயா.. நான் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலையில் அந்தப் பக்கத்தில் நின்ற மாடு குறுக்கே ஓடி வந்து மோட்டார் சைக்கிளில் மோதி விட்டது. எனக்கு அடி அதிகம் இல்லை. மோட்டார் சைக்கிளின் முன்பக்கம் சேதமடைந்து விட்டது என கூறினார். அச்சப்படத்தேவையில்லை என்று ஆறுதல் சொன்னேன்.

இரவு எட்டு மணி இருக்கும். தொலைபேசி மணி ஒலித்தது. அவர்தான் அழைத்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தும்போது சாய்ந்து என் விரலை நசுக்கி விட்டது. எனக்கு பயமாக இருக்கிறது. வண்டி வாகனங்கள் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னீர்கள். அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் நடந்து விட்டன. ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா எனக் கேட்டார்.

இது ஒரு இக்கட்டான நிலை. சனிக்கு பரிகாரம் சொல்வதா... அல்லது அவரின் அவநம்பிக்கைக்கு பரிகாரம் சொல்வதா...

சனிபகவான் ஏழரையாண்டுகள் முழுமையும் பாதிப்பைஉண்டு பண்ணுவாரா... நல்லதே செய்ய மாட்டாரா.. இப்படி பல குழப்பங்கள் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இனி சனி பகவானை எப்படி குஷிப்படுத்துவது... சரிப்படுத்துவது... சமாதானப்படுத்துவது என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.




Wednesday, 17 December 2014

கெடுத்த சனி... கொடுத்த சனி

எவ்வளவு பெரிய ரவுடியாக இருக்கட்டும். தாதாவாக பேட்டையைக் கலக்கட்டும், ஏழரைச் சனி என்றால் காலரை தொங்கவிட்டு பம்மி பதுங்குகிறார்கள்.

ஏன் இந்தப் பயம். அவர்களின் தெனாவட்டு தெறித்துப் போனதற்கு என்ன காரணம். கத்திக்கும் ரத்தத்திற்கும் கலங்காதவர்கள் சனிபகவான் என்றாலேபூனையைப் பார்த்த எலியைப் போல பொந்துக்குள் ஒளிந்து கொள்கிறார்கள்.

சனி நினைத்தால் அவர்களுக்கு சங்கஊதி விடுவார். கொஞ்சம் கோபப்பட்டால் நெஞ்சு வேலை நிறுத்தம் செய்து விடும். அதனால் தான் அச்சம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

சனிபகவான் இத்தனை பொல்லாதவரா... அதெல்லாம் கிடையாது. நல்லவருக்கு நல்லவர். பொல்லாதவருக்கும் நல்லவர்.

நல்லவர்களாக இருந்தால் போன ஜென்ம பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப பலன் கொடுப்பார். கெட்டவர்களாக இருந்தால் முதலில் கண்டிப்பார். அதிலும் அடங்கவில்லை என்றால் பின்னர் தண்டிப்பார்.

ஏழரைச் சனி காலத்தில் எவ்வளவு கடுமை காட்டுகிறாரோ... அதற்கு ஈடாக அடுத்து வரும் காலங்களில் அள்ளிக் கொடுக்கவும் தயங்க மாட்டார்.

அப்படி ஏழரைச் சனி காலத்தில் திருவோடு ஏந்தும் நிலைக்குச் சென்ற ஒருவர் இப்போது பணம் பதவி என்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் என்னைச்சந்தித்தார். என்னிடம் ஆலோசனை கேட்டுச் சென்றார். அதன் பின்னர் கடந்த மாதம் என்னை வந்து பார்த்தார்.

பாலைவனமாக இருந்த அவரின்  வாழ்க்கை சோலைவனமாக மாறி இருப்பதை அவரின் தோற்றமே உணர்த்தியது.

அவர் பட்ட துயரம் என்ன. அதில் இருந்து எவ்வாறு  மீண்டார் என்பதை அடுத்து பார்ப்போம்.

Tuesday, 16 December 2014

விருச்சிக ராசி சனி பகவான் வில்லங்கம் செய்வாரா?

துலாம் ராசியில் இருந்து துள்ளிக் குதித்து சனி பகவான் விருச்சிக ராசிக்கு தாவி வந்திருக்கிறார்.

ஆகா இன்னும் இரண்டரை வருடம்தான் என்று துலாம் ராசிக்காரர்கள் பெருமூச்சு விட.... ஐந்தரை ஆண்டுகளை எப்படிக் கடத்தப் போகிறோம் என விருச்சிக ராசிக்காரர்கள் விசும்பி நிற்க...விரையச் சனியின் பிடியில் சிக்கிய தனுசு ராசிகாரர்கள் என்ன நடக்குமோ என கலங்கித் தவிக்க சனிபகவான் குடி கொண்டிருக்கும் கோவில்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

ஆதிசிவனையே ஆட்டிவைத்த சனி பகவானே எங்கள் பக்கம் உன் கோபப் பார்வையைத் திருப்பி விடாதே என சாப விமோசன விண்ணப்பம் அளிக்க மக்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வீடு வாசல் மாடி மனை என்று செல்வத்தையும்செல்வாக்கையும் அள்ளித்தரும் சனி பகவானைப் பார்த்து ஏன் மக்கள் இப்படிப் பயப்படுகிறார்கள்.

இந்தப் பயம் நியாயம்தானா... இனி வரும் நாட்களில் நாம் அலசி ஆராய்வோம். நீண்ட நாட்களாக  என் பதிவைப் பார்த்து பாசத்தைப் பரிமாறி வந்த இனிய நண்பர்களோடு இனி தடையின்றி உசாவ எனக்கு அவகாசம் ஏற்பட்டுள்ளது.

என்னைச் சந்தித்த அன்பர்களின் அனுபவங்களை இனிமேல் தங்களுக்கு பந்தி வைக்கிறேன். அதைப் படித்து முடிந்தவரை பயன்பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

Wednesday, 18 December 2013

சனி கொடுத்தால் யார் தடுப்பார்

   தற்கொலைக்குத் தூண்டும் ஏழரைச் சனி என்ற தலைப்பில் என்னிடம் ஜாதகம் பார்த்த அன்பரின் பலனை இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுதி இருந்தேன்.
   இடைக்காலத்தில் முன்னுக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் எல்லாவற்றையும் இழந்து திருவோடு தூக்கும் நிலைக்கு வந்தவர்.
    துலாம் ராசிக்காரர. பார்த்த இடத்தில் எல்லாம் ஏழரைச் சனியின் தாக்கம். மீள்வது சிரமம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
 

 என்னை இவர் வெறும் ஜோதிடனாக மட்டும் பார்க்கவில்லை. வழிகாட்டியாகவே எண்ணி மனதில் இருந்த குறைகளையும் கொட்டித் தீர்த்தார்.
    பல வகையில் ஆறுதல் கூறினேன். சில வழிபாட்டு முறைகளைச் சொல்லி சனிபகவானை மனதார வணங்கி வரும்படி கேட்டுக் கொண்டேன்.
    அவரும் அவ்வாறே செய்தார். கடன் தொல்லை கழுத்தைப் பிடித்து நெரித்ததால் இடையிடையே மனம் சோர்ந்து விடுவார்.
     கடந்த வாரம் திடீரென்று எனக்கு போன் செய்தார். ஒரு கம்பெனியிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. போய்ப் பார்க்கட்டுமா என்றார்.
    உடனே கிளம்பிப் போகும்படி சொன்னோன். இவரின் ஆவணங்களைச் சரிபார்த்த அவர்கள் வேலையை ஆரம்பிப்பதற்கு எவ்வளவு தொகை தேவை என்று கேட்டிருக்கிறார்கள்.
    ஒரு லட்சம் வெள்ளி கேட்கலாமா என என்னிடம் கேட்டார். இரண்டு லட்சம் வெள்ளியாக கேளுங்கள் என்று சொன்னேன். அவரும் அதன்படி கேட்டிருக்கிறார்.
   1லட்சத்து 80 ஆயிரம் வெள்ளிக்கான காசோலையை கொடுத்து விட்டார்கள். அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
   சனி கொடுத்தால் யார் தடுப்பார். கொடுத்த பணத்தை முறையாகப் பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்து என்று சொன்னேன்.
     ஆசி வழங்குபடி கூறி விழுந்து வணங்கினார். மனப்பூர்வமாக வாழ்த்தினேன். சில பாகிஸ்தான் தொழிலாளர்களை வைத்து வேலையைத் தொடங்கி விட்டார்.
    மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. மீண்டும் பழைய நிலைக்கு வர இயலாவிட்டாலும் தொழிலைத் தற்காத்துக் கொண்டால் பின்னர் அதன் வளர்ச்சி அபிரிமிதமாக இருக்கும் என்பது என் எண்ணம்.
   குடும்பத்தோடு சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலை உள்ளது. அதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என வினவினார்.
    தேவையில்லை, இன்னும் சில காலங்களில் அனைத்தும் சரியாகி விடும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறேன்.
      மேலும் இன்னொரு முக்கிய தகவலைப் பரிமாற நினைக்கிறேன். இந்தப் பையன் குறித்து என் நெருங்கிய நண்பர் மோகன் என்பவரிடம் பேசினேன்.
      மோகனும் என் ஆன்மீக ஆற்றல் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். லண்டனில் வழக்கறிஞருக்குப் படித்து பட்டம் பெற்றவர். அந்த வகையில் இந்தப் பேச்சு ஆரம்பமானது.
     அப்படியா கவிஞர், அவரை வந்து பார்க்கச் சொல்லுங்கள். முறையான ஆவணங்கள் இருந்தால் முதலீடு செய்ய ஆள் இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என்று கூறினார்.
     இதுவும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்தது.
.